Thursday, 14 November 2013

காதலெனப்படுவது - சிறுகதை

“டேய் சரசு நீதான் உங்க அப்பா அம்மாகிட்ட ஏற்கனவே சொல்லீட்டேலடா… நாங்க வேற எதுக்குடா கூட வரணும் கொஞ்சம் பயத்தோடதான் கேட்டேன்.

சரசு பதில் சொல்வதற்குள் கோட்டைச்சாமி முந்திக்கொண்டான். “டேய் மஞ்சமாய்க்யாங்.. பயந்து சாவாதடா.. அவன் ஆசைப்பட்டான் அவங்க வீட்டு சம்மதம் இருந்தா பஞ்சாயத்தே இல்லேலடா..

(அவென் வீட்டுக்கு நாம போனாலே பஞ்சாயத்துதானடா..) மனதில் ஓடிவதை வெளிக்காட்டாமல் “நான் பயப்படலடா மாப்ள.. நாம போய் நின்னு பேசுறதுக்கு பதிலா அவனே பேசிட்டான்னு வச்சிக்க- ஓகே ஆக சான்ஸ் இருக்குடா மச்சி என பயம் வெளியே தெரியாம எவ்வளவோ சமாளித்தேன். ரெண்டு பயளும் கேக்கல.

“போடா தொட நடுங்கி.. நானே தைரியமா இருக்கேன். உனக்கு என்னடா!! கூட மட்டும் வந்து நில்லுஎன சரசு சமரசம் செய்தான். இருந்தும் பயம் விட்டபாடில்லை.

சரசு வீட்டில் உக்கார்ந்து பொம்பள பிள்ளைகள பத்தி பேசினாலே அவங்க அம்மா “எப்பா.. இப்படிலாம் பேசிகிட்டு இங்க வராதீங்கப்பா என வராதீங்கப்பா என்பதை மட்டும் அழுத்தமாக சொல்வார். சரசோட அப்பா எங்க சாதில ஊர்லயே பெரும் புள்ளி. ஆள பார்த்தா உடனே உடம்பு அதுவா எந்திரிச்சி நின்னுக்கும். பரம்பரை பரம்பரையா சாதி பதவிய விடாம பிடிச்சிகிட்டு இருக்கிற குடும்பம். வீட்டுல மூத்த பையன் சரசுங்கிறதால அடுத்து அவன்தான் அந்த பதவிக்கு ஏத்த ஆள்னு குடும்பத்தில இலக்கு வச்சிருக்கானுக. இந்த நேரத்தில எப்படி போயி இவன் வேற சாதிக்கார பொன்ன காதலிக்கிறான். இவங்கள சேத்து வைங்கனு கேக்க முடியும்!!!

சரசு அவன் லவ் மேட்டர ஏற்கனவே வீட்டுல சொல்லீட்டதால கொஞ்சம் பிரச்சனை இல்ல. ஆனா நாங்க இப்ப போகப்போறது. அவனுக்கும் அந்த பொன்னுக்கும் கல்யாணம் பண்ணி வைங்கனு கேக்க.. அதுதான் ஈரக்கொளை எல்லாம் நடுங்குது.

நடுக்கத்த வெளிய காட்டிக்காம.. “சரிடா மாப்ள- உனக்காக இது கூட பண்ணமாட்டோமா… ஹி ஹீ ஹி… அம்மா அப்பாட்ட என்னைக்கு பேசலாம்னு தேதி மட்டும் சொல்லுடா என்ற உடன் கோட்டைச்சாமி என்கிற செக்காலஜிஸ்ட் கண்ணுல பயத்த பாத்துட்டான்.

“டேய் நாட்டாமை உன்ன வச்சிட்டு ஊறுகாய் கூட போட முடியாது போலயேடா

“நான் என்ன நார்த்தங்காயாடா ஊறுகாய் போட.. போடா டேய் போடா என்றபடி நகர ஆரம்பித்தேன்.

