Friday, 2 November 2012

கும்பாபிஷேகம் எதற்காக??

நமக்கு நமது அப்பாவின் பெயர் தெரிந்திருக்கும். அப்பாவினுடைய அப்பாவின் பெயரும் கூட ஓரளவுக்கு தெரிந்திருக்கும். அவருடைய அப்பாவின் பெயரோ, அவரது பாட்டையாவின் பெயரோ நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் எனது அப்பாவை பெற்ற அப்பாவினுடைய பாட்டையா, நாங்கள் இப்போது குடியிருக்கும் ஓட்டு திண்ணை வீட்டினை கிரயத்திற்கு வாங்கியுள்ளார். அந்த கிரய பத்திரங்களை எங்கள் வீட்டின் வயது முதிந்தவர்களின் உதவியுடன் படிக்கும் போது ஏழு தலைமுறையினரின் பெயர்களையும் இப்போது அவர்களின் சந்ததிகள் எங்கெல்லாம் பிரிந்து பரவி வாழ்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். உண்மையில் வரலாறு என்பது தேடும்போதும் சரி அதனை அறிந்து கொள்ளும் போதும் சரி ஒரு இனம் புரியாத ஆர்வமும் மகிழ்ச்சியும் மனதை கவ்விக்கொள்கின்றது.
பழைய சொத்து பத்திரங்கள் யாவும் நமது சொத்திற்கான ஆதாரம் என்ற நிலையை விட நமது முன்னோர்களின் வரலாற்றினை சொல்லக்கூடிய சிறப்பானதொரு வரலாற்று எச்சம் என்பதே என் கருத்து. அக்கால எழுத்து வடிவங்களும் அவர்கள் பயன்படுத்தியுள்ள சொற்களும் அரிய புதையல்தான். இந்த சொத்து பத்திரங்களை போஹிப்பண்டிகை அன்று தீயிட்டு கொளுத்தினால் நமக்கு மோட்சம் உறுதி என்று யாராவது சொல்லியிருந்தால் நாம் அதனை ஏற்ப்போமா? முட்டாள் தனமா பேசதடா_________ , _________ என்று நான்கு கெட்ட வார்த்தைகளை நான்கு பேர் கேட்க சத்தமாகவே திட்டியிருப்போம். ஆனால் நம் முன்னோர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்து சென்ற வரலாற்று குறிப்புகளையும், இலக்கியங்களையும், வாழ்க்கை நன்னெறிகளையும் எவனோ சொன்னதைக்கேட்டு, இல்லாத மோட்சத்திற்க்கு ஆசைப்பட்டு, நமக்கான வரலாற்றினை தடம் இல்லாமல் தீயிட்டு அழித்த பெருமை நம்மையே சாரும். ஓடும் ஆற்றில் வீசப்பட்ட வரலாற்று எச்சங்கள் எத்தனையோ!!.. அதில் இறந்த வரலாறுகள் எத்தனையே!!.. இனி தீ வைக்க கூட ஓலைச்சுவடிகள் கிடையாது இம்மண்ணில். இது தான் நாம் இதன் மூலம் சாதித்தது.

இனி இவர்களின் அடுத்த இலக்கு, நம் முன்னோர்களின் நடு கற்களை நாம் நமது குல தெய்வங்களாக வழிபடும் முறையை சிதைப்பது. அதற்கான முதல் படி, நமது நாட்டுப்புற தெய்வங்களான நமது முன்னோர் சமுதாயத்தினை பெருமாளாகவும், சிவபெருமானாகவும் சித்தரித்தது. நமது பெண் மூதாதையர்களை அக்கடவுள்களின் மனைவிகளாகவும் மாற்றியது. இப்படியான அசிங்கங்களை நாமும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த கடவுள் மாற்று பணிகள் கடந்த நூற்றாண்டு ஓரளவு சுமாராகப்போகவே, அந்த நூற்றாண்டு இறுதியில் கும்பாபிஷேகம் என்ற ஆயுதத்தினை கையில் எடுத்தனர். நமது வரலாறு சொல்லக்கூடிய நம் முன்னோர்களின் நடுகல் சமாதிகளை பெயர்த்து எடுத்து புதுப்பொழிவோடு ஆரிய கோவில் வடிவமைப்பு கொண்ட கோவில்களாக கட்டி எழுப்புகின்றனர். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அதன் தொன்மையை மேலும் மேலும் சிதைத்து ஆரிய கோவிலாக மாற்றிடவே எண்ணம் கொண்டுள்ளனர்.

நம் முன்னோர்களின் நடுகற்கள் கடைசியில் எங்கே தூக்கி வீசப்படுகின்றன என்றே தெரிவதில்லை. அதனோடு நம் முன்னோர்களது வரலாறும் சேர்த்தே தூக்கி வீசப்படுகின்றது. கும்பாபிஷேகத்திற்காக கட்டி எழுப்பப்படும் கோபுரங்களில் உள்ள சிலைகளிலும் கூட ஆரிய கடவுள்களே அதிகம் ஆக்கிரமித்துவிடுகின்றன. அப்படியே பூணுல் அணிந்த ஆரிய சிலைகளும் இடம்பிடித்துவிடுகின்றன. இன்னும் சில இடங்களில் ஆரிய கடவுள்கள் நம் குல தெய்வங்களின் இடங்களையும் கூட பிடித்துவிடுகின்றன. நம் முன்னோர்களை கடவுளாக வழிபடும் நாம் இறுதியில் எது எது கால்களிலெல்லாமோ விழுகின்றோம். பழமையான கட்டிடங்களின் மீது உள்ள வரலாற்று தடயங்களை சிமெண்ட் பூசி மொழுகுகின்றோம். 

நாம் வைத்து வழிபட்ட, நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துச் சென்ற ஓலைச் சாசனங்களை எரிகின்ற அக்னி குண்டத்தில் போட்டு கண் மூடி வணங்கினோம். ஆரியன் அதன் மேல் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு அதன் தடம் மொத்தமாய் தீய்ந்து போகச் செய்துவிட்டான். வரலாற்றினை சுமந்து நிற்க்கும் பழமையான நாணயங்களையும் விட்டு வைக்காமல் யாக குண்டத்தில் பொசுக்கினோம். அது இன்று வரை தொடர்கிறது. கைகளில் இருக்கும் இந்திய தேசிய நாணயங்களை தீயிடுகின்றோம். (இது ஏனே இந்திய இறையணண்மைக்கு எதிராக பார்க்கப்படுவதில்லை. தேச துரோகமாக நினைக்கப்படுவதில்லை.) வரலாற்றினை சிதைப்பது தேச துரோக பட்டியலில் இல்லை போல.

நம் முன்னோர்களின் குல தெய்வ வழிபாட்டுக்கு நமக்குள்ளே கூட ஒரு சில கட்டுப்பாடுகள், இந்த வகையாறா தான் ஆடு வெட்டனும், இந்த கொத்து வழி தான் சூடத்தட்ட எடுத்து காட்டனும். அப்டி இப்டினு. ஆனால் கும்பாபிஷேகத்தன்று நமது உடன் பங்காளிக்கு கூட கொடுக்கப்படாத சூடத்தட்டு காட்டும் உரிமையை எங்கோ, எவனுக்கோ பிறந்த ஆரியனுக்கு நாம் கொடுக்கின்றோமே.. இது என்ன நியாயம்? ஒரு சில இடங்களில் கும்பாபிஷேக சடங்குகள் முடிந்த பின்பு சூடத்தட்டு நிரந்தரமாக ஆரியனுக்கு சென்றுவிடுகின்றது. நாம் பெற்ற பெண் பிள்ளைகள் திருமணம் ஆனவுடன், தந்தையின் குல தெய்வ கேவிலுக்குள் வர அனுமதியில்லாத நிலை கூட ஒரு சில கோவில்களில் உண்டு. ஆனால் அந்த கோவில்களில் கூட எதற்கோ பிறந்த ஆரியன் அக்குல முன்னோர்களின் கருவறை வரை செல்ல கூட யார் அனுமதியும் கேட்பதில்லை. இதே போல நமக்கான கலாச்சாரங்களையும் மறந்து நடுவில் புகுந்த ஆரிய கலாச்சாரத்தினையே நமது கலாச்சாரமாக்கிக் கொண்டோம். இறுதியில் வரலாற்றினை காக்க நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நடுகல் சமாதிகள் இன்று அதன் முக்கியத்துவத்தினை இழந்து காட்சியளிக்கின்றன.

நமக்கான வரலாற்றினை நாம் தேடக் கூட வேண்டாம்.. நமக்கான வரலாற்றினை அழிவில் இருந்து காக்க உயிரைவிடக் கூட சொல்லவில்லை. தயவு செய்து நமக்கான வரலாற்றினை நாமே அழிக்கவோ, அழிப்பதற்க்கு துணை நிற்க்கவோ வேண்டாம் என்றுதான் உங்களிடம் மன்றாடுகின்றேன். இது தொடர்ந்தால் பின்னாற்களில் உங்கள் பிள்ளைகள் அவர்களின் அப்பா பெயரினை அறியாமல் வளரும் நிலை கூட வரும்.

உண்மை வரலாற்றினை தேடுவோம்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

5 comments:

  1. மே.இளஞ்செழியன்2 Nov 2012, 10:32:00

    முதலில் பாராட்டுக்கள்... நம்மிடம் நிலவும் இன்றைய ஆன்மீக ஆக்கிரமிப்பு நிலையை சிறப்பாக உணர்த்தும் கட்டுரை. இதுவரை அறிந்திராத சில உண்மைகளை தந்தமைக்கு நன்றி.

    இனி இவர்களின் அடுத்த இலக்கு, நம் முன்னோர்களின் நடு கற்களை நாம் நமது குல தெய்வங்களாக வழிபடும் முறையை சிதைப்பது.

    தயவு செய்து நமக்கான வரலாற்றினை நாமே அழிக்கவோ, அழிப்பதற்க்கு துணை நிற்க்கவோ வேண்டாம் என்றுதான் உங்களிடம் மன்றாடுகின்றேன்.

    இது தொடர்ந்தால் பின்னாற்களில் உங்கள் பிள்ளைகள் அவர்களின் அப்பா பெயரினை அறியாமல் வளரும் நிலை கூட வரும்... போன்ற வரிகளின் அர்த்தத்தை அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

    அருமை... உங்கள் தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தோழரே.. தொடர்வோம் நமக்கான நமது தேடலை.. நன்றி..

    ReplyDelete
  3. மின்வெட்டு காரணமாக கருத்துரைக்கு தாமதம். ஆரியர்கள் மீது என்ன கோபமோ, ஆரிய, திராவிட மாயைலிருந்து வெளியே வாருங்கள், இன்றைய உலகம் வர்கக அரசியலுக்கு மாறி விட்டது.
    பதிவின் ஆய்வு பாதை மிக அருமை...
    ஆய்வாளர்களுக்கு விருப்பு ,வெறுப்பும்.ஓரு பக்க சார்பும் கூடாது

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி அண்ணா.. ஆரியர்கள் மீது கோபம்தான். இது நியாயமான கோபம் என்பது உங்களுக்கு தெரியாததா.. ஆரிய மாயையில் கிடப்பது நாம் இல்லை. மக்கள்தான். அவர்களை அந்த மாயையில் இருந்து வெளி கொண்டுவருவதே என் நோக்கம். வரலாற்று தேடல் என்று உள்ளே சென்றாலே இந்த ஆரியர்கள் மூலம் அழிந்த வரலாற்றையும் - மாற்றி எழுதிய வரலாற்றையுமே தான் ஆராய வேண்டியிருக்கின்றது.

      பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete