Monday 23 December 2013

ஓடித்திரியும் வாழ்க்கை


வெகு தூர பேருந்து பயணங்களில் மெய் மறந்து தூங்கியவர்களை எழுப்பிவிட்டு, அவர்கள் இறங்க வேண்டிய ஊர் வந்துவிட்டதா என எட்டிப்பார்க்க வைக்கிறார்கள். வேர்க்கடலை, தண்ணி பாக்கெட், வெள்ளரி பிஞ்சி, ஆண்ணாசி பழம் என பயணம் எனும் திரைப்படத்தில் இடைவேளை காட்சிகளில் வந்து பருவநிலைக்கு ஏற்ப கொரிக்க ஏதேனும் கொடுத்துவிட்டு பின்னோக்கி நகர்கிறார்கள். 

எத்தனையோ பயணங்களில் இதய நோயாளிகளின் மரணத்தை தள்ளிப் போட்டது முந்தைய நிறுத்தத்தில் இவர்கள் கொடுத்த புளிப்பு மிட்டாயாகத்தான் இருக்கும். பணம் படைத்தவன் முதல் இல்லாதவன் என யாராக இருந்தாலும் இவர்களிடம் கிடைக்கும் பொருளை எளிதில் வாங்கிவிடலாம். அந்த அளவு மிக மலிவானதே இவர்கள் விற்கும் பொருள் இவர்களின் வாழ்க்கை போல.

Thursday 14 November 2013

காதலெனப்படுவது - சிறுகதை

“டேய் சரசு நீதான் உங்க அப்பா அம்மாகிட்ட ஏற்கனவே சொல்லீட்டேலடா… நாங்க வேற எதுக்குடா கூட வரணும் கொஞ்சம் பயத்தோடதான் கேட்டேன்.

சரசு பதில் சொல்வதற்குள் கோட்டைச்சாமி முந்திக்கொண்டான். “டேய் மஞ்சமாய்க்யாங்.. பயந்து சாவாதடா.. அவன் ஆசைப்பட்டான் அவங்க வீட்டு சம்மதம் இருந்தா பஞ்சாயத்தே இல்லேலடா..

(அவென் வீட்டுக்கு நாம போனாலே பஞ்சாயத்துதானடா..) மனதில் ஓடிவதை வெளிக்காட்டாமல் “நான் பயப்படலடா மாப்ள.. நாம போய் நின்னு பேசுறதுக்கு பதிலா அவனே பேசிட்டான்னு வச்சிக்க- ஓகே ஆக சான்ஸ் இருக்குடா மச்சி என பயம் வெளியே தெரியாம எவ்வளவோ சமாளித்தேன். ரெண்டு பயளும் கேக்கல.

Thursday 26 September 2013

பெண்ணியம் பேசுவோம் கொஞ்சம்...

தலைப்பை பார்த்ததும், “இப்போ பெண்களுக்கு என்ன குறைச்சல், அவங்க இப்பலாம் எங்க அடிமைப்படுத்தப்படுறாங்க, எல்லா துறைலயும் சாதிச்சிட்டுத்தானே இருக்காங்க, என் சம்சாரம் என்ன அடிக்கிற அளவுக்கு நான் அவளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன்” என்ற பல விவாதங்கள் எழலாம். இப்படியான விவாதங்கள் எழுவதே பெண்ணியம் இன்னும் மலரவில்லை என்பதற்கான உதாரணங்கள்தான்.


எனது அம்மாவின் இளமைக்காலங்களில் அவரது வீட்டில் சோறு ஆக்கினால் அது அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் மட்டும்தான். பெண்பிள்ளைகளுக்கு எப்போதும் பழையதுதான். இந்நிலை 1970-களில் பல வீடுகளில் இருந்துள்ளது. இந்நிலை இப்போது பெரும்பாலும் இல்லை என்பதாலோ, பெண்கள் அதிகம் சம்பாதிக்க துவங்கிவிட்டார்கள் என்பதாலோ, பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்துகொள்கின்றார்கள் என்பதாலோ பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறார்கள் என எடுத்துக்கொள்ள முடியாது

