கீழக்குயில்குடி
சமணர்மலையில் பசுமைநடை இரண்டாம் முறையாக நடந்தது. எனக்காகவே இரண்டாம் முறை இம் மலையை
தேர்ந்தெடுத்தது போல இருந்தது. முதல் முறை தவறவிட்டதையும் சேர்த்து இந்த முறை கூடுதல்
தகவல்களோடு கூடுதல் மலை அழகையும் ரசிக்கப்பெற்றேன். திருமங்கலத்தில் இருந்து மிக அருகாமையில்
இருந்ததால் கூடுதல் எதிர்பார்ப்போடுதான் நண்பர்களோடு கிளம்பினேன். அழகான கிராமமும், பிரம்மிப்பான மலையும், தாமரை பூத்துச் சிரிக்கும் நன்னீர் குளமுமாக கீழக்குயில்குடி
என் எதிர்பார்ப்பினையும் மீறி அற்ப்புதமாகவே இருந்தது.
ரம்மியமான கிராமத்தின்
அமைதியை ஆங்காங்கே குயில்களும் சிறு பறவைகளும் சலனப்படுத்திக் கொண்டிருந்த அதிகாலைப்
பொழுதினில் மலை அடிவாரத்தில் பசுமைநடை நண்பர்கள் கூடினோம்.
வயிற்றுக்கு இரை தேட மரக்கிளைகளில்
இருந்து பறவைகள் கிளம்பிக்கொண்டிருந்தன. வரலாற்று இரை தேடி மலை ஏற நாங்களும் ஆயத்தமானோம்.
மலை அடிவாரத்தில் இருந்த அய்யனார் கோவில் தன் தொன்மையை இழந்து கும்பாபிஷேகம் கண்டு- ஆரிய சின்னங்கள் மினு மினுத்திருந்தன. தோழர்.இளஞ்செழியன் அவர்கள் அங்கே சுட்டிக்காட்டிய பூணுல் அடையாளங்களும் என் அக்காவின் குல தெய்வ ஆலயத்தில் நடந்த கும்பாபிஷேகமும் தான்
நான் “கும்பாபிஷேகம் எதற்காக?” என்ற இடுகையை இட காரணமாய் இருந்தது.
www.thamizhmani2012.blogspot.in/2012/11/blog-post.html
கீழக்குயில்குடி
சமணர் மலை எங்களை சுமக்க தயாரானது. நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக கை கொடுத்து மேலேரினோம்.
சமண தீர்த்தங்கரர்களான பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் போன்றோர்களின் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்கள் வரலாற்று சான்றாக நின்றிருந்தன.
பசுமைநடை நிறுவனர்.
எழுத்தாளர்.அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் மலையை பற்றி அறிமுக உரை கொடுத்தார். அவரைத்தொடர்ந்து
தொல்லியல் அறிஞர் அய்யா.சாந்தலிங்கம் அவர்கள் சமணமலையை பற்றி விவரிக்க தொடங்கினார்.
சமண தீர்த்தங்கரர்களின்
திருமேனி அமையப்பட்டுள்ள இந்த இடத்தின் பெயர் “பேச்சிப்பள்ளம்” என துவங்கினார். இங்கு
தான் சமணர்கள் தங்களின் நான்கு பெரும் தானங்களில் (உணவு தானம், உறைவிட தானம், மருத்துவ
தானம், கல்வி தானம்) ஒன்றான கல்விதானத்தினை செயல்படுத்தியுள்ளனர். அதற்க்கான
கல்வெட்டுகளாக உள்ள வரலாற்று தகவல்கள், தமிழ் பிராமி மற்றும் வட்ட எழுத்துகளில் விவரிக்கின்றன. மேலும்
இதே போன்று பல சமணமலைகளில் சமண பள்ளிகளை சமணர்கள் நிறுவி தமிழ்ச் சேவை புரிந்துள்ளனர்.
குறிப்பாக கழுகுமலையில் இருக்கும் சமண குரவர்களும் குரத்திகளும் (ஆசிரியர்களும் ஆசிரியைகளும்)
இங்குள்ள மாணாக்கர்களுக்கு பாடம் எடுத்துள்ளனர். அதே போன்று இங்குள்ளவர்களும் அங்கு
சென்று கல்வி சேவை புரிந்துள்ளனர். அந்த காலத்தில் இச்சமணப்பள்ளிகள் பந்தல் அமைத்து
வடிவமைத்துள்ளனர். அந்த பந்தல்கால் நடுவதற்கு ஏற்ப மலைகளில் துளைகள் இடப்பட்டுள்ளன. “சமணர்கள்
பயன்படுத்திய சமணப்பள்ளி என்ற சொல்லினையே நாம் இன்றும் பள்ளிக்கூடம் என்று பயன்படுத்துகின்றோம்”
என்று அய்யா.சாந்தலிங்கம் அவர்கள் சொல்லும் போது உண்மையில் மெய் சிலிர்த்துதான் போனது.
இன்னும் மேலே ஏறினோம்
அங்கு சிதைந்த நிலையில் பேச்சிப்பள்ளி (பேச்சியம்மன் கோவில் என்று சொல்லப்படுகின்றது)
சிதைந்த நிலையில் உள்ளது. மலையின் மேல் ஆங்காங்கே பாறைகள் உருண்டு திரண்டு கிடந்தது.
காட்டுப்பாதையில் நடந்து செல்வது சொல்ல இயலாத இன்பம்.
மேலே சமண தீர்த்தங்கரர்களுக்கு
தேனுரை சேர்ந்த ஒருவர் ஏற்ப்படுத்திக்கொடுத்த சமணப்படுக்கை தனக்கான வரலாற்றை பாறைகளில் பதித்தபடி
சாய்ந்திருந்தது. அதன் தொன்மையை அய்யா.சாந்தலிங்கம் விளக்கமளித்தார், தகவல்களை காதிலும் அலைபேசியிலும் சேமித்துவிட்டு வந்த திசையில்
திரும்பி மலை இறங்க ஆயத்தமானோம்.
அவ்வளவுதான!!! என
மனம் ஏங்க துவங்கிய தருணத்தில் நண்பர் ஒருவர் “அப்படியே செட்டிப்புடவையும் கண்டுவிடலாமே”
என திரி கொளுத்திப்போட்டர். விடுவோமா என்ன!!! அங்கும் பயணமானோம் நடந்தே…
கீழக்குயில்குடி
மலையின் ஓரத்தில் நடந்து சென்றால் போதும். மலையின் பின்புறத்தில் நாட்பது படிகளாக தொல்லியல்துறை உயரத்தினை கணித்துள்ளது. அதன் மேலேறிய அனைவரும் வியந்து கண்டது - மலையில் சற்று உயரத்தில் பெரிதாக
இருந்த மகாவீரரினது திருமேனிதான். இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அதன் அழகு
சிதையாமல் அப்படியே இருந்தது. அங்கிருந்த குகையில் சமணர்கள் வாழ்ந்த அடையாளமாக தமிழ்
பிராமி எழுத்தாலான வரலாற்று தகவல்களும் சமண திருமேனிகளாலும் நிறைந்திருந்ததன.
வழக்கமான காலை
சிற்றுண்டி வழக்கத்தினை விட அதிகமாகவே சுவைத்தது. கண்களுக்கும் செவிகளுக்கும் கிடைத்த
விருந்து போலவே வாயிற்க்கும் வயிற்றிற்கும் கிடைத்தது..
கொசுரு:-
ஒழுக்கத்தினையும், அடுத்த உயிரை துன்புறுத்தாத மனதினையும் மட்டுமல்ல இன்னும் என்ன என்னவோ இந்த சமணர்களிடம்
இருந்து நாம் கற்க வேண்டியுள்ளது. சமணர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள மயிலை.சீனிவெங்கடசாமி
அவர்கள் ஆராய்ந்து எழுதியள்ள “சமணமும் தமிழும்” என்ற நூலினை படியுங்கள்.
ஆரியம் வீழ்த்திய சமணத்தினை மீட்டெடுப்போம்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
ஆரியம் வீழ்த்திய சமணத்தினை மீட்டெடுப்போம்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
No comments:
Post a Comment