Wednesday 9 September 2015

மண்ணின் கீழ் அடியில் ஒரு கீழடி

           உலகின் பழைய நகரங்களை எல்லாம் பாருங்கள் அவை ஏதேனுமொரு ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் அல்லது குன்றுகள் சூழ அமைந்திருக்கும். உலகின் பழைய நகரங்களில் ஒன்றான மதுரையும் அப்படித்தான். பரங்குன்றம், பசுமலை, சமணமலை, நாகமலை, அழகர்மலை, ஆனைமலை என குன்றுகள் சூழ வைகை ஆற்றங்கரையில் உருவான கோட்டை நகரந்தான் மதுரை.

காலப்போக்கில் பழைய நகரங்கள் அழிந்து போகப் புதிய நகரங்கள் உருவாகின. கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் தம்மை இன்றளவும் நிலை நிறுத்திக்கொண்ட நகரங்கள் மிகச் சிலவே. தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களும் குறைந்தது 25 நூற்றாண்டு கால வரலாறு உடையவனவாக இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டிலும் மதுரை தனிச் சிறப்புகள் உடைய நகரமாகும்



          பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களது நாள்மலர் புத்தகத்தில் மதுரை குறித்தான இந்த கட்டுரை வரிகளை வாசித்துக் கொண்டிருந்த போது மதுரைக்காரனாக ஒரு செருக்கு மேல் எழவே செய்தது. ஆனால் தொ.ப ஐயாவினது எழுத்தினது உண்மைத் தன்மையை காணும் போதோ தொட்டு உணரும் போதோ அவரது ஆய்வின் சிரத்தைத் தன்மையை புரிந்து கொள்ள இயல்கிறது.
 

          பசுமைநடையாக 
23-05-2015 அன்று தென்பரங்குன்றம் சென்ற பொழுது, குடைவரைக் கோயிலில் இருந்த தொல்லியல் அலுவலர் ஒருவர்
“சிலைமான் பக்கத்துல ஒரு பழைய நகரம் கண்டுபிடிச்சிருக்காங்க சார். வாய்ப்பிருந்தா நீங்க அங்கயும் போயி பாருங்க”

          என ஆசையை தூண்டிவிட்டிருந்தார். அது முதலே அங்கு செல்ல வேண்டும் என்கிற ஆவல் நிழலாக பின்னும் முன்னும் வந்து கொண்டே இருந்தது.
 
          ராஜபாளையத்தில் நிகழ்ந்த தமிழக தொல்லியல் கழக மாநாட்டில் பசுமைநடை சார்பாக தோழர்களோடு கலந்து கொண்ட போது தான் முதன்முதலாக மண்ணுக்கடியில் கண்டெடுக்கப்பட்ட நகரம் குறித்தான அரிய தகவல்கள் கிடைத்தன. கீழடியில் அகழாய்வு மேற்கொண்டிருக்கும் குழுவின் தலைமை ஆய்வாளர் திரு.அமர்நாதன் அவர்கள் திரைக் காட்சியில் தாங்கள் ஆவணப்படுத்தியவற்றை காட்சிப்படுத்தி விவரித்தார்.


          அதன்பிறகு 29-07-2015 தேதியிட்ட ஆனந்தவிகடனில் வைகைநதி நாகரீகம் என்கிற தலைப்பிட்டு எழுத்தாளர்.சு.வெங்கடேசன் அவர்கள் தனது தொடரில் கீழடி ஆய்வு குறித்து முதலாவது கட்டுரையை எழுதினார். அதன் மீதான வாசிப்பு என ஒன்று மாற்றி ஒன்று கீழடி குறித்தான பிம்பத்தை மனக் கண்ணில் திரைச்சீலை காணொளியாக ஓட்டிக் கொண்டே இருந்தது.

