தலைப்பை பார்த்ததும்,
“இப்போ பெண்களுக்கு என்ன குறைச்சல், அவங்க இப்பலாம் எங்க அடிமைப்படுத்தப்படுறாங்க,
எல்லா துறைலயும் சாதிச்சிட்டுத்தானே இருக்காங்க, என் சம்சாரம் என்ன அடிக்கிற அளவுக்கு
நான் அவளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன்” என்ற பல விவாதங்கள் எழலாம். இப்படியான
விவாதங்கள் எழுவதே பெண்ணியம் இன்னும் மலரவில்லை என்பதற்கான உதாரணங்கள்தான்.
எனது அம்மாவின்
இளமைக்காலங்களில் அவரது வீட்டில் சோறு ஆக்கினால் அது அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும்
மட்டும்தான். பெண்பிள்ளைகளுக்கு எப்போதும் பழையதுதான். இந்நிலை 1970-களில் பல வீடுகளில்
இருந்துள்ளது. இந்நிலை இப்போது பெரும்பாலும் இல்லை என்பதாலோ, பெண்கள் அதிகம் சம்பாதிக்க
துவங்கிவிட்டார்கள் என்பதாலோ, பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்துகொள்கின்றார்கள்
என்பதாலோ பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறார்கள் என எடுத்துக்கொள்ள முடியாது
.
அன்றைய கால கட்டங்களில்
வாழ்ந்த பெண்கள் அடிமைப்படுத்தப்பட்ட முறை வேறு. இப்போதைய தொழில் மற்றும் சமுதாய வளர்ச்சி
பெற்ற காலத்தில் அவர்கள் அடிமைப்படுத்தப்படும் முறை வேறு. மிக நேர்த்தியாக அதே சமயத்தில்
வெளியிலும் தெரியாமல் அவர்களும் புரிந்துகொள்ள முடியாத அளவில் தொழில்நுட்ப ரீதியாக
அடிமைப்படுத்தப்படுகின்றனர். உதாரணமாக நண்பர் ஒருவர் “எங்கடா மாப்ள போகுர நேர்முகத்தேர்வு
(Interview)ல எல்லாம் பொன்னுகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறாங்க- நம்மளலாம் மனுசனா
கூட மதிக்கமாட்டேங்குறாங்க” என ரொம்பவே அலுத்துக்கொண்டார். அந்த சம்பவத்தினை இரண்டுவிதமாக
சிந்திக்கலாம். அவர் சொல்வதை வைத்து பார்க்கும் போது பெண்ணுக்கு தொழில்துறையில் அதிக
முன்னுரிமை கொடுக்கப்படுவதாக தெரிகின்றது. இதை வைத்து பெண்களின் மீதான மதிப்பு அதிகரித்துவிட்டதாக
எடுத்துக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்தினை சற்று ஆழமாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.
தனியார் தொழிற்சாலைகளில்
பெண்கள் ஆண்களுக்கு இணையாக பணி செய்தாலும் அவர்களுக்கு ஊதியம் குறைவாக கொடுத்தால் போதும்.
தொழிலை கற்றுக்கொண்டு ஆண்களைப் போல பெண்கள் போட்டியாக தொழில் துவங்குவது அரிது. தனியார்
நிறுவனங்களை பொருத்த வரை பெண்கள் பணி பிடிக்கவில்லை என்றாலும் ஆண்களைப்போல வேறு நிறுவனங்களுக்கு
உடனே மாறி செல்வது குறைவு. மொத்தத்தில் பெண் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும்
ஒரு தொழில்துறை அடிமை.
இது தொழில் இடங்களில்
மட்டுமல்ல குடும்பங்களில் உள்ள அடுப்படிகளும் கூட இன்னும் அவர்களுக்கு பாத்தியப்பட்ட
இடமாகவே கருதப்படுகின்றது. மெத்த படித்தவர்கள் கூட வீடுகளில் சமையல் வேலை செய்யக்கூடிய
ஆண்களை “டேய் என்னடா இது பொம்பளை மாதிரி- வெளிய வாடா” என ஏளனமான பேச்சுக்களாகவே நிறைந்துள்ளனர்.
