Saturday, 5 January 2013

பசுமைநடை - கிடாரிப்பட்டி

22-04-2012. உண்மையில் என் வாழ்வில் மறக்க முடியாத தினம். முதன் முறையாக பசுமைநடையில் இணைந்து வரலாற்றினை தேடி நடக்க துவங்கிய தினம். முதல் நடை, புதுமுகங்களாக இருக்கப்போகின்றார்கள் என நினைத்த எனக்கு ஏமாற்றமே.. திருமங்கலத்தில் இருந்து நிறைய நண்பர்களின் தோழமை கிடைக்க காரணமாக இருந்தது இந்த தினம். இனம் இனத்தோடுதான் சேரும் என்ற பழமொழிக்கு அன்றுதான் அர்த்தம் விளங்கியது. திருமங்கலத்தில் இருந்து என் இரு சக்கர வாகனத்தினை எடுத்து தனியாக கிளம்பிய எனக்கு மதுரை புதூரில் இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று எதிர் பார்க்கவே இல்லை.

மதுரை புதூரில் இருந்து பசுமைநடை குழுவினரோடு இணைந்து அழகர் கோவிலை நோக்கி எனது வாகனத்தில் பயணமானேன். அழகர் கோவில் முதல் தோரணவாயிலின் முன்புறம் திடீரென அனைத்து வாகனங்களும் நின்றது. எதற்காக என சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே
எங்களுக்கு பின்னே வந்த வாகனங்களும் வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்து வலது கை பக்கம் திரும்பி மீண்டும் பயணமானோம். பசுமைநடையின் ஓருங்கிணைப்பிற்கான நேர்த்தி மலைக்கவைத்தது. இரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிறு ஆற்றுப்பாலத்தின் முன் இடது கை பக்கம் மீண்டும் திரும்பினோம். மலை பாதை துவங்கியது.

சிறுது தூரத்திலேயே இரு சக்கர வாகனங்களையும் நிறுத்திவிட்டு மலையை நோக்கி கண்களை அகல விரித்தபடி நடக்களானேன். தொல்லியல்துறையின் கட்டுப்பட்டில் இருந்தது இந்த கிடாரிப்பட்டி மலை. மலை ஏற ஏற ஆனந்தம் கொப்பளித்தது. என் இருபத்து ஐந்து வருட கனவு நிறைவேறிக்கொண்டு இருந்தது.