Thursday 29 August 2013

பசுமைநடையின் விருட்சத்திருவிழா


மதுரை மல்லி, மதுரை ஜல்லிக்கட்டு, மதுரை மீன் ஆட்சி (மீனாட்சி), மதுரை தமிழ்ச்சங்கம் இந்த வரிசையில் மதுரையின் மற்றுமொரு அடையாளமாகிவிட்டது பசுமைநடை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரையின் வரலாற்று களஞ்சியமான யானைமலையை கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து காக்க அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டுவந்ததுதான் பசுமைநடையின் முதல் செயல்பாடு. செயல்பாடுகள் மூலம் உதயமாகும் அமைப்புதான் தொடர்ந்து மக்களுக்காக வேலை செய்யும் என்பதற்கு இன்றுள்ள பல்வேறு மக்கள் இயக்கங்கள்தான் உதாரணம். இன்றும் இந்த மலை உயிருடன் இருப்பதற்கு அம்மக்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வரை செய்து கொடுத்துள்ளது பசுமைநடை. பசுமைநடை முயற்சியாளர் எழுத்தாளர் சமூக செயல்பாட்டாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகள் ஏற்படுத்திய தாக்கம் யானைமலைக்கான போரட்டங்களை நாடறிய செய்தது.

Thursday 15 August 2013

காதல் செய்வீர்...

“இந்த காதல் எந்த காலத்தில் தோன்றியது?” என்ற கேள்வியில் இருந்து துவங்குவது இதன் ஆழம் தேட வாய்ப்பாக அமையும். மதக் கோட்பாடுகளின் படி பார்த்தால் இந்த காதலை ஆதாம்-ஏவாலுக்கு சாத்தான் கற்பித்ததாகவே தோன்றுகின்றது. அப்படி என்றால் காதல் கடவுளுக்கு பிடிக்காதா? பழத்தினை தின்ன விடாமல் தடுத்த கடவுளின் அடக்குமுறைக்கு எதிராக எழுந்த புரட்சி தானா இந்த காதல்? இந்த கேள்விகள் நம் சிந்தனையை தூண்ட அப்படியே இங்கு இருக்கட்டும்.

கடவுளை விட்டு சற்று தள்ளி அறிவியல் பக்கம் இருந்து சிந்திக்கலாவோம். ஒரு செல் உயிரினம் என்று இரு செல் உயிரினமாக பரிணமித்ததோ அன்றே முதல் காதல் அறிமுகமானதாக எடுத்துக்கொள்ளலாம்.

Friday 7 June 2013

“தமிழ்” என் தாய்...

“தமிழ்” என் தாய்...
“நம்மள மட்டும்தான் இப்படி வித்தியாசமா பார்க்கிறானுகளா?? எது பேசினாலும் மேலும் கீழுமாத்தானே பார்க்கிறானுக.. நாம சரியாத்தானே பேசுறோம்” இந்த கேள்வியாலும் குழப்பத்தினாலும் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த காலம் அது. பழகியவர்கள் கூட வம்புக்காகவே என் முன் என் தமிழ் மொழியை பழித்துப் பேசும் போதுதான், நான் அவர்களிடம் இருந்து எதில் வித்தியாசப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன். தமிழ் பற்றி பேசியதற்கே இப்படி என்றால் இன்னும் நான் முழுக்க முழுக்க தமிழில் பேசிவிட்டால் என்னை இந்த ஊரை விட்டே.. இல்லை.. இல்லை… இந்த நாட்டினை விட்டே ஒதுக்கி வைத்திருப்பார்கள். தமிழ் மொழியினை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தினை கடந்தே வந்திருப்பார்கள்.

Thursday 9 May 2013

பேருந்து பயணத்தில்

என்ன சாதியோ; என்ன மதமோ;
அருகமர்ந்தவர் தோள்
அவ்வளவு சுகமான தலையணை
தாய் மடியின் சுகம்
தாய் மாமன் தோள்களில்.

என்ன சாதியோ; என்ன மதமோ;
வாங்கிவைத்த குழந்தை

Sunday 28 April 2013

தொலைந்துபோன தொன்மைகள்

விவசாயம்

 

விவசாயம் கற்பித்த பெண்ணை போற்றி

வளர்த்ததுதான் பழக்கம்

அடி மாட்டு கூலிக்கு களை புடுங்க

வைப்பதுதான் இப்போதைய புழக்கம்

 

அடுத்த போக விளைச்சலுக்கு விதை நெல்லு

சேமித்துதான் பழக்கம்

விதை நெல் விலை கொடுத்து

நெகிழிப்பையில் இப்போதைய புழக்கம்

 

Friday 19 April 2013

மை பேனா...


அனா ஆவணா கற்க துவங்கிய காலம் அது.. விவரம் அறியாத அந்த வயதில் என்ன படித்தோம்; எப்படி புரிந்துகொண்டோம் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். இருந்தாலும் அப்போது கற்ற தாய்மொழி அறிவு இன்று வரை வற்றிப்போனது இல்லை. இதுதான் தாய்மொழியின் சிறப்பு போலும். (ஒன்றாம் வகுப்பினில் இரண்டு முறை உட்கார்ந்து அடித்தளம் உறுதியாக போட்டதும் கூட காரணமாக இருக்கலாம்.) சிலேட் குச்சி பயன்படுத்தி எழுதிய நாட்களில் பென்சில் கொண்டு எழுத வேண்டும் என ஆவல் தூண்டும். பென்சில் பிடித்து எழுத துவங்கும் போது தான் குச்சி திங்க முடியாமல் போன கவலை தொற்றிக் கொண்டது. இருப்பினும் பென்சிலின் முனையை கடித்து கடித்து வைத்த காலங்களும் உண்டு.

Sunday 14 April 2013

மழலைகள்

நேற்றைக்கு போவேன் என்பாய்;
நாளைக்கு போனேன் என்பாய்
காலப்பந்தாடும் காலன் நீ;
ஞாலம் கவரும் காமன் நீ.

Friday 25 January 2013

பசுமைநடை - மாடக்குளம்

 இந்த முறை பசுமைநடையில் மலை இல்லை கண்மாய்க்குத்தான் செல்லப்போகின்றோம் என்ற தகவல் கிடைத்தது. “என்னப்பா இப்டி பண்ணிட்டாங்க.. அப்போ இந்த முறை மலை ஏற வாய்ப்பில்லையா” என்று புலம்பிக்கொண்டுதான் சென்றேன். பசுமைநடை நண்பர்கள் மதுரை மாற்று (பைபாஸ்) சாலை துவக்கத்தில் எங்களுக்காக காத்திருந்தனர். மாற்று சாலை பாலத்தில் ஏறி இறங்கி இடது கைப்பக்கம் திரும்பி இருசக்கர வாகனங்களில் பயணிக்க துவங்கினோம். கண்மாயை ஆக்கிரமித்து இருந்த குடியிருப்பு பகுதிகளை கடந்து சென்றோம். இடது வலது என மாறி மாறி சென்றதில் சென்ற பாதை மறந்துதான் போனது. ஒரு வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு வந்து நின்றோம்.

Sunday 13 January 2013

புத்தாண்டு பந்தாட்டம்



புத்தாண்டு கொண்டாட்டத்தில் இவ்வளவு குழப்பமா?? “சித்திரை-1” தான் தமிழ் புத்தாண்டு என நாம் பிறந்தது முதல் இப்போது வரை கொண்டாடி வருகின்றோம். திடீர் என்று “தை-1” தான் தமிழ் புத்தாண்டு என ஒரு சாரார் சொல்கின்றனர். ஏன் இப்படி குழப்பம் பிறப்பிக்கின்றனர்? தமக்கான புத்தாண்டினை கூட அந்த இனம் குழப்பத்துடன் கொண்டாடுவது எவ்வளவு வேதனையானது. இந்த குழப்பம் தமிழர்க்கு மட்டும்தானா??

சற்று வரலாற்றினை திரும்பி பார்த்தால் இந்த குழப்பம் தமிழ் இனத்திற்கு மட்டும் ஏற்பட்டது அல்ல என்பது புரியும்.

Wednesday 9 January 2013

பசுமைநடை - கீழக்குயில்குடி


கீழக்குயில்குடி சமணர்மலையில் பசுமைநடை இரண்டாம் முறையாக நடந்தது. எனக்காகவே இரண்டாம் முறை இம் மலையை தேர்ந்தெடுத்தது போல இருந்தது. முதல் முறை தவறவிட்டதையும் சேர்த்து இந்த முறை கூடுதல் தகவல்களோடு கூடுதல் மலை அழகையும் ரசிக்கப்பெற்றேன். திருமங்கலத்தில் இருந்து மிக அருகாமையில் இருந்ததால் கூடுதல் எதிர்பார்ப்போடுதான் நண்பர்களோடு கிளம்பினேன். அழகான கிராமமும், பிரம்மிப்பான மலையும், தாமரை பூத்துச் சிரிக்கும் நன்னீர் குளமுமாக கீழக்குயில்குடி என் எதிர்பார்ப்பினையும் மீறி அற்ப்புதமாகவே இருந்தது.
ரம்மியமான கிராமத்தின் அமைதியை ஆங்காங்கே குயில்களும் சிறு பறவைகளும் சலனப்படுத்திக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதினில் மலை அடிவாரத்தில் பசுமைநடை நண்பர்கள் கூடினோம்.

Saturday 5 January 2013

பசுமைநடை - கிடாரிப்பட்டி

22-04-2012. உண்மையில் என் வாழ்வில் மறக்க முடியாத தினம். முதன் முறையாக பசுமைநடையில் இணைந்து வரலாற்றினை தேடி நடக்க துவங்கிய தினம். முதல் நடை, புதுமுகங்களாக இருக்கப்போகின்றார்கள் என நினைத்த எனக்கு ஏமாற்றமே.. திருமங்கலத்தில் இருந்து நிறைய நண்பர்களின் தோழமை கிடைக்க காரணமாக இருந்தது இந்த தினம். இனம் இனத்தோடுதான் சேரும் என்ற பழமொழிக்கு அன்றுதான் அர்த்தம் விளங்கியது. திருமங்கலத்தில் இருந்து என் இரு சக்கர வாகனத்தினை எடுத்து தனியாக கிளம்பிய எனக்கு மதுரை புதூரில் இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று எதிர் பார்க்கவே இல்லை.

மதுரை புதூரில் இருந்து பசுமைநடை குழுவினரோடு இணைந்து அழகர் கோவிலை நோக்கி எனது வாகனத்தில் பயணமானேன். அழகர் கோவில் முதல் தோரணவாயிலின் முன்புறம் திடீரென அனைத்து வாகனங்களும் நின்றது. எதற்காக என சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே

Friday 4 January 2013

பசுமைநடை – அறிமுகம்


பிரமிப்பு என்றால் என் அகராதியில் மலைகள்தான். சிறுவயது முதலே மலைகள் மீது எனக்கு அவ்வளவு காதல். என் ஊர் திருமங்கலம் என்றாலும். பிறந்தது மதுரைதான். தாய்வழி உறவுகள் அனைவரும் மதுரையில்தான் இருக்கின்றார்கள். உறவினர் வீடுகளுக்கு மதுரை நோக்கி பயணப்படும் போழுதெல்லாம் பேருந்தின் சன்னல் ஓரத்தில் அமர்ந்து திருப்பரங்குன்ற மலையையும் பசுமலையையும் கண்கொட்டாமல் பார்த்து வியந்ததுண்டு. மலைகள் எத்தனை முறை ரசித்தாலும் சளிப்பதில்லை. ஒவ்வொரு முறை காணும் போதும் ஒவ்வொரு வடிவத்தில் கண் முன் விரியும். தூரத்தில் இருந்து ரசித்த காலங்களில் மலைகளை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்ற ஆசை மனதை கவ்விக்கொண்டது. “மலைக்கு பின்னாடி என்ன இருக்கும்?” என்ற கேள்வியும் உதிக்காமல் இல்லை.