“ஏய் வீட்டுக்கு வர்ரியா இல்லியா.. சோறு வேணுமா வேணாமாஎன எங்க அம்மா தெருவிற்கே வந்து கத்த ஆரம்பித்தார். இதுதான் சாக்கென்று

“சரிடா மாப்ள நான் கிளம்புறேன் என அந்த கணம் தப்பித்தேன்.
 நல்ல சுபயோக சுப தினத்தில் ஞாயிற்று கிழமை அதுவுமா அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் அலைபேசி அலரியது..

“இந்த நேரத்தில எவன்டா என போர்வையை காது பக்கம் மட்டும் விலக்கி வைத்து “ஹலோஎன்றேன்.

“டேய் உளுத்தம்பருப்பு நான்தான்டா என்றது எதிர்முனை.
எவ்வளவு தூக்கத்திலும் நண்பனின் குரலை மறக்க முடியுமா!!! “சொல்லுடா சரசு என சொல்வதற்குள்

“டேய் இன்னைக்கு அப்பாவும் அம்மாவும் வீட்டுல இருக்காங்கடா.. கோட்டைச்சாமிட்ட பேசிட்டேன். அவன் வர்ரேன்னு சொல்லீட்டான். அவன் கூட சேர்ந்து வந்திடு சரியா!!! என்றான்

“இல்லடா மாப்ள- இன்னைக்கு முக்கியமான வேலையா வெளிய…………. என்பதற்குள் கட் பண்ணிட்டான் பரதேசி..
சரி- கோட்டைச்சாமி வீட்டுக்கு வர்ரதுக்குள்ள குளிச்சிட்டு எங்கயாவது வண்டிய எடுத்துகிட்டு ஓடீடுவோம் என திட்டம் போட்டு போர்வையை சுருட்டி எரிந்துவிட்டு எழுந்தேன்.

“என்னடா அதிசயமா இருக்கு ஞாயிற்று கிழமை அதுவுமா குளிக்க போற- அதுவும் இவ்வளவு வேகமா…பிள்ளைகளின் லீவுக்கு வீட்டுக்க வந்த அக்காவுக்கு நக்கல் குறைச்சல் இல்ல…

“திருந்தீட்டேன்க்கா…. என்றவாறு துண்டை தூக்கி தோளில் போட்டு குளிக்கச் சென்றேன்.

“எப்படியோ கோட்டைச்சாமி வர்ரதுக்குள்ள கிளம்பியாச்சி
வண்டி ஸ்டேண்ட் எடுத்து கிளம்பும் நேரம் வந்து தொலைஞ்சிட்டான் கோட்டைச்சாமி..

“ஹி.. ஹீ.. வாடா மாப்ள…பின்னந்தலை சொறிந்தவாறு வலிந்தேன்

“டேய் சரசு வீட்டுக்கு பேறதுக்கு இவ்வளவு ஆர்வமாடா.. இவ்வளவு வேகமா கிளம்பிட்ட

“பின்ன என்னடா மாப்ள.. நம்மள நம்பி வந்துட்டான் நாமதான ஏதாவது பண்ணனும்

“சரி நடுக்கம் அதிகமா இருக்கு போல.. வீட்டுல தண்ணிய குடிச்சிட்டு ஒன்னுக்கு போறதலாம் போய்ட்டு வா கிளம்புவோம்.. போர இடத்துல நாஸ்தி பண்ணிடாத

(“பயபுள்ள எப்படியோ கண்டுபிடிச்சிட்டான்..”) என எனக்குள் புலம்பியவாறே “ஒன்னும் வேணாம் வா… என முகத்தை திருப்பிக்கொண்டு ஏறி அம்ர்ந்து வண்டியை உதைத்தேன்.
வண்டி மூத்திர சந்தை கடக்கும் போது பயம் கவ்வியது..

