Friday 7 June 2013

“தமிழ்” என் தாய்...

“தமிழ்” என் தாய்...
“நம்மள மட்டும்தான் இப்படி வித்தியாசமா பார்க்கிறானுகளா?? எது பேசினாலும் மேலும் கீழுமாத்தானே பார்க்கிறானுக.. நாம சரியாத்தானே பேசுறோம்” இந்த கேள்வியாலும் குழப்பத்தினாலும் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த காலம் அது. பழகியவர்கள் கூட வம்புக்காகவே என் முன் என் தமிழ் மொழியை பழித்துப் பேசும் போதுதான், நான் அவர்களிடம் இருந்து எதில் வித்தியாசப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன். தமிழ் பற்றி பேசியதற்கே இப்படி என்றால் இன்னும் நான் முழுக்க முழுக்க தமிழில் பேசிவிட்டால் என்னை இந்த ஊரை விட்டே.. இல்லை.. இல்லை… இந்த நாட்டினை விட்டே ஒதுக்கி வைத்திருப்பார்கள். தமிழ் மொழியினை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தினை கடந்தே வந்திருப்பார்கள்.


தமிழ் பேசுபவர்களை கிண்டல் செய்யும் கலாச்சாரத்தினை யார் துவங்கி வைத்தார்கள் என்பது விடை தேடவேண்டிய கேள்வி. ஆனால் 1980-1990களில் வந்த தமிழ் படங்களில் (தமிழ் படங்களில் மட்டுமே) தமிழ் பேசும் கதாப்பாத்திரத்தினை ஒரு நகைச்சுவை கதாப்பாத்திரமாக சித்தரித்து அசிங்கம் செய்திருப்பார்கள். இதில் கல்லூரி கதைகள் என்றால் தமிழ் ஆசிரியர் நிச்சயம் தூய தமிழில் தான் பேசுவார் (நல்ல போக்குதான்) ஆனால் அவர் படம் முழுக்க ஒரு கேலிப்பொருளாகவே வந்து செல்வார். இன்றும் கூட வரக்கூடிய ஒரு சில படங்களில் இதே போக்கு காணப்படுகின்றது. தாய் மொழியை பிழையின்றி தூய்மையாக பேசுவது அவ்வளவு பெரிய அசிங்கமா?? குறிப்பிட்ட மதத்தினையோ சாதியையோ அசிங்கமாக திரைப்படங்களில் சித்தரித்துவிட்டால் அந்த பிரச்சனை விஷ்பரூபம் எடுத்து சண்டியத்தனம் செய்கின்றது. ஆனால் தமிழ் அசிங்கப்படும் போது கேட்க ஒரு நாதியுமில்லை. மீறியும் கேட்டால் “சினிமாவ சினிமாவாத்தான் பாக்கணு”மாம்.

ஆங்கிலத்தினில் ஏதேனும் இலக்கணப் பிழையோடு பேசிவிட்டாலோ, எழுத்துப் பிழையோடு எழுதிவிட்டாலோ பெரிய தவறாக உடனே சுட்டிக்காட்டும் அறிவாளிகள்; தாய் மொழியினை தறிகெட்டுப் பேசுவதும் தாய் மொழியை எழுதத் தெரியாமல் சமாளிப்பதும் கௌரவமாக்கப்பட்டுவிட்டது இந்த காலத்தில்.

இப்போது இன்னொரு அசிங்கம் அரங்கேற்றமாகியுள்ளது. தமிழை தமிழ் எழுத்துகளில் எழுதாமல் ஆங்கில எழுத்துகளில் எழுதும் பழக்கம் இளைஞர்களிடம் பரவிக்கொண்டு இருக்கின்றது. இதற்கு பேருதவியாக இருப்பது இவர்கள் கைகளில் வைத்திருக்கும் அலைபேசிகள். ஒரு விடயத்தினை அலைபேசியில் அழைத்து பேசுவதைவிட அதனை ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பிவைப்பது வசதியான ஒன்று. ஆவணமாகவும் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அத்தியாவசியமானது. தமிழ் உச்சரிப்புகளை அப்படியே ஆங்கில எழுத்துகளில் தட்டச்சு செய்து அனுப்புவது அலை பேசிகளில் இப்போது சாதாரணம். தமிழ் எழுத்துகளே வருக்காலத்தில் இல்லாமல் செய்துவிடும் அபாயம் இதன் பின் இருப்பதனை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம்??

மாணவர்களும் இளைஞர்களும் இப்போது பெரும்பாண்மையாக அலைபேசி குறுஞ்செய்திகளிலும், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் அதிகம் எழுத துவங்கிவிட்டனர். இது வரவேற்கதக்க ஒரு எழுச்சி. ஆனால் அவர்கள் தமிழில்தான் எழுதுகின்றார்களா?? அல்லது ஆங்கில எழுத்தில் தமிழ் உச்சரிப்புகளை தட்டச்சு செய்து அதன் மூலம் தமிழைப் பெற்று பயன்படுத்துகிறார்களா?? இலக்கணப் பிழை எழுத்துப் பிழை இன்றி எழுதுகின்றார்களா?? அப்படி எழுத்துப் பிழைகளோடு எழுதினாலும் அதனை சுட்டிக்காட்டி சரி செய்யும் போக்கு எத்தனை பேரிடம் உண்டு?? நான் எழுதுவதில் இருக்கும் பிழைகளை நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டி சரி செய்யச் சொல்வார். அப்படியான வழிகாட்டிகள் எத்தனை பேர் உண்டு என்பது நம்மை அச்சுருத்தும் கேள்விகள்.

இந்நிலை நீடித்தால் தமிழை தவறாக உச்சரித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் அதனையே மொழியாக்கிக்கொண்ட மலையாளம் கன்னடம் தெலுங்கு இன்ன பிற இந்திய மொழிகளின் வரிசையில் மேலும் பல மொழிகள் பின் நிற்கும். தமிழின் மாண்பு கெட்டு இன்னும் பாதாளத்திற்கு செல்லும்.

கன்னட மக்களாகட்டும் தெலுங்கு பேசும் மக்களாகட்டும் இன்ன பிற தாய்மொழியினை என்னவாக பெற்றிருந்தவர்களாகட்டும் அவர்களுக்கு எத்தனை மொழி அறிந்திருந்தாலும், நம்மிடம் பேசும் போது நமக்கு தெரிந்த மொழியில் பேசுவார்கள். அதே நேரத்தில் அவர்களின் வீட்டில் இருப்பவர்களிடம் பேசும் போது உடனே அவர்களின் தாய் மொழியில் மாறி பேசுவார்கள். நம் தமிழர்கள் அப்படியா!! வீட்டில் அம்மாவை வாய் நிறைய அம்மா என்று எத்தனை பேர் அழைக்கின்றோம். நாம் அழைப்போம் ஆனால் நம் பிள்ளைகள் நம்மை அப்படி அழைக்கின்றார்களா?? அவர்கள் தமிழில்தான் அழைக்க வேண்டும் என நம்மில் எத்தனை பேர் ஆவல் கொண்டுள்ளோம்?? அது சரி நாம் அவர்களுக்கு நாம் தமிழில் பெயர் வைத்தால்தானே நாம் அவர்களையாவது தமிழில் அழைக்க முடியும். அவர்கள் மம்மி என்றழைக்க இவர்கள் ஜிம்மி என்றழைக்க…

ஆங்கிலத்தினில் பேசும் போது தெளிவான உச்சரிப்பினில் பேச வேண்டுமே என ஒரு சொல் கூட தமிழ் வராமல் கவனம் செலுத்தி பேசுகின்றோம். ஆனால் தமிழில் பேசும் போது நம் நாவில் ஆங்கிலம் சாதரணமாக கலந்து வருவதை கவனிக்க கூட நேரமில்லை நமக்கு. இப்படி ஆங்கிலம் கலந்து பேசுவதைத்தான் நாம் கௌரவமாகவும் நினைக்கின்றோம். இதற்கு தமிங்கிலீஷ் என்று பெருமையோடு பெயரையும் வைத்துக்கொள்கின்றோம்.

