
மதுரை மல்லி, மதுரை ஜல்லிக்கட்டு, மதுரை மீன் ஆட்சி (மீனாட்சி), மதுரை தமிழ்ச்சங்கம் இந்த வரிசையில் மதுரையின் மற்றுமொரு அடையாளமாகிவிட்டது பசுமைநடை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரையின் வரலாற்று களஞ்சியமான யானைமலையை கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து காக்க அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டுவந்ததுதான் பசுமைநடையின் முதல் செயல்பாடு. செயல்பாடுகள் மூலம் உதயமாகும் அமைப்புதான் தொடர்ந்து மக்களுக்காக வேலை செய்யும் என்பதற்கு இன்றுள்ள பல்வேறு மக்கள் இயக்கங்கள்தான் உதாரணம். இன்றும் இந்த மலை உயிருடன் இருப்பதற்கு அம்மக்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வரை செய்து கொடுத்துள்ளது பசுமைநடை. பசுமைநடை முயற்சியாளர் எழுத்தாளர் சமூக செயல்பாட்டாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகள் ஏற்படுத்திய தாக்கம் யானைமலைக்கான போரட்டங்களை நாடறிய செய்தது.