Wednesday, 6 April 2016

சோலைமலை அடிவாரம்

          வீடுகளுக்குள் முடங்கி வாழ்வதற்கும் கூட சமுதாயத்திடம் இருந்து பல்வேறு பாடங்களை கற்க வேண்டியுள்ளது. ஆனால் சமுதாயத்திடம் இருந்து பாடம் கற்கத் துவங்கிவிட்டால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது முட்டாள்தனமாக அறியத் துவங்கும். விடுமுறைகளில் தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றியை அளுத்திக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருந்த என்னை வெளியில் இழுத்து வந்து போட்டு பயணங்களையும் புத்தகங்களையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தது பசுமைநடை.


          “தன்னோடு சேர்ந்து செயல்படும் மற்ற மனிதர்கள், சமத்துவம் – சகோதரத்துவம் எல்லாவற்றுக்கும் மேல், நியாயம் என்கிற உணர்வுகள் தூண்டப்பட்டால் மட்டுமே எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுடன் ஒன்றிணைவான்”

என்கிற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!! இந்த ஏப்ரல்-2016 பசுமைநடையில் எனக்கு வயது நான்கு முடிந்து ஐந்தை துவங்கியிருக்கிறது. பல்வேறு படிப்பிணைகளை இன்றும் கற்றுக் கொண்டே இருக்கிறேன். சமத்துவம் – சகோதரத்துவம் எல்லாவற்றுக்கும் மேலாக நியாயம் என்கிற உணர்வுகளாளேயே தூண்டப்பட்டுள்ளேன் என அண்ணல் மொழியில் பொருள் கொள்ளலாம்.


          வாழ்க்கையில் நான் கடந்த பல்வேறு பழைய இடங்கள் தளங்கள், இப்போது புதியதாக காட்சி தருகின்றன. அப்படியான இடங்களில் அழகர்கோயிலும் ஒன்று. வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அழகர்கோயிலுக்கு வந்து போகும் மதுரைக்காரர்களில் நானும் ஒருவனாகவே இருந்து வந்திருக்கிறேன். பசுமைநடையாக 20-03-2016 அன்று அழகர் கோயிலுக்கு சென்று வந்தது பல்வேறு நினைவுகளை அசைபோடச் செய்துவிட்டது.
படிக்கும் வயதில் கடவுள் நம்பிக்கை இருந்த காலகட்டங்களில் அம்மாவுடன் கோயில் கோயிலாக சுற்றியதில் அழகர் கோயிலும் அதிகம் இடம்பெறும். திருமங்கலத்தில் இருந்து மதுரை பெரியாருக்கு (பெரியார் பேருந்து நிலையம்) வந்து, அங்கிருந்து அழகர் கோயில் பேருந்தில் ஏறி பயணித்து வருவோம். அழகர் கோவில் கோட்டை நுழைவுப்பாதைக்குள் அந்த பேருந்து நுழையும் போது அந்த பேருந்துக்காகவே அளந்து இந்த பாதையை அந்த காலத்திலேயே அமைத்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும். ஆனால் அது மாட்டு வண்டிகள் வந்து போக அமைக்கப்பட்டதாக எனது அப்பா ஒரு முறை கூறிய ஞாபகம்.
இப்போது அந்த தோற்றமெல்லாம் அடியோடு மாற்றப்பட்டுவிட்டது. நுழைவாயிலில் சிமெண்ட்டால் கட்டப்பட்ட பெருமாள் பெயிண்ட் வண்ணம் தாங்கி, அவரது மனைவிமார்களோடு நிற்கிறார்.


          கோட்டை சுவர்களும் அவற்றின் மேல் பகுதி வளைவு வளைவாக அமைக்கப்பட்டுள்ளதும் பார்ப்பதற்கு மன்னர் காலத்திற்குள் புகுந்துவிட்டோமோ என்கிற உணர்வை கொடுக்கிறது. கோட்டை சுவர்களில் துவங்கி கோயில், மலை உயரம் வரைக்கும் குரங்குகளின் சேட்டைகள் கண்டபடி இருந்தால் நன்கு பொழுது போகும். தனியாக வரும்போதெல்லாம் இந்த கோட்டை சுவர் பேருந்து சாளரங்களின் வழியாக வேகமாக கடந்து சென்றுவிடும். ஆனால் இந்த முறை பசுமைநடையோடு வந்த காரணத்தினால் கோட்டை சுவற்றை ஆரஅமர இருந்து ரசித்ததும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அவர்கள் கூறிய கோட்டை குறித்தான தகவல்களை கேட்டதும் முழுமையாக இருந்தது.


          திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், இடபகிரி, இருங்குன்றம், சோலைமலை என பல பெயர்கள் தாங்கியிருக்கிறது அழகர்மலை. அழகாபுரிக் கோட்டை, இரணியன் கோட்டை என்ற இரண்டு கோட்டைகள் அரணாக சுழ இச் சோலைமலை வரலாற்று பின்புலத்துடன் அமைந்திருக்கிறது. கிபி 14-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த வாணாதிராயர்கள் எனும் குறுநில மன்னர்களால் வெளிப்புற அழகாபுரிக் கோட்டை கட்டமைக்கப்பட்டுள்ளது.
அழகர்கோயில் கோட்டையை தகர்க்க ஹைதர் அலி படையெடுத்த போது, கான்சாகிப் மருதநாயகம் எதிர்த்து நின்று வெற்றிபெற்ற வரலாறும் இக் கோட்டைச் சுவருக்கு உண்டு.
சாந்தலிங்கம் ஐயாவின் உரை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொண்டு சென்றுவிட்டது. இனி வரும் காலங்களில் ஐயா போன்றோரின் உணர்வுகளை உபகரணங்களாகக் கொண்டே  கால இயந்திரங்கள் போன்றவை உண்டாக்கப்படலாம்.


          சென்னை - கடலூர் வெள்ள நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு பெரும் எண்ணிக்கையில் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை சரியான மனிதர்களின் கைகளுக்கு கொண்டு சேர்த்தமைக்காகவும், தொடர்ந்து மக்களோடு இயங்கி வருவதற்காகவும் பசுமைநடைக்கு கிடைத்த விருதுகளை சாந்தலிங்கம் ஐயா அவர்கள் ஆலமரமாக நின்று அடுத்த தலைமுறை பசுமைநடையின் விழுகளின் கையில் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.


          அம்மாவுடன் வந்த நாட்களில் எல்லாம் பேருந்தைவிட்டு இறங்கி நேராக மலை ஏறுவதற்கு தேவஸ்தான வாகன நிறுத்தத்தை நோக்கியே கண்களும் கால்களும் பயணிக்கும். பேருந்து நிற்கும் இடத்திற்கு அருகில் ஒரு பழைய மண்டபம் இடிந்து விழும் நிலையில் கம்பி வேலிகளாலும் செடிகொடிகாளலும் வேயப்பட்டிருக்கும். “இந்த மண்டபத்திற்குள் யாரும் பிரவேசிக்க வேண்டாம். இடிந்து விழும் நிலையில் உள்ளது” என்கிற எச்சரிக்கை பலகையும் இருக்கும். அதனால் அதனை மேம்போக்காக பார்த்துவிட்டு கடந்துவிடுவது தான் பழக்கம்.


            இன்று தொல்லியல் துறையின் சீரிய முயற்சியில் இந்த மண்டபமும் அதன் கூரையும் புணரமைக்கப்பட்டு காட்சி தருகிறது. அந்த மண்டபத்தினுள்ளேயே அமர்ந்து சாந்தலிங்கம் ஐயாவிடம் வரலாற்றுப் பாடம் கற்கத் துவங்கினோம்.


          திருமலைநாயக்கர் காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாட்டியக் கலை மண்டபம் மிகுந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது. தூண் ஒன்றில் மீன் சின்னம் பொரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் மேடையின் முகப்பில் ஒரு புறத்தில் திருமலைநாயக்கர் மற்றும் அவரது  மனைவியின் சிற்பங்களும் மறுபுறம் திருமலைநாயக்கரின் தம்பி முத்தியாலுநாயக்கரது சிற்பமும் அவரது மனைவியின் சிற்பமும் அமையப்பட்டுள்ளது. உடை, அவற்றின் வேலைப்பாடு, ஆபரணங்கள், முகம், கை, கால்கள், நகம் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் சிற்பி. இப்போதைய இயந்திர உளிகள் சிற்பத்தில் இயந்திரத் தனத்தை மட்டுமே பிரதிபலிக்கின்றன. உணர்வுகளும், அழகியலும் பழங்கால சிற்பங்கள் மாத்திரமே மனதளவில் போய் சேர்க்கிறது.



           அப்போதெல்லாம் கோவில் தேவஸ்தான வாகனத்தில் தான் மலைக்கு சென்று வந்திருக்கிறோம். வாகனத்திற்கு காத்திருக்கும் போது அங்கே பாதி கட்டியும் கட்டாமலும் காட்சி தரும் சிற்ப கல் சுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அதுவும் திருமலைநாயக்கர் காலத்தில் கட்டி முடிக்காமல் விடுபட்ட ராச கோபுரம் என்பதும் பசுமைநடை மூலமாகதான் அறிந்தேன். பசுமைநடை மூலமாக மதுரை வசந்த (புது) மண்டபத்திற்கு சென்ற போது சாந்தலிங்கம் ஐயா அவர்கள் தற்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் நந்தி சிலைக்கு பின்புறம் இருக்கும் முழுமையடையாத ராச கோபுரத்தை குறிப்பிட்டார். இதுவும் அழகர்கோயில் ராச கோபுரமும் ஒரே போல பூர்த்தியடையாதவை என விளக்கினார். முழுமையடையவில்லை என்றாலும் இன்றும் இவைகள் தனித்த அடையாளத்துடன் காட்சி தருகின்றன.


          பதினெட்டாம் படி கருப்பசாமியை கடந்து சென்று கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் தாம் பிரியாணி ஆகப்போகிறோம் என்கிற உண்மை புரியாமல் இரு ஆடுகள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தன. கருப்பசாமி கருவறைக்கு எதிர் புறத்தில் பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு அருகில் தற்போது தொன்மையான குளம் ஒன்று உயிர்பெற்றிருக்கிறது. நேர்த்தியான படித்துறைகளுடன் அமையப்பட்டுள்ளது.


          அடுத்த வரலாற்று வகுப்பினை எதிராசன் முற்றத்தில் சாந்தலிங்கம் ஐயா தொடர்ந்தார். அழகர்கோயில் கருவறை வட்டவடிவமாக உள்ளதால் இதனை பவுத்த கோயிலாக இருந்திருக்கிறது என பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் ஐயா தனது “அழகர் கோயில்” நூலில் குறிப்பிட்டுள்ளதை விளக்கினார். இன்று இது வைணவத்தளமாக உருமாற்றம் அடைந்துள்ளதையும் விளக்கினார். முருகனின் ஆறாவது படைவீடாக கருதப்படும் பழமுதிர் சோலை, ராக்காயி அம்மன், கிடாரிப்பட்டி சமண வரலாற்று எச்சங்கள் என  பல்வேறு சமயங்களின் ஒட்டுமொத்த கலவையாக அழகர்கோயில் விளங்குகிறது.


           இந்த முறை மட்டும்தான் மலைக்கு மேல் செல்லவில்லை. அம்மாவுடன் வரும் போது நூபுரகங்கை என்கிற சிலம்பாற்றின் ஊற்றிக்கண்ணில் குளிக்காமல் வந்ததில்லை. மூலிகை வாசமும் சுவையும் கலந்து வரும் அந்நீரை குடிப்பதை இன்று நினைத்தாலும் நாக்கில் இனிக்கிறது. டாட்டா இண்டிகாமில் விற்பனையாளனாக பணி புரிந்த போது மாத துவக்கத்தில், இங்கே விற்பனை பிரதிநிதி நண்பர்கள் குவிந்துவிடுவோம்.

“யேய் எல்லாரும் போன ஆஃப் பண்ணீடுங்கடா” என அறிவுருத்துவார்கள் சக நண்பர்கள்

“யேய் நம்ம டாட்டா இண்டிகாமு ச்சும்மாவே டவர் கெடைக்கதுடா, மலையில வேற இருக்கோம். நாட் ரீச்சபிள்னுதான் வரும். அதெல்லாம் ஆஃப் பண்ண வேணாம்” எனவும் பதில்கள் வரும்.




          என் வாழ்வின் பல சுகமான ஞாபகங்களை கொண்டது அழகர்மலை. நெல்லிக்காய், மாங்காய் என அங்கே வாங்கித் தின்று கொண்டே மனம் விரும்பியவர்களுடன் உலா வந்த அத்தணை மணித்தியாலங்களும் மனத்தினில் பசுமையாக இருக்கிறது. பசுமைநடையோடு சோலைமலை அடிவாரத்தின் வரலாற்று பின்புலத்தை அறிந்து கொண்டது போல மலை முழுவதிலும் பயணிக்க வேண்டும்.



அன்பும் நன்றியும்
பாடுவாசி
paaduvaasi@gmail.com
thamizhmani2012@gmail.com

No comments:

Post a Comment