Sunday, 2 December 2012

மரணமடையும் மனிதம்



கொலை செய்தால் கொலைதான் தண்டணை என்றால்- தண்டனையாக கொடுக்கப்பட்ட கொலைக்கு என்னதான் தண்டணை? #தூக்கினை தூக்கில் ஏற்றுங்கள்.” –இது நான் காசாப் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அன்று என் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. ஏகப்பட்ட எதிர்ப்பு குறுஞ்செய்திகள் என் அலைபேசியில் வந்து குவிந்துவிட்டன. “160 மனிதர்களை கொன்று குவித்தவனை மன்னித்து விட சொல்கின்றாயா?” என்றும்- “ அவனை உயிரோடு விட்டால் இன்னும் பல மனித உயிர்கள் அவனால் பலியாகும்” என்றும்- நீ என்ன அந்த தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டாயா?” என்றும் மாறி மாறி கேள்விகள். நானும் எனக்கான பதிலை கூறாமல் இல்லை. அவர்கள் எனது விளக்கத்தினை ஏற்க கூடிய மன நிலையிலும் இல்லை. இதோ இப்போது இதனை படித்துக்கொண்டிருக்கும் உங்களில் பெரும்பாலானோர் என் விளக்கத்தினை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதும் கூட எனக்குத் தெரியும்.


நான் ஒரு சாதாரண மனிதன்தான். மனிதர்கள் மேலும் மனிதத்தின் மேலும் எனக்கு ஈடுபாடு வர காரணமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அதனை கூறிவிட்டு எனது விளக்கத்தினை கூறுகிறேன். முன்னாட்களில் இரண்டு சக்கர வண்டியில் பறந்து கொண்டு திரிவேன். நகர்புறங்களில் கூட அறுபது எழுபது தான் குறைவு என் வேகம். அதே வேகத்தில் ஒரு முறை எதிரில் வந்த ஒரு இரு சக்கர வாகனத்தில் இடித்து விழுந்தேன். எனக்கும் என் வாகனத்திற்கும் ஒரு பொட்டு சேதாரம் இல்லை. எதிரில் வந்த நபருக்கு பயங்கர அடி. ஆங்காங்கே சிராய்த்து குருதி வழிந்தோடுகின்றது. முதலில் அவர் கோபப்பட்டாலும் பின் பொருமையாக என்னை மருத்துவமனைக்கு அழைத்தார். நானும் கூட்டிச்சென்றேன். அங்கு அவருக்கு கொடுக்கக்கூடிய சிகிச்சைகளை அருகில் நின்று என்னை காண வைத்தார். அதற்குள் தகவல் அறிந்து அவர் மனைவி பிள்ளைகள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அவர்கள் விட்ட கண்ணீரையும் காணச்சொன்னார். நான் மருத்துவருக்கு பணம் கொடுக்க முனைந்தேன்- அவர் அதை தடுத்து தன் மனைவியை கொடுக்க எத்தணித்தார். இது தான் எனக்கான தண்டனை. இன்று நகர்புறங்களில் எனது வேகம் நாற்பது. தண்டனைகள் என்பது திருந்தவே. ஒட்டு மொத்தமாய் தீர்த்து கட்டிவிட அல்ல என்பதே என் கருத்து.

குற்றவாளி செய்த அதே தவற்றினை சட்டமும் செய்தால் அந்த குற்றவாளிக்கும் சட்டத்திற்கும் என்னதான் வித்தியாசம்? என்னுடைய பார்வையில் கசாப்பும் சட்டமும் ஒரே தவறைதான் செய்துள்ளனர். மனித கொலை..

சட்டம் என்பது குற்றவாளிகளுக்கு கொடுக்க கூடிய தண்டனையானது அவர்கள் திருந்தி நல்வழிப்படுத்தவே இருக்க வேண்டும். ஒரு நல்ல குழந்தை நல்ல மனிதனாக வாழும் போது அவனை தீய செயல்களை செய்ய தூண்டிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் இந்த உலகில் இருக்கும் போது.. இப்படி தீஞ்செயல்கள் புரிவோரை திருத்தி நல் வழிப்படுத்தும் வலிமை கொண்ட சட்டங்கள் ஏன் நம்மிடம் இல்லை?

160 மனித உயிர்களை ஈவு இறக்கமின்றி கொன்று குவித்த அந்த நாட்களில் நான் என்ன மன நிலையில் இருந்தேனோ- அதே மன நிலையில்தான் இருந்தேன் கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தி கேட்ட பிறகும். மனித உயிர் என்பது பொதுவானது. இது நல்ல மனித உயிர்- இது கெட்ட மனித உயிர் என்ற பாகுபாடு கிடையாது. நமக்கு தெரிய வந்து இன்று ஒரு மனித உயிர் அநியாயமாக பரிக்கப்பட்டுவிட்டதே என்று நினைத்து வருந்தினேன் அந்நாளில்.

