மதுரை மல்லி, மதுரை ஜல்லிக்கட்டு, மதுரை மீன் ஆட்சி (மீனாட்சி), மதுரை தமிழ்ச்சங்கம் இந்த வரிசையில் மதுரையின் மற்றுமொரு அடையாளமாகிவிட்டது பசுமைநடை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரையின் வரலாற்று களஞ்சியமான யானைமலையை கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து காக்க அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டுவந்ததுதான் பசுமைநடையின் முதல் செயல்பாடு. செயல்பாடுகள் மூலம் உதயமாகும் அமைப்புதான் தொடர்ந்து மக்களுக்காக வேலை செய்யும் என்பதற்கு இன்றுள்ள பல்வேறு மக்கள் இயக்கங்கள்தான் உதாரணம். இன்றும் இந்த மலை உயிருடன் இருப்பதற்கு அம்மக்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வரை செய்து கொடுத்துள்ளது பசுமைநடை. பசுமைநடை முயற்சியாளர் எழுத்தாளர் சமூக செயல்பாட்டாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகள் ஏற்படுத்திய தாக்கம் யானைமலைக்கான போரட்டங்களை நாடறிய செய்தது.
பசுமைநடையின் முதல்
மலை பயணம் 18-09-2010 அன்று யானை மலையில் துவங்கி 25-08-2013 அன்று 25-வது நிகழ்வான
விருட்சத்திருவிழாவாக கீழக்குயில்குடியில் கலைகட்டியது. எழுத்தாளர்களும் ஓவியர்களும்
ஆய்வாளர்களும் அறிஞர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் இயற்கை ஆர்வளர்களம் மதுரையின்
பழம்பெரும் விருட்சத்தின் கீழ் ஒன்று கூடி திருவிழா கோலம் பூண்டது கீழக்குயில்குடி.
பொழுது விடிந்ததும்
செட்டிப்புடவு நோக்கிய 25-வது பசுமைநடையின் முதல் நிகழ்வுக்கு 7 மணிக்கு முன்னதாகவே
பெரும் திரளாக புதிய நண்பர்கள் வருகை தந்தது விழாவினை ஆரம்பம் முதலே சிறப்பாக அமையச்
செய்துவிட்டது. காலை நேர தென்றல் சமணர் மலையின் குளிர்ச்சியை அள்ளி கொடுத்துக்கொண்டிருந்தது.
மலை அடிவார குளத்தில் பூத்துக்குலுங்கிய தாமரை மலர்கள் விருந்தினர்களை வரவேற்க எங்களோடு
இணைந்தே இருந்தன. விருட்சத்தின் மீது குழுமியிருந்த பறவைகள் விருட்சத்தின் கீழ் குழுமியிருந்த
எங்களுக்கு இனிமையான பாடல்களை வழங்கிக்கொண்டிருந்தன. சாரை சாரையாக சமணர் சிற்பங்களையும்
குகை படுக்கைகளையும் தாங்கி நிற்கும் செட்டிபுடவு நோக்கி பசுமைநடை அணிவகுத்தது. தொல்லியல்
அறிஞர் அய்யா.சாந்தலிங்கம் அவர்களின் சமணர்கள் பற்றிய உரை மெய் சிலிர்க்க வைத்தது.
சமணர்கள் பீஹார் பகுதியில் இருந்து வந்து சிரவணபெளகோலாவில் தங்கி பின் அவர்களில் ஒரு
குழுவினர் தமிழக பகுதிகளுக்குள் வந்து மதுரையை மையப்படுத்தி வாழ்ந்த வரலாற்றினை எத்தனை
முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய காட்சி அமைப்புகளையே கண் முன் வருகின்றது.
25-வது பசுமைநடையின்
அடுத்த நிகழ்வான விருட்சத்திருவிழா துவங்கும் முன் காலை விருந்து சுவை அள்ளியது. ரசாயண
விடம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட சர்க்கரை கொண்டான சர்க்கரை பொங்கல்தான் காலை விருந்தின்
அரசன். சட்டியை திறந்ததும் வந்த அதன் மணம் சுற்றியிருந்த விருந்தினர்களை இழுத்து வந்துவிட்டது.
வெண்பொங்கலும் சாம்பாரும் பிரமாதம். தேங்காய் துவையல் உடனான உணவு மேலும் சுவை சேர்த்தது.
காலை சரியாக
9:30 மணிக்கு விருட்சத்திருவிழா சிறப்புக் கூட்டமும் குழந்தைகளுக்கான முகாம் துவக்கமும்
இனிதே ஆரம்பமானது.
கவிஞர்.ஷாஜஹான் அவர்கள் விருட்சத்திருவிழா நிகழ்சியை ஒருங்கிணைத்தார்.
