Thursday, 30 January 2014

இயற்கை சீற்றமா? மனித குற்றமா?

           மழைக்கால பேருந்து பயணங்களில் சன்னலோர இருக்கைகள் ஏனோ காலியாகவே கிடக்கின்றன. சன்னலோர சிலு சிலு காற்றுக்கு ஆவல் கொண்டு முட்டி மோதி ஏறியவர்கள் கூட, சன்னலோர இருக்கைகளை தாராளமாக தாரை வார்ப்பது அதிசயமானதுதான். காரணம், மழைநீர் முத்துப்போல நிற்கும் வலுவலுப்பான இருக்கைகளில் அமர ஏனோ பலருக்கு சங்கடம். லேசான மழைச்சாரல் சன்னலோரம் முகத்தில் பட்டதும் படுவேகமாக சன்னலை அடைக்க பாயும் மனித கரங்கள். பனிவிழும் காலை நேரங்களில் பேருந்து சன்னலை அடைத்துவிட்டாலும் தங்களது காதுகளையும் வெண்பஞ்சினால் அடைத்துவிட்டுத்தான் பயணிக்கின்றனர் ஏராளமானோர். இரு வளையங்களுக்கு நடுவே பின்னப்பட்ட கம்பளி இலைகளை
காதுகள் தெரியாது அடைத்துவிடுகின்றனர் காலை நடை பயில்வோர்.

          வெயில் கொளுத்தும் நேரங்களில் குளிர்சாதன அறைகளிலேயே நேரத்தை கடத்துகின்றனர் அநேகமானோர். இது சாதரணமனது தானே. இதில் என்ன தவறு இருக்கிறது, என கேட்கலாம். இயற்கையின் மாற்றத்தை நாம் ஏற்க தயாராக இல்லை. அந்தந்த கால தட்ப வெட்பத்தினை அனுபவிப்பதற்கு மாறாக அதனிடம் இருந்து எப்படி ஓடி ஒளிவது என்றே சிந்திக்கின்றோம். உண்மையில் இது சரியான போக்கா? இயற்கை நிகழ்த்தும் தட்ப வெட்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாததன் விளைவு- நோய் எதிர்ப்பு சக்தி இப்போது அதிகம் பேருக்கு இல்லை. மாறக்கூடிய பருவ நிலைகளை அனுபவிக்காமல் உடலில் வளரவேண்டிய தசைகளும் பாகங்களும் வளர்வதில்லை என்பதுதான் நிதர்சனம்.

          சிறு குழந்தைகளுக்கு புது நீரில் குளிப்பாட்டுவதற்கு முன் அந்த நீர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக குழந்தையின் வாயிற்குள் நீரை சிறுது ஊற்றி குடிக்கச் செய்வர். இதுதான் நமது பழக்கம். இப்படித்தான் குழந்தை முதல் நாம் ஒவ்வொரு சீதோசனங்களையும் பழக்கப்படுத்திக் கொண்டோம். ஆனால் இப்போது ஏதோ நாகரீகம் என்ற பெயரில் புதிதாக செல்லும் மண்களில் கிடைக்கும் நீரை கூட அருந்தாமல் வேறு எங்கோ இருந்து வரும் புட்டிலில் அடைக்கப்பட்ட நீரை அருந்துகிறோம்.

          நாம் எந்த பகுதியின் தட்ப வெட்பத்தில் வாழ்கின்றோமோ அல்லது பயணிக்கின்றோமோ அந்த பகுதியில் விளையக்கூடிய இயற்கையாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களை பயன்படுத்த நினைப்பதில்லை. இதுவே பெரும்பான்மையான நோய்களுக்கு காரணியாக அமைகிறது. உதாரணத்திற்கு குளிர் பிரதேசங்களில் விளையும் கனிகளை அங்கேயே சாப்பிடும் போது சுவை அதிகமாக உணரப்படுகிறது. ஆனால் அந்த கனியை வெப்ப மண்டலத்திற்கு எடுத்து வந்து சாப்பிடும் போது சுவை குறைவாகவே உள்ளது. அந்த பகுதிக்கு கனி சுவையாகவும் இங்கு சுவை குறைவதும் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களே காரணம்.

          வெயில் காலம் முடிந்து மழைகாலம் துவங்கும் போதும்; மழைக்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கும் போதும் அடுத்த தட்ப வெட்பத்தினை ஏற்றுக்கொள்ள இயற்கையே சளி, காய்ச்சல், தடுமம் போன்ற மாமருந்துகளை நமக்குள்ளேயே ஏற்படுத்துகிறது. நமது உடல் அடுத்த பருவநிலையை ஏற்றுக்கொள்ள தயார் படுத்த ஏற்படும் மாற்றங்களே இவை. ஆனால் நம்மில் அநேகம் பேர் அதனை கூட உணராது ஆங்கில மருந்துகளால் அதனை விரட்டுகிறேன் பேர்வழி என மேற்கொண்டு புது நோய்களையும் பரிசாக பெருகின்றனர்.