அந்த மும்பை சம்பவத்தன்று உலகின் ஏதொ ஒரு மூலையில் இனிப்பு வழங்கி கொண்டாடியதாக செய்தி கேட்டு மனிதனோடு மனிதமும் மரித்துப்போனதோ என நினைத்தேன்- கசாப் மரணத்தன்று நம் நாட்டவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்ற செய்தி கேட்கும் போதும் அதே நினைவு வந்தது. “ ஒவ்வொரு மனிதனின் மரணத்திலும்- வாழும் மனிதர்களின் மனிதமும் சேர்ந்தே மரணமிக்கின்றது. ”

மனிதம் காப்போம்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

15 comments:

  1. அனுபவத்திலிருந்து போடப்பட்ட சிறந்த பதிவு. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்- கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே. நன்றி.

      Delete
  2. “கொலை செய்தால் கொலைதான் தண்டணை என்றால்- தண்டனையாக கொடுக்கப்பட்ட கொலைக்கு என்னதான் தண்டணை? நல்ல கேள்வியாக உள்ளது.

    சரி ...கொலை செய்தால் !! கொலை அல்லாத வேறு சிறப்பான சிறந்த தண்டணை எதுவென்று நீங்கள் ஏன் கூறுவில்லை.

    யாரையும் கொலை செய்ய வேண்டும் என்பதற்காக தண்டணைகள் வழங்கப்படுவதில்லை. குற்றங்களை குறைப்பதற்காக வழங்கப்படுகிறது. செய்த குற்றத்தின் செயல் மனிதத்தால் மண்ணிக்கமுடியாததாகும் பொழுதே அதிகபட்ச தண்டணைகள் வழங்கப்படுகிறது.

    தன் மகனால் தேர் ஏற்றிக்கொள்ளப்பட்ட கன்றுவின் தாய்க்கு நீதி வழங்குவதற்காக தன் மகனையே தேர் ஏற்றி கொன்று ஒரு தாயின் வேதனையை தானும் அனுபவித்தலே சரி என்ற நீதியை நீங்கள் தவறென்கிறீர்களா?

    பள்ளி செல்லும் பச்சிலம் குழந்தைகளையும், கல்லூரிக்கும், வேலைக்கும் செல்லும் பெண்களை பாலியியல், வண்புணர்வு புரிந்தவர்களுக்கு என்ன சிறந்த மனிதத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுங்கள்....

    தண்டனைகள் என்பது அடுத்தும் இது போன்ற சம்பவங்கள் செய்தால் தீர்ப்பு இதுதான் என்பதற்கே...குற்றம் செய்பவரின் குறைந்தபட்சம் பயநிலை ஏற்படவேண்டும் என்பதே...

    உண்மையான மனிதம் உள்ள சமுதாயத்தை உருவாக்க இது போன்ற தண்டனைகள் இல்லையென்றால் மனிதம் என்ற வார்த்தைகளை படிக்கக்கூட மனிதர்கள் இருக்கமாட்டார்கள்...

    ReplyDelete
    Replies
    1. கொலை அல்லாத சிறப்பு தண்டனை அவரை வாழ விடுவதே.. அவரால் இறந்த மனிதர்களை நம்பி- இழந்து வாழும் சொந்தங்களுடன் இணைந்து வாழ வைப்பதை தவிர அவர் திருந்த வேறு தண்டனை கிடையாது என்பது என் கருத்து.

      தண்டனைகள் குற்றம் நிகழாமல் இருக்கவே.. அதற்கு குற்றவாளிகளை அழிப்பதை தவிர திருத்துவதே சிறந்தது. மன்னிக்கும் பக்குவம் வந்தால்தான் மனிதம்.

      தவறு தான் ஒரு கொலைக்கு கொலையே தண்டனை என்றால்.. அதன் முடிவு எங்கு? எப்போது? கொலை செய்வது தவறு என சொல்லும் நீங்கள் தண்டனையாக கொடுக்கப்படும் கொலையை கொலையாகவோ- தவறாகவோ எண்ணாதது ஏன்?

