Friday, 4 January 2013

பசுமைநடை – அறிமுகம்


பிரமிப்பு என்றால் என் அகராதியில் மலைகள்தான். சிறுவயது முதலே மலைகள் மீது எனக்கு அவ்வளவு காதல். என் ஊர் திருமங்கலம் என்றாலும். பிறந்தது மதுரைதான். தாய்வழி உறவுகள் அனைவரும் மதுரையில்தான் இருக்கின்றார்கள். உறவினர் வீடுகளுக்கு மதுரை நோக்கி பயணப்படும் போழுதெல்லாம் பேருந்தின் சன்னல் ஓரத்தில் அமர்ந்து திருப்பரங்குன்ற மலையையும் பசுமலையையும் கண்கொட்டாமல் பார்த்து வியந்ததுண்டு. மலைகள் எத்தனை முறை ரசித்தாலும் சளிப்பதில்லை. ஒவ்வொரு முறை காணும் போதும் ஒவ்வொரு வடிவத்தில் கண் முன் விரியும். தூரத்தில் இருந்து ரசித்த காலங்களில் மலைகளை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்ற ஆசை மனதை கவ்விக்கொண்டது. “மலைக்கு பின்னாடி என்ன இருக்கும்?” என்ற கேள்வியும் உதிக்காமல் இல்லை.
பக்தி பழமாய் இருந்த பள்ளிக்காலத்தில் உறவினர்களோடு சேர்ந்து திருப்பரங்குன்ற மலையை கிரிவலம் சுற்றிய அன்றுதான் நான் முதலாவதாக மலையை மிக அருகில் கண்டது. என் ஆசையை அன்றுதான் ஆனந்தமாய் நிறைவேற்றினேன். மலையை தொட்டு தடவி- கட்டி அணைத்துக்கொண்டேன். மலைக்கு பின்னாடியும் நம்மைப்போன்ற மக்கள்தான் இருக்கின்றார்கள் என்ற உண்மையை கண்டுபிடித்ததும் அன்றுதான்.

விட்டிடுமா அடுத்த ஆசை- “மலைகளின்மேல் ஏறிப்பார்க்க வேண்டும். மலைகளின் உச்சியில் அப்படி என்னதான் இருக்கும்? உண்மையில் ஏதோ பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றுதான் இருக்க வேண்டும். அதுதான் இந்த மலைகள் மட்டும் இவ்வளவு உயரமாக இருக்கின்றன”. என்றும் நினைத்ததுண்டு.

பள்ளிப்படிப்பின் இறுதி ஆண்டில் கூட வீட்டிற்கு தெரியாமல் அழகர் கோவில் மலைக்கு நண்பர்களோடு சென்றதுண்டு. எப்படியாவது மலையின் உச்சியில் ஏறி என்ன இருக்கின்றது- பார்த்தே தீர வேண்டும் என ஆவலாக ஏறும் போதே நண்பர்களின் பயமுறுத்தல்களால் பாதியிலேயே திரும்பியதுண்டு.

பள்ளி முடித்து கல்லூரி படிப்பு- பணி என கிட்டதட்ட எட்டு ஆண்டுகள் என்னையும் மலைகளையும் பிரித்து வைத்துவிட்டது நான் சார்ந்த இந்த சமூகம். ஒரு நாள் நண்பன் ஒருவனை போட்டு பேசி கழுத்தறுத்துக் கொண்டுடிருந்த போதுதான் வெறுத்துப்போய் அவன் சொன்னான். “ டேய் உன்ன மாதிரி ஒரு குரூப் மலை மலையா போய்க்கிட்டு இருக்காம். அதுல போய் சேந்துக்கடா.. என்ன ஆள விடுடா சாமி”.

அவனுடைய நண்பர் ஒருவர் மூலம்தான் எனது முதல் பசுமைநடையை அழகர்கோவில் மலை கிடாரிப்பட்டியில் துவங்கினேன். உண்மையில் மலைகளின் மேல் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று புதையல்கள் நிறைய நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. சரி- இப்படி மலை மலையாகச் சுற்ற இவர்கள் யார்? எங்கிருந்து கிளம்பினார்கள்? என்ற கேள்வி என்னில் எழாமல் இருக்குமா என்ன…

பசுமைநடை பற்றி:-
தமிழகத்தின் வட பகுதியில் இருந்து மதுரையின் உள்ளே வருகைதரும் யாவரும் கண்டு பிரமிக்கும் ஒன்று “யானை மலை”. இன்றும் இந்த யானை மலை உயிருடன் படுத்திருக்கின்றது என்றால் முக்கிய பங்கு இந்த பசுமை நடை நிறுவனரான எழுத்தாளர். திரு.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு உண்டு. மூன்று கிலோமீட்டருக்கு கால் நீட்டி படுத்திருக்கும் இந்த மலையால்தான் மதுரை இன்னும் முன்னேறாமல் கிடக்கின்றது அதற்க்காக படுத்திருக்கும் இந்த மலையை அரை கிலோ மீட்டரில் நிற்கவைத்து மதுரையையும் தூக்கி நிறுத்த ஏனோ தீடீரென்று கொள்ளப்பேருக்கு அக்கறை பிறந்தது.