தொல்லியல் அறிஞர்.அய்யா
சாந்தலிங்கம் அவர்கள் பேசுகையில் “யானைமலையின் பாதுகாப்பு பயணமாக நண்பர்களால் துவங்கப்பட்ட
அமைப்பு இன்று இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளதாக கூறி பூரிப்படைந்தார். மேலும் யானைமலையை
உடைத்து சிற்ப கலை நகரமாக மாற்ற வேண்டி கோப்புகள் தனது மேசைக்கு வந்த போது அதனை முதன்முதலாக
எதிர்த்து அதனை செயல்படுத்தவிடாமல் செய்த தனது அனுபவங்களையும் சுவாரசியமாக பகிர்ந்து
கொண்டார். சமணம் தமிழுக்கு அளித்திருக்கும் நூல்களை எடுத்துவிட்டால் தமிழின் பண்டைய
இலக்கிய உலகமே இருண்ட நிலையாகிவிடும். அத்தகைய தொன்மையான தமிழ் நூல்கள் அனைத்தும் சமண
படைப்புகளே என சமணம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளமையை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார்.
·
தொல்காப்பியம்
·
நன்னூல்
·
சிலப்பதிகாரம்
·
சீவகசிந்தாமணி
·
திருக்குறள்
·
நாலடியார்
·
பதினேன்கீழ்
கணக்கு நூல்களில் பல
·
இலக்கண
நுல்கள்
என தமிழுக்கு சமணம்
அளித்த நூல்களை வரிசைப்படுத்தினார்.
பேராசிரியர்.கண்ணன்
அவர்கள் பேசுகையில் தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதனைவிட இந்த சமுதாய ஒருங்கிணைப்பு
என்பதை ஏற்படுத்தியதுதான் பசுமைநடையின் வெற்றி என்றார். இன்று குடும்பங்களுக்குள் இல்லாத
ஒருங்கிணைப்பை சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது பசுமைநடை என்றார்.
கீழக்குயில்குடி
ஊராட்சி மன்ற தலைவர் அய்யா.தங்கராசு அவர்களின் இரண்டு நிமிட பேச்சு பசுமைநடை தனது இலக்கில்
சரியாக செல்வதை படம்பிடித்துக்காட்டியது. “ எங்க கிராமத்துக்கே தெரியாத ஒரு சில உண்மைகள
உங்களாலதான் தெரிஞ்சிகிட்டோம். இப்ப அங்க இருக்கிற செட்டிப்புடவ நாங்க செட்டியார் பொந்துனு
சொல்லுவோம். அங்க இருக்கிற சிலைய புத்தர் சிலைனு சொல்வோம். ஆனா நீங்க வந்ததுக்கு அப்பறமாதான்
அது மகாவீரர் சிலைனே எங்களுக்கு தெரியும்” என தனது எதார்த்தமான பேச்சால் பசுமைநடை சென்றுள்ள
ஆழத்தினை அழுத்தமாக பதிவிட்டார்.
பசுமைநடை விருட்சத்திருவிழாவின் அடுத்த நிகழ்வான பசுமைநடை வெளியீடான “மதுர வரலாறு” எனும் நூல் வெளியீட்டு விழா. நூலை பண்பாட்டு ஆய்வாளர். அய்யா. தொ.பரமசிவம் அவர்கள் வெளியிடுவார் என்பது காற்றில் வந்துவிட்டது. ஆனால் முதல் நூலை பெறப்போவது யார் என்பது யாரைக்கேட்டும் வெளியிடும் வரை தெரியவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கீழக்குயில்குடிக்கு வருவோருக்கெல்லாம் பருத்திப்பால் கொடுத்து உபசரிக்கும் ஜெயமணி அம்மாள் அவர்களை முதல் நூலினை பெற வைத்து சிலிர்ப்பினை ஏற்படுத்திவிட்டனர் பசுமைநடையினர்.
நூல் வெளியிட்டு
பேசிய அய்யா.தொ.பரமசிவம் அவர்கள் சமணம் தமிழுக்கு செய்த தொண்டு குறித்து தெளிவாக விவரித்தார்.
சிரவணபெலகோளாவில் இருந்து சமணர்கள் வந்த வரலாற்றை சொல்லும் போது “சிரவணம் தாங்க சரவணம். சமணத்தில் இருந்து திருடியதுதான் அந்த சரவண பொய்கை
கதை.” என்றார். “அனைவருக்குமான கல்வி, அனைவருக்குமான சோறு, அனைவருக்குமான அடைக்கலம்,
அனைவருக்குமான மருந்து இந்நான்கும்தான் சமணத்தின் கொள்கை” என சமணம் பற்றிய ஆழமான கருத்தினை
அற்புதமாக எடுத்துரைத்தார். “பெண்களை முதல் முதலாக ஆசிரியராக்கியது சமணம்தான்” எனவும்
.இது சமணம் செய்த புரட்சியாகவும் தொ.ப. அவர்கள் பதிவு செய்தார். இப்போது பயன்படுத்தும்
பள்ளிக்கூடம் எனும் வார்த்தையை சமணப்பள்ளிகளில் இருந்து பெறப்பட்டதுதான் என விவரித்தார்.