      தவறு செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்றேன் என நினைக்க வேண்டாம். பாலியல் வன்புணர்வு செய்பவர்களையோ.- அவர்களின் செயல்களையோ சரி என்று சொல்லும் ஆள் நான் இல்லை :-). அவர்களை கொன்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டதா?? இப்போதைய அவர்களின் தேவை ஒரு நல்ல மன வைத்தியமே தவிர- மரணமில்லை. யார் இந்த தவறை செய்கின்றார்கள் என ஆராய்ந்து பாருங்கள். பிறந்தது முதல் அதிக பட்சம் ஆண் பெண் பழகிக்கொள்ள விடாத இந்த சமுதாயத்தில் வாழும் ஒருவர் திடீரென பெண் மீது கொள்ளும் ஒரு ஆர்வம். இது மனநோய் சம்பந்தப்பட்டது. இதற்கு சரியான கவுன்சிலிங் போன்றவற்றால் தடுக்கப்பட வேண்டுமே தவிர.. அடிச்சி ஆளையே காலி பண்ணிடுரதா:-)

      தவறு செய்பவர்களை கொன்றுவிட்டால் அந்த மரணத்தின் வலியை அவர்கள் அந்த கணம் மட்டுமே அவர்கள் அனுபவிப்பர்கள் தோழரே.. அவர்கள் அந்த மரணத்தின் வலியை உணர உங்களுக்கு பதில் சொன்ன முதல் பத்தி தான் வழி.

      அதையே தான் நானும் சொல்கின்றேன். தவறு செய்தவர்களை கொல்கின்றேன் பேர்வழி என உங்களின் மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடாதீர்கள். தயவு செய்து.

      Delete
    2. ஒரு நல்ல மனிதனை திறமையான கவுன்சிலிங் மூலம் மனிதாபிமானம் இல்லாமல் 160 உயிர்களை கொன்று குவிக்கும் அளவு கொடுமையாளனாக மாற்ற முடியும் போது. ஏன் இது போன்ற ஆட்களை மீண்டும் நல்ல மனிதனாக மாற்ற அதை விட திறமையான கவுன்சிலிங் நம்மிடம் இல்லை??

      Delete
  3. மே.இளஞ்செழியன்3 Dec 2012, 00:02:00

    உங்கள் வாழ்வில் நடந்த வாகன விபத்து நீங்கள் திட்டம் தீட்டி நடந்ததா?
    அதற்கு தண்டனை தரலாமா? என்பதை அடிபட்ட மனிதர் புரிந்தாரே அது தான் மனிதம். நீங்கள் 40 க்கு வேகத்தை குறைத்து திருந்தியது அல்ல மனிதம்.

    குற்றம் செய்தவரின் மேல் ஏற்படும் அனுதாபம் (உங்களுக்கு மனிதம்) குற்றவாளியால் வாழ்க்கை இழந்தவர்களுகளின் மீதோ, இறந்தவர்களின் குடும்பம் பற்றியோ அவர்களின் கனவு வாழ்க்கையைக் குறித்தோ ஏற்படாத அந்த மனிதத்தை குற்றவாளியை திருத்துவதில் தான் மனிதம் இருக்கிறது என்றால்... மனிதம் இருவகைப்படுகிறது. ஒன்று நீங்கள் நினைக்கும் மனிதம்.. மற்றொன்று நாங்கள் நினைக்கும் மனிதம். மனிதம் ஒன்றுதான் அதை யார்மேல் காட்டுவது என்பதுதான் இங்கு முரண்பாடாக உள்ளது.

    மனிதம் உயிர்வாழ்கின்றது அதை நாங்கள் ஒருபோதும் கொல்லப்போவதில்லை.

    குற்றம் புரிந்தவர்கள் அனைவருமே திருந்திவிடுவார்கள் என்பதெல்லாம் ????

    குற்றம் புரிந்து கொண்டு பின் திருத்துவதும் உங்கள் கோரிக்கை..

    இவர்கள் மறுபடியும் குற்றம் புரியமாட்டார்கள் என்று நீங்கள் வேண்டுமானால் நம்பத் தயராக இருக்கலாம்.

    குற்றவாளி மேல் கொள்ளும் மனிதத்தை தயவு செய்து...குற்றவாளிகளால் பலியாகும் ஒரு தவறும் செய்யாத அப்பாவிகள் மேல் ஏன் உங்கள் மனிதம் வர மறுக்கிறதோ தெரியவில்லை...மனிதத்திலும் ஒரு சாய்வா!!!

    திருத்துவதற்கு இவர்கள் ஒன்றும் அறியாமல் குற்றம் புரிபவர்கள் அல்ல.. அதை செவ்வனவே திட்டம் தீட்டி செய்பவர்கள்... இவர்களை திருத்த நினைத்தால் ஒருவேளை நீங்கள் அவர்களால் திருத்தப்பட்டு குற்றவாளியாக மாற வாய்ப்புள்ளதாகவே அமையும்...

    மனிதத்தைக் காப்போம் சரியான வழி எது என்று அறிந்து... நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்னால் அடுத்தவருக்கு இடையுறு செய்யாமல் இருக்க வாகன வேகத்தினை குறைத்தது மனிதம் இல்லை என்று சொல்கின்றீர்களா? அருமை.