“மாப்பிள நாம கண்டிப்பா போகனுமாடா

“மூதேவி பயப்புடாம வந்து தொலை என தைரியம் சொன்னான் கோட்டைச்சாமி.

“கேட்டுக்கு வெளியவே வண்டிய நிறுத்திக்கிறேன்டாஎன வண்டியை எடுத்துக்கொண்டு ஓடுவதற்கு தோதாக சைடுலாக் எதும் போடாமல் நிறுத்திவிட்டு வந்தேன்.

கேட் வாசலை திறந்ததுமே “வாங்கப்பா.. வாங்க வாங்க என முண்டா பனியன் போட்ட சரசின் அப்பா வரவேற்றார்.

“சரசு… சரசு… இந்தா பசங்க வந்திருக்காங்க பாரு.. நீங்க உள்ள போங்கப்பா.. என அனுப்பிவைத்தார்.

“அவனுக உங்கள பாக்கதான்பா வந்திருக்கானுக.. என மாடியிலிருந்து ரசாயண குண்டை போட்டான் அடி வயித்தில்.
(“ஏன்டா டேய் ஏன்டா இப்பிடி வந்ததுமேவா”) என புலம்பிக்கொண்டே நுளைந்தேன்.

“என்னப்பா எதும் பிரச்சனையா… நம்ம சாதிக்கரா பயலுக வேற… என்னனாலும் சொல்லுங்கப்பா என்றார் சரசு அப்பா நெஞ்சை சொறிந்து கொண்டே…

“இல்லப்பா…. என கோட்டைச்சாமி ஆரம்பிக்கும் போதே எனக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது.

“உக்காருங்கப்பா… நின்னுகிட்டு இருக்கிங்களே என சொல்லியவாறு சில பல தின்பண்டங்களை எங்கள் முன் அடுக்கினார் சரசோட அம்மா.

“நீங்க போய் சட்டைய போட்டுகிட்டு வாங்க என சரசு அம்மா சொன்னதும் இருவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

“மாப்ள நல்ல வேலைடா சரசு அம்மா காப்பாத்தினாங்கமச்சான் நாம எதுக்கும் இந்த அய்ட்டங்கள எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு அப்பரமா பேச ஆரம்பிக்கலாமே என்றேன்

“அதுக்கப்பறம் இங்க நடக்கிறத பார்த்திட்டு வயித்த கலக்கி இங்கயே போய்டுவடா பரவாயில்லையா என்றான் பல்லை கடித்தவாறு
நண்பன் இவ்வளவு தூரம் சொல்லி (பயமுறுத்திய) பிறகு அவன் பேச்சிக்கு மரியாதை கொடுக்கனுமே என கையில் எடுத்த ஜாங்கிரியை அப்படியே வைத்து விட்டேன்.

சரசின் அம்மா கையில் காபியோடும்.. சரசின் அப்பா சட்டை பட்டனை போட்டபடியும் எங்களை நெருங்கினர்..

சரசின் அப்பா “சொல்லுங்கப்பா என அமரும் போது சரசும் வந்து அருகில் அமர்ந்து கொண்டான். கொஞ்சம் தைரியம் வந்தது போல இருந்தது.
எங்க செட்டுலயே தைரியமான ஆளு கோட்டைச்சாமிதான்.. அவனே ஆரம்பித்தான்.

“அப்பா………….. நம்ம சரசு ஒரு பொன்ன விரும்புறான்.. அந்த பொன்னு மேல பைத்தியமா இருக்கான்…

“ஆமா…. எனக்கும் தெரியும்… இப்ப அதுக்கு என்ன!!!கொஞ்சம் மிரட்டல் தோணி வர துவங்கியது. காலையில் சாப்பிட்ட இட்லி மெல்ல சுழல துவங்கியது.

