Showing posts with label பசுமைநடை. Show all posts
Showing posts with label பசுமைநடை. Show all posts

Wednesday, 6 April 2016

சோலைமலை அடிவாரம்

          வீடுகளுக்குள் முடங்கி வாழ்வதற்கும் கூட சமுதாயத்திடம் இருந்து பல்வேறு பாடங்களை கற்க வேண்டியுள்ளது. ஆனால் சமுதாயத்திடம் இருந்து பாடம் கற்கத் துவங்கிவிட்டால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது முட்டாள்தனமாக அறியத் துவங்கும். விடுமுறைகளில் தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றியை அளுத்திக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருந்த என்னை வெளியில் இழுத்து வந்து போட்டு பயணங்களையும் புத்தகங்களையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தது பசுமைநடை.

Saturday, 24 October 2015

சிதைவின் வாசலில் வரலாறு - முத்துப்பட்டி

மலைகள் எனது அகராதியில் பிரம்மிப்பு என பொருள்படுகின்றன. பிறந்தது முதல் இவற்றினூடே பயணித்துக் கொண்டிருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். பேருந்தினில் சன்னல் வழியாக என்னுடனே பயணிக்கும் நிலவையும் மேகங்களையும் கவனிக்கத் துவங்கியது போலவே சில தொலைவு உடன் நகரும் இம் மலைகளையும் கண்டு ரசிக்கத் துவங்கினேன். உயர்ந்த மலைகளில் யாரிருப்பர்? என்ன இருக்கும்? மலைகளின் பின்புறம் எப்படி இருக்கும்? மலைகளின் மீது நடப்பது எப்படியான உணர்வைத் தரும்!? என ஆயிரம் கேள்விகள் எதிர்பார்ப்புகள் பால்யம் முதல் துரத்திக் கொண்டு வந்தன. துரத்திவந்த கேள்விகள் என்னை விட்டுச் சென்ற இடம் பசுமைநடை. பால்யத்தின் கேள்விகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பசுமைநடை மூலம் விடை கிடைத்தது. மலைகளுக்கு பின் உள்ள அரசியல் வியபாரம் வரைக்கும் கூட தேடாத கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

Wednesday, 9 September 2015

மண்ணின் கீழ் அடியில் ஒரு கீழடி

           உலகின் பழைய நகரங்களை எல்லாம் பாருங்கள் அவை ஏதேனுமொரு ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் அல்லது குன்றுகள் சூழ அமைந்திருக்கும். உலகின் பழைய நகரங்களில் ஒன்றான மதுரையும் அப்படித்தான். பரங்குன்றம், பசுமலை, சமணமலை, நாகமலை, அழகர்மலை, ஆனைமலை என குன்றுகள் சூழ வைகை ஆற்றங்கரையில் உருவான கோட்டை நகரந்தான் மதுரை.

காலப்போக்கில் பழைய நகரங்கள் அழிந்து போகப் புதிய நகரங்கள் உருவாகின. கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் தம்மை இன்றளவும் நிலை நிறுத்திக்கொண்ட நகரங்கள் மிகச் சிலவே. தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களும் குறைந்தது 25 நூற்றாண்டு கால வரலாறு உடையவனவாக இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டிலும் மதுரை தனிச் சிறப்புகள் உடைய நகரமாகும்


Wednesday, 8 July 2015

கிடாரிப்பட்டி - அன்றும் இன்றும்

            வாழ்வின் சிறந்த சம்பாத்தியம் “மனிதர்கள்”. எண்ணங்கள் ஒத்துப் போகும் மனிதர்களை சம்பாதிப்பது அதிலும் அதி சிறந்தது. பள்ளியிலோ கல்லூரியிலோ எனது எண்ணங்களை ஒத்த மனிதர்கள் அமைந்ததில்லை என்பதை இங்கு நான் பதிவு செய்கிறேன். அந்த மனிதர்களூடான வாழ்வு முழுக்க கேலியும் கிண்டலும்  சில நேரங்களில் நல்ல நட்பாகவும் இருந்து கடந்துவிட்டது. இன்றும் பள்ளி கல்லூரி இறுதி நாட்களில் அம் மனிதர்களிடம் பெற்ற ஒவ்வொரு எழுத்துக்களும் சில நேரம் ரசிக்கவும் பல நேரம் அழுகவும் வைத்துவிடுகிறது. இருப்பினும் எண்ணங்களின் ஓட்டம் ஒத்துப் போனதில்லை என்பதே உண்மை.

