புத்தகங்களும் பயணங்களும் வாழ்வதற்கான காரணங்களை
அர்த்தப்படுத்துகின்றன. இவை அமையாதவர்கள் இயந்திர யுகத்தில் சிக்கித் திணறுவதாகவே தோன்றுகிறது.
அதே போன்ற கால இயந்திர சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருந்த என்னை மீட்டெடுத்தது “பசுமைநடை”
என்பதை நான் எங்கும் பதிவு செய்வேன். பசுமைநடை எனும் கைகாட்டி பலகை எனது வாழ்க்கை பயணத்தின்
திசையை திருப்பியிராவிட்டால், இன்று அரவிந்தன் என்கிற தோழமையும் அத்தோழமையின் மூலமாக
“ஊர்க்குருவிகள்” எனும் தோழர் வட்டத்தோடு இந்த கோத்தகிரி பயணமும் வாய்த்திருக்காது.
திருமங்கலத்தின் எனது வீட்டு வாசலில் இருந்து
துவங்கியது பயணம். பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில்
தலைக்கவசம் இல்லாமல் வந்த ஒருவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டிருந்தார் காவலர் ஒருவர்.
இன்னும் விடியவில்லை. பொழுதும் தான்.
பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோவின் உதவியுடன் குறித்த
இடத்திற்கு அரவிந்தன் உடன் இணைந்து கொண்டேன். அவரது வாகனத்தில் ஏறிய மறுகனம் தோழர்
அகிலன் அறிமுகம் ஆனார். வேறு யார் வரப் போகிறார்கள் நம்மோடு என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
வாகனம் நகர்ந்து சிறு தொலைவிலேயே நின்றது. தோழர்.மீ.த.பாண்டியன் தனது குடும்பத்தோடு
வாகனத்தில் ஏறினார். ஒரு துணிவான ஆளுமையாக மதுரை வீதிகளில் வெகு தொலைவில் இருந்து அவரைக்
கண்டிருக்கிறேன். ஒரு முறை பேசியிருக்கிறேன், “நான் பாடுவாசி” என்கிற அறிமுகத்தோடு சரி. அவருடன் இரு
தினங்கள் நகரப்போவதை எண்ணிக் கொண்டிருந்தேன், கை கொடுத்து “வாங்க.. பட்டியல்ல பாடுவாசினு
பெயர் பார்த்தேன். நீங்க வர்ரீங்கனு தெரிஞ்சிக்கிட்டேன்” என்றார் இயல்பாக. அவரது துணையார் ஆரோக்கிய
மேரி அவர்களும், வானவில் என்கிற அழகான பெயரோடு அவரது குழந்தையையும் அறிமுகம் ஆனார்கள்.
தோழர்.அரவிந்தன் எடுத்த வேகத்தில் வாகனம் இருட்டில் இருந்து வெளிச்சம் நிறைந்த பகலுக்கு
பாய்ந்து கொண்டிருந்தது.
அந்தந்த ஊர் மனிதர்களுக்கு நாங்கள் வழிப்போக்கர்களாகிப்
போனோம்.
“இதே ரோட்டுல நேரா போயி.. நாலாவது கட்டுல எடது
பக்கம் எடுத்தீங்கெனா அவினாசிதேங்”
“அய்யய்யோ நீங்க ரொம்ப தூரம் வந்துட்டீங்க.. முன்னாடி
போயி வலது பக்கம் திரும்புங்க”
என எதிர்படும் அறிமுகமற்ற யாவரும் கரிசனம் காட்டினர்.
ஒவ்வொரு மாவட்டத்தை கடக்கும் போதும் தமிழ் தம் உச்சரிப்பை அழகாக மாற்றிக் கொண்டிருந்தது.
“இல்லீங்கோ.. இதோ இந்த பக்கமாங்கணா” என்கிற அழகு உச்சரிப்பு நாம் மேட்டுப்பாளையம்
நெருங்கிவிட்டோம் என்கிற உணர்வை கொடுத்தது. மலைகள் யாவும் வரிசையாக வழி மறித்தும் பின்
ஒதுங்கியும் சென்று கொண்டிருந்தன. கோத்தகிரி
நோக்கி வாகனம் மலை ஏறியது.