சரசு முந்தினான். “எனக்கு அந்த பொன்ன கல்யாணம் பண்ணி வைங்கப்பா.. எனக்கு அந்த பொன்ன பிடிச்சிருக்கு. நல்ல பொன்னுப்பா.. நம்ம குடும்பத்த அனுசரிச்சி போற குணம்பா..

“ஓ… இங்க எல்லாம் அடாவடி பண்றோம் அவ வந்து அனுசரிச்சி போவளோ… என்றார் சரசு அம்மா..

“ஏய் நீ சும்மா இருடீ…என அடக்கிவிட்டு “இது எங்க குடும்ப பிரச்சனைப்பா… நாங்க பேசிக்கிறோம் நீங்க கிளம்புங்க  என்றார்.
அப்பாடா தப்பிச்சோம் என எந்திரிக்கும் போது கோட்டைச்சாமி கால் தொடையை அமுக்கினான். (“அவனுகளே போகச் சொல்லீட்டானுக நீ ஏன்டா…!!!) என கேட்க தோன்றிது.

“அப்பா ஏன் போகச் சொல்றீங்க அவனுகள இத பத்தி பேச நான்தான் வரச்சொன்னேன். சரசு கொஞ்சம் சூட பேசின மாதிரி தெரிஞ்சது.
சரசு அம்மா கையில் வைத்திருந்த காபியின் சூடு ஆறிவிடுமோ என அப்போது நினைவுக்கு வந்தது.

“இங்க பாருங்கப்பா… டேய் உனக்கும் சேர்த்துதான்டா சொல்றேன் கேட்டுக்க.. அந்த பொன்னு நம்ம சாதிசனம் கிடையாது. நீ அந்த பொன்ன கல்யாணம் பண்ணிகிட்டா ஊருக்குள்ள என்னை ஒரு பயலும் மதிக்க மாட்டான். சாதிகெட்ட குடும்பம்னு தான் பேர் வாங்கனும். என்னோட பதவிய எப்பிடிடா புடுங்கிறதுனு உன் சித்தப்பய்ங்கெ ரெண்டு பேரு சுத்திகிட்டே வர்ரானுக. இது அவனுகளுக்கு நல்ல சாதகமா போய்டும். எனக்கு என் பேருதான் முக்கியம். சற்று நியாயமாகவே பேசுவது போல தெரிந்தது எனக்கு.

“அப்போ நான் முக்கியமில்ல.. என் சந்தோசம் உங்களுக்கு முக்கியமில்ல… அப்பிடித்தானே இதுவும் நியாயமாத்தானேபடுது என கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சட்டென எழுந்தவர் எங்களை ஒரு முறை முறைத்தார்.. அடுத்த கணம் எங்களை அறியாமல் எங்கள் உடம்பு எந்திரித்துவிட்டது.

“டேய்.. இந்த பொன்ன கல்யாணம் பண்ணிகிட்டாதான் நீ சந்தோசமா இருப்பனு கிடையாதுடா… நான் பார்க்கிற பொன்ன கல்யாணம் பண்ணிகிட்டாலும் சந்தோசமாதான் இருப்ப என்ன கடுகடுத்தார்.

“நான் சந்தோசமா இருப்பேன்னு உங்களுக்கு எப்படிப்பா தெரியும்!!! குதர்க்கமான கேள்விதான் ஆடிப்போய்ட்டார் என்றுதான் நினைத்தேன்.

“நீங்க ரெண்டு பேரும் வெளிய போங்கடா நாய்ங்களா… என எங்களையே ஆடிப்போக வைத்துவிட்டார் அடுத்த கணத்தில்.
பதட்டமும் பயமுமாக நான் நிற்க.. சரசு “அப்பா….. என கத்தினான்
கோட்டைச்சாமி எந்த ஒரு சலனமும் இல்லாமல் “நீங்க போகச் சொல்லனாலும் போகதான்ப்பா போறோம்நாங்க வர்றோம் என கோட்டைச்சாமி சொல்லிய உடன் நகர்ந்தோம்.

“அப்பா அவங்கெ என் ஃப்ரெண்ட்ஸ் அவனுகள ஏன் வெளிய போகச் சொன்னீங்க… என கத்திய சப்தம் எங்களோடு வாசல் வரை வந்தது.

“நம்ம சாதிக்கார பயலுகங்கிறதுனாள தான் உள்ள வரைக்கும்விட்டேன்.. இல்லனா தெருவிலயே நிப்பாட்டி அடிச்சி விரட்டிருப்பேன்செருப்பை மாட்டிக்கொண்டிருந்த எங்களை செருப்பால் அடித்துக்கொண்டிருந்தன அவரது வார்த்தைகள்.

“என்னை அசிங்கப்படுத்திடாதடா… ஊருக்குள்ள தலை நிமிந்து நடந்துகிட்டு இருக்கேன்.. தலை குனிய வச்சிடாத.. என சரசு அப்பாவின் சப்தமும் பதிலுக்கு சரசினுடைய சப்தமும் வண்டியை எடுத்துக் கிளம்பியும் பின் தொடர்ந்து கொண்டே இருந்தது. மூத்திர சந்தை தாண்டியும் நடுக்கம் குறைந்தபாடில்லை.
அலுவலகம் முடித்து வண்டியில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது கோட்டைச்சாமி வீட்டு வாசலிலேயே ரெண்டு பேரும் மடக்கி பிடிச்சிக்கிட்டானுக..

“என்னடா மாப்ள கோபமாடா.. கண்டுக்காம போற.. மன்னிச்சிக்கடா.. அப்பா ரொம்ப ஓவரா பேசிட்டார்என தோளில் கை போட்டான் சரசு.

(“அஞ்சி நாளாகியும் பயமே குறையல… இதுல கோபம் எங்க இருந்துடா வரும்…) மனதில் ஓடியது “இதுனால என்னடா.. நம்ம அப்பாதான

“இப்படி நடந்துப்பாருனு தெரிஞ்சா உங்கள வர சொல்லிருக்க மாட்டேன்டா என சரசு இழுத்தான்

“உங்க அப்பா இப்படிலாம் பேசுவார்னு எனக்கு முன்னாடியே தெரியும்டா.. என கோட்டைச்சாமி சரசை நோக்கி சிரித்தான்

“அப்பறம் ஏன்டா இப்பிடிமனதில் ஓட வேண்டியது சப்தமாக வெளிவந்தது.

“டேய் காஞ்ச கருவாடு.. இப்ப சொல்லிட்டாதால இவன் வீட்டுல எப்படியம் இவன் கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னுடுவானோனு நினைக்க ஆரம்பிச்சிருப்பாங்க அந்த நினைப்பு இவன் கல்யாணம் பண்ணிட்டு போய் நிக்கும் போது அவ்வளவோ அதிர்ச்சிய குடுக்காது.. திடுதிப்புனு தாலிய கட்டி கூட்டிட்டு போனா அவங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும் அதான் இப்படி பிளான் பண்ணோம்..பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டி ஓன்று எங்களுக்குள் நுழைந்தது.

“ஏய் யாரு…

என்னப்பா இங்க மீட்டிங் சரசு காதலிக்கும் பொன்னு முகில் எங்களை பார்த்து நக்கலாக சிரித்தார். பதில் புன்னகையோடு வரவேற்றோம்.

“ஏய் என்ன சரஸ் ரிஜிஸ்டர் ஆபிஸ் போனியா என்ன சொல்றாங்க.. வீட்டுல செமயா கடுப்பேத்துறாங்க சரஸ்.. தீபாவளிக்குள்ள எப்படியாவது நாம மேரேஜ் பண்ணிக்கனும் என முகில் செல்லமாக கோபித்துக் கொண்டார்.

“இருடா… தீபாவளி முடியட்டும்… அப்பறமா பாத்துக்கலாம்.. மற்ற டாக்குமெண்ட்ஸ்லாம் மெசேஜ் பண்றேன் அதுக்குள்ள ரெடிபண்ணிக்க என்றான் பொருப்பாக.

“அதல்லாம் ஓகேடா… பட் தீபாவளிக்குள்ள முடிச்சிட்டா நல்லதுடா செல்லமாக கெஞ்சினார் முகில்.

“முகில் வேணாம்டி அது சரி வராது என்றான் சரசு
கிட்டதட்ட மூனு வருசமா இவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாத்திருக்கேன் எந்த விசயத்திலயும் ஒரே மாதிரி யோசிக்கிறவனுக.. ஒரே மாதிரி பேசுறவனுக ஏன் இந்த விசயத்துல முரண்படுறாங்கனு புரியல… நடுவில் மூக்கை நுழைத்தேன்.

“டேய் என்னாச்சிடா உங்களுக்குள்ள.. சட்டுபுட்டுனு முடிவெடுங்கடா… ஏன்டா உங்களுக்குள்ள இந்த முரண்பாடு… நல்லாதான போய்ட்டு இருந்துச்சி!!!!

“இல்லண்ணா.. தீபாவளிக்கு முன்னாடினா பிரச்சனை இருக்காது புரிஞ்சிக்க மாட்றான்.. நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.. என கோரிக்கை வைத்தார்.

“நீங்க எதுக்கு தீபாவளிக்கு முன்னமே கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றீங்கமுகிலை திருப்பினேன்.

“அக்கா டெலிவரிக்காக வந்து வீட்டுல இருக்காங்கண்ணா.. தீபாவளி முடிஞ்சதும் குழந்தைய தூக்கிட்டு கிளம்பிடுவாங்க.. தீபாவளிக்குள்ள மேரேஜ் முடிச்சிட்டா.. அக்கா வீட்டில இருக்கிறதால அம்மாவ சமாதாணப்படுத்திக்குவாங்க.. அக்கா குழந்தைய பாத்துகிட்டு இருந்தா அம்மாவுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்காது.. நான் இல்லன..தீபாவளிக்கு அப்பறமா அக்கா இன்னும் கொஞ்ச நாள் அம்மா கூட இருந்திட்டு போவாங்க.. அம்மா ஃபீல் பண்ணமாட்டாங்கல்ல என சொல்லிய உடன் சரசு வழக்கம் போல முந்திக்கொண்டான்.

“யேய் லூசு… எனக்கு தெரியாதா… ஆனா இப்படி யோசிச்சி பாருடா.. தீபாவளிக்கு ஊரே சந்தோசமா இருக்கும்.. நம்ம ஃபேமிலி மட்டும் நல்ல நாள் அதுமா உக்காந்து அழுதுகிட்டு இருப்பாங்க.. அது அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்… தீபாவளி சந்தோஷமா முடியட்டும்டா முடிஞ்சதும் ஒரு தடவ வீட்டுல பேசிட்டு மேரேஜ் பண்ணிக்கலாம்… தீபாவளி முடிஞ்சி உங்க அக்கா அவங்க வீட்டுக்கு கிளம்புரதுக்குள்ள மேரேஜ் முடிச்சிக்கலாம்டீ என சரசு சொன்னதை ஏற்றுக்கொள்வது போல முகில் தலை அசைத்துக் கொண்டிருந்தார்.

சரசின் அப்பா-அம்மா பேச்சும் சரசு-முகிலின் பேச்சும் மாறி மாறி மறுஒலிபரப்பாகிக்கொண்டே இருந்தது எனது மனதில். 

-ரகுநாத்

1 comment:

  1. சம்பவத்தை கதையாக சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால் கதை என்பது கருத்தை மையமாக கொண்டு பின்னப்படவேண்டிய படைப்பு... இருந்தாலும் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete