Monday 17 November 2014

வேளாண் பயணம் – மாங்குளம் சிற்றூர்

          மதுரையில் உள்ள மலைகளுக்கு பயணித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எனச் சொல்லப்படும் தமிழி கல்வெட்டுகளை,   சமண சிற்பங்களை, படுக்கைகளை, பாறை ஓவியங்களை குழுவாக கண்டும் ஆவணப்படுத்தியும் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பசுமைநடையின் அடுத்தகட்ட நகர்வு வேளாண் சிற்றூர் பயணம்.



          23-11-2014 அன்று 42-வது பசுமைநடை நிகழவிருக்கும் மாங்குளம் சிற்றூரில் 16-11-2014 அன்று வேளாண் பயணம்.


          மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு செல்லும் சாலையில் கள்ளந்திரி சிற்றூரில் இருந்து வலதுகைப் பக்கம் திரும்பிதும் 7 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கிறது மாங்குளம் சிற்றூர். வழக்கமான பசுமைநடை நேரத்தில்(காலை 6:00 மணி) மதுரையில் இருந்து நான், அண்ணன் முத்துச்செல்வக்குமார் மற்றும் நண்பர் ஜெயவேல் ஆகிய மூவரும் பயணிக்கத் துவங்கினோம். கள்ளந்திரியில் இருந்து
வலதுபக்கம் திரும்பிய கணத்தில் பச்சை வயல்கள் பாசத்தோடு வரவேற்க துவங்குகின்றன. இந்த முறை விதைப்பினை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டிய மழை, முந்தியநாளும் பொழிந்ததற்கான தடயங்கள் தாவர இலைகளின் தெளிர்ச்சியில் தெரிந்தது. அரசு அமைத்த அச் சிற்றூர் சாலை இயற்கையிடம் தோற்றுப் போய் சரளைக் கற்களை பற்களாய் காட்டிக் கிடந்தது. “அய்... ரயில் பூச்சி”யெனச் சொல்லி குச்சியால் அதனை மேய்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் அந்த புனைவுக்கு இணையான கவிதையை நான் இதுவரை ரசித்ததில்லை. ரயில் பூச்சி, தட்டாண், தவளை, சிலந்தி, மண்புலு என இன்னும் என்னென்னவோ பெயர் தெரியாத உயிரிகளையும் அழகழகாய் பெற்றுப் போடும் கற்பப்பை மழைக்கு மட்டுமே உண்டு.

          முல்லைப் பெரியாறு தண்ணீர் வாய்க்காலில் சலசலத்து மடமடவெட பாய்ந்துகொண்டிருந்தது. முல்லைப் பெரியாறு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலினை சிறு பாலம் மூலம் கடந்து ஊருக்குள் நுழைகிறோம். கரும்புக்காடும் நெல் வயலும் வழி நெடுக விழிகளுக்கு தீணி போட்டுக் கொண்டே இருக்கின்றன. தூரத்தில் இருக்கும் கண்மாயில் இருந்து வடியும் நீர் பெரிய வாய்க்கலில் சிறு ஓடையாக மிதக்கிறது. தாவரங்கள் மேல் பச்சையென பொழியும் மழை, கண்மாய்களில் பொதுவுடமை நிறத்தில் பொழிகிறது. கண்மாய் நீர் கடத்தும் வாய்க்காலின் பாலத்தினை கடந்தோம். “பாயரின் ஃபேம், ரீஜெண்ட் எஸ்.ஸி, ஆண்ரகால், நேட்டிவோ” என வேதியல் உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்குமான விளம்பர சுவரொட்டிகள் அந்த பாலத்தில் இருந்து சுவர்களை ஆக்கிரமிக்க துவங்குகின்றன.



          அங்கிருந்தே நமது பணியை துவங்கினோம். நாங்கள் வழிநெடுக சந்தித்து பேசிய விவசாயிகளிடம் மழை பொழிவும் பெரியாறு அணை 142 அடியை எட்டியிருப்பதும் கொடுக்கும் மகிழ்ச்சியை காண முடிந்தது. “அதுக்குள்ள கேரளாக்காரேன் அத எதிர்க்க துவங்கீட்டான். என வருத்தமும் அவர்களிடம் தெரிகிறது.


          ஊரெங்கும் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. ஒரு சில விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் வரிசை நடவு, இயற்கை உரம், கைகளால் இயக்கும் களை எடுக்கும் எந்திரம் என நவீன இயற்கை முறை விவசாயத்தில் களம் இறங்கியிருப்பது மன நிறைவாக இருக்கிறது. யூரியா, பொட்டாஸ், காம்ளக்ஸ் என கலந்துகட்டி எங்கும் பசுமைபுரட்சியின் கைங்கரியம் பித்தேரியபடி கிடக்கிறது. "இதையெல்லாம் தவிர்த்து இயற்கை உரங்கள் இயற்கை முறை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த முடியாதா??" என எங்களது கேள்விக்கு உடனடியாக “அதெல்லாம் முடியாதுங்க சார்.. மண்ணுல ஒன்னுமே இல்ல.. இத போட்டாதான் முடியும்.. ரசாயண உரங்கதான் இப்போ தேவை என படபடக்கின்றனர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஒருவரிடம் இது குறித்து பேசிய போது “அவர்களின் நிலங்களை நிச்சயம் பழைய (நல்ல) நிலைக்கு கொண்டு செல்ல முடியும் எண்ணை வித்துக்கள் 4 வகை விதைகள், சிறு தானியங்கள் 4 வகை விதைகள், தழைச்சத்து விதைகள் என 20 வகை விதைகளை ஒரே முறை பயிரிட்டு அவை வளரும் பருவத்தில் அப்படியே நிலத்திற்கு தொழு உரமாக உழுதுவிடலாம். என்கிறார். பசுமை புரட்சியில் பலியான இந்த நிலங்களை மீட்டெடுப்பது கூட இயல்பான விசயமாக படுகிறது. பசுமை புரட்சியில் பலியான இந்த மக்களின் மன நிலையை மீட்பதில்தான் ஒட்டு மொத்த திறமையையும் செலவிட வேண்டியிருக்கும்.
      

          இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளிடம் பேசிய போது அதிர்ச்சியான தகவல்களை கட்டவிழ்க்கின்றனர். "வேளாண் அதிகாரிகளும் விவசாய அலுவலர்களும், ரசாயண உர மற்றும் பூச்சிக் கொல்லி நிறுவனங்களின் விற்பனை பிரதிநிதிகளாகவே செய்படுகின்றனர். மருத்துவ பிரதிநிதியிடம் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டு வருவோர்க்கெல்லாம் ஒரே மருந்தை எழுதிக் கொடுக்கும் மருத்துவர்கள் போல செயல்படுகின்றனர்" என வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் "அரசு வேளாண் பணியாளர்களில் இருந்து அலுவலர்கள், அதிகாரிகள் வரை யாருமே வேளாண் பணிக்காலங்கலங்களில் எங்களை காண  வருவதில்லை" என்பதும் இயற்கை வேளாண் விவசாயிகளின் குற்றச்சாட்டுகளாக உள்ளன. யூரியா தட்டுப்பாடு குறித்து பெரும்பாலான மக்களின் வருத்தமாக இருந்த போதிலும். “இந்த தட்டுப்பாடு யூரியா பயன்பாட்டினை கொஞ்சமேனும் குறைக்கும்.. நிலமும் பயிரும் உசுரோடு இருக்கும் என நேர்மறையாக பேசுகின்றனர் இயற்கை விவசாயிகள்.




          நெல்தான் இந்தப்பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டுவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் கரும்பு பயிர் செய்யப்படுகிறது. தைப் பொங்கலுக்கான சீனிக் கரும்புகளே இங்கு பயிர் செய்யப்படுகிறது. சர்க்கரை ஆலைகளுக்கான கரும்புகள் பயிரிடப்படுவதில்லை. வெட்டி மரம் எனும் சிற்றூரில் மட்டுமே இரு போக விவசாயம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் ஒரு போக விவசாயம்தான் என கூறியவர்களிடம், மற்ற நேரங்களில் என்ன வேலை செய்வீங்க என கேட்டோம். “சிட்டிக்குள்ள கட்டிட வேலைக்கு போய்டுவோம். இந்த மூனு நாலு மாசம்தான் வயல் வேலை மற்ற சமயங்கள்ல கட்டிட வேலைக்கு போவோம். திருப்பூர் கோயம்புத்தூர்னு பனியன் கம்பேனிக்கு போய்டுவோம். மழை மட்டும் தொடர்ந்து பேயிற மாதிரி தெரிஞ்சா எல்லாப்பயலும் ஊருக்கு ஓடியாந்திடுவோம் விவசயம் பாக்க என்கின்றனர் வெள்ளந்திகளாய். விவசாயிகளை பற்றிய ஆளும் அரசும் ஆண்ட அரசுகளும் எந்த ஒரு கவலையும் அடைந்ததாக தெரியவில்லை. ஓட்டுக் கேட்டு மட்டும் கிரமங்களின் குடிசை வீடுகளுக்குள்ளும் நுழையும் இந்த தலைகள் மற்ற சமயங்களில் திரும்பியும் பார்க்க மறுக்கிறது. வேளாண் பணிகள் தொடர்ந்து நிகழ, மழையற்ற காலங்களில் மாற்றுப் பயிர்களுக்கான அறிவுரைகளை கூறி வழிகாட்டி உதவ வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.



          அரசே மனமுவந்து திட்டங்களை தீட்டினாலும், அது இந்த வேளாண் அதிகாரிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு அல்லல்படுகின்றன. நவப்ரா திட்டத்தின் கீழ் சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் மோட்டர்கள் 40% மானியத்திலும் 40% கடனிலும் மீதம் 20% பயனாளியின் பங்கிலும் வழங்கப்படுகிறது. ஆனால் இது வரை இந்த பகுதியில் இந்த திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை ஒன்று. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இப்படி ஒரு திட்டம் இருப்பதே இங்குள்ள அநேக விவசாயிகளுக்கு தெரியாது.


            11-ஆம் கால்வாய் திட்டத்தில் மீனாட்சிபுரத்திற்கு நீர் கொண்டு செல்ல அமைக்கபட்ட கால்வாயில் ஒன்பது மடைகள் உள்ளன. ஆனால் முதல் நான்கு மடைகளைத் தவிர அதற்கடுத்த 5 முதல் 9 வரையான ஐந்து மடைகள் சீராக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் கிட்டத்தட்ட 350 ஏக்கர் நிலம் நீரின்றி விவசாயம் செய்ய இயலாமல் வறண்டு கிடப்பதாக ஒரு பெரும் ஈட்டி பாய்ச்சுகின்றனர். இது குறித்து அரசுக்கு தெரிவித்தீர்களா, மனு கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு “ஆமாம் என்ற பதிலும் வந்தது. “இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்தும் இன்னும் யாரும் வந்து பார்க்கவில்லை. எங்களின் மனுவின் நிலை என்ன என்றும் தெரியவில்லை என்கின்றனர் மனுவில் கையெழுத்திட்டு முறையாக அரசுக்கு தெரிவித்த அந்த விவசாய மக்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தலாமே என கேட்டவுடன் “அது யாருக்கு தெரியும் சாமி என பதில் வருகிறது. அரசின் திட்டங்கள் மட்டுமல்ல அரசின் சட்டங்களுமே கூட இன்னும் இவர்களிடம் வந்து சேர்ந்தபாடில்லை.



            நகரங்களில் முகம் தெரியாத ஒருவரிடம் சென்று “உங்க வேலை எப்பிடி போகுது??” எனக் கேட்டால் என்ன சொல்வாங்க? “ஆமா நீங்க யாரு, ஏன் இதல்லாம் கேக்குறீங்க என அந்நியப்படுவார்கள். ஆனால் நாங்கள் இங்கு சந்தித்த யாரும் இந்த கேள்வியை கேட்டு எங்களை அந்நியப்படுத்தவில்லை. இதுதான் நம் மண்ணின் பண்பாடு. எவ்வளளவு யூரியாக்களாலும் இந்த மண்ணின் பண்பாட்டினை மட்டும் மாற்ற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. நாங்களாகவே முன்வந்துதான் "பசுமைநடையில் இருந்து வருகிறோம்.." என அறிமுகப்படுத்திக் கொண்டோம். பசித்திருந்த சமயத்தில் இளநீரும், களைத்திருந்த சமயத்தில் நிழலும் கொடுத்த இம்மக்களினால்தான் இன்றும் நமது மண்மணம் மாறாமல் உள்ளது. வயோதிக விவசாயிகள் ரசாயண விவசாயத்தினை விடமாட்டார்கள் என்பது அவர்களது பேச்சில் தெரிகிறது. பரம்பரை விவசாயிகள், "எங்களோடு இந்த விவசாயம் அவ்வளவுதான் எங்க பசங்க படிச்சி நல்ல உத்தியோகத்துக்கு போகனும்"எனச் சொல்கின்றனர். ஆனால் அந்த சிறுவர்களிடம் தனியாக அழைத்து பேசியதில் “படிச்சிட்டு எங்கதான் வேலை பார்த்தாலும் விவசாயத்த விட மாட்டோம்ணே..! எங்களுக்கும் விவசாயம் தெரியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே போல இன்று இயற்கை விவசாயம் செய்பவர்களும் படித்த இளைஞர்களாகவே உள்ளனர் என்பதும் நாளைக்கும் நமக்கு சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் நாம்தான் அவர்களை அரசு அதிகாரிகள் போல ஆட்சியாளர்கள் போல கண்டுகொள்வதே இல்லை.

          நம்மைப் போன்ற நகர வாசிகள் பற்றியும் அவர்களின் வருத்தம் வலுக்கிறது

          “நாங்க விளைய வைக்கிற வெண்டிக்காய ஒடிச்சி பாத்து வாங்கிறாங்க, ஆனா கொக்க கோலாவ யாரும் குடிச்சி பாத்தா வாங்கிறீங்க!!?? நீங்க 20 ரூபாய் கொடுத்து கலர் வாங்கி குடிச்சா எங்கயோ இருக்கிற பன்னாட்டு கம்பேனிக்காரேனுக்குத்தான் அந்த காசு போகும். அதே காசுக்கு ஒரு இளநீர் வாங்கி குடிச்சா உங்க கூட வாழுர எங்களுக்கு அந்த காசு கெடைக்கும்.. தயவு செஞ்சி விவசாயிகளோட விளை பொருட்கள பேரம் பேசாமா வாங்குங்க.. நீங்க பேசுற பேரம் எங்க பொருளுக்கு இல்ல எங்க உசுருக்கு.


இந்த குற்றச்சாட்டுக்களை நாமும் அரசாங்கங்கள், அதிகாரிகள் போல கணக்கில் கொள்ளாமல் போய்விடுவோமா என்ன???!!!

அன்பும் நன்றியும்
தமிழ்மணி
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. அருமை தம்பியின் எழுத்தில் உண்மையும் ஏக்கமும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
    வெட்டியான பதிவாக இல்லாமல் சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியும் நன்றியும் அண்ணா... தொடர்ந்து வாருங்கள் :-)

      Delete
  2. மிக அருமையான பதிவு. மக்களுக்கு பயனுள்ள பதிவு.விவசாயத்தை பற்றி உணர்த்தும் பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    தொடரட்டும் உங்கள் பணி.....


    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் அன்பும் நன்றியும் நண்பரே.. :-) நிச்சயம் தொடரும்..

      Delete