Friday, 1 May 2015

தாண்டிக்குடி – வாழ்வியலும் வரலாறும்

          25-04-2015 அன்றைய தினம் சில்லென காற்றோடு தன்னை துவங்கிக் கொண்டது. விடியும் முன் நல்ல மழை. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் விட்டபாடில்லை. பசுமைநடைக்கு கிளம்ப வேறு நேரம் கடந்து கொண்டே இருந்தது. நனைதல் மிகப் பிடித்தமானது, எனவே அதனை வழிமொழிந்து நண்பர்களோடு பயணம் தொடர்ந்தது. இன்னும் விடியவில்லை. அனைத்து புறத்தில் இருந்து சங்கமிக்கும் வாகனங்களும் குளித்து தலை துவட்டாமலே சுற்றிக் கொண்டிருந்தன. எங்கும் மழை எதிலும் மழை. இருள் பலரின் துயரங்களை இறக்கி வைக்கும் சந்தர்ப்பம். அழுதாலும் தெரியாது என்பதாலேயே இருளில் கொட்டித் தீர்ப்பவர்களை கண்டிருக்கிறேன். இருட்டில் பொழியும் மழைக்கும் என்ன சோகமோ தெரியவில்லை, எங்களிடம் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது.

Sunday, 5 April 2015

வசந்த காலத்தினில்.. வசந்த மண்டபந்தனில்...

          05-04-2015 அன்று பசுமைநடை 47 - க்காக அதிகாலையில் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தேன். பங்குனி, வெயில் பகல் பொழுதுகளில் பல் இளித்தாலும், கதிரவன் கதிர்கள் தீண்டிடாத இந்த பொழுதினில் இதமாகவே இருந்தது. எனது இரு சக்கர வாகனம் தனது அன்றைய பயணத்தினை துவங்கியது. வாகனத்தின் முகப்பு விளக்கினை எரியவிட்டபடிதான் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த பகலுக்கு முந்தைய இரவினில்தான் பூமியின் நிழலில் நிலவு இளைப்பாறுதல் பெற்றது, அதனால் என்னவோ அதன் பிரகாசம் சற்று புத்துணர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.


          மசூதிகளில் தொழுகை துவங்கியது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. முந்தாநாள் உயிர் விட்ட மேய்ப்பர் ஒருவர் இன்று உயிர்த்தெழுவதை காண மக்கள் பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்தனர்.

Tuesday, 3 February 2015

சிவரக்கோட்டை எனும் பல்லுயிர்க்காடு

          சிவரக்கோட்டை ஊரில் 45-வது பசுமைநடை என தகவல் கிடைத்த நாளில் இருந்து மனதில் இனம் புரியா மகிழ்ச்சி. எனது ஊரான திருமங்கலம்அருகில் ஏழு கல் தொலைவிற்குள் அமைந்துள்ள சிவரக்கோட்டைக்கு பசுமைநடை நண்பர்கள் வர இருப்பது ஒரு காரணம். எனது ஊரின் அருகில் அமைந்திருக்கும் வரலாற்று எச்சமானது, எனது மண்ணை பற்றிய வரலாற்று தேடலுக்கு வழி அமைக்கும் என்கிற ஆவல் மற்றுமொரு காரணம்.

ஏற்கனவே சில தாத்தா பாட்டிகளிடம் எனது ஊர் பற்றிய வரலாறு குறித்து பேசுகையில் “பாண்டிய மன்னர்கள் மதுரையில் இருந்து வந்து வன விலங்குகளை வேட்டையாடிச் செல்லும் அடர்ந்த வனமாக இப் பகுதி இருந்தது என்று கூறியுள்ளனர்.

Wednesday, 14 January 2015

தை பிறக்கட்டும்; வெள்ளப்பாறைபட்டிக்கு வழி பிறக்கட்டும்!!!

