
அரசின் பொருளாதார நடவடிக்கைக்கு சுலபமான விளக்கத்தினை இது தவிர நான் வேறு எங்கும் கற்றது இல்லை. இதில் சக்கையாக மக்களையும், வாங்கி குடிப்பவராக அந்நிய நிறுவனங்களையும் ஒப்பிட மனம் வரும் எனக்கு கரும்பு சாறு ஆட்டும் ஏழை தொழிலாளியை அரசோடு ஒப்பிட மட்டும் மனம் வலிக்கத்தான் செய்கிறது. பொருளாதார நடவடிக்கை மட்டும் அல்லாது அத்தியாவசிய தேவைகளுக்கான நடவடிக்கைகள் இதை விட கேவலமாகவே இருக்கிறது. மக்கள் வளம் தான் ஒரு நாட்டின் இன்றியமையாத சொத்து. அப்படிப்பட்ட மக்களின் வாழ்வாதார தேவைகள் கூட முழுவதும் கிடைக்காத நிலையில் எதை நம்பி நாம் வல்லரசு கனவு காண்கிறோம்? செயற்கைக்கோள் விட்டால் போதும் என்று யார் நம்மை திசை திருப்புவது? செவ்வாயில் மனிதன் வாழ முடியுமா என ஆராய உதவும் செயற்க்கைகொள்களால் பூமியில் மனிதன் வாழ முடியாத நிலை உருவாகுவதை ஏனோ கண்டுபிடிக்க உதவ முடிவதில்லை. நமக்கு இதை பற்றி எல்லாம் பற்றி சிந்திக்கவோ, பேசவோ கூட பிடிப்பது இல்லை. நாம் வாழும் இந்த சகிப்பு நிறைந்த வாழ்க்கையில் நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விசயமா என்ன!!
![]() |
மின்சாரமற்ற இரவு |
அது என்னவோ புரியவில்லை மின்சாரமற்ற விடியல் நல்ல ஆழ்ந்த உறக்கத்தினை கொடுத்து தொலைக்கிறது. காலையில் எழுந்து பல் துலக்க எடுக்கும் பேஸ்ட் (பற்பசை), பிரஸ் (பல் துடைப்பம்) - குளியளுக்கான சோப் (குளியல் கட்டி), சாம்ப் (தலை முடிக்கான குளியல் பசை) - அதற்க்கு பிறகான பவுடர்(முக பொடி), சென்ட் (நாற்ற மருந்து), கேர் ஆயில் (தலை முடிக்கான கடற்ப்பாசி) அனைத்துமே வெளிநாட்டு இறக்குமதியாக மின்னுகிறது. குளிக்க குழாயில் தண்ணீர் வராமல், மோட்டார் போட்டு நீர் ஏற்ற மின்சாரம் இல்லாமல் எத்தனை நாள் குளிக்காமல் வெறும் பவுடர் சென்ட் அடித்து கொண்டு பணிக்கு சென்றிருப்போம் இதை நாமும் சகித்துக்கொண்டோம், நம் உடன் பணி புரிவோரும் சகித்துகொண்டுள்ளனர். "கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு; கூழானாலும் குளித்து குடி" என்ற பழமொழி சுத்தமாக இருப்பதற்காக கூறப்பட்டது. ஆனால் அது எதுவானாலும் சகித்துக்கொள்ள வேண்டும் போல என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். சக்கையானாலும் சகித்துக்கொள் என..
அவசர யுகம் என்ற போலி கௌரவத்தினை சுமந்து கொண்டு காலையில் உண்ணாமலே ஓடுகிறோம் பணம் சம்பாதிக்க, ஆனால் அதன் உண்மையான முகம் நமக்குதானே தெரியும். காலையில் சமைக்க போனால் சமையல் எரிவாயு தீர்ந்திருக்கும். பதிவு செய்ய ஐம்பது நாள்களாவது கடந்திருக்க வேண்டும். இரு எரிவாயு உருளைகள் இருந்தால் மண்ணெண்ணை கிடைக்காது. கடத்தல் மண்ணெண்ணெய் விலை கூடுதலாக கிடைத்தாலும் வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளர் அனுமதிக்கமாட்டார். மண்ணெண்ணெய் அடுப்பே அனுமதி இல்லாத போது விறகு அடுப்பு கேட்கவே வேண்டாம். நான் மின்சார அடுப்பினை பற்றி பேசி மறுபடியும் ஆரம்பத்துக்கு செல்ல விரும்பவில்லை. சாப்பிடாமலே பணிக்கு செல்லவும் சகித்துகொண்டோம்.