சில விசாரிப்புகளை கடந்து கோத்தகிரி கடந்து 6-கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள வள்ளுவர் நகருக்கு வந்து சேர்ந்தோம். “தான் தவமுதல்வன்” என்கிற அறிமுகத்தோடு தோழர் ஒருவர் வரவேற்று
அறிமுகமானார். அப்போது இவர் அவ்வளவாகதான் தோற்றமளித்தார். எங்களுக்கு முன்பே சென்னை,
திருச்சி நகரங்களில் இருந்து வந்திருந்த “ஊர்க்குருவிகள்” தோழர்களோடு அறிமுகம் செய்து கொண்டோம்.
தாமதமாக வந்ததால் அவர்கள் குறித்த பரிட்சயமும் அப்போதைக்கு இல்லை. அருகில் உள்ள அருவியில்
குளிர்க்க செல்ல இருப்பதாகவும் அந்த அருவி வடமாநில முதலாளி ஒருவரது தேயிலைத் தோட்டங்களால்
சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் பெயர் ஏதோ மோடி என முடியும் என்றார்கள். நாம்
அங்கு அனுமதியுடன் தான் குளிர்க்க முடியும் எனக் கூறினார், தோழர்.தவமுதல்வன்.
இயற்கையான அருவியை எந்த முதலாளி சொந்தம் கொண்டாட
முடியும்!!?? முதல் கேள்வி மனதில்.
குளிர்ப்பதற்காக தேயிலை தோட்டங்களை ரசித்துக்
கொண்டே நகர்ந்தோம். எவ்வளவு பசுமையானவை இந்த மலைகள். ரசித்துக் கொண்டிருந்த போது தவமுதல்வன்
துவங்கினார்.
“எனக்கு வெவரம் தெரிஞ்சி, இங்க இருந்து அதோ அங்க
இருக்கிற மலையெல்லாம் பாக்கவே முடியாது. முழுக்க காட்டு மரங்களா நெறஞ்சிருக்கும். ஆனா
இப்போ இந்த இடத்துல ஒரு மரமும் இல்ல. அதுக்கு பின்னாடி இருக்குற மலை வரைக்கும் தெரியிது!!!”
ரசனை தடைபட்டு ஒரு பேரிழப்பு மனதை கவ்வியது. ஒரு
வனாந்திரம் தனிப்பட்ட சில முதலாளிகளுக்கு எப்படி கை மாறியிருக்கும். வனத்துறை என்பது
அர்த்தமற்ற ஆரிய சடங்கு சம்பிரதாயங்கள் போலத்தானா!! ஒரு பெரும் வனத்தின் வரலாற்றினை
இரண்டே வரியில் சொல்லி முடித்த தவமுதல்வன் கொஞ்சம் கொஞ்சமாக மனத்தில் ஏறி அமர்ந்து
கொண்டிருந்தார்.
பெண்கள் ஆங்காங்கே தேயிலை பறித்து தங்கள் பின்னே
கட்டியிருந்த சிமெண்ட் சாக்குகளில் சேகரித்துக் கொண்டிருந்தனர். நிறைய திரைப்படங்களில்
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பின்னே மூங்கில் கூடையை கட்டியிருப்பார்கள்.
ஆனால் இங்கு அது காணக்கிடைக்கவில்லை. பசுமைபுரட்சி அறிகம் செய்த மெது விடம் (Slow Poison) இங்கும் நடைமுறையில்
இருக்கிறது. ஒரு ஆண் தொழிலாளி, ஊதா நிற குடுவையை முதுகில் கட்டிக் கொண்டு நிலங்களில்
மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். புரட்சி என்கிற பெயரை அரசியல்வாதிகளும் நடிகர்களும்
கெடுப்பதற்கு முன்பே இந்த பசுமை புரட்சியும், வெண்மை புரட்சியும், நீலப் புரட்சியும்
அதிகமாகவே கெடுத்துவிட்டது.
தோழர்.தவமுதல்வன் கூறியது போலவே அருவிக்கு செல்லும்
பாதை இரும்பு பிணைப்புகளால் மூடப்பட்டிருந்தது. அதன் வாசலில் தேயிலை தோட்டத்தில் பணி
செய்யும் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடன் வந்த தோழர்கள்
அவரோடு உரையாட, நானும் அவர்களொடு நின்று கொண்டிருந்தேன்.
