
அப்படியான
போராட்டங்கள் எழும் பொழுதெல்லாம் அவற்றை ஒடுக்கித் தடுத்திட வரலாறுகளில் பல யுக்திகள்
எதிரிகளால் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன.
சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் உள்ள இந்த
காலகட்டத்தினில் போரட்டங்களுக்கு எதிரான மனநிலையை, கருத்தியலை பரப்பிவிடும் நேர்த்தியான
வேலைகளில் இறங்கியுள்ளனர் இந்த காலகட்ட எதிரிகளான கார்ப்ரேட்டுகள். தொலைக்காட்சிகள்
வழியாக பரப்பப்படும், ‘சவன் அப்’ (7UP) குளிர்பான நிறுவனத்தின் விளம்பரங்கள் அதற்கு
சிறு சான்று. மாணவர் போராட்டங்களை கொச்சைப்படுத்தி விளம்பரப்படுத்தியதை தொடர்ந்து,
அழகிப் போட்டிகளின் காட்சி அமைப்பைக் கொண்டு அடுத்த கட்ட யுக்தியை தொடங்கியுள்ளது.
அழகிப் போட்டியின் கடைசிகட்ட போட்டியில் தம் மனதில் இருப்பதை பேசவைக்கப்படுகிறார்கள்
பெண்கள். பெண்கள் சமுதாயத்தை பற்றி பேசும்
போது முகம் சுளிக்கிறார்கள் நடுவர்கள். அங்கு ஒரு பெண், தான் பிரியாணி சாப்பிட வேண்டும்
என்று சொல்லும் பதிலை தேர்ந்தெடுத்து வெற்றி அறிவிப்பார்கள். சமூகத்தை பற்றி பேசுவதோ
சிந்திப்பதோ போலியானது, அர்த்தமற்றது என்பதை நிறுவுவதே அந்த விளம்பரத்தின் கேவலமான
உள் நோக்கம்.
இனங்களை
பிரித்து தனித் தனி மனித எண்ணத்தை மனிதர்கள் மத்தியில் நிறுவுவதன் மூலம் புரட்சியோ,
போராட்டங்களோ எங்குமே தலை தூக்கிவிடாமல் பார்த்துக் கொள்கிறது கார்ப்ரேட்டுகள். இதன்
பலனாக அரசு ஊழியர்களது ஊதிய உயர்வுக்கான போராட்டங்களைக் கூட தனிமனித எண்ணம் கேலிக்குள்ளாக்குகிறது.
கூடுதல் ஊதியம் பெறாமல் கூடுதல் நேரங்களிலும்; விடுமுறை தினங்களிலும் பணி சேய்து கிடக்கும்
தனியார் துறையின் ஊழியர்கள், தங்களது உரிமைக்காக போராடும் அரசுத்துறை ஊழியர்களை சமூக
வலைதளங்களில் கேலி பேசுவது தான் அதிக கேலிக்குறியது. அந்த அளவிற்கு இங்கு தனியார்துறை
ஊழியர்களின் மனமும் அறிவும் கார்ப்ரேட்டுகளால் சலவை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
அரசுத் துறைகள் கையாலாகாதவை என்ற எண்ணத்தையும்; அதனைத் தொடர்ந்து தனியார்துறை சிறப்பானவை
என்கிற கண்ணோட்த்தையும் நிறுவி தனது வியபாரத்தை கடைவிரித்துக் கொள்கிறது. அரசையும்
ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு அரசுத்துறையையும் கிரயம் பேசத் துவங்கிவிட்டன
கார்ப்ரேட்டுகள்.
ஊர்க்குருவிகளின்
மூணாறு நோக்கிய பயணம்:
இந்த
போராட்டங்களில் படித்தவர்களை விட கல்வியறிவுக்கு வாய்ப்பில்லாத கூலித் தொழிலாளிகளின்
போராட்டங்கள் வரலாற்றுகளில் பதியப்பட்டே ஆக வேண்டும். அப்படியான போராட்டங்களில் ஒன்று
தான் கடந்த ஆண்டு (2015-ல்) மூணாறில் கூலி உயர்வுக்காக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
நிகழ்த்திய போராட்டம். அந்த போராட்டங்களின் பின்புலத்தையும் அதற்கு உற்ற துணையிருந்தவர்களையும்
அறிந்து கொள்ளும் நோக்கில் ஊர்க்குருவிகள் மூணாறு நோக்கி பயணித்தார்கள். அவர்களோடு
இணைந்து நானும் மலையாளக் காற்றில் பறந்து திரிந்தேன்.

தேயிலைத்
தோட்டத் தொழிலாளர்களுடன்:



“நாங்க
போனஸ் போராட்டத்துல மட்டும் யூனியன் கூட நின்னு போராடுனோம். அடுத்து நடந்த சம்பள போராட்டத்துக்கு
நாங்க போகல.. நாங்க போகலனாலும் அந்த போராட்டத்தால தான் எங்களுக்கு இப்ப 300/- ரூபாய்
சம்பளம் கெடைக்கிது.” என்றார்கள். மாலை ஊரில் பெங்கல் திருவிழா இருப்பதால் இன்று மதியம்
1:30 மணியோடு பணி முடிந்துவிட்டதாக பறித்த கொழுந்துகளை தலையில் தூக்கி வைத்துவிட்டு
கிளம்பினார்கள்.
“நைட்டு
ஊருக்கு வாங்கப்பா.. பொங்கலுக்கு” என்று அழைப்பும் வைத்தார்கள்.

எஞ்சியிருப்பது
இந்த கூலி உயர்வுக்கான போராட்டத்தின் பின்புலம்தான். அதற்காக அடுத்தடுத்து நாங்கள்
சந்தித்த நபர்களையும் அவர்களது பார்வையில் போராட்டத்தின் தோற்றத்தினையும் பற்றிய புரிதல்
சற்று முக்கியமானதாக இருக்கிறது.
போராட்டம்
குறித்த கம்யூனிச கட்சி(CPM)யின் பார்வை:
தோட்டத் தொழிலாளர்களின்
கோயில் விழாவிற்கு செல்லும் முன்பே நாங்கள் தங்கிய இடத்திற்கு மோகன் அவர்களை வரவழைத்து
பேசினோம். படவியில் (Camera) ஒளிப்பதிவு, கைபேசியில் ஒலிப்பதிவு என ஆயத்தமாக இருந்த
எங்களை பார்த்தவர் சற்று பின்வாங்கிவிட்டார். தன்னால் போரட்டங்களை பற்றி விவரமாக சொல்ல
முடியாது என்றும் பொதுவாக கூறுவதாகவும் கூறி பேச்சை துவங்கினார். இவரது தடுமாற்றமே
பல முரண்கள் புதைத்துகிடப்பதை வெளிப்படுத்திவிட்டது. இவர் போராட்டங்களில் பங்கு பெறவில்லை
என்கிற போதிலும் போராட்டத்தை முழுமையாக முன் நின்று கவனித்தவர். பொதுவாகவே பேச்சை துவங்கினார்.
மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். “First of all I am proud to be a Dravidan” என
ஆரம்பித்தார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பெரியாரை தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டில்
தமிழ்தேசியம் பேசும் அண்ணன் தம்பிகள் சிலர் “தமிழ்நாட்டை விட்டு வெளியில் போய் யாரையாவது
திராவிடன் என சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். இங்கு தான் இப்படி, அசிங்கம்.. கேவலம்”
என பொங்கிக் கொண்டு இருந்தார்கள். இவர்களெல்லாம் எதற்கு இப்போது நினைவில் வருகிறார்கள்!!
நாம் வந்த வேலையை கவனிப்போம்.

1847-ல் தேயிலை பயிர் தென்னிந்தியாவில்,
வால்பாறையில் அறிமுகம் செய்யப்படுகிறது. 1887-ல் மூணாரில் பார்வதி எஸ்டேட்டில் முதன்முதலாக
பயிரிடப்பட்டது. ஜான் டேனியல் மூணார் என்கிற பிரிட்டீசரால் (Madras Plantation
Company – MPC) இங்கு தேயிலை பயிர் துவங்கப்பட்டதால் இந்த பகுதி அவருடைய பெயரால் மூணார்
என அழைக்கப்படுவதாக கூறினார்.