தேநீர் இடைவேளைக்கு
பிறகு நடந்த அமர்வில் பசுமைநடையின் சின்னத்தினை (LOGO) மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.பாலகிருஷ்ணன்
அவர்கள் வெளியிட பேராசிரியர்.முத்தையா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
சின்த்தினை வெளியிட்டு
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பேசினார்கள்.
அவரைத் தொடர்ந்து வந்தவாசியில் இருந்து வருகை தந்த சமணர்.ஆனந்தராஜ், பேரா.இ.முத்தையா, பேரா.சுந்தர்காளி, போன்றோரும் எழுத்தாளர்.குட்டி ரேவதி, எழுத்தாளர்.கவின்மலர்
மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்.சுகிதா போன்றோரும் பசுமை நடை பற்றி தங்களுக்கான மொழி
நடையில் வாழ்த்திப் பேசினர்.
“இன்று தமிழுக்கு
செம்மொழி அந்தஸ்த்து பெற்றுத்தந்தவை சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் போன்ற பல சமண நூல்களும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் மலைகளில் தமிழி எழுத்துக்காளல் சமணர்கள் செதுக்கிய வரலாறுகளும்தான். ஆனால் செம்மொழி மாநாட்டில் கூட சமணம் என்ற சொல் உச்சரிக்கப்படாத நிலையில்தான்
சமணம் இன்று உள்ளது” என அ.முத்துகிருஷ்ணன் அடிக்கடி கூறுவார். இந்த நிலையில் சமண வரலாற்று
அடையாளங்களை அழித்து பணம் தின்ன வட்டமிடும் கல் தின்னி கழுகுகளால் அழியப்போவது சமண
வரலாறு மட்டுமல்ல தமிழ் மொழியின் வரலாறும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் நிறைவாக
மதிய உணவு புரிமாறப்பட்டது. சாம்பார் சாதம் தயிர் சாதம் வடகம் மோர்வத்தல் ஊறுகாயோடு
விழா சுவையாக நிறைவு பெற்றது.
இன்னும் எழுதுவோம்
சு.ரகுநாத்.
பசுமைநடை பற்றிய
அடுத்த பதிவுகள்
- · பசுமைநடையின் குழந்தை திருவிழா
- · “மதுர வரலாறு” நூல் பற்றி
- · விருட்சத் திருவிழா திரைக்குப் பின்னால்
நல்லாயிருக்குப்பா...
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteஅருமையான தொகுப்பு.... விழாவை பற்றி முழுவதும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
ReplyDeleteநன்றி தோழர்...
Deleteதமிழுக்கு்ம் தமிழர்க்கும் அனைத்தையும் வழங்கியது சமணம் என்றும், காட்டுமிராண்டித் தமிழனை பண்படுத்தியது சமணம் என்றும், சமணம் இல்லையேல் தமிழும் இல்லை தமிழனும் இல்லை என்ற கருத்து தான் தற்கால முற்போக்கு அறிஞர்கள் அனைவரும் வலியுறுத்துகின்ற ஒன்றாக இருக்கின்றது.
ReplyDeleteதமிழின் பெருமை பேசுபவர்கள் யாரும் கூட இது குறித்து ஐயங்களை எழுப்பியதாக தெரியவில்லை. தாங்களும் அதனுடன் முழுவதும் ஒன்றிச்செல்வதாகத்தான் இக்கட்டுரையும் அமைந்திருக்கின்றது.
சமணம் தான் தமிழுக்கு அனைத்தையும் வழங்கியது எனில் சமணத்திற்கு முற்பட்ட தமிழனின் நிலை தான் என்ன ?
எந்த பண்பாட்டுக் கூறும் அற்ற கற்காலத்திலிருந்து மீண்டு வராத தமிழினமாக இருந்ததா ?
தமிழர்களின் ஐவகை நிலங்களையும், அந்நிலத்திற்குறிய தெய்வங்கள், விலங்குகள், பறவைகள், மலர்கள், பருவங்கள், மண் முதலிய பண்புகளையும், வகுத்த தொல்காப்பியம் எங்ஙனம் ஊருக்குள் வாழாத ஊரை விட்டு ஒதுங்கி மலைகளில் மட்டுமே வாழ்ந்த சமணத் துறவியால் எழுதியிருக்க முடியும்.
ஐம்புலன்களையும் அடக்குவதையே மைய நோக்கமாகக் கொண்ட சமணருக்கு காமத்துப்பால் எழுத வேண்டுய அவசியம் என்ன ?.
இவர்கள் அனைவரும் சமணர்கள் என்பதற்கு அவர்களின் படைப்புகள் புலால் உண்ணாமை, உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் போன்ற பண்புகளை வலியுறுத்துவதைத்தான் ஆதாரமாக காட்டுகின்றார்களே ஒழிய வேறொன்றும் அவர்களிடத்தில் இல்லை.
பெளத்த, சமண சமயங்களுக்கு ஈடாக, வைதீகத்தை எதிர்த்து, தமிழ் மெய்யியல் வழி வந்த ஆசீவகம் தொடர்ந்து இத்தகைய அறிஞர்களால் புறக்கணிக்கப்படுவதை நாம் நோக்க முடிகின்றது. பழம்பெருமை பேசித்திரிவதில் எனக்கு உடன்பாடில்லையெனினும், தமிழன் ஒரு பெருமையும் இல்லாதவன் என்று நம்புவதுதான் முற்போக்கின் அடிப்படையாக இன்று கருதப்படுவது தான் இதில் வேதனைக்குறிய விடயம்.
/* அத்தகைய தொன்மையான தமிழ் நூல்கள் அனைத்தும் சமண படைப்புகளே என சமணம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளமையை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார் */
அந்த உதாரணங்களை காட்ட முடியுமா ?
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா..
Deleteசமணத்திற்கு முற்பட்டது தமிழனின் நாகரீக வளர்ச்சி என்பதில் இங்கு மாற்றுக் கருத்து இல்லை. இலமுரியா கண்டமும் தமிழ் பண்பாடும் எந்த காலத்திலும் தாழ்ந்து போனது கிடையாது.
ஆனால் சமணம் இல்லையேல்.. இன்று சமஸ்கிருதம் தன் தமிழனின் தாய் மொழியாகிப் போகியிருக்கும். ஆரிய அட்டகாசத்தினை ஒழித்துக்கட்ட மக்களால் உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கமே சமணம். அதை மதம் என்ற கோணத்தில் நீங்கள் அணுகுவது சரியல்ல.
சமணத்திற்கு முந்தைய எத்தனையோ தமிழ் நூல்கள் உண்டு. ஆனால் அவை இப்போது ஆரிய நூலாகவே மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட படி தொல்காப்பியம் தமிழனின் தொன்மையான நூல் தான். ஆனால் தொல்காப்பிய முறைப்படி நாம் இன்று தமிழை எழுதுகின்றோமா??
ஆனால் சமணர்கள் தங்களின் கல் வெட்டுகளிலும் நூல்களிலும் தொல்காப்பிய முறைப்படியே தமிழை பயன்படுத்தியுள்ளனர். "ச" என்ற எழுத்து வாக்கியத்தின் முதலில் வரும் போது அங்கு "ச"-க்கு பதிலாக "அ" என்ற உயிரெழுத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற தொல்காப்பிய முறைப்படி எழுதியுள்ள ஆதாரங்கள் உண்டு. கல்யாணிப்பட்டி மலையில் "சமணர்" என்று துவங்கும் வாக்கியத்தை "அமணர்" என பதிவாக்கியுள்ளனர். இன்னும் அநேக இடங்களில் இது உள்ளது.
தொல்காப்பியம் தொன்மையானது தான் ஆனால் அதனை காத்து பயன்படுத்தி இன்றும் நமக்கு அந்த தமிழ் சுவையை கிடைக்கச் செய்தது சமணம் என்பதை ஏற்காமல் இருக்க இயலாது.
முற்போக்கின் மேல் உள்ள கோபத்தால் தமிழைக் காத்து அதன் தரம் குன்றாமல் நமக்கு கிடைக்கச் செய்த சமணர்களிற்கு நன்றி சொல்லாமல் கூட சென்று விடாதீர்கள்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. - வள்ளுவம்.
நான் உங்களுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை. தமிழரின் நன்றி உணர்வு குறைந்துவிட வேண்டாமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழராக இருப்போம். தமிழனின் இன உணர்வோடும் நன்றி உணர்வோடும்.
எனது கேள்விக்கும் தங்களது பதிலுக்குமான பொருத்தப்பாட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
Deleteஇருப்பினும் விவாத்திற்கு தாங்கள் அணியமாய் இல்லாததினால் நான் இதற்கு மறுப்பளிக்க விரும்பவில்லை.
அருமையான எழுத்து நடை... சுவாரசியம்...
ReplyDeleteநன்றி நண்பரே...
DeleteWell thought-out and elaborate blog. Its worth the time spent. Great! Hat off to U.
ReplyDeleteவாழ்த்துரைக்கு நன்றி அண்ணா...
Deleteஆழமான கருத்துக்களுடன் மிக சிறப்பான பதிவு.
ReplyDelete