 
அதற்குள் பசுமைநடையின் 50-வது நிகழ்வை பெருந்திருவிழாவாக ஏற்பாடு செய்யத் துவங்கினோம். நீர் மற்றும் நீர்நிலைகளின் கடந்த கால வரலாறுகளையும் நிகழ்கால நிலையினையும் வருங்கால விழிப்புணர்வுகளையும் மையப்படுத்துவதாக அமைந்த நிகழ்வு அது. இன்னீர் மன்றலாக இவ்விழா 16-08-2015 அன்று கீழக்குயில்குடியில் 1500 தன்னார்வளர்களுக்கு மேலதிகமாக கலந்து கொள்ள, வெகு சிறப்பாக நிகழ்ந்தது. இத்திருவிழாவில் “மதுர வரலாறு – நீரின்றி அமையாது உலகு” எனும் நூல் வெளியிடப்பட்டது.


தமிழகத்தின் முக்கியமான ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், இயற்கை ஆர்வளர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருந்தன. இந்நூலில் “நாள் மலர்கள்” நூலில் தொ.ப அவர்களது மதுரை குறித்தான அந்த கட்டுரை தான் முதலாவதாக அமைந்திருந்தது. தொ.ப அவர்களின் அந்த எழுத்துக்களை மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கீழடி குறித்தான என் மனதுள் எழுந்த காட்சி பிம்பம் சிறுக சிறுக தெளிவாகிக் கொண்டிருந்தது. பசுமைநடை 51-வது நிகழ்வாக 06-09-2015 அன்று கீழடி அகழாய்வுக்களத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது.


எனது கண்களில் படர்ந்த அந்த புகை ஒளிக் காட்சிகள் அனைத்தும் மெய்யாவதை உணர்ந்த கணம் அது. தொ.ப அவர்களின் எழுத்தை காட்சிகளாக கண்டுணர்ந்த போதும் திடமாக தொட்டுணர்ந்த போதும் சிலாகித்துப் போன உணர்வுகளே இதனை எழுதக் காரணம்.
 
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் இந்த நடைக்கான தன்னார்வளர்கள் சந்திக்கும் புள்ளியாக அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 350 தன்னார்வளர்கள் திரண்டுவிட்டனர். நிகழ்வில் பேசும் பேசும் போது தொல்லியல் அறிஞர்.சாந்தலிங்கம் ஐயா அவர்களும் இதனைக் குறிப்பிட்டார்.
“வேறு எந்த பகுதியிலும் அகழாய்வுகளுக்கும் தொல்லியல் களங்களுக்கும் இல்லாத வரவேற்பு மதுரையில் அதிகமாகவே உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது பசுமைநடை மதுரைக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கமே அதற்கு ஒரு காரணம்


அவரது வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை வந்திருந்த ஒவ்வொருவர் முகத்திலும் காண முடிந்தது. ஏதோ நமக்கு மட்டும் தான் இப்படி ஒளிக்காட்சிகள் மனக் கண்ணில் ஓடியது என பார்த்தால், வந்திருந்த ஒவ்வொருவருக்குள்ளும் அதே நிலைதான்.


வாகனங்கள் சீரான வேகத்தில் மதுரை நகரை கடந்து சிலைமான் நோக்கி நகர்ந்தன. வைகை நதியின் கரையில் தொடர்ந்தது பயணம். இன்று திருமண முகூர்த்தம் போல, கடந்து செல்லும் ஒவ்வொரு கிராமத்திலும் பாடல்கள் குழாய் வடிவ ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இளையராஜா பாடல்களை இப்படியான ஒலியில் கேட்டு எத்தனை காலங்கள் ஆகிவிட்டது.

“மணமாலையும் மஞ்சளும் சூடி... புதுக் கோலத்தில் நீ வரும் நேரம்...

மிக அலாதியான அந்த இசை ஒத்தையடிப் பாதைகளை கடந்தும் தூரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது.

