Friday, 19 April 2013

மை பேனா...


அனா ஆவணா கற்க துவங்கிய காலம் அது.. விவரம் அறியாத அந்த வயதில் என்ன படித்தோம்; எப்படி புரிந்துகொண்டோம் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். இருந்தாலும் அப்போது கற்ற தாய்மொழி அறிவு இன்று வரை வற்றிப்போனது இல்லை. இதுதான் தாய்மொழியின் சிறப்பு போலும். (ஒன்றாம் வகுப்பினில் இரண்டு முறை உட்கார்ந்து அடித்தளம் உறுதியாக போட்டதும் கூட காரணமாக இருக்கலாம்.) சிலேட் குச்சி பயன்படுத்தி எழுதிய நாட்களில் பென்சில் கொண்டு எழுத வேண்டும் என ஆவல் தூண்டும். பென்சில் பிடித்து எழுத துவங்கும் போது தான் குச்சி திங்க முடியாமல் போன கவலை தொற்றிக் கொண்டது. இருப்பினும் பென்சிலின் முனையை கடித்து கடித்து வைத்த காலங்களும் உண்டு.

மூன்றாம் வகுப்பு அண்ணன்கள் சட்டைப்பையில் மை நிறப்பி எழுதும் பேனா வைத்திருப்பதைப்பார்த்து அடுத்த ஆண்டு முதல் நாமும் மைப் பேனாவில்தான் எழுதப் போகின்றோம் என முதன் முதலாக மைப் பேனாவின் மேல் காதல் பிறந்தது
.
மூன்றாம் வகுப்பினில் சேர்ந்ததும் புதுப் பேனா வாங்கிக்கொடுப்பார்கள் என எண்ணி ஏமாற்றம் அடைந்த கதை சொல்ல முடியாத சோகத்தின் உச்சம். புதுப் பேனா வாங்கிக் கொடுத்தால், எங்காவது தொலைத்துவிடுவேனாம். யாரோ பயன்படுத்திய பழைய பேனாவில் இருந்துதான் என் முதல் பேனா-எழுத்து துவங்கியது. பழையதோ புதியதோ இந்த மைப் பேனா இன்று முதல் என்னுடையது என்ற மகிழ்ச்சியால் சமாதானமானேன்.

மை கசிந்து கொண்டு கையும், பாடத்தின் மீதான ஆர்வத்தில் சட்டை பையில் மையுமாக அம்மாவிடம் திட்டு வாங்கிய காலங்களை எண்ணிப்பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது. சின்ன சின்ன காயங்களுக்கு அந்த வயதிலேயே பேனாவின் மை தடவி வைத்தியமும் பார்த்ததுண்டு.
திருமங்கலத்தில் ராமு பேனா கடை மைப் பேனாக்களுக்கு அதிக பிரபலம். பள்ளி நண்பர்கள் மரக்கட்டை பேனா என்று ஒரு வகை மைப் பேனாவினை அறிமுகப்படுத்தினர். இது அந்த ராமு பேனா கடையின் சொந்த தயாரிப்பு. “இது ராமு பேனா கடைலதான்டி கிடைக்கும், எங்கப்பா எனக்கும் எங்கண்ணனுக்கும் ஆளுக்கொன்னு வாங்கிக் கொடுத்தாரு” என நண்பர்கள் பீற்றிக்கொண்டது பொருக்காமல் நானும் வீட்டில் கொடுக்கும் 10 பைசா 25 பைசாவெல்லாம் சேர்த்து வைத்து 8 ரூபாய்க்கு ஒரு மரக்கட்டை பேனா வாங்கினேன். மரக்கட்டை நிறத்தினில், நல்ல தடிமனாக இருந்த அந்த பேனாவின் மூடியை திருகி திறக்குமாறு அமைத்திருப்பார்கள். மற்ற பேனாக்களை மாவு போல எழுத வைக்க மட்டமான தரையில் தொடர்ந்து கிருக்கி அதன் நிப்பினை பட்டை தீட்டிதான் எழுத வேண்டும். ஆனால் இந்த மரக்கட்டைப் பேனா அவ்வாறு இல்லை சாதாரணமாகவே அது மாவு மாவாக எழுதும். அதை வைத்து எழுதினால் எழுத்து இன்னும் மெருகேற்றத்துடனே வரும் என்பது நம்பிக்கை.

அதன் பிறகு பந்து முனைப் பேனாவின் மீது மோகத்தில் திசை திரும்பி போய்விட்டேன். பள்ளியில் மைப் பேனாவில்தான் எழுத வேண்டும் என்ற கண்டிப்பால் கல்லூரி நுழைந்ததும் பந்து முனைப் பேனாவின் மேல் அதீத மோகமாகிப்போனது. ஆரம்பம் முதல் பேனாவினை அழுத்திப்பிடித்து எழுத பழகிய எனக்கு பந்து முனைப் பேனா சரிப்பட்டு வரவில்லை. முதல் பக்கத்தில் எழுதும் எழுத்தின் பதிவு ஏழு எட்டு பக்கத்திற்கு சென்றுவிடும். காகிதமும் வட வட என சமயத்தில் சுருண்டு கொள்ளும்.