சமுதாயத்தில் பெண்கள்
நிலை மிக மட்டமாகவே உள்ளது. நாகப்பட்டினத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான தொண்டு நிறுவனத்தில்
பணிரியும் தோழி ஒருவரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது முக்கிய பணி பெண்
கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது. அவர்களை கிராம பஞ்சாயத்து கூட்டங்களுக்கு
அழைத்து வருவதையே மாபெரும் பணியாக செய்து வருகின்றனர். அரசு அதிகாரமானது பெண்களுக்கான
தனி தொகுதி ஒதுக்கி பெண்களை வெற்றி பெற வைத்தாலும், அந்த பெண்கள் அந்த வீட்டின் ஆண்
அதிகாரத்திடம் தோல்வியையே சந்திக்கின்றனர். பஞ்சாயத்து தலைவர் இன்ன பிற தகுதிகளில்
உள்ள பெண்களின் கையெழுத்துகளையும் அக்குடும்பத்து
ஆண்களே இட்டுக்கொள்ளும் அளவு ஆணாதிக்கமே இங்கு நிறைந்துள்ளது.
ஆதியில் விவசாயத்தினை
கண்டுபிடித்த பெண்கள் உண்மையில் இது போல வரைமுறைப்படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டா
கிடந்தனர்? பெண்ணாதிக்கத்தில் இருந்த சமுதாயம், பெண்களை தெய்வமாகவே வைத்திருந்தது.
இன்றும் கிராமங்களில் விவசாயத்திற்கு மாரி(மழை) வேண்டி மாரிமாரியம்மனுக்கு விழா எடுப்பது
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண்கள் நடத்திய வழிபாடுகளும் இன்று ஆண் பூசாரிகள்
கையில் சிக்கிவிட்டது. பசி தீர்ககும் விவசாயத்தின் விளைச்சல் போல தாம் சார்ந்த இன குழு
சமுதாயத்திற்கும் பெண்களால் மட்டுமே மனித விளைச்சலை தர முடியும் என போற்றினர். பெண்களால்
மட்டுமே தம் குழுவில் மனித உற்பத்தியை உண்டுபண்ண முடியும் ஆண்களுக்கு அந்த தகுதியே
இல்லை என கருதிய காலம் போய், இன்று பெண்களை குழந்தை உற்பத்தி இயந்திரம் என்ற நிலைக்கு
கொண்டுவந்து விட்டுவிட்டனர். என்றைக்கு குடும்பம், தனிச்சொத்து என்ற நிலைக்கு மனிதன்
மாற்றம் பெற்றானோ அன்றே பெண் அடிமைத்தனம் துவங்கிவிட்டது.
சமுதாயத்தின் மருந்தான
பெரியார் அவர்களை கையில் எடுக்காமல் எழுதுவது ஏற்புடையது அல்ல. “பெண்கள் ஆண்கள் போல
உடை அணிந்து கொள்ள வேண்டும் ஆண்களைப்போல முடி திருத்திக்கொள்ள வேண்டும்” என்றெல்லாம்
கூறியவரையும் ஆணாதிக்கவாதிகள் விமர்சிக்காமல் இல்லை. “பெண்கள் உள்ளாடைகள் அணிவதை பெரியார்
எதிர்கின்றார்” என சபளத்தனமான சிந்தனையோடே விமர்சனம் செய்கின்றனர்.. பெண்களின் பெண்ணியல்
தன்மையை அவர்கள் அணியும் ஆடை கூட வெளிப்படுத்தக் கூடாது என அவர் கூறியதை இவர்கள் இவர்களுக்கான
சபள அறிவால் சிந்திக்கின்றனர் இது தான் ஆணாதிக்கம்.
இன்றைய காலகட்டத்தில்
பெண் சுதந்திரம் பற்றி பெண்கள் மத்தியில் கூட தவறான சிந்தனையே ஓடிக்கொண்டிறுக்கின்றது.
தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் அலங்கரித்துக் கொள்வதையும் பெண் சுதந்திரமாக எண்ணுகின்றனர்.
