Wednesday 17 October 2012

காணாமல் போன மின்சாரம்...



என் சிறுவயதில் எப்பொழுதாவது இரவு நேரங்களில் எங்கள் தெருவில் மின் தடை ஏற்படும். மின் தடையானாலும் சரி மின் தடை நீங்கி வெளிச்சம் வந்தாலும் சரி ஒரு பேரிறைசலால் அந்த நொடியில் தெருவே அலரும். அந்த இனிமையான பேரிறைச்சலையோ, இருளில் விளையாடும் ஐஸ் விளையாட்டினையோ, இப்போதைய வாண்டு பட்டாளங்களிடம் காண்பது அரிதாகிப்போனது. நம் குழந்தைகளின் சுதந்திரம் பரிபோனது ஒரு காரணமாக இருந்தாலும் எப்பொழுதாவது மின் தடை ஆனால் தானே!! அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எப்பொழுதுமே இதே நிலையாய் இருந்தால் எதிர்ப்புதானே வரும், வாண்டுகளுக்குமே.




உண்மையில் என்னதான் நடக்கிறது? உணவு விடுதி துவங்க பணம் கொடுத்து அனுப்பினால் கொடுத்த காசை தின்றே தீர்த்துவிட்ட கதையாக… மின் உற்பத்திக்கு ஒதுக்கிய நிதியை தானே ஒதுக்கிக்கொண்ட முன்னாள் ஆட்சியாளர்கள் ஒரு பக்கம், ஒரு ஆண்டு முடிந்தாலும் இன்று வரை மின்சார உற்பத்திக்கு வழி வகுக்காமல்… முன்னாள் ஆட்சியாளர்கள் மீது பலி போட்டுக்கொண்டே தன்னை காப்பாற்றிக்கொள்ளும் இன்னாள் ஆட்சியாளர்கள் ஒரு பக்கம். என இரு பக்கமும் மாறி மாறி வாதிட்டுக்கொண்டே இருக்கின்றார்களே தவிர மின்சாரத்திற்கான வழிகளை இது வரை சொன்னதாக இல்லை. அவ்வப்போது மின்சாரத்துறை அமைச்சர் ஜீலையில் சீராகிவிடும் என்றும் பின் இரு நாட்கள் கழித்து பிப்ரவரியில் படிப்படியாக குறையும் (மின் தடையா? மின்சாரமா? எனத்தெரியவில்லை.) என்றும் திடீர் அறிக்கை தருகின்றார். உண்மையில் இவ்விரண்டில் எதை நம்புவது?


அரசு உண்மையில் மக்களுக்கான அரசுதானா? ஆம் என்றால் அரசுக்கு மக்கள் மேல் ஏன் இந்த பாகுபாடு? சென்னைக்கு இரண்டு மணி நேர மின் தடையும் மற்ற மாவட்டங்களுக்கு கணக்கு வழக்கில்லாமலும் இருப்பின். இதெப்படி சீரான அரசியல் நடவடிக்கையாக இருக்க முடியும்? மற்ற மாவட்ட மக்களின் மத்தியில் சென்னை மீதான கோபத்தினை ஏற்படுத்தி தமிழகத்தில் இருந்து சென்னையை துண்டாட ஏதும் திட்டமா? சென்னை தொழில்துறை நகரம் என்ற விளக்கத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. கேயம்புத்தூர், திருப்பூர், சிவகாசி, வேலூர் என எத்தனையோ நகரங்களிலும் மாநகரங்களிலும் தொழில்துறை இல்லையா? அவை தொழில்துறை நகரங்கள் இல்லையா? இருபத்து நான்கு மணி நேரம் மின்சாரம் பெறும் கோவை ஈஷா யோகா மையத்தில் அப்படி என்னதான் தொழில் நடக்கிறது? அப்படி அந்த தொழில் செய்தால்தான் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா?


இரவில் பாடாய்ப்படுத்தும் மின்தடையால், இரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற உடல் பிரச்சனை உள்ளவர்கள் என்ன சிரமப்படுகின்றார்கள் என்று அரசு நினைப்பதில்லை. பிறகு எப்படி இது மக்களுக்கான அரசாக இருக்கும்?

இதெல்லாம் புரியாமல், அரசின் மீது கோபத்தினை காட்ட துப்பில்லாத ஒரு கூட்டம் இந்த மின் தடைக்கு கூடங்குள மக்களை பரிகாசம் செய்து கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் போரடவில்லை என்றாலும், இன்று அங்கு ஒரு பொட்டு மின்சாரமும் தயாரித்திருக்க முடியாது என்பதே உண்மை.
எண்பது மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நூறு மெகாவாட் மின்சாரத்தினை விரயம் செய்யும் அளவு கை தேர்ந்த தொழில் நுட்பம் வாய்ந்த உலைகள் அல்லவா இவைகள். அணு உலை ஆதரவாளர்களின் பார்வை ஏனோ கல்பாக்கம் அணு உலை உற்பத்தியின் மேல் படுவதில்லை என்பது தான் புரியாத புதிர். அணு உலை பற்றியும் அதன் மின்சார உற்ப்பத்தி லட்சணம் பற்றியும் நாம் கல்பாக்கம் அணு உலையில் இருந்தே கற்றுக்கொள்ளலாம். அதே போல அணு உலை பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்ளவும் நாம் வேறெங்கும் செல்ல வேண்டாம், கல்பாக்கம் சென்றாலே போதும். இப்படி எத்தனையோ படிப்பினைகளை பெற்றும் நமக்கு அறிவு வரவில்லை என்றால் என்ன தான் செய்ய? “எவன் எக்கேடுகெட்டு போனா நமக்கென்ன! நமக்கு தேவை அரை குறை ஆடைகளுடனான ஆட்டத்தினை தொலைக்காட்சியில் தடையில்லாமல் காண வேண்டும்.” அவ்வளவேதான்.
ஆசியக்கண்டத்திலேயே காற்றாலை மின் உற்ப்பத்தியில் முதல் இடம் தமிழகம், அதுவும் தென் தமிழகத்தில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் உள்ள காவல் கிணறு என்ற பகுதிதான் ஆசியாவின் முதல் காற்றாலை மின் உற்பத்தி மையம் என எத்தனை அணு உலையாளர்களுக்கு தெரியும்? அப்படி இருந்தும் இங்கு ஏன் இந்த தட்டுப்பாடு என என்றாவது உணர்ந்ததுண்டா? தனியார் மயம் இருக்கும் காற்றாலைகளை ஏன் அரசு எடுத்து நடத்த தயங்குகிறது? என்ற கேள்விகளை ஏன் இவர்கள் கேட்பதில்லை?

“தனியாரிடம் இருந்தாவது விலைக்கு வாங்கலாமே!” என்றால், அது அதிக செலவு பிடிக்கும், அரசுக்கு நட்டம் என கணக்கு வாசிப்பார்கள். கேரளா, கர்நாடகா அரசுகளுக்கு இருக்கும் வாங்கும் சக்தி கூடவா மின் வசதிக்கு செலவு செய்ய தமிழக அரசுக்கு இல்லாமல் போனது? தமிழக பகுதியில் உற்ப்பத்தியாகும் காற்றாலை மின்சாரம் தமிழ்நாட்டினைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில்தான் அதிகமாக நுகரப்படுகிறது. இதுதான் உச்சகட்ட நகைச்சுவை.

இப்பொழுது மட்டும் அரசு ஏன் ஐம்பது விழுக்காடு மானியத்தில் சூரிய மின்சார உற்பத்தி தகடுகளை வீடுகளுக்கு வழங்க ஏற்ப்பாடு வேண்டும்? அது தான் அணு உலை இருக்கின்றதே? சூரிய ஒளி மின்சாரத்தினை அணு உலை மின்சாரத்தோடு ஒப்பிட்டு மட்டமாக பேசியவர்கள் கூட இப்போது அதன் விலை விசாரிக்க துவங்கிவிட்டனர்.

“மின் தடையால் திருப்பூரில் எத்தனையோ தமிழக சிறு தொழில் முனைவோர் தங்களின் இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளில் எடைக்கு போட்டுவிட்டு தங்களின் கிராமங்களை நோக்கி செல்கின்றனர்.” என்ற நண்பர் ஒருவரின் தகவல் இனம் புரியாத காயத்தின் சோகத்தினை மனதில் ஏற்ப்படுத்திவிட்டது. உண்மையில் அதில் எத்தனை பயணங்கள் கிராமம் நோக்கி இல்லாமல் மரணம் நோக்கி பயணித்ததோ தெரியவில்லை.


அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு, சாமியார் மடங்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க முடியும் போது ஏன் சொந்த நாட்டு சிறு தொழில்புரிவோருக்கும், விவசாயிகளுக்கும், சராசரி மக்களுக்கும் தர முடியாது? தொழில்களை எல்லாம் முடக்கிவிட்டு, விவசாயத்தினை எல்லாம் அழித்துவிட்டு, அப்துல்கலாம் பின்னால் ஏவுகனை விட கிளம்பிட வேண்டியது தான். பசி தீர்க்க அணு கழிவுகள் இருக்கும் வரை கவலை எதற்கு!


மின்சாரத்தினை தேடி
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. பதிவை தொடங்கிய விதமும் பிரச்சனைகளை அலசிய பார்வையும் மிக அருமை, தொடங்கியது போலவே முடிவும் இயல்பாக அணித்தரமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. பசி தீர்க்க அணு கழிவுகள் இருக்கும் வரை கவலை எதற்கு!

    உங்களின் ஆதங்கம் பதிவில் தெரிகிறது தமிழ்மணி. ஆனால் படிக்க வேண்டியவர்கள் ஏ.சியில் அல்லவா இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழரே..

    உண்மைதான். ஏ.சி. அறைகளுக்குள்ளும் இது போன்ற பதிவுகளை கொண்டு செல்ல முயற்சி செய்கிறேன். நன்றி தோழரே..

    ReplyDelete