உலகின் முதல் மொழி. இப்போதைய இந்திய மொழிகள் பலவற்றிற்கு தாய். பண்டைய காலத்தில் உலகாண்ட மொழி என்று எத்தனையோ பேரு பெற்றது நம் தமிழ் மொழி.  அந்த மொழியில் பேசினால் கௌரவ குறைச்சல் என்ற இழி நிலைக்கு வந்துவிட்டோம். இந்த சம காலத்தில் தமிழ் மொழியின் வரலாற்றினை தேடிப்பிடித்து அதன் தொன்மையையும், எழுத்து அமைப்பின் சிறப்புகளையும், பொருள் செரிந்த தமிழ்ப் பெயர்களின் விளக்கங்களையும் தேடி சேர்த்துக்கொண்டு இருக்கின்றோம். பக்கத்து மொழிக்காரன் எல்லாம் கண்விரிய பார்த்துக் கொண்டு இருக்கின்றான். ஆனால் தமிழ் தமிழ் என்று பேசி எதை பிடுங்கிவிட்டீர்கள் என்று கேட்கின்றார்கள் ஆங்கிலம் ஆங்கிலம் என்று பேசி அதிகம் பிடுங்கிய நம்மவர்கள்.

தமிழ் பற்றி பேசுவது கேலியாக பார்த்த காலம் போய் இன்று தமிழ் என்று பேசினாலே தீவிரவாதி போல பார்க்க துவங்கிவிட்டனர். நாங்கள் தீவிரவாதிகள்தான். எங்கள் தாய் தமிழுக்காக உண்மை உரைத்து தீவிரமாக வாதிடும் நாங்கள் தமிழ் தீவிரவாதிகள்தான்.

முதல் முயற்சியாக 
பிற மொழி கலப்பில்லாமல்
தமிழில் பேசுவோம்.
சு.ரகுநாத்.
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. முற்றிலும் உண்மைச் சம்பவம் இது,

    ஆங்கிலத்தினில் ஏதேனும் இலக்கணப் பிழையோடு பேசிவிட்டாலோ, எழுத்துப் பிழையோடு எழுதிவிட்டாலோ பெரிய தவறாக உடனே சுட்டிக்காட்டும் அறிவாளிகள்; தாய் மொழியினை தறிகெட்டுப் பேசுவதும் தாய் மொழியை எழுதத் தெரியாமல் சமாளிப்பதும் கௌரவமாக்கப்பட்டுவிட்டது இந்த காலத்தில்.

    அலைபேசியில் ஆங்கிலம் வழியாக எழுதுவதில் ஒரு நன்மை 26 ஆங்கில எழுத்து மூலம் 247 தமிழ் எழுத்துக்களை எழுதுவது தான்.. ஆகவே நண்பரே, தமிழ் வழி தட்டச்சு பலகை வரும் வரை ஆங்கிலத்தின் வழியாவது தமிழில் எழுதும் நண்பர்களைப் பாராட்டுவோம்.. முயற்சி எந்த வழியிலும் இருக்கலாம்...ஆனால் இலக்கு ஒன்றே.... தமிழைப் பாதுகாப்பது.

    தாய் (தமிழ்) மொழியின் பெருமை பேசும் கட்டுரை... வாழ்த்துக்கள் தோழரே...



    ReplyDelete
  2. ஆங்கிலத்தினில் ஏதேனும் இலக்கணப் பிழையோடு பேசிவிட்டாலோ, எழுத்துப் பிழையோடு எழுதிவிட்டாலோ பெரிய தவறாக உடனே சுட்டிக்காட்டும் அறிவாளிகள்; தாய் மொழியினை தறிகெட்டுப் பேசுவதும் தாய் மொழியை எழுதத் தெரியாமல் சமாளிப்பதும் கௌரவமாக்கப்பட்டுவிட்டது இந்த காலத்தில்.///

    மிமிக சரியாக சொன்னிர்கள் நண்பரே. இன்று நான் படித்த பதிவுகளில் இது மிகவும் அருமையான பதிவு. யாதார்த்த உண்மைகளை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்த உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. நல்ல முயற்சி ...

    ReplyDelete
  4. பழகியவர்கள் கூட வம்புக்காகவே என் முன் என் தமிழ் மொழியை பழித்துப் பேசும் போதுதான், நான் அவர்களிடம் இருந்து எதில் வித்தியாசப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன். தமிழ் பற்றி பேசியதற்கே இப்படி என்றால் இன்னும் நான் முழுக்க முழுக்க தமிழில் பேசிவிட்டால் என்னை இந்த ஊரை விட்டே.. இல்லை.. இல்லை… இந்த நாட்டினை விட்டே ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

    ReplyDelete