ஆனால் அவர்களே அவர்களை அலங்கரித்துக்கொண்டு தாங்கள் ஆண்களுக்கான போகப் பொருளாவதையே விரும்பக்கூடிய
நிலைக்கு இன்றைய ஆணாதிக்கம் சூசகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது.
“அச்சம் மடம் நாணம்
பெண்ணுக்கு அழகு” என்ற வாக்கியத்தினால் "துணிச்சல் வீரம் அறிவு" போன்றவற்றை பெண்களிடம்
இருந்து பரித்ததுதான் இன்றைய சமுதாயத்தின் சாதனை.
இன்றும் நிறைய
பெண்களை கடந்து செல்கையில் ஆதியில் இருந்த பெண்களின் துணிச்சல் வீரம் அறிவு போன்றவை
அவர்களின் மரபணுவில் ஒட்டிக்கொண்டு இருப்பதாகவே உணர்கின்றேன்.
நெருக்கம் நிறைந்த
சாலைகளில் வேகமாக செல்ல தயங்கி கொண்டிருக்கும் ஆண்களை படு வேகமாக கடந்து சென்று வந்த
வேகம் குறையாமல் வாகன நெருக்கத்திலும் பறந்து செல்லும் பல பெண்களை பார்த்துள்ளேன்.
முகத்தில் ஒரு பொட்டு பய ரேகையுமின்றி எப்படி இப்படியான துணிச்சல்!!! மலைக்கத்தான்
வைக்கின்றது.
குடிக்க பணம் கேட்டு
கை ஓங்கும் கணவனை அடித்து நொறுக்கும் போதும்; குடித்து சாலையில் மல்லாந்த கணவனை ஒரே
ஆளாக தூக்கிச்செல்லும் போதும் வரக்கூடிய வீரம் எவ்வளவு உடற்பயிற்சிக்கு பின் கிடைக்க
கூடியது!!!
வீடாகட்டும் அலுவலகமாகட்டும்
சிக்கலான குழப்பத்திற்கு பெண்களிடம் இருந்து கிடைக்க கூடிய தீர்வும் யோசனையும் எவ்வளவு
ஆழமானது என்பதை சிந்தித்தால் மட்டுமே உணர முடியும். பெண்களின் அறிவும் சிந்தனையும்
இன்று வேண்டுமென்றே நமது வீட்டின் தொலைக்காட்சி பெட்டிகளுக்குள் சமாதியாக்கப்படுகின்றது.
நமது அப்பா அப்பாவின்
அப்பா அவருடைய அப்பா என ஆண் வழிச் சமுதாயத்தில் பழக்கப்பட்ட நாம் என்றைக்காவது நமது
அம்மா அம்மாவின் அம்மா அவருடைய அம்மா என தாய் வழி சமுதாயத்தினைப்ப பற்றி சிந்தித்து
இருப்போமா? இப்படியான சிந்தனையை தூண்டாத ஆண்வழி சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு பெண்கள்
சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என பேசுவது அபத்தமானது ஆபத்தானது. தாய்வழிச்சமுதாயம்
மலரும் போதுதான் இந்த சமுதாயம் முன்னேற்றமடையும். அதற்கு பெண்களின் மரபணுவை தூண்டிவிடக்கூடிய
வழியைத்தான் தேட வேண்டியுள்ளது.
பொன்மணியின் மகனான
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
(இக்கட்டுரை சஞ்சிகை சிற்றிதழில் வெளிவந்துள்ளதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்)
பெண் சுகநதிரம் ஓகே... அதை அடைய நீங்கள் சொல்லும் வழி தவறு... வரலாறு என்றும் திரும்புவதில்லை...அது சமுதாய வீதி..அரசியல் மாற்றம் சரியான தீர்வு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபெண்களிடம் வீரமிருந்தால் என்னவோ இச்சமுதாயத்திற்கு தவறாகவே தெரிகிறது.... தேடலைத் தொடர்ந்து நானும்......
ReplyDeleteதேடுவோம். நன்றி :-)
Delete