Friday, 15 April 2016

போராட்டக் கல்வி – மூணாறு பயணம்

          போராட்டம் எனும் இந்தச் சொல் மிகப் பழமையான சொல்லாக தோன்றுகிறது. ஆதியில் ஒரு செல் உயிரியாக இருந்து படிப்படியாக பரிணாமம் அடைந்து மனிதனாக உருவாகிட பல்வேறு போராட்டங்களை இந்த இனம் நிகழ்த்தியிருக்கிறது. மனித விலங்காக மாறினாலும் தம் பரிணாமத்தில் இடையில் பிரிந்து வெவ்வேறு உயிராக பரிணாமித்துப் போன பல விலங்குகளிடம் இருந்து தன்னையும் தன் இனத்தையும் காப்பற்றிக் கொள்ள தொடர்ந்தது போராட்டம். அதன் பிறகு மனித இனத்திற்குள்ளாகவே இனத்தை வகுத்து தம்மைத் தாமே போரிட்டு தம்மிடம் இருந்தே தம்மை காத்துக் கொள்ள போராடுகிற காலமும் வந்து சேர்ந்தது. அந்தப் போராட்டம் இன்றும் ஓயவில்லை. தான் வாழ்வதற்கு ஆதாரமாக, தம்மை, தம் இனத்தின் உயிரை பிடித்து வைத்திருக்கும் ஆதாரத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு மனித இனமும் தம் போராட்டத்தை கை கொண்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு பேராபத்து என்கிற போது அதுவரை அமைதியாக இருந்திருக்கிற மனம் போராட்ட குணமாக வெடித்து எழுகிறது.


அப்படியான போராட்டங்கள் எழும் பொழுதெல்லாம் அவற்றை ஒடுக்கித் தடுத்திட வரலாறுகளில் பல யுக்திகள் எதிரிகளால் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன.

Wednesday, 6 April 2016

சோலைமலை அடிவாரம்

          வீடுகளுக்குள் முடங்கி வாழ்வதற்கும் கூட சமுதாயத்திடம் இருந்து பல்வேறு பாடங்களை கற்க வேண்டியுள்ளது. ஆனால் சமுதாயத்திடம் இருந்து பாடம் கற்கத் துவங்கிவிட்டால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது முட்டாள்தனமாக அறியத் துவங்கும். விடுமுறைகளில் தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றியை அளுத்திக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருந்த என்னை வெளியில் இழுத்து வந்து போட்டு பயணங்களையும் புத்தகங்களையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தது பசுமைநடை.

Saturday, 24 October 2015

சிதைவின் வாசலில் வரலாறு - முத்துப்பட்டி

மலைகள் எனது அகராதியில் பிரம்மிப்பு என பொருள்படுகின்றன. பிறந்தது முதல் இவற்றினூடே பயணித்துக் கொண்டிருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். பேருந்தினில் சன்னல் வழியாக என்னுடனே பயணிக்கும் நிலவையும் மேகங்களையும் கவனிக்கத் துவங்கியது போலவே சில தொலைவு உடன் நகரும் இம் மலைகளையும் கண்டு ரசிக்கத் துவங்கினேன். உயர்ந்த மலைகளில் யாரிருப்பர்? என்ன இருக்கும்? மலைகளின் பின்புறம் எப்படி இருக்கும்? மலைகளின் மீது நடப்பது எப்படியான உணர்வைத் தரும்!? என ஆயிரம் கேள்விகள் எதிர்பார்ப்புகள் பால்யம் முதல் துரத்திக் கொண்டு வந்தன. துரத்திவந்த கேள்விகள் என்னை விட்டுச் சென்ற இடம் பசுமைநடை. பால்யத்தின் கேள்விகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பசுமைநடை மூலம் விடை கிடைத்தது. மலைகளுக்கு பின் உள்ள அரசியல் வியபாரம் வரைக்கும் கூட தேடாத கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

Thursday, 22 October 2015

நஞ்சுண்ட தெந்தன் கனவு

சூன்-2015ல் கூழாங்கற்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலக்கிய கூட்டத்தின் மூலம் தான் “நஞ்சுண்ட காடு” மற்றும் “விடமேறிய கனவு” இவ்விரு நூல்களும் எனக்கு அறிமுகம். இந்நூற்கள் குறித்து பேச்சாளர்கள் பேசிய போது மனதுள் ஏற்பட்ட தாக்கம் இவற்றை வாங்கிட உடல் கூசியது. பெரும் மன உலைச்சலோடு வீடு திரும்பிய தினம் அது. 2008-2009 தினங்களில் அனுபவித்த உணர்வினை ஒத்திருந்தது அந்த உணர்வு. ஏதோ துணிவு வர ஆகஸ்ட்-2015 மதுரை புத்தகத் திருவிழாவில் இவ்விரு நூற்களையும் தேடி வாங்கி, அதனை இப்போது வாசிக்கும் மனப் பக்குவம் வாய்த்தது.


2009-ல் ஈழ மண்ணில் நிகழ்ந்த போரின் தாக்கத்தினை இரண்டு நூலாக பதிவு செய்துள்ளார் அண்ணன் குணா கவியழகன். போருக்கு முந்தைய சூழலில் போராளிகளது வாழ்வியல், போருக்கு பிந்தைய சூழலில் அவர்களது அவமானகரமான வலிகள் என நகர்கிறது.