Friday 7 September 2012

உயிர் பெற்ற இருபது சடலங்கள்...

          தீபாவளி என்பது தமிழனுக்கான பண்டிகை கிடையாது. ஆனால் திபாவளிக்கு கொளுத்தி மகிழும்  பட்டாசு, வான வேடிக்கை, மத்தாப்பு போன்றவற்றை தொண்ணுறு விழுக்காடு இந்தியாவுக்கு வழங்குவது தமிழகம் மட்டுமே. குறிப்பாக கரிசல் காட்டு மண் சிவகாசி தான் இதன் மூலதனம். ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் தங்களது தகுதியையும் காட்ட பயன்படுத்துவது இந்த பட்டாசுகளை தான். ஆரம்ப காலத்தில் சப்த்தம் அதிகமான பட்டாசுகள் தான் பணம் படைத்தவர்களால் விரும்பப்பட்டு வந்தது. அதனை கண்டு இல்லாதோரும் தங்கள் குறைந்த பண சக்திக்கு தக்க தன் பிள்ளைகளுக்கு குறைந்த சப்த்தம் வரக்கொடிய ஓலை வெடி, வரி வெடி, சீனி வெடி எனப்படும் பிஜிலி வெடி போன்றவற்றை வாங்கி கொடுத்து இல்லாத இன்பத்தை இதில் தேடினர்.


          காலப்போக்கில் சப்த்தத்தினை விட ஒளிமயமான வான வேடிக்கைகள் மேல் பணம் படைத்தவர்கள் மனம் திரும்பியது. இப்படி பட்டாசுகளும், மத்தாப்புகளும் அடுத்தகட்ட நிலைக்கு பரிணமிக்க துவங்கின. ஆனால் பட்டாசு தொழிற்சாலையும் பட்டாசு தொழிலாளர்களும் அந்த நிலைக்கு பரிணமிக்கவில்லை. இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிக்கு மட்டுமான பட்டாசு மேல்கொண்டு பரிணமித்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி என வான் அளவு வண்ணமயமாக பரிணமித்துவிட்டது. ஆனால் இன்னும் பட்டாசு தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிலாளர்களும் பரிணாமம் அடையவில்லை


          சிவகாசியில் இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் பெரும்பாலும் முறையாக பதிவு பெற்றிருந்தாலும் அந்த பதிவிற்கான நிபந்தனைகளை சரியாக செயல்படுத்தியும் முறைபடுத்தியும் உள்ள தொழிற்சாலைகளை ஒரு கை விரல் விட்டே எண்ணிவிடலாம்.

          அதே போல பதிவு பெற்றிடுந்தும் நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலை நிறுவனத்தில்தான் இந்த ஆண்டுக்கான தீபாவளி பலி துவங்கியுள்ளது. வருடா வருடம் ஏற்ப்படும் விபத்து இந்த ஆண்டு ஏனோ அளவுக்கு மீறிய கொடூரங்களை அரங்கேற்றிவிட்டது.

          ஒரு அறைக்கு வெறும் நான்கு தொழிலாளர்களே பணிபுரிய அனுமதியுள்ள தொழிற்சாலை விதிமுறைகளை உதாசீனம் செய்தது முதல் தவறு. மொத்தமுள்ள நாற்ப்பது அறைகளில் மொத்தம் முன்னூறுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். கடந்த ஆங்கில மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி நிபந்தனைகளை பின்பற்றாமல் இருந்த காரணத்திற்க்காக ரத்து செய்யப்பட்ட உரிமத்துடன் தொழிற்சாலை இயங்கியுள்ளது. தடை இருந்த போதும் அத்துமீறி பணம் பார்க்க தொழிலாளர்களை முடுக்கி விட்டு பணியை துரிதபடுத்தியுள்ளனர். மரத்தடிகளை கூட தொழிற்சாலையாக பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க தீவிரம் காட்டியுள்ளனர்.


        சிவகாசியில் பட்டாசு தொழிறசாலைகளை ஒழுங்குபடுத்த சிறப்பு தாசில்தார் வேறு இருந்தும் இந்நிலை தொடர்கிறது. சிவகாசி அரசு மருத்துவமனை அதை விட கேவலமான நிலையில் உள்ளது. பட்டாசு தொழிற்சாலை நிறைந்துள்ள சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனை இன்னும் கூட தீ விபத்து உயர் சிகிச்சை பிரிவு இல்லாமலே கிடக்கிறது. வேகமான சிகிச்சை தேவைப்படும் பெரிய தீக்காயம் அடைந்தவர்கள் கூட எழுபது கல் தொலைவில் உள்ள மதுரை அரசு மருத்துவமனைக்கே கொண்டு செல்லும் பரிதாப நிலை.

          அரசு விபரீதம் நிகழ்ந்த பிறகு எடுக்க கூடிய நடவடிக்கைகளை, அதற்க்கு முன் எடுத்திருந்தால் மனித உயிர் இப்படி பட்டாசோடு சேர்ந்து வெடித்து எரிந்திருக்காது.


          இனியாவது இந்த அரசு திருந்த்திவிட்டது என நினைத்திருந்த எனக்கு அடுத்த நாளே ஒரு அதிர்ச்சி.

          தமிழக செய்தி அலைவரிசைகளில் முதலிடம் என்று பீத்திக்கொள்ளும் புதிய தலைமுறை செய்தி அலைவரிசை உள்பட அனைத்து ஊடகங்களும் பொய் பேச துவங்கிவிட்டன. இந்த ஆங்கில மாதம் நான்காம் தேதி ஏற்பட்ட விபத்தில் ஐம்பத்து ஆறு பேர் பலியாகியுள்ளதாக அந்த நாளில் செய்தி வாசித்தவாசித்தவர்கள், அடுத்த நாள் காலையிலேயே முப்பத்து ஆறு பேர் பலியானதாக பொய் வாசிக்க துணிந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் மட்டுமே பிரேத பரிசோதனைக்கு வந்த இருபது சடலங்களை நான் என் கண்களால் கண்டேன். அது தவிர அப்போதே வந்த செய்திபடி மதுரை, திருவில்லிபுத்தூர், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை போன்ற ஐந்து இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்தில் இறந்த சராசரியாக ஏழு பேருக்கு பிரேத பரிசோதனை நடந்துள்ளதாக (நான் சொல்லவில்லை) இதே ஊடகங்கள் தான் கூறின. ஆனால் மனசாட்ச்சியே இல்லாமல். பலியானோர் எண்ணிக்கையை குறைத்து காட்ட என்ன சமரசம் இவர்களுக்கு?  ஓம் சக்தி பட்டாசு அதிபரான ஆளும் கட்சி கவுன்சிலரையும், ஆளும் கட்சி செல்வாக்கையும் காக்க பாடுபடும் அரசுக்கு ஊடகங்கள் ஏன் இப்படி சொம்பு தூக்குகின்றன என்பது தான் கேள்விக்குறி. உண்மையில் இறந்து போன  மீதம் உள்ள இருபது பேருக்கு என்ன கணக்கு? அந்த இருபது பேர் உயிர் பெற்று எழுந்தது எப்படி??

படைப்பு:
சு.ரகுநாத்.
thamizhmani2012@gmail.com

No comments:

Post a Comment