ஒரு கட்டத்தில் மலை குகை ஒன்று வரவேற்றது. இதுதான் அந்த வரலாற்று பெட்டகம் பரவிக்கிடக்கும் களம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர் சிற்பம் ஒன்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் பதிமூன்று, கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய இனக்குழு மக்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் பதிமூன்று என கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. பசுமைநடை நிறுவனர். எழுத்தாளர். அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் பேசி நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார்
.
அவரை தொடர்ந்து, தொல்லியல்துறை அறிஞர். அய்யா சாந்தலிங்கம் அவர்கள் பேசுகையில்:,
“இங்கு படுகையின் தரைப்பரப்பில் ஒன்றும், மேலே 12ம் ஆக மொத்தம் 13 கல்வெட்டுக்கள் உள்ளன. இங்குள்ள தமிழ் பிராமி கல்வெட்டுக்களின் சிறப்பம்சங்களில் ஒன்று “மதிரை” என்ற சொல்லால் மதுரை குறிக்கப்படுவதன் மூலம் மதுரையின் தொன்மை அறியக்கிடைப்பது. மதிரை பொன் கொல்லன், மதிரை உப்பு வணிகன், மதிரை பணித வணிகன், மதிரை கொழு வணிகன், மதிரை அறுவை வணிகன் (பணித சர்க்கரையையும் கொழு இரும்பையும் குறிக்கும்) என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதன்வழி இன்றைய வர்த்தக சங்கங்கள் என வழங்கப்படும் Chamber of Commerceகளுக்கு முன்னோடியான வணிகக்குழுக்கள் (Guilds) இருந்து வந்ததை அறியலாம். இந்த வணிகர்கள்தான் இங்கு படுகைகளையும், மலையில் புருவம் போன்ற அமைப்பையும் வெட்டிக்கொடுத்துள்ளனர்.
இந்த மலை திண்டுக்கல் – நத்தம் – வெள்ளரிப்பட்டி – அரிட்டாபட்டி, மாங்குளம் என ஒரு வணிகப்பெருவழியின் தொடர்ச்சியை உணர்த்துகிறது. கடல்வழி வணிகர்கள் பௌத்தத்தை ஆதரித்ததையும் உள்நாட்டு வணிகர்கள் சமணத்தை ஆதரித்ததையும் அறிவோம்.
சமணமதம் கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாவீரரால் வடஇந்தியாவில் நிறுவப்பட்டது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் 12வருட பஞ்சம் வட இந்தியாவைப் பீடிக்கப்போகிறது என்று கணித்து தென் திசை ஏகிய சமணர்களின் ஒரு கூட்டம் சிரவணபெலகொல வழியாக மதுரையை அடைந்து மலைகள் சூழ்ந்த இந்நகரைச் சுற்றி நிலைகொண்டதாகக்கூறப்படுகிறது. கிபி பத்தாம் நூற்றாண்டுவரை இம்மலைகளில் சமணர் இருந்ததன் சுவடுகளாக தீர்த்தங்கரர் உருவமும், அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளன.
இந்த அச்சணந்திதான் நின்றசீர் நெடுமாறன் வெப்புநோய் தீர்ந்து சைவத்தை தழுவிய பிறகு ஏற்பட்ட தொய்விலிருந்து சமணத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். அச்சணந்தி தென்கோடியில் உள்ள சிதறால் உட்பட தமிழகத்தின் எல்லா சமணத்தலங்களுக்கும் சென்றுள்ளார். வியப்பூட்டும் வகையில், கழுகுமலையில் அவர் வந்ததற்கான சுவடு எதுவுமில்லை. பிற்காலச் சமணம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறது. பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு சித்தாமூர் உள்ளிட்டு வடபகுதியிலேயே சமணத்தின் சுவடுகளைக் காணமுடிகிறது. சமணர்கள் நீறுபூசி வேளாளர்கள் என்று சைவர்களாக மாறிவிடக் காண்கிறோம். இருந்தும் அவர்கள் வாழ்முறையில் இருட்டியபின்பு சாப்பிடுவதில்லை என்பன போன்ற சமணக்கூறுகளைக் காணலாம்.
இங்குள்ள பாறை ஓவியங்கள் சமணர் வருகைக்குமுன்பே இனக்குழுச் சமூகம் இருந்துவந்ததை புலப்படுத்துகின்றன. இன்றும் இப்பகுதியில் சிறப்புற இருந்துவரும் கள்ளர் சமூகம் போர்க்குடியினரான வானாதிராயர்களின் தொடர்ச்சியாக இருக்கலாம். வானாதிராயர்கள் பாண்டியர்களுக்கு கீழே இருந்து இந்தப்பகுதியை ஆண்டுவந்தனர். அவர்கள் கட்டியதுதான் அழகர்கோயில் கோட்டை.”

அய்யா அவர்களின் பேச்சினை தொடர்ந்த பேராசிரியர் கண்ணன் அவர்கள்:,
“இங்குள்ள பாறை ஓவியங்கள் சமணர் வருகைக்கு முன்பே இப்பகுதியில் இனக்குழு சமுகங்கள் வாழ்ந்துவந்ததைக் காட்டுபவை. இங்கு மொத்தம் 13 இடங்களில் பாறை ஓவியங்கள் இருந்தன. அவற்றுள் சில சிதிலமடைந்துவிட்டன.  
கலைமான் உருவம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. இது வேட்டைச் சமூகத்தை உணர்த்துகிறது.
இப்பாறை ஓவியங்களுக்கு கரிம முறையில் வயதுக்கணிப்பு (carbon dating) இன்னும் செய்யப்படவில்லை. என்றாலும் குதிரை அல்லது யானை போன்ற ஒருவிலங்கின்மீது அமர்ந்து கோடரியேந்திய நிலையில் மனித உருவம் காணப்படுகிறது. இது விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய  பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலத்தைச் சேர்ந்த (கிமு மூன்றாம் நூற்றாண்டு – 2400 ஆண்டுகளுக்கு முன்பு) ஓவியங்களாக இவற்றை வகைப்படுத்த உதவுகிறது.
இத்தகு ஓவியங்கள் செம்பாறையைப் (laterite stone)  பொடியாக்கிக் கிடைத்த  செங்காவிப்பொடியுடன் (red ochre) இலைச்சாறும் பிசினும் சேர்த்து வரையப்பட்டவை. விலங்கு மயிரால் அல்லது கையால் வரையப்பட்டவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டும் மிக அண்மையில் வரையப்பட்டவைபோன்று தோற்றமளிப்பவை.
ஆதிமனிதனால் தன்னுடைய வாழ்க்கையை வெளிப்படுத்துகிற நோக்கத்துடனோ அல்லது வேட்டையில் அதிக விலங்கு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் ஒரு சடங்குக் குறியீடாகவோ பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம்.
செங்காவிப் பொடியால் வரையப்பட்ட சிவப்புநிற ஓவியங்கள் இங்கு இருப்பதைப்போல வாசுதேவநல்லூர் அருகில் உள்ள பாணர் பறம்பு போன்ற இடங்களில் கருநிற ஓவியங்கள் உள்ளன.”

ஓவியர் பாபு தனது சிறிய பேச்சின் மூலம் சீராகயும் சீராக்காவும் பேசினார்.
“கடந்த 2300 ஆண்டுகளாக காலத்தால் அழியாது இருந்துவந்தவை கடந்த 30 – 50 ஆண்டுகளாகத்தான் அதிக சிதைவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கத் தட்டை ஓவியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்க வகையில் அமைந்துள்ள இவ்விடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மிலிருந்தே தொடங்குகிறது”.

உண்மைதான் பழங்கால வரலாற்று எச்சங்களை சில காதல் கிருக்கர்கள் தங்களின் இதய குறி கிறுக்கள்களால் சிதைவடைய செய்திருப்பது அசிங்கப்பட வைக்கின்றது. தன் காதலிக்காக ஷாஜகான் அவர்கள் கட்டிய தாஜ்மகாலை போல கட்ட துப்பில்லாமல், பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று சின்னங்களை சிதைப்பவர்களை என்னதான் செய்ய??!!
தேவையான அளவுக்கு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மலையிடம் விடை பெற்று திரும்பினோம். கிடாரிப்பட்டியின் பெரிய மரத்தடியில் அனைத்து தன்னார்வளர்களின் பங்களிப்போடு காலை சிற்றுண்டி உண்டோம்.

கொசுரு:
இப்போதுள்ள அழகர் கோவில் வட்ட வடிவ அமைப்பில் இருக்கின்றது. பெரும்பாலும் புத்த ஆலயங்கள்தான் இந்த வடிவமைப்பில் இருக்கும். ஆரிய ஆக்கிரமிப்பு துவங்கிய கால கட்டத்தில் தமிழகத்தில் புத்த மதம் சிறப்பு பெற்றிருந்தது. பின் வந்த சமய போரில் புத்த கோவிலை ஆரியர்கள் ஆக்கிரமித்து இருந்திருக்கின்றார்கள். அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாததால் இப்போதைக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படைப்பில் உதவி: சித்திரவீதிக்காரன்.

தேடலை தொடர்வோம் வாருங்கள்..
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. பசுமைநடை குறித்த தங்கள் பதிவுகளை தொடருங்கள். அழகர்கோயில் குறித்து மேலும் அறிந்து கொள்ள பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா எழுதிய அழகர்கோயில் என்ற நூலை வாசித்துப் பாருங்கள். அழகர்கோயில் குறித்த பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொள்ளலாம். மதுரை காமராசர் பல்கலைகழக வெளியீடாக வந்துள்ளது.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி தோழரே... தங்களிடம் அனுமதி பெறாமல் தங்கள் வலைதளத்தில் இருந்து தகவல்களை எடுத்து பயன்படுத்தியுள்ளேன்...

      நிச்சயம் நீங்கள் அறிமுகம் செய்து வைத்துள்ள புத்தகத்தினை படித்து பயனடைகிறேன் தோழரே.. மிக்க நன்றி

      Delete
  2. பசுமைநடையை பற்றி எழுத துவங்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் மூலமாக பசுமைநடை செய்தி கண்டு பலரும் இயற்கையை பேணி காக்க முன்வர வேண்டும். இழந்து போதும்...இருப்பதை காப்போம்.

    கொசுரு செய்தி அருமை...புதிய தகவலாக அமைந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே... தொடர்வேம் நமது பயணத்தினை.. மிக்க நன்றி

      Delete