“நீங்க எந்த ஊருங்கம்மா..!!” எனக்கேட்டேன்.
“நாங்க சிலோன்ல இருந்து வந்துருக்கோம்பா” என்றார்.
எனது கேள்விக்கான பதில் விளங்கவில்லை. சற்றே குழம்பி,
அருகில் தோழர் கவி தமிழை பார்த்தேன்.
“தோழர், இவங்க மலையத் தமிழர், இங்க எல்லாமே அவுங்கதான்.” என்றார்.
அதுவரை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்கப்
போகிறோம் என்று மட்டும்தான் நினைத்திருந்தேன். ஆனால் வரலாற்றில் ஆட்சியாளர்களாலும்
அரசுகளாலும் தங்களது சுயலாபத்திற்கு பந்தாடப்பட்ட, வலி நிறைந்த வரலாறு கொண்ட மனிதர்களோடு
உரையாடிக் கொணடிருக்கிறோம் என்கிற உணர்வு நெற்றிப் பொட்டில் அரைந்தது.
“இவுங்களோட நிறைய பேசனுமே தோழர்” என்றேன்.
“இன்னிக்கு சாயங்காலம், எல்லாம் வராங்க தோழர்
நாம பேலாம்” என்றார்.
பிணைக்கப்ட்டிருந்த இரும்பு வலைக் கதவு திறக்கப்பட்டது.
அருவி நோக்கி நகர்ந்தோம். உயரமான மலையின் தோற்றத்தை செதுக்கி, வாகன வழித்தடங்களாக அமைத்துக்
கொண்டிருந்தனர் தொழிலாளிகள். தொழிலாளிகளது உழைப்பு எவ்வளவு மகத்தானது. ஆனால் இந்த வட
மாநில முதலாளி இவர்களின் உழைப்பை மதிப்பவரா என்கிற கேள்வி எழுந்தது. அருவியை கைப்பற்ற
துடிக்கும் ஒரு மனிதன் இயற்கையை மதிக்காத போது, உழைப்பாளிகளின் உழைப்பை எப்படி மதிப்பவராக
இருக்க இயலும். மேலும் கீழுமாக பாதைகளும் ஏறி இறங்கின. அருவியின் சலசலப்பு அதனை நெருங்கிவிட்டதை
உணர்த்தியது.
கொழுந்து தேயிலைகள் பரிக்கப்பட்ட பகுதிகளில் ஆண்
தொழிலாளர்கள் அரிவாள் கொண்டு அவற்றை செதுக்கி சீவிக் கொண்டிருந்தனர். இதனை கவாத்து
செய்தல் என்று குறிப்பிடுவதாக அரவிந்தன் கூறினார்.
தவமுதல்வன் விவரித்தார்.
“சாதாரணமா தேயிலை 80-ல இருந்து 100 வருசங்களுக்கு
பலன் தரும். கொழுந்து இலை பரிக்கப்பட்டதும் ஆண்கள் இதை எல்லாம் சீவி விட்டுடுவாங்க.
இது 15 நாட்கள்ல மறுபடியும் கொழுந்து விட்டு வளரும். இத வெட்டாம விட்டுட்டா பெரிய மரமா
வளந்துடும். கொஞ்ச தூரம் தள்ளி சில மரங்களா வளந்திருக்கு. சின்ன வயசுல நாங்க அதுல ஏறி
விளையாடுவோம்.”
உண்மைதான் அவர் கூறியது போல ஒவ்வொரு தேயிலை மரத்தின்
கீழ் பகுதியும் பருமனாக உள்ளது. செயல்வழிக் கற்றல் போன்ற உணர்வாக இருந்தது. பதினைந்து
ஆண்டுகளில் நான் என்ன படித்தேன் என புரியவில்லை. இந்த மக்களிடம் இருந்து நான் கற்பதற்கு
இந்த வாழ்க்கை போதுமானதா என தெரியவில்லை.
இயற்கை அன்னையின் தாய்ப்பாலாக இந்த அருவி சுறந்து
கொண்டிருந்தது. மதியம் 2 மணிக்கு கூட இந்த அருவிக்கு இவ்வளவு குளிச்சி எப்படி வாய்த்திருக்கிறதோ
தெரியவில்லை. மேனியை தொட்டு தள்ளியோடும் அளவுக்கு வேகம். உடலில் ஓடும் ரத்தம் ஆங்காங்கே
உரைந்து போய்விடும் அளவிற்கு குளிர். இருந்தும் இதனை விட்டு பிரிய மனதில்லை. ஒரு மணி
நேரம்தான் அனுமதி என்றும் செல்லப்பட்டிருந்தது. வேறு வழியற்று குளியலை வம்படியாக நிறுத்திவிட்டு
அருவியிடம் விடை பெற்று நடக்க துவங்கினோம்.
தேயிலை தோட்ட தொழிலாளிகளாக பணி செய்து கொண்டிருந்த
மூன்று மலையகத் தமிழர்களை தவமுதல்வன் அவர்களது துணைவியார் அறிமுகம் செய்து வைத்தார்.
அவர்களோடு பேசிப் பார்த்தோம். அவர்கள் தங்கள் பணியில் அதீத தீவிரம் காட்டிக் கொண்டிருந்தனர்.
எங்களது பேச்சு அவர்களது பணியை தடைபடுத்திவிடுமோ என நினைத்து கொண்டிருந்த போதே மழையும்
தம் துளிகளை முன்னெச்சரிக்கைக்கு தெளிர்த்தது. அங்கிருந்து நகர்ந்து வந்த வழி திரும்பினோம்.
இரும்பு வலைக் கதவுகளை கடந்து வரும் வழியில் சிறிய
நிலத்தில் ஆங்காங்கே முட்டைக்கோசு, பீன்ஸ், கேரட் விளைந்திருந்தன. சிறிய அளவு நிலத்தை
நம்பியும் இங்கு சிறு நிலஉரிமையாளர்கள் உள்ளனர்.

“எனக்கு இப்ப 45 வயசுங்க. அஞ்சு வயசுல இலங்கையில
இருந்து இங்க வந்தோம். பெறந்தது இலங்கையிலதான். இங்க இருக்குற எல்லாருமே புதுக்கோட்டை
பூர்வீகம்தான். அம்மா அப்பா இலங்கையிலதான்
இருந்தாங்க. அங்க கல்யாணம் பண்ணிகிட்டு என்னையும் பெத்து, என் அஞ்சு வயசுல இங்க தூக்கிட்டு
வந்துட்டாங்க. இலங்கையில அப்பாவும் இதே தொழில்தான் பார்த்தாங்க”
சில புரிதல்கள் உண்டாகிக் கொண்டிருந்தன எனக்குள்.
மலைப்பகுதிகளில் கட்டிடம் எழுப்ப, சாலை அமைக்க, தேயிலைத் தோட்டங்களை உண்டாக்கி பராமரிக்க
என அனைத்திற்கும் இம் மக்கள் பல ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் பயன்பட்டிருக்கின்றனர்.
ஆங்காங்கு வேலை முடிந்ததும் இங்கு தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.
கடிகாரத்தில் சிறிய முள் நான்குக்கு அருகில் வந்து
கொண்டிருந்தது. தேயிலை தோட்டங்களுக்குள் இருந்து ஒவ்வொரு பெண் தொழிலாளர்களும் தாங்கள்
சேகரித்த தேயிலை மூடைகளை தலையில் சுமந்து கொண்டு சாலை நோக்கி சிலர் மேல் ஏறியும் சிலர்
கீழ் இறங்கியும் வந்து கொண்டிருந்தனர்.
“பரிச்ச இந்த தேயிலைகள என்ன பண்ணுவீங்க இப்போ”
“அதோ தெரியிதுல அந்த கெடங்குக்கு கொண்டு போகனும்.
நாலு மணிக்கு வண்டி வந்துடும் அதுல ஏத்திகிட்டு அங்க போயி எடை போட்டு குடுத்துட்டு
வருவோம்.”
“திரும்பி வண்டியிலயே வந்திடுவீங்களா!!”
“இல்ல இல்ல.. போறப்ப மட்டும்தான் வண்டி. திரும்பி
வர்ரப்போ நாலு கிலோ மீட்டர் நடந்துதான் வரணும்.”
இதே போல தானே பல கால கட்டங்களில் பல ஆட்சியாளர்களும்
அரசுகளும் இவர்களை பயன்படுத்திவிட்டு பலன் பெற்ற பிறகு “எக்கேடும் கெட்டுப் போ.., எனக்கென்ன!!” என்று இப்படித்தானே கழற்றி விட்டிருப்பார்கள்..
இன்று மாலை இவர்களோடு நிகழும் உரையாடல் இன்னும்
பல தெளிவுகளை கொடுக்கும் என்கிற எண்ணத்தில் மேற்கு பார்த்து காத்திருந்தேன். காண முடியாத
சூரியன் பனிப் போர்வைக்குள் ஒளிந்தவாரே ஒளிவீசிக் கொண்டு மலை இடுக்குகளுக்குள் போய்
மறைந்தான்.
வேகமாகவே இருட்டத் துவங்கியது. தோழர் தவமுதல்வன்
மலையகத் தமிழர்கள் குறித்து இயக்கி உருவாக்கிய “பச்சை ரத்தம்” ஆவணப்படத்தினை திரையிட நண்பர்கள் பணிகளை
மேற்கொண்டனர். சிறுது நேரம் ஓடிக் கொண்டிருந்த ஆவணப்படம் குறுந்தகடுகளில் இருந்த கீறல்களால்
தடைபட்டு போனது. அதுவும் ஒரு வகையில் சிறு மாற்றத்தை கொடுத்தது. அவர்களை பற்றி திரையில்
காண்பதை விட அவர்களது வார்த்தைகளிலும் நேரடி உணர்வுகளிலும் அவற்றை அறிந்து கொள்ளும்
வாய்ப்பு அமைந்தது.

மேலும் தேயிலை பரிக்கும் போது யானை, காட்டெருமை
போன்ற காட்டு விலங்குகளால் அதிகமாக தாக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மழை
வெள்ள காலங்களில் தேயிலை பரித்துவிட்டு 30-கிலோ எடை கொண்ட சுமையோடு காட்டாற்று வெள்ளத்தினை
கடந்து வருவதை அவர்கள் சொல்லும் போது கண்கள் கலங்கத்தான் செய்கின்றன.
“கொஞ்சம் நிலம் வச்சிருக்கிற மொதலாளிங்கலாம் அவ்வளவோ
பிரச்சனை இல்ல, பெரிய பெரிய முதலாளிங்ககிட்ட வேலை பாக்குறது தான் செரமமா இருக்கும்” என்றவர்களிடம் தீபாவளி போனஸ் குறித்து
கேட்டோம்.
“தீபாவளிக்கு மட்டும்தான் ரெண்டாயிரம் குடுப்பாங்க.
வருசத்துக்கு ஒருக்க தான்.”
“உங்க குழந்தைகள இந்த தொழில்ல ஈடுபடுத்துவீங்களா,
படிக்க வைக்குறீங்களா!!?”
“எங்க பிள்ளைக இந்த தொழிலுக்கே வரக் கூடாதுனு
நினைக்கிறோம். எம் மக B.Com படிக்கிறா. சின்னவென் பதினொன்னு படிக்கிறான்.”
“சரி வேலைக்கு ஆள் கிடைக்கலனா வெளியில இருந்து
ஆள் எடுத்துப்பாங்கள்ல எப்படியும்!!”
“இப்பவே நிறைய ஹிந்திக்காரங்கல எடுத்துக்கிட்டாங்க!!!
அவுங்களும் நிறைய எங்க வேலைகள பாக்குறாங்க” என்றனர்.
தோழர் ஒருவர் “ஹிந்தி படிச்சா ஆஹோ ஓஹோன்னுறானுக..
ஹிந்தி தெரிஞ்சவென் அம்புட்டு பேரும் தேயில தோட்டத்துல கூலி வேலைக்கி தான் வாரானுகளா!!” என நையாண்டியாக பேசினார். அவர்களது வருத்தம்
தோய்ந்த குரல்கள் சிரிப்பை எட்டிப் பார்த்தன.