போராட்டங்கள் குறித்து கூறுகையில் “வட இந்தியாவை
விட தென் இந்தியாவில் போராட்ட குணம் குறைவுதான். அதற்கு வரலாற்றில் இருந்து தான் ஆதாரம்
சொல்ல வேண்டும். வரலாற்றில் வட இந்தியாவில் நிகழ்ந்த போராட்டங்கள் அளவிற்கு தென் இந்தியாவில்
போராட்டங்கள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. நமக்கு போராட்ட குணம் குறைவாக இருப்பதற்கு நமது
மரபணு கூட காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் கேரளாவில் போராட்ட
குணம் அதிகம். எந்த ஒரு பிரச்சனையானாலும் ரோட்டிற்கு வந்து போராட வந்துவிடுவோம். பாலியல்
தொந்தரவுகள் துவங்கி, குடும்ப பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் எல்லாமே துணிச்சலாக பொது
வெளிக்கு வந்துவிடும். குறிப்பாக கட்சி அலுவலகங்களே அதற்கான தீர்வுக்களமாக அமையும்.
மற்றபடி மொழிப் பாகுபாடு இங்கு அறவே இல்லை. தமிழர், மலையாளி என்கிற பாகுபாடுகள் இல்லவே
இல்லை.” என்றார். ஏனோ அதே அண்ணன் தம்பிகள் மீண்டும் நினைவிற்கு வந்து நிற்கிறார்கள்.
வடுக வந்தேறி, கன்னட வந்தேறி, மலையாள வந்தேறி என வார்த்தைகள் எல்லாம் எதற்கு என் நினைவுக்கு
வர வேண்டும்!? நாம் விசயத்திற்கு வருவோம்.


எத்தனையோ
விவசாயிகளின் போராட்டங்களில் மக்களுடன் நிற்கும் தமிழக கம்யூனிஸ்ட்டுகள் போலவே கேரள
கம்யூனிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள். அரசியிலில் மாற்று சக்தி இவர்கள் தான். இவற்றில்
எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் பேச்சுக்களிலும் தொடர்ந்து ஈடுபடும் போது கம்யூனிசத்தின் மீதே சாமானியனுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும்
என்பதனையும் உணர வேண்டும்.
சட்டமன்ற
உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களது சந்திப்புக்கு முன்பே நாங்கள் போராட்டத்திற்கு காரணமான
போராளிகளை சந்தித்து இருந்தோம். அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முன்பே பதில் அளித்துவிட்டனர்.
போராளிகளுடன்
சில நிமிடங்கள்:

கொழுந்து
பறிப்பதை (Protection) குறைக்கச் சொல்கின்றன தொழிற்சங்கங்கள், அதன் பிறகு மூன்று தினங்களில்,
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இருப்பது நாம் தொழில் செய்யும் நிறுவனம் தான் எனவே கொழுந்து
பறிப்பதை குறைக்காதீர்கள் என தொழிலாளர்களிடம் பேசுகிறது. ஆகஸ்ட் -22 ஆம் தேதி (9-ஆம்
நாள் போராட்டத்தில்) கண்ணன் தேவன் நிறுவனம் 2013-14 ஆண்டுகளில் 19% கொடுக்கப்பட்டதை
8.33% ஆகதான் போனஸ் வழங்க முடியும் என அறிவித்தது. இப்படியாக இந்திய கம்யூனிஸட் கட்சியின்
தொழிற் சங்கமான AITUC, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான CITU மற்றும்
காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கமான INTUC போன்றவை தங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லாமல்
தொழிலாளர்களை கைவிட்டுவிட்டன என்றேதான் சொல்ல வேண்டும்.
இரண்டாம்
கட்ட போரட்டம்:

“மொத
நாளுலாம் யாருமே வரல நானும் தம்பி மனோஜ்ம் மட்டும் உக்காந்திருக்கோம். எங்களுக்கு அழுகையே
வந்துடுச்சி. இவுங்களுக்காக நாம வந்திருக்கோம். ஆனா இவுங்க வரலயேனு.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா
ஆளுங்க வந்திட்டாங்க” என்றார் கோமதி.
“தொழிற்சங்கங்கள்
நடத்திய போராட்டத்தில் போனசுக்காக 12,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் எங்களது
போராட்டத்தில் 5000 தொழிலாளர்களுக்கு சற்று அதிகாக கலந்து கொண்டனர். தொடர்ச்சியான போராட்டங்களால்
வருமானத்தை இழப்பவர்களால் கலந்து கொள்ள இயலவில்லை. அது போக தொழிற்சங்கங்களில் இருப்பவர்கள்
சங்கத்தினை எதிர்த்து எங்களுடன் இணைந்து போராட தயக்கம் கொண்டனர்.” என்றார் மனோஜ்
20% ஊக்கத் தொகையும் (Bonus) 500/- ரூபாய்
ஊதியமும், தினமும் 21 கிலோ தான் கொழுந்து பறிக்க இயலும் என்பது தான் இவர்களது கோரிக்கையாக
இருந்தது. போராட்டம் வீரியமாக வீரியமாக தனித்து செயல்படும் தொழிலாளர்கள் மேல் நிறுவனங்களுக்கு
இருந்த கோபத்தை விட தொழிற்சங்கங்கள் தான் அதிக கோபத்துடன் செயல்பட்டுள்ளனர். ஊடகங்கள்
ஊகங்களை கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தன. மலையாளப் பத்திரிகையான மனோரமா, “தமிழ் தீவிரவாதிகளின்
போராட்டம்” என எழுதியிருக்கிறது. மலையாள தொலைக்காட்சி ஊடகங்களும் தன் பங்கிற்கு போராட்டங்களை
ஒடுக்குவதற்கான வேலைகளை தொடர்ந்ததும், போராட்டக்காரர்கள் பத்திரிகையாளர்களை போராட்ட
களத்திற்குள்ளயே விடாமல் தடுத்திருக்கிறார்கள்.
“தமிழ் ஊடகங்கள் யாராவது வரமாட்டாங்களானு
தான் நாங்க எதிர் பார்த்துட்டு இருந்தோம். ஆனா கடைசி வரை வரல” என கோமதி அவர்கள் சொல்லும்
போது ஏக்கம் மேலோங்கியிருந்தது.
“தமிழக ஊடகங்களை நீங்க எதற்காக எதிர்பார்த்தீங்கனு
தெரிஞ்சிக்கலாமா! தமிழக அரசிடம் இருந்து உங்களுக்கு ஆதரவு ஏதாவது கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?”
என ஊர்க்குருவி தோழர் ஒருவர் கேள்வியை முன் வைத்தார்.
“அந்த மாதிரி எந்த ஆதரவும் கிடைக்காதுனு
எங்களுக்கு முன்னமே தெரியும். ஆனா செய்தி தமிழகத்துல அதிகமா பரவும் போது இங்க போராட்டத்திற்கான
தீர்வு வேகமா கிடைக்கலாம்னு எதிர்பார்த்தோம்.” என்றார் கோமதி.
“அப்படி இருந்தும் புதியதலைமுறை செய்தியாளர்
வந்திருந்தார். ஆனா அவர் கூட்டம் வரனும் அத காட்டி அவர் சேனலோட டிஆர்பி ரேட்டிங் கூட்டனும்னு
தான் யோசிச்சிட்டே இருந்தாரே தவிர எங்களோட உணர்வுகள புரிஞ்சிக்கல. நாங்க அவரையும் கடைசிய
போராட்டகளத்துல உள்ள விடல.” என்றார் மனோஜ்
500 ரூபாய் கூலி உயர்வு சாத்தியப்படாது என்பதை
உணர்ந்தவர்கள், ஏனைய போராட்டக்காரர்களின் சம்மதத்தின் பெயரில் 385/- ரூபாய்க்கு பேசத்
துவங்கினர். இந்த நிலையில் இவர்களின் போராட்டங்களை மலையாள ஊடகங்களில் பேச, தகவல் தொடர்புக்கு
லிசி என்கிற மலையாள பெண் தொழிலாளர் ஒருவரை இவர்கள் நியமித்திருந்தனர். ஆனால் இவர் போராட்டக்காரர்களின்
அனுமதியில்லாமல் ஊடகங்களில் 350/- ரூபாய் என சொல்லிவிட, இறுதியில் இதனாலேயே நிறுவனத்தின்
தரப்பில் 301/- ரூபாயாக அதனை முடிவு செய்துவிட்டனர். 8-ஆம் நாள் போராட்டத்திலேயே அனைத்தும்
கை கூடி வருவதை உணர்ந்தனர். 9-ஆம் (இறுதி) நாளில் அச்சுதாணந்தன் வந்ததும் போராட்டம்
முடிவுக்கு வரவும் சரியாகவே இருந்திருக்கிறது. இறுதியாக ஊதியம் 231/- ரூபாயில் இருந்து
301/- ரூபாயாகவும், ஊக்கத்தொகை 20%-ம் கிடைத்தது. கொழுந்து பறிப்பது 27 கிலோவாக முடிவாகியது.
