Wednesday, 8 July 2015

கிடாரிப்பட்டி - அன்றும் இன்றும்

            வாழ்வின் சிறந்த சம்பாத்தியம் “மனிதர்கள்”. எண்ணங்கள் ஒத்துப் போகும் மனிதர்களை சம்பாதிப்பது அதிலும் அதி சிறந்தது. பள்ளியிலோ கல்லூரியிலோ எனது எண்ணங்களை ஒத்த மனிதர்கள் அமைந்ததில்லை என்பதை இங்கு நான் பதிவு செய்கிறேன். அந்த மனிதர்களூடான வாழ்வு முழுக்க கேலியும் கிண்டலும்  சில நேரங்களில் நல்ல நட்பாகவும் இருந்து கடந்துவிட்டது. இன்றும் பள்ளி கல்லூரி இறுதி நாட்களில் அம் மனிதர்களிடம் பெற்ற ஒவ்வொரு எழுத்துக்களும் சில நேரம் ரசிக்கவும் பல நேரம் அழுகவும் வைத்துவிடுகிறது. இருப்பினும் எண்ணங்களின் ஓட்டம் ஒத்துப் போனதில்லை என்பதே உண்மை.



            சாதி குறித்து வேறு ஒரு நண்பரை பேசியதற்காக கருத்து வாதத்தில் பத்தாம் வகுப்பில் நெருங்கிய நண்பர் ஒருவரை அடித்திருக்கிறேன். இன்றும் அந் நண்பரூடான உரையாடல்  ஒத்துப் போகாமல் கார சாரமாகவே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பணியிடங்களில் நிறைய புது மனிதர்களை கடக்கிறேன் அங்கொன்றும் இங்கொன்றுமாக எண்ண ஓட்டங்கள் ஒத்து போகிற மனிதர்கள் அமைகிறார்கள். இப்படியான மனிதர்களை வாழ்க்கை பயணங்களில் வேகமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்துவிடுகிறேன்.








இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட அலுவலக நண்பர்களோடு குற்றாலம் பயணத்தினை முடித்துவிட்டுதான் அமர்ந்திருக்கிறேன். இயற்க்கையை அனுபவிக்க துடிக்கும் எனக்கு இந்த சாராயச் சூழல் ஒப்பவில்லை.

“ராசாக்களா தண்ணிதான் அடிக்கனும்னா வீட்டுலயே உக்காந்து அடிக்கலாம்லயா… அதுக்கு ஏன் குற்றாலம் வரனும்?!”

என்று தான் மனதுக்குள் பல கேள்விகள் எழுகிறது. இப்படியான மனிதர்கள் தான் பெரும்பாலும் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கழுகுமலை ஒரு நாள் பயணம் மேற்கொண்ட அனுபவத்தோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறேன். பயணம் முடித்துவிட்டு மதுரை காளவாசல் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினோம். எங்களோடு முதல் முறை வந்து பழக்கம் ஆகிக் கொண்ட அம்மா ஒருவர்,

“தம்பிங்களா இன்னைக்கி காலையில இருந்து பாத்துட்டேன், ஒரு பையன் கூட சிகெரெட் புடிக்கல, எந்த ஒரு அநாகரீகமான காரியமும் பண்ணல. நல்லா இருங்கப்பா”

என வாழ்த்திவிட்டு சென்றார். இது போன்ற சின்ன சின்ன காரியங்கள் துவங்கி இயற்கை, வரலாறு, ஆய்வு, சமூகம் என எனது எண்ணங்களோடு ஒத்துப் போகிற மற்றும் என்னை செதுக்கிக் கொள்ள காரணமாக உள்ள மனிதர்கள் தான் இந்த பசுமைநடை நண்பர்கள்.


22-04-2012. இந்த தினத்தினை இன்றும் என்னைப் பற்றிய அறிமுகங்களில் எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன். பசுமைநடையின் எனது முதல் நடை தினம்தான் இது. தோழர்.உதயக்குமார் அவர்களது அலைபேசி எண்ணை வேறொரு நண்பர் மூலமாய் கிடைக்கப் பெற்று எனது வருகையை உறுதி செய்து கிளம்பினேன்.  அதுவரை அவர் யாரென்று தெரியாது. ஆனால் இன்று இவரோடு நானும் பல இடங்களுக்கு பசுமைநடையின் திட்டமிடல் பணிகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன்.


மதுரை – புதூர் பேருந்து நிலையத்தில் யாருமே அறிமுகம் இல்லாமல் வருவோர் போவோர் முகங்களை எல்லாம் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த அந்த பழைய நாள் கணங்கள் தான் ஞாபகம் வருகிறது.

“நாங்களும் திருமங்கலம் தான் தம்பி.. நீங்களும் திருமங்கலமா! எங்க இருந்து வாரீங்க!”

