Monday 23 December 2013

ஓடித்திரியும் வாழ்க்கை


வெகு தூர பேருந்து பயணங்களில் மெய் மறந்து தூங்கியவர்களை எழுப்பிவிட்டு, அவர்கள் இறங்க வேண்டிய ஊர் வந்துவிட்டதா என எட்டிப்பார்க்க வைக்கிறார்கள். வேர்க்கடலை, தண்ணி பாக்கெட், வெள்ளரி பிஞ்சி, ஆண்ணாசி பழம் என பயணம் எனும் திரைப்படத்தில் இடைவேளை காட்சிகளில் வந்து பருவநிலைக்கு ஏற்ப கொரிக்க ஏதேனும் கொடுத்துவிட்டு பின்னோக்கி நகர்கிறார்கள். 

எத்தனையோ பயணங்களில் இதய நோயாளிகளின் மரணத்தை தள்ளிப் போட்டது முந்தைய நிறுத்தத்தில் இவர்கள் கொடுத்த புளிப்பு மிட்டாயாகத்தான் இருக்கும். பணம் படைத்தவன் முதல் இல்லாதவன் என யாராக இருந்தாலும் இவர்களிடம் கிடைக்கும் பொருளை எளிதில் வாங்கிவிடலாம். அந்த அளவு மிக மலிவானதே இவர்கள் விற்கும் பொருள் இவர்களின் வாழ்க்கை போல.


தூரத்தில் வரும் பேருந்து எது என போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தெரிந்திருப்பதை விட “டேய் கோவில்பட்டி வண்டி வந்துட்டான்டா… கன்னியாகுமரி வண்டி வர்ராண்டா” என எளிதில் இனம் கண்டுவிடுகிறார்கள். பேருந்து நிலையங்களை நெருங்கும் வெளியூர் பேருந்துகள் சற்று தூரத்திலேயே மெதுவாக ஊர்ந்து வர துவங்குகின்றன இவர்கள் கண்களுக்கு. “வாடா.. வாடா… வேகமா வாடா..” என ஓட்டப்பந்தயத்தில் ஓடி வரும் குழந்தையை உற்சாகப்படுத்துவது போல உற்சாகமாகின்றனர்.

முன்பெல்லாம் பேருந்துகளின் உள்ளே ஏறி எல்லாம் வியாபாரம் பார்த்ததுண்டு. ஆனால் இப்போது அரசு பேருந்துகளில் இவர்களை ஏற்றுவதில்லை. பேருந்து சன்னலோர அண்ணன்களையும் அக்காக்களையும் சார்களையும் மேடம்களையும் வார்த்தைகளால் வசப்படுத்துகின்றனர். வேலை வெட்டி இல்லாதவர்களை கூட சார் என அழைத்து எதையாவது வாங்க வைத்துவிடுகின்றனர். ஒருசில தனியார் பேருந்துகளிலும் கூட இவர்களை ஏற்றுவதில்லை. ஏதோ ஒன்றிடண்டு மனிதாபிமானமிக்க ஓட்டுநரும் நடத்துனரும் உள்ள பேருந்துகளுக்குள் ஏறி தங்களுக்கான போர் புரிந்து வெற்றியோடோ அதிகமான நேரங்களில் வெரும் பைகளோடோ திரும்புகின்றனர். 

வெகுதூரம் செல்லும் பேருந்துகள் என்றால் மகிழ்ச்சியும் வெகுவாகின்றது இவர்கள் முகங்களில். வெகுதூரப் பயணிகள் நிச்சயம் ஏதெனும் வாங்கியே தீர்வார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை. ஆனால் பேருந்து வந்து நின்றதும் அதில் இருப்பவர்கள் தூங்கி எழுந்து, அசுவாசமாகி, இவர்களை பார்த்து, இவர்கள் கைகளில் இருப்பதை யாதென கேட்டு, விலை விசாரித்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.

அருகில் இருப்பவர்களை கூட நம்பாத நாம், பயணங்களில் இவர்கள் கொடுப்பதை மட்டுமே வாங்கி சாப்பிடுகிறோம். அந்த அளவிற்கு அவர்கள் மேல் நம்பிக்கை. அந்த பொருளுக்கு விலை கொடுத்துவிடுகிறோம். அதுதான் அவர்களின் வாழ்க்கை பயணத்திற்கான நம்பிக்கை.

அந்த விலையை வாங்க அவர்களின் உயிரையும் பணயம் வைக்கின்றனர் பயணங்களின் சில சமயங்களில். ஐந்து ரூபாய் வேர்க்கடலை பொட்டலத்திற்கு ஐநூறு ரூபாய் நீட்டும் சீமான்கள் “சில்லரை இல்லையா.. அப்போ வேணாம்பா,” என கைகளில் வாங்கிய பொட்டலத்தினை திருப்பிக் கொடுத்து அந்த ஐந்து ரூபாய் கனவுகளை சிதைத்துவிடுகின்றனர்.