இது தான் தக்க சமயம் என காத்திருந்த அந்நிய நிறுவனங்கள் "இதை அவிக்க வேண்டாம், பொரிக்க வேண்டாம், இரண்டே நிமிடத்தில் தயார், கேல்த் ட்ரின்க்(ஆரோக்கிய பானம்)," என கண்கவர் விளம்பரங்களால் நம் சட்டை பைக்குள் கைவிடுகின்றனர். இதையும் சகித்து கொண்டுதானே இருக்கிறோம்.
இது மட்டுமா பெட்ரோல் விலை உயர்ந்தால் சகித்துக்கொள்கிறோம். பேருந்து கட்டணம் உயர்ந்தாலும் சகித்து கொள்கிறோம்.கட்டணங்கள் உயர்ந்தாலும் நமக்கான படி (Allowance) உயர்த்தாத நமது பலதேச நிறுவனத்தில் (MNC) நமக்கான உரிமையை கூட கேட்டு பெறாமல் சகித்து கொள்கிறோம். பேருந்து நிறுத்தத்தில் சிகரெட் புகையை சகித்து கொள்கிறோம். அவசர பயணத்தை இடைமறிக்கும் கடவுள் பக்தர்களின் வெட்டி ஊர்வலங்களை சகித்து கொள்கிறோம். குடிநீர் குழாயில் சாக்கடை கலந்து வந்தாலும் சகித்து கொள்கிறோம். அரசு நடத்த வேண்டிய கல்வி சாலைகளை தனியார் நிறுவனம், வருமானம் பார்க்க நடத்தினால், அதிலேயே குழந்தைகளை சேர்த்து காசை கொட்டி கொடுத்து சகித்து கொள்கிறோம். அரசு நடத்தும் சாராய கடைகளில் குடித்து குடல் வெந்தாலும் சகித்து கொள்கிறோம். தெருவோரம் மாரியாத்தா கோவில் திருவிழா ஒலி பெருக்கி சப்த்தத்தினை சகித்து கொள்கிறோம். அரசு மருத்துவமனையில் எலி இருக்கிறது என்பதால் கொசு மட்டும் இருக்க கூடிய தனியார் மருத்துவ மனைகளில் கொசு அடித்து கொண்டேனாலும் சகித்து கொள்கிறோம். நியாய விலை கடையில் நியாய எடை இல்லை என்றாலும் சகித்து கொள்கிறோம்.
நமக்கான அத்தியாவசிய தேவைகளுக்கே சகித்து கொண்டு உணர்ச்சி இல்லாமல் வாழும் நமக்கு பொது பிரச்சனைகளை பற்றி என்ன உணர்வு இருக்க போகிறது!! ஈழ தமிழனோ, ராமேஸ்வர மீனவ தமிழனோ எவன் செத்தாலும் நமக்கு அனுதாபம் கூட வருவதில்லை, அடுத்த மாநிலத்துக்காரன் நமக்கான நீர் தராததால் நமக்கு வரக்கூடிய உணவு பஞ்சம் பற்றி நமக்கு கவலை இல்லை. நமக்கு தான் அந்நிய நிறுவன கெல்த் ட்ரின்க் இருக்கிறதே. கேட்டால் நாங்கள் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுகிறோம் என்ற கேவலமான பதில் வேறு.. எது மகிழ்ச்சியான வாழ்க்கை? இப்படி சகித்து சகித்து வாழ்வதை தான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை என்று பிதற்றிக்கோண்டு இருக்கிறோம்.
தங்களின் உயிருக்கும் தங்கள் சந்ததிகளின் உயிர் பாதுகாப்பிற்கும் இடைஞ்சலாக உள்ள அணு உலையை சகித்து கொள்ள முடியாமல், வீதிக்கு வந்து உணர்வுப்பூர்வமாக போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டங்களை அவமதித்து விமர்சிக்கவோ, அவர்களின் மேல் தீவிரவாதி பலி சுமத்தவோ, நமக்கான அத்தியாவசியத்துகாக கூட போராட திராணியோ, உணர்ச்சியோ, தைரியமோ இல்லாத நாம் தகுதியற்றவர்கள்.