      குற்றம் செய்தவரின் மேல் மட்டும் நான் பரிதாப படுகின்றேனா? என் கட்டுரையை தயவு செய்து மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு எழுதுங்கள் தோழரே..

      நீங்கள் குற்றம் புரிந்தவரை பற்றி பேசும் போது அவரின் உயிருகாகவும் பேசுகிறேன். அதனால் நான் குற்றவாளி உயிருக்கு மட்டும் ஆதரவானவன் என்று நீங்கள் புரிந்து கொண்டால் நான் உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடியாது.
      மனிதம் ஒன்று தான் தோழரே.. அது எல்லோர் மீதும் இருந்தால் மட்டுமே அது மனிதம். குற்றம் புரிந்தவரும் மனிதனே அவரால் செத்து போனவர்களும் மனிதர்களே. மனித உயிர் என்பது பொதுவானது.

      ///குற்றவாளி மேல் கொள்ளும் மனிதத்தை தயவு செய்து...குற்றவாளிகளால் பலியாகும் ஒரு தவறும் செய்யாத அப்பாவிகள் மேல் ஏன் உங்கள் மனிதம் வர மறுக்கிறதோ தெரியவில்லை...மனிதத்திலும் ஒரு சாய்வா!!!///
      உண்மையில் இதனை எழுதும் முன் எனது கட்டுரையை நீங்கள் முழுவதும் படித்திர்களா? நான் பாதிக்க பட்டவர்களை பற்றி எழுதவில்லையா?. ஒரு சாய்வாக இருப்பது நானா இல்லை நீங்களா என்பதனை ஒரு முறை சிந்தித்து பாருங்கள். மனிதம் பேசும் முன் அனைவரையும் மனிதராக எண்ண துவங்குங்கள்

      அறியாமல் குற்றம் செய்தவர்கள் தான் தோழரே இவர்கள். மனிதத்தின் மதிப்பு அறியாமல் குற்றம் செய்தவர்கள் தான் இவர்கள். இவர்கள் திருந்தமாட்டார்கள் என்று சொல்லும் நீங்கள். இவர்களை திருத்த கூடிய வலிமையான சட்டம் இல்லை என்பதை ஏன் ஏற்றுகொள்ள மறுக்கிறிர்கள்?

      கொலை செய்தவரை திருத்த கையாளாக சட்டத்தினை வைத்துக்கொண்டு குற்றவாளிக்கும் சட்டத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் கொலை செய்து விளையாடுவது மனிதமா??

      Delete
  4. you exprience is very small matter. he is indian enemy.in the war enemies death are very very very correct

    ReplyDelete
    Replies
    1. நான் கற்ற அனுபவம் குறைவுதான் என்பதனை ஒப்புக்கொள்கின்றேன் அண்ணா.. இந்தியாவின் எதிரியையும்.. போர் எதிரியையும் மனிதனாகவே பார்க்க கூடாது என்று அதிக அனுபவம் படைத்தால் மட்டும்தான் உணர முடியுமோ!!!

      அப்பாவிகளை கொன்று குவித்த கசாப்புக்கு இந்தியர்கள் அவர்களின் எதிரி என்றும்.. அவர்கள் போர் எதிரிகள் என்றும் தோன்றியதைப்போல உங்களுக்கும் தோன்றுகின்றது. இது ஆபத்தானது அண்ணா..

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா. தவறு இருப்பின் மன்னிக்கவும்

      Delete
  5. திட்டமிட்டு செய்பவர்களுக்கு வேறுவழியில்லை. குழந்தைகளை அழிப்பவனை என்ன செய்வது. உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்தால் அதுவேறு.

    ReplyDelete
    Replies
    1. கசாப் செய்ததனை நியாயமானது என்று சொல்லவில்லை அண்ணா.. அதே கெலைக் குணம் சட்டத்திற்கு தேவையா என்பதே என் கேள்வி. குழந்தைகள் என்றும் பார்க்காமல் ஈவு இறக்கம் இல்லாமல் கொன்று குவித்த கசாப்பிற்கு ஒரு விநாடி தண்டனை எப்படி போதுமானது??

      அவரை வாழ வைப்பதே அதிக பட்ச தண்டனை..

      சட்டமும் திட்டமிடு தான் கசாப்பினை கொலை செய்துள்ளது.. உணர்ச்சிவசப்பட்டு செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்ததே..

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா. தவறு இருப்பின் மன்னிக்கவும்

      Delete
  6. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.

      Delete
  7. “கொலை செய்தால் கொலைதான் தண்டணையா?
    itha than en FRIENDS kitta keatean.keavalama thitunanga.

    ReplyDelete
    Replies
    1. அவர்களும் கொலையை ஆதரிக்கின்றார்கள் என்று இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள் தோழரே..

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..

      Delete