வெகு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் அந்த ராமு பேனா கடைக்கு பேனா வாங்கலாம் என சென்றிருந்தேன். கடையின் அமைப்போ; அதன் பெயர் பலகையோ எந்த வித மாற்றமும் இன்றி பழுப்பேறி இருந்தது. பேனா கடைக்கார அண்ணனுக்கு மட்டும் ஓரத்தில் முடி வெளுத்திருந்தது. மைப் பேனா ரெண்டு வேணும் என்றதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. நான் நின்ற அந்த ஐந்து நிமிடங்களில் என்னென்னவோ பேசி தீர்த்துவிட்டார்.

“இப்ப வர்ரவங்கலாம், ரெண்டு ரூபாய்க்கு பேனா இருக்கானு தான் கேக்குறாங்க. இந்தா மலையாத்தான் கடையில ஒரு வடை டீ சாப்பிட்டா பன்னிரண்டு ரூபாய் ஆய்டுது. அங்க செலவு பண்றத இங்க பேனாவுக்கு செலவு பண்ணக்கூட பயப்புடுறாங்க. வடை டீ சாப்பிட வேணாம்னு சொல்லல.. ஆனா இந்த ரெண்டு ரூபாய் பேனா வந்து தொழிலையே கெடுத்துடுச்சி.. இது நல்ல தொழில்தான் ஆனா கேக்குறவங்க பேனாக்கடையா வச்சிருக்கனு ஒரு மாதிரி கேக்குறாங்க.. எங்கப்பா 1963ல இங்க கடை வச்சாரு.. இது வரைக்கும் கடைய இதே அளவுல மாத்தாமயே வச்சிருக்கேன். முதல்லலாம் மரக்கட்டை பேனா தயாரிச்சி வித்திட்டு இருந்தோம் இப்போ பால்பாய்ண்ட் பேனா ஜெல் பேனானு வந்துடுச்சி”னு தனது ஆதங்கங்களை தன்னையறியாமல் கொட்டிவிட்டார். இப்போதைய மைப் பேனாக்களின் நிலை மட்டுமல்ல அதனை நம்பி தொழில் செய்வோரும் மிக கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கின்றனர்.

ஜெல் மற்றும் பந்து முனைப் பேனாக்களின் மையில் சேர்க்கப்படும் வேதியல் ரசாயனங்கள் சிறுக சிறுக புற்று நோயை உண்டாக்கும் தன்மை பெற்றிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருப்போம் என தெரியவில்லை.

அதே போல நாம் எழுதி பயன்படாமல் தூக்கிப் போடும் காகிதங்களை அந்த ரசாயணம் மக்கச் செய்யாமல் மண்ணுக்கு கெடுதி விளைவிப்பதையாவது அறிந்துள்ளோமா? விளை நிலங்களில் வேதியல் உரத்தினை திணித்து மண்ணை மலடாக்கிய நமக்கு இது பெரிய தவறாக தெரியாதுதான்.

நமக்கு நம் மண்ணின் மீது உண்மையில் மரியாதை உண்டெனில் இந்த ஜெல் மற்றும் பந்து முனைப் பேனாக்களின் பயன்பாட்டினை தவிர்ப்பதை பற்றி சிந்திக்கவாது செய்வோம்.

என் சிறு வயது காதலியை பார்த்தது போல மைப் பேனாவினை நான் உணர்ந்துவிட்டேன். நீங்கள்???

உங்கள் மீதான நம்பிக்கையோடு...
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

6 comments:

  1. ஜெல் மற்றும் பந்து முனைப் பேனாக்களைப் பற்றிய புதிய தகவல்களை தந்தமைக்கு நன்றிகள். மரக்கட்டை பேனாவின் நினைவுகள் மீண்டும் மலர்ந்தது. என்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வுக்கு என்று ராமு பேனாக்கடையில் ஒரு பேனாவை வாங்கினேன். உன்மையிலேயே மாவு மாவாக எழுதியது அது. இன்றும் கீரோ பேனாவை பத்திரமாக வைத்துள்ளேன். சில கையெழுத்துக்களை அதன் உதவியில் போட்டுக்கொள்வேன்.

    நிச்சயமாக இந்த கட்டுரை ஒரு திருப்புமுனையாக அமைய முயற்சிப்பேன். மண் வளத்தை காப்பது நம் கடமை.

    இன்றும் ஏபரல் 1 மற்றும் பள்ளியின் அண்டு இறுதி நாள்களில் பேனா மூலம் சட்டையில் மை அடிப்பதை பார்த்துள்ளேன். பேனாவைக் காப்போம்.

    ஒரு சிறு தகவல் பேனாவின் தமிழ் பெயர் கலம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
      தாங்கள் அளித்தது சிறு தகவல் அல்ல மிகப்பெரிய தகவல்.. மிக்க நன்றி..

      Delete
  2. Arumaiyaana anupavatthodu arumaiyaana karutthu pagirvu :)

    Tamil'il type pannaathatharkku mannikkavum :(

    ReplyDelete
    Replies
    1. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

      Delete
  3. புதிய தகவல்... படங்கள் இல்லாமல் இருப்பது நல்லயில்லை

    ReplyDelete
    Replies
    1. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்..


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
      எனது கணிப்பொறியில் மென்பொருள் குறைபாடு காரணமாக படங்கள் பதிவிறக்கமோ பதிவேற்றமோ செய்ய முடியவில்லை அண்ணா.. விரைவில் சரி செய்து நான் எடுக்கும் படங்களோடு பதிவிடுகிறேன்..

      Delete