நம்மீதான அநீதிகளை சகித்து கொள்ளும் நமக்கு, அவர்கள் மீதான அநீதிகளுக்கு எதிராக சகித்து கொள்ள முடியாமல் அவர்கள் போராடுவதை கொச்சைப்படுத்தி விமர்சிக்க அருகதை இல்லை. இல்லவே இல்லை என்பதை சொல்வதற்கே இதை எழுதினேன்.
படைப்பு:
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
நீங்கள் சொன்ன அனைத்தையும் கேட்பதே ஒரு சகிப்புத் தண்மை உணர்வுள்ளவர்களால் மட்டுமே உணரமுடியும். கட்டுரையில் பல உண்மைச் சம்பவங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்...
ReplyDeleteசகிப்புதன்மை வேண்டாம் என்கிறீர்களா ? அல்லது போராடு என்கிறீர்களா ?
தமிழ் மக்கள் மிகுந்த சகிப்புத் தன்மை உடையவர்கள். சகித்து சகித்து வாழ கற்றுக்கொண்டவர்கள். உண்மையில் இவர்கள் வெகுளிகளே...
கல்லம் கபடம் அற்ற சுய நலக்காரர்கள் என்பதே உண்மை.
சகிப்பு தன்மை உள்ளவர்கள் என்கிறீர்களே அப்படி உள்ளவர்கள் முல்லைப் பெரியாறுக்கும், காவிரி நீருக்கும், மின்சாரத்திற்கும், அந்நிய பொருட்களின் அனுமதியை எதிர்த்து முழுஅடைப்பு நடத்தியதும்,எரிவாயு கலன்கள்(சிலிண்டர்கள்)கேட்டுப்போராடுவதும் சுயநலமில்லையா?
இல்லை சகித்து விட்டுவிட வேண்டியதுதானே!
தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நலம் முக்கியம் என்று எண்ணாமல் தன்னைச் சுற்றிய நம்மவர்களின் பிரச்ச்னைக்கு கூட ஆதரவு தராத சகிப்பாளர்கள் சகிப்பாளர்கள் இல்லை... இதயம் இல்லாதவர்கள்... இவர்கள் சகிப்பு என்பது இவர்களின் இயலாமையே...
உங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி தோழரே..
Deleteசகிப்பு தன்மையை விட்டுவிட்டு போராட வேண்டும் என்பதே என் கருத்து..
நாம் சகித்து வாழ கற்றுகொண்டவர்கள் என்றுதான் நானும் சொல்கிறேன் தோழரே.. இப்படி சகித்துக்கொண்டு வாழும் நமக்கு, சகிக்த்துக்கொள்ள முடியாமல் போராட துணிந்த மக்களை கொச்சைப்படுத்தி பேச என்ன தகுதி உண்டு, என்பதே என் கேள்வி..
முழு அடைப்பு போராட்டத்தில் எத்தனை பேர் முழு மனதோடு போராடினர்?? அந்த போராட்டத்தால் ஏதேனும் விளைந்ததா?? (காவிரி, முல்லை பெரியாறு போராட்டங்களை தவிர) அடுத்த நாளே நமக்கான சகிப்பு வாழ்க்கையை துவங்கிவிட்டோமே.. ஆனால் கூடன்குள மக்களின் போராட்டம் ஒரே நாளோடு முடிந்தது இல்லையே.. தீர்வு நோக்கிய போராட்டமே வெல்லும். அடையாள போராட்டங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.
சகிப்பு என்பது இயலாமை அல்ல.. அக்கறை இல்லாமை, விசுவாசம் இல்லாமை.. உணர்வு இல்லாமை.. இயலாமல் போக செத்தா போய்விட்டோம். இறந்து போன பிறகுதான் இயலாமை அர்த்தப்படும். இருக்கும் வரை அனைத்தும் இயலும்.
இறந்து போன பிறகுதான் இயலாமை அர்த்தப்படும். இருக்கும் வரை அனைத்தும் இயலும். ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை...