“இந்த போராட்ட காலங்களில் எங்களது போராட்டத்திற்காக
உம்மன்சாண்டி அரசு இறங்கி வரவில்லை. கேரளாவின் டூரிசம் பாதிக்கப்படுகிறது என்பது ஒன்று,
அச்சுதானந்தன் அவர்கள் வருகை தந்தது மற்றொன்று.” என்று மனோஜ் கூறுகிறார். இது போக கம்யூனிஸ்ட்டுகள்
வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு கொஞ்சம் ஆக்ரோசமாகவே பதில் அளிக்கிறார்.
“முதல்
கட்ட போராட்டத்துல 12,000 பெண்கள் கலந்துகிட்டாங்க, இரண்டாவது கட்ட எங்களோட போராட்டங்கள்ல
5,000 பெண்கள் கலந்துகிட்டாங்க. அவங்கள ரோட்டுல உக்கார வச்சி போராட்டம் பண்ணீட்டு இருக்கோம்.
அவங்களோட கழிப்பறை வசதிய பத்தி இவுங்கள்ல யாராவது யோசிச்சாங்களா!!?? அவுங்க எவ்வளவு
நேரம் அடக்கிக்கிட்டு உட்காந்து இருப்பாங்க!! ஒதுங்கக் கூட இடம் இல்லைனாலும் தினமும்
போராட்டங்களுக்கு வந்தவங்க!!. அவங்களா, பொழுது போகாமலும், ஓய்வெடுக்கவும் போராட்டத்திற்கு
வந்திட்டு போறாங்க!!” என்றார்.
அச்சுதாணந்தன்
வந்து சென்றதை பெருமையாக பேசும் கம்யூனிஸ்ட்டுகள், “அவர் நைட் 10 மணி வரை உட்கார்ந்திருந்தார்.
ஆனால் பெண்கள், தினமும் 8 மணிக்கு வந்துட்டு 5 மணிக்குலாம் கிளம்பிடுவாங்க” என மேம்போக்காக
பேசிச் செல்கிறார்கள். சாதாரணமாக பெண்களின் இயற்கை உபாதையைப் பற்றியான அடிப்படை புரிதல்
கூட இல்லாமல் என்ன கம்யூனிசம் படித்தார்கள் இவர்கள் என்பது தான் எனது கேள்வி. அது போக
ஒன்பது நாட்களும் அதற்கு முன்பு தொழிற்சங்கங்களின் சமரிலும் கலந்து கொண்ட பெண்களை விட
ஒரே ஒரு நாள் வந்து அமர்ந்த அச்சுதாணந்தனை மட்டுமே இவர்கள் கொண்டாடுகிறார்கள். கிட்டத்தட்ட
ஒரு மாத கால ஊதியத்தை பொருட்படுத்தாமல் சமர் புரியும் பெண்கள் இந்த கம்யூனிஸ்ட் கட்சி
தோழர்களுக்கு, பொழுது போக்கிற்காக வந்து போனவர்களாக தெரிகிறார்கள் என்றால் இங்கு யாருக்கு
பார்வைக் கோளாறு என்பது நன்கு தெளிவாகிறது.
காங்கிரசு முதல்வர் உம்மண்சாண்டியும் சாதாரண
மனிதர் அல்ல. இந்த ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை போன்றவற்றால் டாடா மற்றும் கண்ணன் தேவன்
நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு ஈடாக சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார்.
1. 5000 ஏக்கர்
அரசு நிலத்தை தொழிற்சாலைகள் (Industrial purpose) கட்டிக் கொள்வதற்காக வாரிக் கொடுத்துள்ளார்.
அது போக,
2. விற்பனை வரி
(Sales Tax) - தேயிலை விற்பனைக்கான வரி, நில வரி (Land Tax) – தேயிலை பயிரிடப்பட்டுள்ள
நிலத்திற்கான வரி, கட்டிட வரி (Building Tax) – தொழிற்சாலை கட்டிட வரி போன்ற அனைத்து
வரிகளும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்
மனோஜ், சந்திப்பின்
ஆரம்பத்தில் ஒரு வார்த்தை சொன்னார் அது எவ்வளவு உண்மை என்பதை இறுதியிலேயே புரிந்து
கொண்டேன். அது “India is ruling by corporate”. இந்தியா தனியார் நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகிறது
என்பதே அந்த வாசகம்.
அதனைத் தொடர்ந்து
வந்த பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்தில் கட்சி சார்பற்று கோமதி அவர்கள் அதிகபட்ச வாக்குகள்
பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜில்லாவிற்கு நின்று மனோஜ் தோல்வியை தழுவியிருந்தாலும்
குறிப்பிட்ட தொகுதிகளில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்துள்ளார்.
கம்யூனிஸ்ட்டுகளை
குறித்தும் காங்கிரசை குறித்தும் சரமாரியாக குற்றச்சாட்டு வைக்கும் மனோஜ் அவர்களும்,
கோமதி அவர்களும் இப்போது இருப்பது என்னவோ கம்யூனிஸ்ட் கட்சியில் (CPM) தான். என்ன காரணம்
என்கிற கேள்விக்கு அவர் அளிக்கும் பதில்கள் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்
என்பதை மறுபரிசீலனை செய்து பார்க்கச் சொல்கிறது மனம்.
போராட்டங்கள்
முடிந்ததும் நிறுவன ரகசியங்களை வெளியில் கூறியது, நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டது
என மனோஜ் அவர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்கிறது. மனோஜ் காவல்துறை உடன் இருந்த நேரத்திலேயே,
அவர் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதற்கு கோமதி அவர்கள்
உடந்தையாக இருந்ததாக இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். வழக்குகளில் இருந்து
ஜாமீன் பெருவதற்காக தலைமறைவாக இருந்த நேரங்களில், மலையாளப் பத்திரிகைகள், இவ்விருவரும்
அதிமுகவில் ஆளுக்கு இருபது கோடியும், இரண்டு கார்களும் பெற்றுக் கொண்டு அந்த கட்சியில்
சேர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
மனோஜ் அவரது
உடன் பிறந்த தங்கையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் அவரது பெற்றோர் அவரை வீட்டில்
சேர்க்கவில்லை என்றும், மனோஜ்ம், கோமதியும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள் என்பது
வரை பல்வேறு செய்திகள் வதந்திகளாக பரப்பப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பொய்யாக்கிட
வேறு வழியில்லாமல் இருப்பதிலேயே கொஞ்சம் ஆதரவு கொடுத்த ஆட்கள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில்
8, ஜனவரி 2016-ல் பாதுகாப்பிற்காக இணைந்துவிட்டோம்.
என்று மிக வேதனையாக பதிவு செய்கிறார்.
ஜவகர்லால் நேரு
பல்கலைக்கலகத்தில் காண்டம்கள் இருப்பதாக கூறிய ஆர் எஸ் எஸ்-ன் பங்காளி பிஜேபி-யை போல
கேரளத்தில் காங்கிரசும் பல்வேறு வித்தைகளை கையாண்டுள்ளது.
ஊதிய உயர்வை
வெறும் ஊதிய உயர்வாக மட்டும் பார்க்காமல் அந்த உயர்வு அடிப்படை சம்பளத்தில் (Basic
Pay) உயர்த்தப்பட வேண்டும் அப்போது தான் PF (provident Fund)ம் உயரும். தொழிலாளர்களது
ஓய்வுக் காலங்களில் அவர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்று எதிர்கால திட்டமிடலோடு
செயல்பட்ட மனோஜ்ம் கோமதியும் இப்போது அவர்களது எதிர்கால அரசியல் வாழ்க்கையை சரியாக
திட்டமிடவில்லை. அவர்கள் ‘என் ஜி ஓ’ ஒன்றை துவங்கி ஏழை மக்களுக்கான சேவை செய்ய இருப்பதாக
தெரிவிக்கின்றனர். இவ்வளவு பெரிய போராட்டங்களை நிகழ்த்திவிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டு
அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் இப்போது பின்னோக்கி நகர்வது குறித்து மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என்று ஊர்க்குருவிகள் கேட்டுக் கொண்டனர்.
மனோஜ் உடைய
சில போராட்டம் தவிர்த்து சில கருத்தியல்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டே ஆக வேண்டும்.
அவற்றைக் குறித்து தனியாக எழுதுவது சிறந்தது என நினைக்கிறேன்.
நாங்கள் விடைபெறும்
போது “இந்த வருசம் ஆகஸ்ட்லயும் போனசுக்கான சமர் வரும்” என்றார் கோமதி மலர்ச்சியான முகத்தைக்
காட்டி சிரித்துக் கொண்டே..
அன்பும்
நன்றியும்
பாடுவாசி
No comments:
Post a Comment