          அந்தந்த காலங்களின் தட்ப வெட்ப சூழ்நிலைகளை சரியாக அனுபவிக்காமல் வாழ்ந்துகொண்டு நம்மை அறியாமலேயே இயற்கையை விட்டு தள்ளிப்போக ஆயத்தப்படுகின்றோம். இயற்கையை இயற்கையாக ஏதும் செய்யவிடாமல் தடுப்பதால் பாதிக்கப்படுவது நாம்தான்.
உடலுக்குள் இயற்கையை விடாத அதே குணம்தான் இயற்கையை நம் அருகில் கூட சேர்த்துக் கொள்ள விடாமல் நம்மை பார்த்துக்கொள்கின்றது. குறிப்பாக மழை ஏதோ வானில் இருந்து சாக்கடையை அள்ளி தெளிப்பது போல குடை பிடித்து திரிகின்றனர். மழையையும் ரசிப்பதில்லை. வெயிலையும் வெறுக்கிறோம். பனியிலும் முடங்கிக் கொள்கிறோம். காலநிலைகளை அனுபவிக்க பிடிக்காத நமக்கு இயற்கையின் பல்வேறு முகங்களான ஆறு, கடல், மலை, மரங்கள் என எதையும் பிடிப்பதில்லை. குறிப்பாக ஆறுகள் நம்மிடம் படும் பாடு பெரும்பாடு
         
           தமிழகம் இந்தியாவின் இதர மாநிலங்களைப் போல நீர்வளம் மிக்க மாநிலம் அல்ல. இருந்தும் வற்றாத உயிர்நதி என சொல்லப்படுகிறது காவிரி. இதுவும் கூட நம்முடைய விடா முயற்சியால் சுற்றுச்சூழல் கேடுகளுக்குள்ளாகி அதன் மகத்துவம் இழந்து வருகின்றது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் விவசாய காரணியான காவிரி இன்று மணல் விற்பனையிலும் புகழ் பெற்றுள்ளது. நிலத்தடி நீருக்கு சமாதி கட்டுவது ஆறுகளா மனிதர்களா என்பது நமக்கான கேள்வி.

          காவிரிக்கு அடுத்த பாவப்பட்ட நதி நொய்யலாறு. பெயருக்கு ஏற்றாற்போல நொய்ந்து போய்தான் உள்ளது. ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை நிறம் மாறக் கூடிய வண்ணமயமான நதி என்றும் கூட சொல்லலாம். திருப்பூரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் 1914-இல் 22 பின்னலாடைத் தொழிற்சாலைகள் இருந்தன. ஆனால் 1991 புள்ளிவிவரங்களின் படியே 2800 என சொல்லப்படுகிறது. 1940-இல் இல்லாத சாயப்பட்டறைகள் 2012-இல் ஆயிரத்திற்கும் மேலாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை தொழில்துறை வளர்ச்சி என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அப்பகுதி மக்களின் குடிநீர் நிலையை மனதில் நிறுத்த வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் நோய்களும் உயிரிழப்பும் நேரடியான விளைவாக உணரப்படாததன் மூலம் நம்மைப் போன்றவர்கள் ஏதோ மர்ம காய்ச்சல் என சொல்லி தப்பித்துக்கொள்கிறோம்.

          வைகை நதி மதுரையின் உயிர். மதுரை, ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு விவசாய ஆதாரமே இந்நதி தான். மணல் வியாபாரத்தில் இப்பகுதியும் இப்போது சளைத்ததில்லை. ஆற்றில் நீர் ஓடாத போது இது குப்பைக் கிடங்கு முதல் சகல உபயோகத்திற்கும் பயன்படுகிறது. சாயப்பட்டறை கழிகள் முதல் அரசு மருத்துவமனையின் பிணவறை கழிவுகள் வரை தாங்கிக் கொண்டு இன்னும் கூட சாக்கடையாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.

          அமராவதி, கொடகனாறு, தாமிரபரணி என இன்னும் ஆங்காங்கே உள்ள சிறு ஆறுகள் கணக்கில்லாமல் மனிதர்களால் சிதைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு சாயகழிவுகளை கலந்துவிட்டு  மணலை விற்று தின்று விட்டு கிடக்கிறது. மனிதர்கள் நல்லவர்களாகவும் இயற்கை துரோகம் செய்வதாகவும் பழி போடப்படுகிறது.
இயற்கையை ரசிக்கவில்லை பிடிக்கவில்லை என்பதற்காகவே அதை வைத்து காசு பார்க்கவும்.. அதை காவு வாங்கவும் துணிந்துவிட்டோம்.

          இயற்கையை திசை மாற்றியதன் விளைவுகளில் ஒன்று கடந்த ஆண்டு உத்ரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு. ஐந்தாயிரம் மனித உயிர் பலியாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மையான எண்ணிக்கை நமக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுக்கலாம்.
இயற்கை எழில் கொஞ்சும் மலை வளம் கொண்ட உத்ரகாண்ட்டில் ரிஷிகேஷ், ஹரித்வார், கங்கோத்ரி, பத்ரிநாத், கோதர்நாத் போன்ற புனித தலங்கள் நிறைந்தே காணப்படுகின்றன. மலைப்பகுதிகளில் இருக்க வேண்டிய கட்டமைப்பு விதிமுறைகளை மீறியே இத்திருத்தலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. சிறிது பெரிதாக மொத்தம் 24 ஆறுகள் உத்ரகாண்ட்டை நனைத்துச் செல்கின்றன. இதன் ஓடு பாதைகளையும் நூற்றுக்கும் அதிகமான நீர் மின் நிலையங்கள் தங்களின் தெவைக்கேற்ப திசை திருப்பிக்கொண்டுள்ளன. மின் ஆற்றல் தேவையானது தான் ஆனால் காட்டுப்பாதைகளில் சுரங்க தொழிற்சாலைகளை வெத்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் மின் வசதி பெற ஆறுகள் திசை திருப்பப்படுவதுதான் வேதனையானது. வளர்ச்சித்திட்டங்களுக்காக ஆற்றினை திசை திருப்பியதாக சொல்லப்படலாம். மனித வளங்களின் மேல் அக்கறை இல்லாமல் தீர்மானிக்கப்படும் வளர்ச்சித்திட்டங்கள் நிதி வளத்தினை நோக்கி மட்டும் ஓடி என்ன பயன்? மனித வளம் இல்லாத நிதி வளம் எதை சாதிக்க என்பதை நமக்குள் நாமே கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

          ஆறுகளின் நிலையை விட பூமித் தாயின் கருணைப்பால் சுறக்கும் மார்பகங்களான மலைகளின் நிலை பெருங்கவலை கொள்ளவைக்கிறது. மலைகளை வெட்டி எடுப்பதற்கும் இயற்கை சீற்றத்திற்கும் என்ன தொடர்பு என வினா எழுகிறது. உதாரணத்திற்கு மதுரை இது வரை வந்த சுனாமிகளுக்கோ நிலநடுக்களுக்கோ எந்த ஒரு சிறு அசைவும் அசைந்ததில்லை. விஞ்ஞான ரீதியாக பார்க்கையில் மதுரையை சுற்றி நிற்கும் மலைகள் நில அதிர்வுகளை மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்குள் கட்டுப்படுத்திக்கொண்டு உள்ளே விடுவதில்லை என்றே அறியப்படுகிறது. அவ்வாரான மலைகள் இல்லை எனில் சிறு நடுக்கங்களும் நம்மை ஒட்டுமொத்தமாக பரலோகம் சேர்த்திடும்.

            அணு உலைகள் ஏற்படுத்திய அழிவுகளை இங்குலாந்தின் விண்ட்ஸ்கேல், ரஷ்யவின் மயாக், அமேரிக்காவின் மூன்று மைல் தீவு, செர்னோபில், புகுசிமா போன்ற இடங்களில் கண்டுவிட்டோம். கல்பாக்கத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்துவிட்டு ஏதோ உயிரை விட மின்சாரம் உயர்ந்ததாக எண்ணி அணுஉலைகளை ஆதரிக்கும் வரை வந்துவிட்டது நமது இயற்கை மீதான வெறுப்பு.
இது இயற்கை மீதான வெறுப்பு அல்ல. எங்களின் தேவைகளுக்கான எதிர்பார்ப்பு என சொல்லிக் கொள்ளலாம். நாம் தேவைகளின் எதிர்பார்ப்பு அனைத்தும் இயற்கையிடம் கிடைக்கையில் நாம் ஏன் அதனை சுறக்கவிடுவதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு காரணம் முதல் பத்திதான் பதில். நாம் இயற்கையை விட்டு ஒதுங்கிச் செல்கிறோம். இப்படி ஒதுங்கிச் செல்வது தான் முதல் நிலை. இயற்கையின் முக்கியத்துவத்தை பலன்களை பயன்களை நாம் அறிந்து கொள்ள இயல்வதில்லை.

இயற்கையோடு இயைந்து வாழ
இயற்கையை பராமரிப்போம் நமது குழந்தையாக;
இயற்கையை நேசிப்போம் நமது நமது தாயாக;
இயற்கையிடத்து பிரியாதிருப்போம் நண்பனாக;

இயற்கை மேல் காதல் கொள்வோம் காதலிக்கும் மேலாய்.

-பாடுவாசி
thamizhmani2012@gmail.com


*கதிர் பொங்கல் மலரில் இந்த கட்டுரை வெளிவந்து இருப்பதனை மகிழ்வுடன் பகிர்கிறேன்

No comments:

Post a Comment