அவர்களை தொடர்ந்து தவமுதல்வன் பேசினார்.
“தமிழ் தேசிய விடுதலை, ஈழத்தமிழர்கள் போராட்டங்கள்
குறித்த பெரிய உரையாடல் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அதனை ஒத்த ஒரு விசயமாக
மலையத்தமிழர்கள் வாழ்வியலும் இருக்கிறது என்பதை பெதுவெளியில் பேசத்தான் “பச்சை ரத்தம்” ஆவணப்படம் எடுக்கப்பட்டது. நீலமலை (நீலகிரி)
மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு 3லட்சம் பேர் மலையகத் தமிழர்கள் தான். அரசியல் தேர்தல்களில்
முக்கியமான சக்தியாக தாயகம் திரும்பிய மக்கள் இருந்து வருகிறோம். இவர்கள் யாருக்கும்
சொந்த நிலமோ சொந்த வீடோ கிடையாது.
ஏறக்குறைய 1800-களில் வெள்ளையர்களுக்கு கீழ் இருந்த
இந்தியா இலங்கை பகுதிக்கு குறைவான கூலிக்கு அடிமைகள் தோட்ட வேலை செய்ய தேவைப்பட்டனர்.
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த மக்களை அடிமைகாளக அங்கு அழைத்துசென்றனர்.
ஒவ்வொரு பகுதிகளிலும் கங்காணிகளை நிர்ணயித்து இவர்களை கட்டி கொண்டு போகும் பணி தீவிரமாக
இருந்தது. இங்கு நிலவிய ஹிந்துத்துவாவின் சாதிய மற்றும் சனாதனா கொடுமைகளில் இருந்து
விடுபடவும் பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவும் மக்கள் திரளாக இலங்கை செல்ல ஆர்வம் காட்டினர்.
முழுக்க கால்நடையாக அழைத்து செல்லப்படுகிறார்கள்
தமிழர்கள். அவ்வாறு துறைமுகம் வரை அழைத்து செல்லப்பட்டவர்கள் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றனர். ஆதிலட்சுமி என்கிற கப்பல் கவிழ்ந்ததில் பல்லாயிரம் பேர் பலியாகினர்.”
மிக அதிர்ச்சியான தகவலாக இருந்தது எனக்கு. இலங்கைக்கு
அழைத்து செல்லப்பட்டு கொத்தடிமைகளாக வைக்கப்பட்ட தமிழர்கள் குறித்து கேட்டறிந்த விசயங்களில்
இது புதிய செய்தியாக இருந்தது. டைட்டானிக் கப்பல் குறித்தும் அதில் மடிந்து போன காதல்
குறித்தும் அறிந்து வைத்திருந்த எனக்கு இதை குறித்து அறிந்து கொள்ளாத அவமானம் தலைகுனிய
செய்தது. இந்த ஆதிலட்சுமி கப்பலில் எத்தனை காதல்கள், எத்தனை கனவுகள் பலியாகியிருக்கும்.
எனது சிந்தனையின் மத்தியிலும் தவமுதல்வன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
“முதலில் 5000 ஏக்கரில் காபி பயிரிடுகிறார்கள்.
60-ஆண்டுகள் காபி பயிர்தான் இலங்கையில். காபி பயிர் நோய் பட்டு அழிகிறது. பிறகு தேயிலைக்கு
மாறுகிறார்கள் வெள்ளையர்கள். இப்படியாக பெரிய மலைக்காடுகளை தேயிலைக்காக செதுக்கி பாதை
அமைத்து கட்டிடங்கள் அமைப்பது பாலம் கட்டுவது வரை அனைத்தும் இங்கிருந்து சென்ற 12-லட்சம்
தமிழர்களின் உழைப்புதான். இன்று 80 விழுக்காடு இலங்கைக்கு வருமானம் வருகிறது என்றால்
அது தமிழனின் உழைப்பில் விளைந்த தேயிலையால் மட்டும்தான்.
பூர்வீகமாக இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழர்களுக்கும்
இவர்களுக்கும் எந்த ஒரு சந்திப்பும் இருந்ததில்லை. காரணம் சிங்களர்களுக்கும் அவர்களுக்கும்
இடையே அப்போதே முரண்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து இடம் பெயர்ந்த
நாங்கள் சிங்கள பகுதியில் தேயிலை தோட்ட பணிகள் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்து
கொண்டிருந்தோம். அங்கிருந்த கங்காணிகளை மீறி எங்கும் எங்களால் செல்லவும் இயலாது.
1948-களுக்கு பிறகு நடக்கிற இலங்கை பாராளுமன்ற
தேர்தலில் தோட்ட தொழிலாளர்கள் ஏழு இடங்களில் வெற்றி பெற்று பாராளு மன்றத்தில் மக்கள்
பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்கின்றனர். இங்குதான் பிரச்சனை உருவாகிறது. வடகிழக்கில்
இருக்கும் தமிழர்களும், மலைகளில் தோட்ட தொழிலாளர்களும் சேர்ந்து தமிழர்களே பெரும்பாண்மையாக
இருக்கின்றனர். இதனை முறியடிக்கும் நோக்கத்துடன் 1948-க்கு பிறகு அங்கு புதிய சட்டங்கள்
இயற்றப்பட்டு மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமையும் தேர்தலில் போட்டியிடும் உரிமையும்
பரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சாஸ்திரி – சிரிமாவோ ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு
மலையகத் தமிழர்கள் என்கிற பெயரோடு எங்களை இந்தியாவிற்கு திருப்பி விரட்டியது இலங்கை.
ஐந்து லட்சம் பேரை மட்டும் தங்களது தேவைக்கு இன்னமும் அங்கு வைத்துக் கொண்டு தங்கள்
தேவையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறது. பலர் இன்னும் வாக்குரிமை இல்லாமலே இருக்கிறார்கள்.”
வேண்டுமட்டும் கரும்பை பிளிந்து சாரு எடுத்துவிட்டு
சக்கையை வீசி எறிவது போல திரும்பிவந்த இந்த மக்கள் தாங்கள் விட்டு சென்ற நிலங்களை தங்களது
சொந்தங்களே அபகரித்துக் கொண்ட நிலையில் மீண்டும் தேயிலை தோட்ட பணிக்கே திரும்பி நீலகிரி,
மாஞ்சோலை போன்ற பகுதிகளில் குடியேறிவிட்டனர்.
தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களுக்கு கடனுதவி
செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட Repco-வங்கி இன்று Commercial-வங்கியாகிவிட்டது. இந்த வங்கி இன்று வரை இம்மக்களுக்கு எந்த ஒரு சேவை புரிந்ததாகவும்
பதிவில்லை.
பெரும் வலிகளால் நிறைந்த வரலாற்றை கேட்டுவிட்டு
இரவில் இட்லி தொண்டைக்கு கீழ் இறங்கவில்லை. ஆட்சியாளர்களால் தேவைக்கு பயன்படுத்தி,
பிறகு தூக்கி வீசப்பட்டு இன்றும் 150 ரூபாய் கூலிக்கு அடிமையாக வாழ்கிறது. இந்த சமுதாயம்
தலைமுறை அடிமையாக மாறிவிட்டது. இவர்களுடைய குழந்தைகளின் படிப்பு இனி வரும் வரலாற்றை
மாற்றி எழுதட்டும்.
(மறுநாள் பழங்குடி மக்களை சந்தித்தது குறித்தும்,
பாறை ஓவியங்கள் குறித்தும் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.)
அன்பும் நன்றியும்
பாடுவாசி ரகுநாத்
மிக அருமையான வலி மிகுந்த பதிவு. நிறைய வலி மிகுந்த 'மலையகத் தமிழர்களின்' வாழ்வை அறிந்துக்கொள்ள முடிகிறது.
ReplyDeleteவலியையும் மீறி இரசித்த விடயங்கள்...
புத்தகங்களும் பயணங்களும் வாழ்வதற்கான காரணங்களை அர்த்தப்படுத்துகின்றன...
'வானவில்' என்கிற அழகான பெயரோடு...
ஒவ்வொரு மாவட்டத்தை கடக்கும் போதும் தமிழ் தம் உச்சரிப்பை அழகாக மாற்றிக் கொண்டிருந்தது.
இன்னும் நிறைய...
பதிவிற்கு மிக்க நன்றி.