 

கீழடி சந்தைப் புதூர் தென்னந்தோப்புக்குள் நிகழ்கிறது இந்த அகழாய்வு. சதுர சதுரமாக குழிகள் வரிசையாக தோண்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழிக்குள்ளும் மண்பானைகள் மண்ணுக்குள் இருந்து தலை எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் வலுவாக இன்றும் நின்று கொண்டிருக்கின்றன. இரண்டு குழிகளுக்குள் கிணறுகள் இருந்ததற்கான அடையாளமாக சுடுமண்ணால் அமைக்கப்பட்ட கிணற்று உறைகள் நின்று கொண்டிருக்கின்றன. சுற்றி எங்கும் சிறு கற்களால் பாத்தி கட்டி ஒவ்வொரு குழிக்குள்ளும் கிடைக்கும் மண்பானை ஓடுகளை குவியல் குவியலாக தனித் தனியாக சேகரித்து ஆய்வு செய்கின்றனர். சுற்றிலும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகளும், கருப்பு பானை ஓடுகளும் மண்தரை எங்கும் பரவிக்கிடக்கிறது. கிமு-500 ஆண்டுக்கு  சென்றுவிட்டது போல ஒரு உணர்வு. ஒரு சிறு பகுதிக்குள் இவ்வளவு வரலாற்றுதடயங்கள் கிடைக்கிறது என்றால், 2500 ஆண்டுகளுக்கு முன்பான மக்கள் தொகையோடு கணக்கிடும் போது, இங்கு ஒரு நகரம் இருந்திருப்பது புலனாகும்.

 
அகழாய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் திரு.அமர்நாதன் உரையாடும் போது

“அகழாய்வுகளில் பெரும்பாலும் முதுமக்கள் தாழி போன்று இறந்தவர்களை புதைக்கும் இடங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வின் முக்கியமான களமான ஆதிச்சநல்லுரிலும் கூட முதுமக்கள் தாழிகளே பெரும் எண்ணிக்கையில் கிடைத்தன. மக்கள் வாழ்ந்த பகுதிகள் மிக அரிதாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியை மதுரை கீழடியில் கண்டு பிடித்துள்ளது, தொல்லியல் வரலாற்றில் மிக முக்கியமானது.
 
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா பேசிய போது அகழாய்வுப் பணிகள் எப்படி மேற்கொள்ளப்படும் என விவரித்தார். புதிய அனுபவமாக இருந்தது அந்த உரை. அகழாய்வுக் களங்களை தேர்ந்தெடுப்பதற்கு என்னென்ன வழி முறைகள் என்பதில் துவங்கி, அதற்கான தொல்லியல் அனுமதி, புறம்போக்கு நிலமாக இருந்தால் அரசாங்கத்தின் அனுமதி, தனியார் நிலமாக இருக்கும் பட்சத்தில் அவரோடான ஒப்பந்தம், களங்களை பிரிப்பது என ஒரு தொல்லியல் வகுப்பே நிகழ்ந்தது.


மண்ணுக்கடியில் என்ன தடயம் இருக்கும் என்பது தெரியாத போது, அவற்றை சிறு சிதிலம் கூட அடையாமல் எவ்வாறு குழிகளை வெட்டி, மண்ணுக்கடியில் கிடைக்கும் பொருட்களை அதன் தன்மை மாறாமல் சுத்தம் செய்வது, ஆவணப்படுத்துவது முடிய தெளிவான வகுப்பாக இருந்தது. பசுமைநடையின் வகுப்பறைகள் மலைகளின் மேல் அதிகமாக அமைந்துள்ளது. முதல் முறையாக ஒரு அகழாய்வு முகாமில் அகழாய்வுக்காக தோண்டப்ட்ட குழிகளின் விழிம்பில் அமர்ந்து அதனைக் குறித்தான பாடம் கற்பது மிக உன்னதமான தருணமாக இருந்தது.

 
மண்ணுக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆகழாய்வாளர்கள் ஒவ்வொன்றாக காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.


யானையின் தந்தத்தினால் செய்யப்பட்ட தாயக்கட்டை மிக அழகான வேலைப்பாட்டுடன் இருந்தது. யானைகளின் தந்தங்களில் தாயக்கட்டை செய்து விளையாடும் அளவிற்கு மிக மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்துள்ளார்கள். நாமெல்லாம் இப்போது கைபேசிகளை நோண்டிக் கொண்டிருக்கிறோம்.

 
இங்கு நெசவுத் தொழில் நிகழ்ந்திருக்கலாம் என அறியப்படுகிறது. சுடுமண்ணில் சொருகப்பட்ட ஊசியும், தரியில் பயன்படும் குச்சி போன்ற பொருளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.