என பல திருமங்கல நண்பர்களின் அறிமுகங்களும் அங்கேயே நிகழ்ந்தன.

“என்னது.. நம்ம ஊருல இருந்தும் இதுக்குலாம் வாராங்களா!! நம்ம ஊருலயும் நம்மள மாதிரியான ஆட்கள் இருக்காங்களா!!”

என வியந்து வாய் பிளந்த நினைவுகள் இந்த மாத கிடாரிப்பட்டி பசுமைநடைக்கு புதூரில் காத்திருந்த போது நிழலாடியது.


அன்றைக்கெல்லாம் யாரென்று தெரியாதவர்கள் இன்று உரிமையோடு அணைத்து பேசுகிறார்கள்.
முதல் முறை

“தம்பி நீங்க எங்க இருந்து வாரீங்க” 

என சற்று அந்நியப்பட்டு பேசிய பசுமைநடை முயற்சியாளர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் கூட  இன்று

“டேய்.. ஏன்டா இவ்வளவு லேட்டு!! வேகமா வந்தா தானடா எல்லாரையும் ஒருங்கிணைக்க முடியும்!! என்னடா இப்படி பண்றீங்க!!”

என உரிமையோடு கோபித்துக் கொள்கிறார் இதெல்லாம் எனக்கு புதுமையாக இருக்கிறது.



ஒரே சிந்தனை ஒத்த கருத்து அதில் மேலும் கூடுதல் தெளிவினை பெறும் நண்பர்களின் கூடுகையாகவே  இதனை புரிந்து கொண்டுள்ளேன். கருத்து பரிமாற்றங்களும், சிறு விவாதங்களும் அதன் பிறகான தீர்வுகளும் என இதுவெல்லாம் எனது சிற்றறிவுக்கு அதிகப்படியானதாகவே இருந்த போதிலும் இன்னும் வேண்டும் என்கிற மனோபாவமே என்னுள் எழுகிறது.





கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து மலைகளை பாதுகாத்திட, அம் மலைகளின் வரலாற்றுத் தொன்மையையும் புவியியல் அமைப்பில் அதன் தேவையையும் இயற்கையில் அவற்றின் அவசியத்தையும் வெகு சனங்கள் அறிந்து கொள்ளச் செய்வதும், அவற்றை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும் பசுமைநடையின் பிரதான செயல்பாடு. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சமணர்களின் வாழ்விடங்களான மலைக் குன்றுகள் மதுரையின் கொடைகள். இவை போன்று பல பழங்கால வரலாற்று சின்னங்களால் தான் மதுரையின் வரலாற்று வயது தமிழ்நாட்டின் இதர நகரங்களோடு மிஞ்சி நிற்கிறது.


இவற்றில் இந்த கிடாரிப்பட்டி மலை மிக முக்கியமான ஆவணம் மதுரையின் பெயர் செதுக்கிய பழங்கால கல்வெட்டுகளும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டை சமூகம் தீட்டிய பாறை ஓவியங்களும் மதுரையின் வரலாற்றினை சொல்லிக் கொண்டிருக்கிறது. சமணர்கள் தங்கிய குகைகள், அவர்களது கற்படுக்கைகள், அச்சணந்தி அவர்கள் செய்த மகாவீரரின் திருமேனி, மருந்து அரைப்பதற்கு பாறையிலேயே செய்து வைத்துள்ள சிறு சிறு வடிவங்கள் என வரலாற்று புதையலாகவே இருக்கிறது கிடாரிப்பட்டி மலை.


முதல் முறை என்ன ஏதென்று தெரியாமல் புரியமல் விழித்துக் கொண்டிருந்த நினைவுகள் எனக்குள் இந்த முறை நகைப்பூட்டியது. இருப்பினும் கற்றல் என்பது நெடும் பயணம். இது போன்று இன்னும் சில காலங்களில் இன்றைய நிலை நகைப்பூட்டலாம். வாசித்தலும் பயணங்களும் இன்னும் செழுமைப்படுத்தும் எனை. தேடலும் கற்றலும் இவர் போன்ற ஒத்த சிந்தனை மனிதர்களும் அமையப் பெற்ற பின் வாழ்வு அர்த்தமுள்ளதாகியதாய் ஓர் உணர்வு. வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவிக்க ஆயத்தமாகவே இருக்கிறேன். நிகழட்டும் நிகழ்வுகள்.

அன்பும் நன்றியும்
பாடுவாசி ரகுநாத்
thamizhmani2012@gmail.com
paaduvaasi@gmail.com

2 comments:

  1. “சில நேரம் ரசிக்கவும் பல நேரம் ‘ அழுகவும்’ வைத்துவிடுகிறது.”

    ரொம்ப அழுகிட்டீங்களோ?

    ReplyDelete
  2. இந்தப் பயணம் தொடரட்டும்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete