Friday, 9 November 2012

சாட்டை - கலைப்பார்வை


என்னமோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகின்றன. ஆனால் அந்த படங்கள் பெரும்பாலான மக்கள் மத்தியில் அவ்வளவாக பேசப்படுவதில்லை. ஒன்றுக்கும் ஆகாத இந்த காதல் திரைப்படங்களுக்கும்- “என்னதான் சொல்ல வர்ரானுக”னு புலம்ப வெக்கின்ற அடிதடி திரைப்படங்களுக்கும் இருக்கின்ற வரவேற்ப்பு சமூக அக்கறை கொண்ட படங்களுக்கு சற்று குறைவாகவே இருக்கின்றது. இந்த நிலையிலும் சாட்டை போன்ற திரைப்படங்கள் இப்பொழுதும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையான கலைஞனுக்குள்ளும் இன்னும் சமூகத்தின் மீதான அக்கறையும் எதையும் (லாபம்) எதிர்பார்க்காத தன்மையும் குறையவில்லை என்பதனையே இது காட்டுகின்றது. சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை அடித்து விலாசி எடுக்கும் திரைப்படங்களின் வரிசையில் “சாட்டை”க்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

இந்த “சாட்டை” சுழன்றிருக்கும் பகுதி அரசாங்க பள்ளிக்கூடம். “சாட்டை” அடி வாங்கிய ஆட்கள் மாணவர்களை புரிந்து கொண்டு செயல்படாத அரசு ஆசிரியர்கள். அவ்வப்போது இந்த “சாட்டை” அடி தனியார் பள்ளி நிர்வாகங்களின் மேலும் விழுந்துள்ளது. வெறும் பிரச்சனைகளை மட்டும் சொல்லிவிட்டு செல்லாமல் அதற்கான தீர்வுகளையும் உடனுக்குடன் வழங்கியது பாராட்டுக்குறியது.

அதற்காக மாணவர்கள் செய்யக்கூடிய சேட்டைகளை சொல்லாமலா இருக்க முடியும். அதையும் கூட சொல்லியுள்ளது. இருந்தாலும் அந்த சேட்டைகளை அவர்களை புரிந்து நடந்து கொள்ளாத ஆசிரியர்களிடம் மட்டுமே அவர்கள் பிரயோகிக்கின்றார்கள் என்று சொல்லாமல் சொல்லிய விதம் அருமை.

காதல் இந்த படத்திலும் வந்துவிட்டதே என்று ஆரம்பத்தில் முகம் சுழிக்க வைக்கின்றது. ஆசிரியர் தன் மேல் வைத்த நம்பிக்கையை காப்பதற்காக காதல் உட்ப்பட வாழ்க்கைக்கு தேவையில்லாத எதையும் மாணவர்கள் தூக்கி வீசிடுவார்கள் என்ற உண்மையை அழுத்தமாக பதியவே இந்த காதல் சொல்லப்படுகின்றது என்பது இறுதியில் மன நிறைவளிக்கின்றது.

திக்கி பேசக்கூடிய மாணவர்களுக்க நாக்கு பயிற்சி- வேகமாக படிப்பதற்கு புத்தகத்தினை தலை கீழாக திருப்பி வைத்து வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக படிக்க வைப்பது- நிறம் மாற்றி எழுதி வேகமாக படிக்க வைக்கும் பயிற்சி- ஞாபக சக்திக்கு தோப்புக்கரணத்தின் அவசியம் என மாணவர்களுக்கு அவசியமான தகவல்களும் கிடைக்கின்றது. (இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்). நான் கூட இப்போது நூல்களை தலை கீழாக திருப்பி வைத்து படிக்க துவங்கியிருக்கேன்.

வகுப்பறையில் புகார் பெட்டி வைத்து மாணவர்களின் தேவைகளையும் சூழலையும் புரிந்து கொண்டு அதற்க்கேற்ப அணுகுவது- மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை நிறுத்திவிட்டு ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதியுங்கள் என்று சீறுவது- மாணவர்களிடம் இருந்து தானாக சுய ஒழுக்கத்தினை வர வைப்பதுதான் ஒரு ஆசிரியரின் வெற்றி என்று சொல்லும் போது- பரிட்சை தாளில் ஒன்றுமே எழுதாதற்கும் நான்கு மதிப்பெண்கள் கொடுத்து மாணவனை மட்டம் தட்டாதது- மாணவியின் அண்ணனிடம் அடி வாங்கும் போது பொருமை காப்பது- பொங்கி எழும் மாணவர்களை விரல் நுணியில் அமைதியாக்குவது- ஒரு பலூன்ல இவ்வளவு தான் காத்து இருக்கனும்ன அவ்வளவுதான் இருக்கனும் என்று எதார்த்தம் சொல்லும் போது என ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி) நெகிழ வைக்கின்றார்.

திரைக்கதையில் எந்த பாதிப்பும் இல்லாமலும் அதே நேரத்தில் கொடுக்க வேண்டிய சாட்டை அடிகளை பங்கம் இல்லாமலும் கொடுத்த அன்பழகனுக்கு பாராட்டுகள்

இந்த காலத்திலும் இந்த சமூகத்திற்கு நல்லது ஏதாவது சொல்லிவிட மாட்டோமா- என்கின்ற சமூக எண்ணத்தில் “சாட்டை”யை தயாரித்து வழங்கிய ஜ◌ான் மேக்‌ஸ் மற்றும் பிரபு சாலமன் இருவருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.

இப்பேர்ப்பட்ட சாட்டை எந்த இடத்திலும் திரிந்துவிடாமல் இருக்க தங்கள் உழைப்பை செம்மையாக செலவிட்ட ஒவ்வோர் உழைப்பாளிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

சமூக சிந்தனையோடு சேர்ந்து நமது பள்ளி வாழ்க்கையின் நினைவுகளை புதுப்பிக்கும் இந்த சாட்டை கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு திரைப்படம். அரசு இதை செய்யுமா?

1 comment:

  1. நல்ல பதிவு,தாமதமான பதிவு, இந்த பதிவை சினிமா லேபிலில்இணைத்து தமிழ் மணம் -திரைமணத்தில் இணைத்திருக்கலாம் நிறைய வாசகர்கள் படித்திருப்பார்கள். சினிமாவில் காதல் வரக்கூடாதா?...

    ReplyDelete