முத்துமணிகள், பளிங்கால் செய்யப்பட்ட மணிகள், சூது பவளத்தால் ஆன மணிகள் என வரிசையாக பட்டியல் நீள்கிறது. இதில் சூது பவளம் ஆப்கானில் கிடைக்கும் மூலப் பொருளால் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். பல எல்லைகளை கடந்து இப்பகுதி மக்கள் வணிகம் செய்திருக்கிறார்கள் என்பதே இதற்கு சான்று. ரோமானிய ரசக் கலவையால் செய்யப்பட்ட மண் பாத்திரங்கள் இங்கு கிடைத்துள்ளன. இது இப்பகுதி மக்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வணிகம் செய்ததற்கான ஆவணமாகும். ராமேசுவரத்தில் கிடைக்கும் சங்கு கொண்டு செய்யப்பட்ட வளையல்கள் இதனை மேலும் உறுதி செய்கின்றன. ராமேசுவரம் அழகன்குளம் துறைமுகத்திற்கு செல்லும் பெருவழியில் இந்நகரம் அமையப்பெற்றுள்ளதும் இதனை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவுகிறது.



மண்பாண்ட ஓடுகளில் தமிழ் பிராமி எனச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற தமிழி எழுத்தில் “ஆதன், இயனன், டிசன் போன்ற பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் அப்போதே எழுத்தறிவு இருந்துள்ளதற்கான சான்றுகள் இவை.




மண்பாண்ட கொள்கலன்கள், ஈட்டி முனைகள், முத்து மணிகள்,  சுடுமண் பாசிகள், சுடுமண் உருவங்கள், செங்கற்கட்டிடங்கள், உறைகிணறுகள் என நீண்டு கொண்டே செல்கிறது பட்டியல். இவற்றை உரிய முறையில் ஆவணப்படுத்தி மக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை. கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று மண்ணுக்குள் இருந்து வெளிவந்தாலும் கள்ள மனங்களில் இருந்து வெளிவராமல் இருக்கும் அகழாய்வுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியதும் அரசின் கடமையே.


தொன்மையையும் வரலாறுகளையும் இனியும் மூடி மறைக்காமல் அவற்றை பாடத்திட்டங்களில் இணைத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகிறது. அதனையே பசுமைநடை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. பசுமைநடைக்கு வருகை தந்து அப்பாவின் கைபேசியை பிடுங்கி புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் குழந்தைகளும், குறிப்பெடுக்கும் மாணவர்களும் தான் பசுமைநடை அடைந்து கொண்டிருக்கும் வெற்றியின் காரணகர்த்தாக்கள்.

கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. எனது இருசக்கர வாகனத்தினை எடுத்து திருப்பிக் கொண்டிருந்தேன். தென்னந் தோப்புக்குள் நூல் சீலையுடன் ஒரு பெண் மண் பானையை தூக்கிக் கொண்டு கிணற்றில் நீரெடுக்க வந்து கொண்டிருக்கிறாள். கீழடி குறித்து எனது மனக்கண்ணில் எழுந்த காட்சி பரிணாமம் அடைந்து கொண்டு இருக்கிறது.

(ஆவணப் பொருள்களுடைய படம் உதவி: பூனைக்குட்டி)

இன்னும் நடப்போம்
பாடுவாசி


5 comments:

  1. சீரிய எழுத்து நடை... தேர்ந்த சொல்லாடல்... கூரான குறிப்புகள்... எடுத்துக்காட்டான முன்னுரை... இலக்கியம் பேசும் முடிவுரை... எழுதுங்கள் தொடர்ந்து...

    ReplyDelete
  2. காட்சிகளை கண்முன் நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் வாசிப்போரை கை பிடித்து காலம் தின்ற களத்துக்கு அழைத்து சென்று விடுகிறீர்கள் .தங்கள் எழுத்தாற்றல் மேலும் சிறக்க . .

    ReplyDelete
  3. அருமையான வரலாற்றுக் கட்டுரை. மதுரையின் தொன்மையை அழகாக விவரிக்கின்றது கட்டுரை வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அற்புதமான உழைப்பு கட்டுரையில் தெரிகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete