Friday, 19 December 2014

வையை தழுவும் மேட்டுப்பட்டி

          இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் இரண்டவது பசுமைநடை இது. 14-12-2014 அன்று மேட்டுப்பட்டி நோக்கியது இப்பசுமைநடை. இந்த முறை வீட்டில் இருந்து எனக்கு பிடித்தமான சோழவந்தான் சாலை வழியே பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் ரசிக்க வைக்கும் விடிகாலைப் பொழுதினில் எனது இருசக்கர குதிரையில். நண்பர்களோடு கதை பேசியபடி பயணம் துவங்கியது. நகரங்களற்ற அந்த சாலை பால்யத்தில் இருந்து எனது மனம் கவர் சாலை. பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற போது மிதிவண்டிகளில் “மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம்!!என பதாகைகளை கட்டிக் கொண்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் இயற்கை சார்ந்த விழிப்புணர்வுக்கான பயணங்கள் இந்தப் பாதையிலேயே நிகழ்ந்துள்ளது.

Sunday, 30 November 2014

காதல் முருங்கை

 எத்தனையோ காதலிகள் தன்னை வேண்டமென்று ஒதுக்கிய போதும் காதலை விட்டு ஒதுங்கிட திராணியற்றவன், தன் ஒன்று விட்ட மைத்துனச்சியின் மணவிழாவில் மீண்டும் பெண் தேட ஆயத்தமாகிறான். விடுமுறைநாளில் நிகழும் திருமணம் இது. எதிர்பார்த்ததையும் விட இளம் பெண்களின் வரத்து சற்று அதிகமாகவே இருந்தது. இவ்வளவு திரளான கூட்டத்தில் இரட்டைச் சடையில் எந்த ஒரு இளம் பெண்ணும் கண்ணில்படவில்லை. தாவணியில் ஒரு பெண்ணும் சேலையில் சில பெண்களும் சுடிதாரிலேயே பெரும்பாலான இளம் பெண்களுமாக மண்டபத்தினை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.


அரக்க பறக்க சுற்றிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் இளம் பெண்களின் கும்பல் ஒன்று மட்டும் தீவிர அரட்டையில் லயித்திருந்தது. அவர்களுக்குள் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொள்வதும் கக்கபுக்கெ.. கக்கபுக்கெ... என சிரிப்பதுமாகவும் பெரியவர்கள் யாரேனும் கடக்கும் போது சிரிப்பையும் பேச்சையும் அடக்கிக் கொள்வதுமாகவும் இருந்தார்கள்..

Tuesday, 25 November 2014

மண் மணக்கும் மாங்குளம்

         
 ஞாயிறு அதிகாலைப்பொழுதுகள் பசுமைநடையால் வாய்க்கின்றன. அலுவல் கிழமைகளை விட பசுமைநடை ஞாயிறுகளே சுறுசுறுப்பாக்குகின்றன. கார்த்திகை, மார்கழி மற்றும் தை என பனி விழும் இம் மும்மாத பசுமைநடையும் கூடுதல் அழகானதாகவே அமைந்துவிடுகிறது. விடியாத வேளையில் அலைபேசி சினுங்க, உடனே போர்வை விலக்கி எழுந்துவிட வேண்டும். சற்றே அசந்தால், இக்காலைப்பொழுது ரசித்திட இயலாது கைமீறிப் போய்விடும்.




           இம்முறை (23-11-2014) பசுமைநடை பயணம் மாங்குளம்-மீனாட்சிபுரம் சிற்றூர் மலைக்கு.  பசுமைநடை பயணம் வீட்டிலிருந்தே துவங்கியது. சற்றே விடிந்து கொண்டிருந்ததை பறவைகளின் கும்மாளம் ஊருக்கே சொல்லிக் கொண்டிருந்தது.

Monday, 17 November 2014

வேளாண் பயணம் – மாங்குளம் சிற்றூர்

          மதுரையில் உள்ள மலைகளுக்கு பயணித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எனச் சொல்லப்படும் தமிழி கல்வெட்டுகளை,   சமண சிற்பங்களை, படுக்கைகளை, பாறை ஓவியங்களை குழுவாக கண்டும் ஆவணப்படுத்தியும் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பசுமைநடையின் அடுத்தகட்ட நகர்வு வேளாண் சிற்றூர் பயணம்.



          23-11-2014 அன்று 42-வது பசுமைநடை நிகழவிருக்கும் மாங்குளம் சிற்றூரில் 16-11-2014 அன்று வேளாண் பயணம்.


          மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு செல்லும் சாலையில் கள்ளந்திரி சிற்றூரில் இருந்து வலதுகைப் பக்கம் திரும்பிதும் 7 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கிறது மாங்குளம் சிற்றூர். வழக்கமான பசுமைநடை நேரத்தில்(காலை 6:00 மணி) மதுரையில் இருந்து நான், அண்ணன் முத்துச்செல்வக்குமார் மற்றும் நண்பர் ஜெயவேல் ஆகிய மூவரும் பயணிக்கத் துவங்கினோம். கள்ளந்திரியில் இருந்து

Tuesday, 11 November 2014

மரண வீட்டின் வாசம்

          மரணம் ஏற்படாத வீடுகள் இங்கு எதுவும் இல்லை. எனது வீடும் அதற்கு விதிவிலக்கு இல்லை. எனது பிறப்பிற்கு பின் எனது தாய் வழியில் இரு தலைமுறைகளின் மரணத்தினை கண்டிருக்கிறேன். எனது அம்மாவினுடைய அம்மா மற்றும் அவருடைய அம்மா. எனது தந்தை வழியிலும் இரு தலைமுறை மரணங்களை கண்டிருக்கிறேன். எனது அப்பாவினுடைய அப்பா மற்றும் எனது அப்பா. எனக்கு விவரம் அறிந்து நான் கண்ட முதல் மரணம் எனது அப்பாவின் அப்பாவினுடையது.


          ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்கள் அது. எனது அய்யப்பாவை (அப்பாவினுடைய அப்பாவை) ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள்.

Monday, 13 October 2014

மழையோடு ஒரு மலை விழா

மீன் கொடி நாட்டிலோர் மீளாய்வு...
பசுமைநடை எனும் பெயரில் ஒரு வரலாற்றுப் புரட்சி...
ஆதித் தமிழன் வாழ்வு தமிழி எழுத்துருவிலும் ஓவியத்திலும்,
கடவுள் மறுத்து ஆரியம் எதிர்த்திட்ட சமண தமிழ்த் தொண்டு
வட்டெழுத்திலும் சிற்பக் கலையுருவிலும்
தாங்குதெங்கள் மதுரை மலைகள்...


கல் திண்ணும் களவாணிகளுக்கு சாபச் சங்காய் ஒலித்த
எங்கள் மலை கீழ் வாழ் மாமக்கள் எம் மாமதுரையின் புதையல்கள்...
அச்சங்கின் எதிரொலியாய் ஒலிக்குதெங்கள் பசுமைநடை...


நாற்பதாவது நிகழ்வு
******************************
பசுமைநடையின் நாற்பதாவது நடை;

Saturday, 11 October 2014

தூய்மையான இந்தியா - கதைக்கலாம் கொஞ்சம்

எங்கோ நின்று கொண்டிருக்கிறேன். நான் ரசிக்கும் கமலஹாசன் என்னை கொஞ்சம் விலகி நிற்கச் சொல்லிவிட்டு, எனது காலுக்கிடையில் கிடந்த இலைதழைகளை தன் கையில் இருக்கும் துடைப்பம் கொண்டு தள்ளிக்கொண்டே எங்கோ போகிறார். சட்டென விழித்துக் கொள்கிறேன். படுக்கையில் இருந்து என்னை எழுப்பிவிடுகிறது சூரிய ஒளிக்கதிர்.

கண்கள் கூச செய்தித்தாளுக்காக வீதிக்கு வருகிறேன். எந்த பக்கம் போகலாமென சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Monday, 14 July 2014

சுயவிமர்சனம் - பயணங்கள் விதைத்தது...

          கவிதை என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த காதலி. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னும் ஒரு பெண் இருப்பார்களாம். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண், அவள் என் கவிதை. ஏமாற்றங்களால் நிறைந்த என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தினை கொண்டுவந்தவள் அவளே. எனது அக்காவே அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அவள் என் அக்காவின் நெருங்கிய தோழி. பள்ளிக் காலங்களில் காதலியாக அவளை மடக்கிவிட ஆவல். எனது அக்காவின் தோழி என்பதால் அக்காவிடம் மட்டுமே எப்போதும் கதைத்துக்  கொண்டிருப்பாள்.

Friday, 4 April 2014

குக்கூ… எனும் ஓவியம்

பார்வையற்றவர்கள் என்ற வார்த்தையை பொய்யாக்கியிருக்கிறது குக்கூ. இந்த திரைப்படத்தினை கண்ட எனக்கு அந்த வார்த்தையை உச்சரிக்க வாய் கூசுகிறது, எழுத கை கூசுகிறது. உண்மையில் நாம் தான் அவர்களின் உலகத்தை காண முடியாத, அவர்கள் ரசிக்கும் வண்ணங்களை ரசிக்க இயலாத  பார்வையற்றவர்களாக சுற்றித் திரிகிறோம். அவர்களை மாற்றுப்பார்வையுள்ளவர்கள் என எழுதுவதும் பேசுவதும் மட்டுமே சரியாக இருக்கும். இந்த உண்மையை உரக்க சொன்னதற்காக குக்கூவுக்கும் அந்த ஓவியத்தினை திறம்பட தீட்டிய அறிமுக இயக்குனர் ராஜூமுருகனுக்கும்

Thursday, 30 January 2014

இயற்கை சீற்றமா? மனித குற்றமா?

           மழைக்கால பேருந்து பயணங்களில் சன்னலோர இருக்கைகள் ஏனோ காலியாகவே கிடக்கின்றன. சன்னலோர சிலு சிலு காற்றுக்கு ஆவல் கொண்டு முட்டி மோதி ஏறியவர்கள் கூட, சன்னலோர இருக்கைகளை தாராளமாக தாரை வார்ப்பது அதிசயமானதுதான். காரணம், மழைநீர் முத்துப்போல நிற்கும் வலுவலுப்பான இருக்கைகளில் அமர ஏனோ பலருக்கு சங்கடம். லேசான மழைச்சாரல் சன்னலோரம் முகத்தில் பட்டதும் படுவேகமாக சன்னலை அடைக்க பாயும் மனித கரங்கள். பனிவிழும் காலை நேரங்களில் பேருந்து சன்னலை அடைத்துவிட்டாலும் தங்களது காதுகளையும் வெண்பஞ்சினால் அடைத்துவிட்டுத்தான் பயணிக்கின்றனர் ஏராளமானோர். இரு வளையங்களுக்கு நடுவே பின்னப்பட்ட கம்பளி இலைகளை