சன்னலோரம் நீளும் கைகளை எந்த ஒரு ஆதாரமும் இன்றி நம்பி தின்பண்டங்களை கையில் தினித்துவிட்டு அந்த கை பைக்குள் கையை விட்டு சில்லரைகளை துலாவிக் கொண்டிருக்கையில் பேருந்து நகரும். அந்த சமயங்களில் ஐந்து ரூபாய்க்கான ஓட்டம் மிக நெடியது. சில்லரை இல்லப்பா என ஐயோ என பரிதாபப்பட்டு பொட்டலத்தை தூக்கி எரிந்து செல்கின்றனர். அதுவும் சில நேரங்களில் சிதறி மண்ணாகிப் போகும். “அண்ணே இதுக்கு நீயே சாப்பிட்டு இருக்கலாம்ணே…” என்றே கத்துகின்றன ஓடும் பேருந்தைப் பார்த்து வரண்டு போன உதடுகள்.

பேருந்துக்குள் ஏறி வியாபாரம் செய்கையில் பேருந்து, நிறுத்தத்தில் இருந்து நகரும் போதும் கைகள் சில்லரைகளை துலாவுகின்றன. அருகில் இருக்கும் நமக்கே “யோவ்.. வேகமா எடுத்து குடுயா.. பாவம் அந்த பையன் இறங்க வேணாமா???” என பதைபதைப் போடு கேட்க தோன்றும். ஆனால் காசை கைகளில் வாங்கிவிட்டு முகத்தில் எந்த ஒரு சலனமும் இன்றி வேகாக நகரும் பேருந்திலும் கைகளில் உள்ள பொருளோடு அவர்களும் சிந்தாமல் சிதராமல் “போட்டும் ரைட்” என டாடா காட்டி இறங்கி பழைய இடத்திற்கு ஓடுகின்றனர்.

திருப்பூரில் மனம் வெருத்து பணி புரிந்த சமயம். கைகளில் பேருந்துக்கு மட்டுமான பணத்தோடு பயணித்த அனுபவம் உண்டு. பசித்த நேரத்தில் வாங்கித் திங்க கூட பணம் இல்லாது தவித்த காலங்கள் அவை. அந்த கால பயணங்களும் முழுக்க அப்படித்தான் இருந்தது.

ஒரு முறை திருப்பூரில் இருந்து திருமங்கலம் வீட்டிற்கு ஓடி வந்துவிட எண்ணம் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் பையை தூக்கி போட்டுக் கொண்டு பேருந்து நிலையம் விரைந்தேன். வாழ்க்கையை முழுவதும் வெருத்த நாள் அது. ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல் இருந்ததால் வந்த வேகத்திற்கு பசி உயிர் போனது. பையில் பணம் உள்ளதென்ற நம்பிக்கையில் வேர்க்கடலை பொட்டலத்தினை கையில் வாங்கிவிட்டு பைகளில் சில்லரையை துலாவினேன். அப்போது தான் தெரிந்தது பயணச்சீட்டுக்கு மட்டுமே பணம் பையில் உள்ளதென. வேறு வழியின்றி அந்த உழைப்பாளியிடம் “மன்னிச்சிக்கிங்கணே.. பஸ்சுக்கு மட்டும்தான் காசு இருக்கு. இந்தாங்கணே என பொட்டலத்தினை திருப்பி கொடுத்தேன். என்னை ஒரு முறை பார்த்தவர். “இருக்கட்டும் தம்பி சாப்பிடுங்க அடுத்து வருகிறப்ப கொடுங்க என கைகளில் வாங்க மறுத்து அடுத்த பேருந்து நோக்கி நகர்ந்தார்.


அவர் கொடுத்த அந்த வேர்க் கடலையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கையும் அவரின் அன்றைய ஐந்து ரூபாய் பசியும் எனது ஒரு வார கால பசியை ஆற்றியது.


இன்னும் நிறைய பயணிப்போம்

சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

10 comments:

  1. Exactly...... I was in the same situation as you. This has happened in 97 or 98. I was coming back from Madurai to Tiruppur. From palanganatham bustand I was short of 5 RS. For my ticket fare to Tiruppur. Didn't know what to do..... Looked around and saw a man in white shirt and dhoti... Stopped in front of him and said sir I'm short of 5 RS for my bus fare and could you help me. He took it from his packet and pushed it in my hand and said vechuko.... I ran to the bus and started the journey.....

    Thinking this sitting in a sophisticated couch placed in a centralized air conditioned apartment and equipped with digital security building..... I feel like meet that person to reward him of his help that day!!!!!!

    ReplyDelete
    Replies
    1. And your feel should be help somebody in need as you were... Thinking that person who helped you in mind...

      Delete
  2. பஸ் பயணங்களின் போது
    இந்த சாலையோர வியாபாரிகள் குறித்து
    நானும் எண்ணிப் பார்ப்பதுண்டு
    அவர்களது நிலையை அவர்கள் நோக்கில் கண்டு
    பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது
    சிறப்பான பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா.. தொடர்ந்து வாருங்கள் :-)

      Delete
  3. உண்மையில் ஓடி ஓடி உழைப்பவர்கள் இவர்கள்தான் !

    ReplyDelete
    Replies
    1. ஆம் :-) தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  4. அருமை அண்ணா......

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி :-) தொடர்ந்து வாருங்கள்..

      Delete
  5. எளிய மனிதர்களே நகர்த்திச் செல்கிறார்கள் எப்போதும், தேங்கி நிற்கும் வாழ்க்கையை...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.. தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.. :-)

      Delete