Deleteசகித்து வாழ வேண்டும் யாராவது நம்மை கட்டாயபடுத்தினார்களா? அல்லது கட்டாயப்படுத்துகிறார்களா?
இந்த இடத்தில் என்னையோ, உங்களையோ நீங்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள்... சகிப்புத்தன்மை உள்ளவரென்றால் நானோ நீங்களோ இங்கு எழுதிகொண்டு விவாத்திகொண்டிருக்கமாட்டோம். சகிப்புத்தன்மை என்பது எல்லாம் மனித மனங்களை அடக்கிகொள்ள மனிதன் ஏற்படுத்திக்கொள்வது... துர்நாற்றம் வரும் பொழுது மூக்கை பொத்திக்கொள்வது போல்...
நீங்கள் கூறியதை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்...
நமக்கான அத்தியாவசிய தேவைகளுக்கே சகித்து கொண்டு உணர்ச்சி இல்லாமல் வாழும் நமக்கு பொது பிரச்சனைகளை பற்றி என்ன உணர்வு இருக்க போகிறது!! ஈழ தமிழனோ, ராமேஸ்வர மீனவ தமிழனோ எவன் செத்தாலும் நமக்கு அனுதாபம் கூட வருவதில்லை, அடுத்த மாநிலத்துக்காரன் நமக்கான நீர் தராததால் நமக்கு வரக்கூடிய உணவு பஞ்சம் பற்றி நமக்கு கவலை இல்லை. நமக்கு தான் அந்நிய நிறுவன கெல்த் ட்ரின்க் இருக்கிறதே. கேட்டால் நாங்கள் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுகிறோம் என்ற கேவலமான பதில் வேறு.. எது மகிழ்ச்சியான வாழ்க்கை? இப்படி சகித்து சகித்து வாழ்வதை தான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை என்று பிதற்றிக்கோண்டு இருக்கிறோம்.
இந்த பிதற்றல் சகிப்பு என்றால் சற்று மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
நான் ஏசு கூறிய கண்ணத்தில் அரையும் தத்துவத்தின் படி தவறிலைத்தால் அரை வாங்க நான் தயார். தவறில்லை என்றால்? நாம் திருப்பி அடிக்காவிட்டாலும், கண்டிப்பாக நியாத்திற்க்காகவாது எதிர்க்கவேண்டும்.
அருமையான ஒரு கட்டுரையின் மூலம் விவாதம் தொடரும்...
சகித்துக்கொண்டு வாழ யாரும் கட்டாயப்படுத்தவில்லை தோழரே! சகித்துக்கொண்டு வாழ பழக்கப்படுத்திவிட்டனர்.
Deleteசகிப்பு என்பது எல்லேரிடமும் உண்டு என்றுதான் நானும் சொல்கிறேன். துர்நாற்றம் என்றால் மூக்கை மூடிக்கொண்டு சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த சகிப்பால் அந்த துர்நாற்றம் நீங்கப்போவது இல்லை. அதை சகிக்கப் பொருக்காமல் என்று போராட எழுகிறோமோ அன்றுதான் அந்த துர்நாற்றம் நீங்கும்.
பிதற்றலை சகிப்பு என்று நான் சொல்லவில்லை. சகித்து கொண்டு வாழ்வதை மகிழ்ச்சியான வாழ்க்கை என்று பிதற்றிக்கொள்கிறோம் என்றுதான் நான் சொல்கிறேன்.
அநீதிகளை சகித்துக்கொள்ள கூடாது. கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.
நன்றி தோழரே.. தொடர்வோம்..
தமிழ் மணி என்ற பெயருடன் எழுதும் போது எழுத்து\சொல் பிழைகள் இல்லாது எழுதுவது நல்லது.
ReplyDeleteபிளிந்து - பிழிந்து
கெல்த் ட்ரிங்க - ஆரோக்கிய பானம்
கொச்சைபடுத்தி - கொச்சைப் படுத்தி
எழுத்து மற்றும் சொல் பிழைகளுக்கு மன்னிக்கவும். இனி திருத்திக்கொள்கிறேன் தோழரே.. பிழைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி தோழரே.
Delete