          பசுமைநடையும் வெள்ளப்பாறைபட்டி சிற்றூர் மக்களும் இணைந்து 11-01-2015 அன்று பொங்கல் விழா கொண்டாட திட்டமிட்டோம்.


          திட்டமிட்ட ஒரு வார காலமாக பசுமைநடை நண்பர்கள் பலர், வெள்ளப்பாறைபட்டிக்கு வந்து முன்னேற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டனர். எனக்கு 10-01-2015 அன்று முதல்தான் அலுவல் விடுமுறை கிடைத்தது. அன்று காலை வெள்ளப்பாறைபட்டிக்கு முன்னேற்பாட்டு பணிகளில் கலந்து கொள்ள கிளம்பினேன். மதுரையின் தெற்கு நுழைவாயிலான திருநகர் திருப்பரங்குன்றத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டருக்குள்ளாகவே அமைந்துள்ளது வெள்ளப்பாறைபட்டி சிற்றூர். எட்டு கிலோ மீட்டருக்குள் மனிதர்களின் வாழ்க்கை முறை எவ்வளவோ வித்தியாசப்படுகிறது.

Friday, 19 December 2014

வையை தழுவும் மேட்டுப்பட்டி

          இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் இரண்டவது பசுமைநடை இது. 14-12-2014 அன்று மேட்டுப்பட்டி நோக்கியது இப்பசுமைநடை. இந்த முறை வீட்டில் இருந்து எனக்கு பிடித்தமான சோழவந்தான் சாலை வழியே பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் ரசிக்க வைக்கும் விடிகாலைப் பொழுதினில் எனது இருசக்கர குதிரையில். நண்பர்களோடு கதை பேசியபடி பயணம் துவங்கியது. நகரங்களற்ற அந்த சாலை பால்யத்தில் இருந்து எனது மனம் கவர் சாலை. பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற போது மிதிவண்டிகளில் “மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம்!!என பதாகைகளை கட்டிக் கொண்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் இயற்கை சார்ந்த விழிப்புணர்வுக்கான பயணங்கள் இந்தப் பாதையிலேயே நிகழ்ந்துள்ளது.

Tuesday, 25 November 2014

மண் மணக்கும் மாங்குளம்

         
 ஞாயிறு அதிகாலைப்பொழுதுகள் பசுமைநடையால் வாய்க்கின்றன. அலுவல் கிழமைகளை விட பசுமைநடை ஞாயிறுகளே சுறுசுறுப்பாக்குகின்றன. கார்த்திகை, மார்கழி மற்றும் தை என பனி விழும் இம் மும்மாத பசுமைநடையும் கூடுதல் அழகானதாகவே அமைந்துவிடுகிறது. விடியாத வேளையில் அலைபேசி சினுங்க, உடனே போர்வை விலக்கி எழுந்துவிட வேண்டும். சற்றே அசந்தால், இக்காலைப்பொழுது ரசித்திட இயலாது கைமீறிப் போய்விடும்.




           இம்முறை (23-11-2014) பசுமைநடை பயணம் மாங்குளம்-மீனாட்சிபுரம் சிற்றூர் மலைக்கு.  பசுமைநடை பயணம் வீட்டிலிருந்தே துவங்கியது. சற்றே விடிந்து கொண்டிருந்ததை பறவைகளின் கும்மாளம் ஊருக்கே சொல்லிக் கொண்டிருந்தது.

Monday, 17 November 2014

வேளாண் பயணம் – மாங்குளம் சிற்றூர்

          மதுரையில் உள்ள மலைகளுக்கு பயணித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எனச் சொல்லப்படும் தமிழி கல்வெட்டுகளை,   சமண சிற்பங்களை, படுக்கைகளை, பாறை ஓவியங்களை குழுவாக கண்டும் ஆவணப்படுத்தியும் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பசுமைநடையின் அடுத்தகட்ட நகர்வு வேளாண் சிற்றூர் பயணம்.



          23-11-2014 அன்று 42-வது பசுமைநடை நிகழவிருக்கும் மாங்குளம் சிற்றூரில் 16-11-2014 அன்று வேளாண் பயணம்.


          மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு செல்லும் சாலையில் கள்ளந்திரி சிற்றூரில் இருந்து வலதுகைப் பக்கம் திரும்பிதும் 7 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கிறது மாங்குளம் சிற்றூர். வழக்கமான பசுமைநடை நேரத்தில்(காலை 6:00 மணி) மதுரையில் இருந்து நான், அண்ணன் முத்துச்செல்வக்குமார் மற்றும் நண்பர் ஜெயவேல் ஆகிய மூவரும் பயணிக்கத் துவங்கினோம். கள்ளந்திரியில் இருந்து

Monday, 13 October 2014

மழையோடு ஒரு மலை விழா

மீன் கொடி நாட்டிலோர் மீளாய்வு...
பசுமைநடை எனும் பெயரில் ஒரு வரலாற்றுப் புரட்சி...
ஆதித் தமிழன் வாழ்வு தமிழி எழுத்துருவிலும் ஓவியத்திலும்,
கடவுள் மறுத்து ஆரியம் எதிர்த்திட்ட சமண தமிழ்த் தொண்டு
வட்டெழுத்திலும் சிற்பக் கலையுருவிலும்
தாங்குதெங்கள் மதுரை மலைகள்...


கல் திண்ணும் களவாணிகளுக்கு சாபச் சங்காய் ஒலித்த
எங்கள் மலை கீழ் வாழ் மாமக்கள் எம் மாமதுரையின் புதையல்கள்...
அச்சங்கின் எதிரொலியாய் ஒலிக்குதெங்கள் பசுமைநடை...


நாற்பதாவது நிகழ்வு
******************************
பசுமைநடையின் நாற்பதாவது நடை;

Thursday, 29 August 2013

பசுமைநடையின் விருட்சத்திருவிழா


மதுரை மல்லி, மதுரை ஜல்லிக்கட்டு, மதுரை மீன் ஆட்சி (மீனாட்சி), மதுரை தமிழ்ச்சங்கம் இந்த வரிசையில் மதுரையின் மற்றுமொரு அடையாளமாகிவிட்டது பசுமைநடை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரையின் வரலாற்று களஞ்சியமான யானைமலையை கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து காக்க அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டுவந்ததுதான் பசுமைநடையின் முதல் செயல்பாடு. செயல்பாடுகள் மூலம் உதயமாகும் அமைப்புதான் தொடர்ந்து மக்களுக்காக வேலை செய்யும் என்பதற்கு இன்றுள்ள பல்வேறு மக்கள் இயக்கங்கள்தான் உதாரணம். இன்றும் இந்த மலை உயிருடன் இருப்பதற்கு அம்மக்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வரை செய்து கொடுத்துள்ளது பசுமைநடை. பசுமைநடை முயற்சியாளர் எழுத்தாளர் சமூக செயல்பாட்டாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகள் ஏற்படுத்திய தாக்கம் யானைமலைக்கான போரட்டங்களை நாடறிய செய்தது.

Friday, 25 January 2013

பசுமைநடை - மாடக்குளம்

 இந்த முறை பசுமைநடையில் மலை இல்லை கண்மாய்க்குத்தான் செல்லப்போகின்றோம் என்ற தகவல் கிடைத்தது. “என்னப்பா இப்டி பண்ணிட்டாங்க.. அப்போ இந்த முறை மலை ஏற வாய்ப்பில்லையா” என்று புலம்பிக்கொண்டுதான் சென்றேன். பசுமைநடை நண்பர்கள் மதுரை மாற்று (பைபாஸ்) சாலை துவக்கத்தில் எங்களுக்காக காத்திருந்தனர். மாற்று சாலை பாலத்தில் ஏறி இறங்கி இடது கைப்பக்கம் திரும்பி இருசக்கர வாகனங்களில் பயணிக்க துவங்கினோம். கண்மாயை ஆக்கிரமித்து இருந்த குடியிருப்பு பகுதிகளை கடந்து சென்றோம். இடது வலது என மாறி மாறி சென்றதில் சென்ற பாதை மறந்துதான் போனது. ஒரு வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு வந்து நின்றோம்.

Wednesday, 9 January 2013

பசுமைநடை - கீழக்குயில்குடி


கீழக்குயில்குடி சமணர்மலையில் பசுமைநடை இரண்டாம் முறையாக நடந்தது. எனக்காகவே இரண்டாம் முறை இம் மலையை தேர்ந்தெடுத்தது போல இருந்தது. முதல் முறை தவறவிட்டதையும் சேர்த்து இந்த முறை கூடுதல் தகவல்களோடு கூடுதல் மலை அழகையும் ரசிக்கப்பெற்றேன். திருமங்கலத்தில் இருந்து மிக அருகாமையில் இருந்ததால் கூடுதல் எதிர்பார்ப்போடுதான் நண்பர்களோடு கிளம்பினேன். அழகான கிராமமும், பிரம்மிப்பான மலையும், தாமரை பூத்துச் சிரிக்கும் நன்னீர் குளமுமாக கீழக்குயில்குடி என் எதிர்பார்ப்பினையும் மீறி அற்ப்புதமாகவே இருந்தது.
ரம்மியமான கிராமத்தின் அமைதியை ஆங்காங்கே குயில்களும் சிறு பறவைகளும் சலனப்படுத்திக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதினில் மலை அடிவாரத்தில் பசுமைநடை நண்பர்கள் கூடினோம்.

Saturday, 5 January 2013

பசுமைநடை - கிடாரிப்பட்டி

22-04-2012. உண்மையில் என் வாழ்வில் மறக்க முடியாத தினம். முதன் முறையாக பசுமைநடையில் இணைந்து வரலாற்றினை தேடி நடக்க துவங்கிய தினம். முதல் நடை, புதுமுகங்களாக இருக்கப்போகின்றார்கள் என நினைத்த எனக்கு ஏமாற்றமே.. திருமங்கலத்தில் இருந்து நிறைய நண்பர்களின் தோழமை கிடைக்க காரணமாக இருந்தது இந்த தினம். இனம் இனத்தோடுதான் சேரும் என்ற பழமொழிக்கு அன்றுதான் அர்த்தம் விளங்கியது. திருமங்கலத்தில் இருந்து என் இரு சக்கர வாகனத்தினை எடுத்து தனியாக கிளம்பிய எனக்கு மதுரை புதூரில் இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று எதிர் பார்க்கவே இல்லை.

மதுரை புதூரில் இருந்து பசுமைநடை குழுவினரோடு இணைந்து அழகர் கோவிலை நோக்கி எனது வாகனத்தில் பயணமானேன். அழகர் கோவில் முதல் தோரணவாயிலின் முன்புறம் திடீரென அனைத்து வாகனங்களும் நின்றது. எதற்காக என சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே

Friday, 4 January 2013

பசுமைநடை – அறிமுகம்


பிரமிப்பு என்றால் என் அகராதியில் மலைகள்தான். சிறுவயது முதலே மலைகள் மீது எனக்கு அவ்வளவு காதல். என் ஊர் திருமங்கலம் என்றாலும். பிறந்தது மதுரைதான். தாய்வழி உறவுகள் அனைவரும் மதுரையில்தான் இருக்கின்றார்கள். உறவினர் வீடுகளுக்கு மதுரை நோக்கி பயணப்படும் போழுதெல்லாம் பேருந்தின் சன்னல் ஓரத்தில் அமர்ந்து திருப்பரங்குன்ற மலையையும் பசுமலையையும் கண்கொட்டாமல் பார்த்து வியந்ததுண்டு. மலைகள் எத்தனை முறை ரசித்தாலும் சளிப்பதில்லை. ஒவ்வொரு முறை காணும் போதும் ஒவ்வொரு வடிவத்தில் கண் முன் விரியும். தூரத்தில் இருந்து ரசித்த காலங்களில் மலைகளை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்ற ஆசை மனதை கவ்விக்கொண்டது. “மலைக்கு பின்னாடி என்ன இருக்கும்?” என்ற கேள்வியும் உதிக்காமல் இல்லை.