“யாரப்பா அதுனு கொஞ்சம் எட்டிப்பாத்தாதான் தெரியுது- அந்த கொள்ளப்பேருள கொள்ளப்பேரு கிரானைட் கோள்ளக்காரப்பயலுவ.” 

வெட்டினது போக மீதமிருக்கின்ற இரண்டரை கிலோமீட்டர் மலையையும் கொள்ளையிட திட்டம் தீட்டியவர்களை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டு போராட துவங்கினர். மக்களின் போரட்டங்களை வழக்கம் போல மீடியாக்கள் இருட்டடிப்பு செய்ய துவங்கின. அந்த சமயம் அம்மக்களின் போராட்டங்களையும்- அம்மலையின் வரலாற்று சிறப்பினையும் பற்றி முதன்முதலாக தன் எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தார் முத்துக்கிருஷ்ணன். அவருக்கும் அவருடைய எழுத்துகளை வெளியிட்ட உயிர்மை இதழுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றார்கள் எம் மதுரை மக்கள்

 
உயிர்மை இதழ் மூலம் செய்தி அறிந்து-
தன்னார்வமாக அம்மலையை காக்க இருபது பேராக இணைந்த இந்த பசுமைநடை. இன்று இருநூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வளர்களோடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது வரை மதுரையில் இருக்கும் பதினைந்து மலைகளுக்கும் மேல் பயணமாகிவிட்டது. மலைகளின் மேல் இருக்கும் அந்த பாதுகாக்கப்பட வேண்டிய புதையல்கள்- சமண தீர்த்தங்கரர்களின் சிற்ப்பங்கள் மற்றும் கல்வெட்டுகளாக உள்ள பிராமி தமிழ் எழுத்துக்கள் போன்றவையே. இதன் தொன்மை மற்றும் வரலாற்று தகவல்களை நம்மை கண் விரிக்க வைத்து அந்த பாதையில் மனதுக்குள் செலுத்துபவர் தொல்லியல் அறிஞர் ஐயா.திரு.சாந்தலிங்கம் அவர்கள். ஒவ்வொரு மலைக்குள்ளும் வரலாறு ஒளிந்துகிடக்கின்றது. அதனை கண்டும்- காத்தும்- மக்களுக்கு சேர்ப்பிக்கவும் எனக்கான பங்கினை ஏற்று இந்த இயக்கத்தில் நானும் என்னை இணைத்துக்கொண்டேன்.

மாதத்தில் ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த பசுமைநடை நடக்கும். காலை ஆறு மணிக்கெல்லாம் முன்பே திட்டமிட்ட மலையின் அடிவாரத்தில் தன்னார்வளர்கள் ஒன்று கூடி தோழமையோடு தோல் கொடுத்து மலை ஏறுவோம். பதினொறு மணிக்கெல்லாம் வரலாற்று தகவல்களை சேகரித்துவிட்டு கீழ் இறங்கிய கையோடு அங்கேயே காலை சிற்றுண்டி உண்டுவிட்டு அடுத்த நடைக்கான எதிர்பார்ப்போடு திரும்புவோம்.

எவ்வளவு பெரிய நிலநடுக்கம் வந்தாலும் மதுரை மட்டும் சிறுதும் அசைந்ததில்லை. அதற்கு ஏதேதோ காரணம் சொல்லப்படலாம். ஆனால் மதுரையை சுற்றி நின்று கொண்டு அதிர்வுகளை அடக்கி ஆளும் எங்கள் மலைகளே எங்கள் அரண். எங்கள் மலைகள் தான் வரலாற்றினையும் சுமந்து கொண்டு வருங்கால சந்ததிகளையும் காத்துக்கொண்டிருக்கின்றன.


படைப்பு
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

7 comments:

  1. மே.இளஞ்செழியன்5 Jan 2013, 06:20:00

    அருமையான மலரும் நினைவுகள்...
    பகிர்ந்தமைக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  2. மலைகள் மீதான உங்கள் ஆர்வம் நன்று.
    பசுமைநடை குறித்த தங்கள் பதிவு அருமை.
    தொடர்ந்து பதிவிடுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கின்றது நண்பரே... மிக்க நன்றி..

      வெகு நாட்களாக பசுமைநடை பற்றி எழுத நேரமில்லாமல் தவித்தேன். இதும் கூட காலதாமதமான பதிவுதான். இனி தொடர்ந்து பசுமைநடை பற்றி நிச்சயமாக எழுதுகிறேன் தோழர். மிக்க நன்றி..

      Delete
  3. I WANT TO COME WITH U?WILL U HELP ME?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையினை எதிர்நோக்கியிருக்கின்றோம் நண்பரே.. 9789725202 - இது தோழர்.உதயக்குமார் அவர்களது அலைபேசி எண். இவருடன் அலைபேசி உங்களது பெயரினையும் உங்களின் அலைபேசி எண்ணையும் பதிவு செய்திடுங்கள். அடுத்த பசுமைநடை பயணத்தில் இருந்து தகவல் உங்களுக்கு குறுங்செய்தியாக அனுப்பப்படும். நன்றி..

      Delete