25-04-2015 அன்றைய தினம் சில்லென
காற்றோடு தன்னை துவங்கிக் கொண்டது. விடியும் முன் நல்ல மழை. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும்
விட்டபாடில்லை. பசுமைநடைக்கு கிளம்ப வேறு நேரம் கடந்து கொண்டே இருந்தது. நனைதல் மிகப்
பிடித்தமானது, எனவே அதனை வழிமொழிந்து நண்பர்களோடு பயணம் தொடர்ந்தது. இன்னும் விடியவில்லை.
அனைத்து புறத்தில் இருந்து சங்கமிக்கும் வாகனங்களும் குளித்து தலை துவட்டாமலே சுற்றிக்
கொண்டிருந்தன. எங்கும் மழை எதிலும் மழை. இருள் பலரின் துயரங்களை இறக்கி வைக்கும் சந்தர்ப்பம்.
அழுதாலும் தெரியாது என்பதாலேயே இருளில் கொட்டித் தீர்ப்பவர்களை கண்டிருக்கிறேன். இருட்டில்
பொழியும் மழைக்கும் என்ன சோகமோ தெரியவில்லை, எங்களிடம் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது.
மதுரை பெரியார்நிலையம் அருகில்
மதுரை நண்பர்களோடு இணைந்து கொண்டோம். சற்றே விடிந்திருந்தது. மதுரையும் மழையில் தகதிமி
ஆடியது வெளிச்சத்திற்கு வ்ந்தது. பேருந்து கிளம்பி கொடைக்காணல் மலை நோக்கி நகர்ந்தது.
மழை, வழி நெடுக தன் தடத்தினை விட்டுச் சென்றிருப்பது பச்சையாக தெரிந்தது.
கோடைக்காணல் மலை ஏறத் துவங்கியது
பேருந்து. இந்த மழை இந்த மலையையும் விட்டு வைத்திருக்கவில்லை போலும். பாறைகள் எங்கும்
மழையின் சுவடுகள் நிறைந்து வழிந்தது. பாறை இடுக்குகளில் இருந்து குறு அருவிகள் கசிந்து
கொண்டே இருந்தன. ஓங்கி வளர்ந்த மரங்களும் தத்தம் வேர்களை கால்களாக ஊன்றி நின்று கொண்டு,
தன் பங்கிற்கு மழை நீரை இரைத்து வடித்துக் கொண்டிருந்தன.
கொடைக்காணலுக்கு சுமார் 30 கிலோமீட்டர்
தொலைவிற்கு முன்பு வலது பக்கம் திரும்பிய சாலையில் பேருந்தும் திரும்பியது. யூகலிப்டஸ்
மரங்கள்தான் கொடைக்கானலின் வனப்புக்கு காரணம் என்றும், தேயிலை, காப்பி பயிர்கள்தான்
மலைகளின் பசுமைக்கு அச்சாரம் என்றும் எண்ணிக் கொண்டிருந்த எனது பள்ளிக் காலத்து கொடைக்காணல்
பயணம் வேறு. இன்று பசுமைநடையின் மூலமாக நான் காணும் கொடைக்காணல் வேறு. முற்றிலும் மாறுபட்ட
மரங்கள். இவைகளே இப்பகுதியில் பாரம்பரியமாக தோன்றி வளர்ந்து நிற்கும் மரங்கள். இவ்வகை
மரங்களை கொண்டதுதான் வனம்.
கொடைக்காணல் பகுதியில் இருக்காத
அமைதியும் குளிரும் தாண்டிக்குடியில் கிடைக்கிறது. அதற்கு இந்த சுந்தர வனங்கள் தான்
காரணம். காடுகளை தங்கள் பிள்ளைகளை போல பாதுகாக்கும் இப்பகுதி மலை வாழ் மக்களும் இத்தகைய
எழில் நிறைவுக்கு காரணகர்த்தாக்கள். மரங்களையும் காடுகளையும் மாத்திரம் இவர்கள் பாதுகாக்கவில்லை.
3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்களையும் இவர்கள் தங்கள் வாழ்க்கையோடு இணைத்து
வாழ்ந்து வருகிறார்கள். காலம் காலமாக இப்பகுதியில் வாழும் இம் மக்களால்தான் 3500 ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த முன்னோர்களின் ஈமச் சின்னங்களான ஈமக்குழிகளும் முதுமக்கள் தாழிகளும் கற்திட்டைகளும்
கற்பதுக்கைகளும் பாதுகாக்கப்படுகிறது. நகரப்பகுதியில் இது போன்ற சின்னங்கள் இருந்தால்
அதனை தமதாக்கி அந்த கற்களை பெயர்த்தெடுத்து சமையலறையிலும் தரையிலும் இட்டு புலங்கிட
துவங்கியிருப்போம். அந்த பகுதிகளில் கல்லை நட்டு வியபாரம் செய்து அங்கு தொழிற்சாலைகளை
எழுப்பியிருப்போம், வீடுகளை வடித்திருப்போம்.
ஆனால் முன்னோர்களின் வாழ்வியலையும்
பண்பாட்டையும் பேணி, இன்னும் சிறு சிதிலம் கூட அடையாமல் பல்வேறு கற்திட்டைகளையும் அப்பகுதிகளையும்
இம்மக்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தொல்லியல் சின்னங்கள் பற்றி
தஞ்சை பல்கலைக் கழக தொல்லியல் துறை பேராசிரியர் செல்வக்குமார் அவர்களது விளக்கம், முன்னோர்களின்
வாழ்வியலை உணர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. கன்னியாகுமரி முதல் குஜராத் வரை நீண்டு கிடக்கும்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கொடைக்காணலில் இதுவரை எண்ணற்ற தொல்லியல் சின்னங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பண்ணைக்காடும் தாண்டிக்குடியும் அதனை சுற்றியுள்ள
இதர மலை கிராமங்களும் முக்கியமானவை. இங்கு தான் அதிகமான அளவில் தொல்லியல் சின்னங்கள்
கிடைத்திருக்கின்றன. கொடைக்காணல் போல வியாபார தலமாக மாறாமலும் கார்ப்ரேட் நிறுவனங்கள்
அபகரித்திடாத காரணத்தினாலும் இன்றும் இப்பகுதி அதன் பழமைத் தன்மை மாறாமல் இருக்கின்றது.
நான்கு புறமும் தட்டையான பெரிய
கற்களால் தடுப்பு அமைக்கப்பட்டு அதற்குள் இறந்தவர்களின் உடலை இட்டு மூடுகல் கொண்டு
மூடி வைப்பது கல் திட்டைகளின் முறை. இதே போல சற்று ஆழமாக தோண்டி தாழிகளில் உடல்களை
இட்டு வைப்பது கல்பதுக்கை முறை. அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் ஆபரணங்களையும்
மட்டுமல்லாது அவர்கள் சாப்பிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் தானியங்களையும் உள்ளே படைத்திருக்கிறார்கள்.
தாண்டிக்குடியில் உள்ள கல்பதுக்கை
ஒன்றில் 5 அடி உயரமான இரும்பு கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து
அடி கத்தியை சுழற்றும் அளவுக்கு அங்கு புதைக்கப்பட்ட இனக் குழுத் தலைவன் எவ்வளவு பராக்கிரமசாலியாக
இருந்திருக்க வேண்டும் என்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. அது போக அந்த பதுக்கையை சுற்றி
வெளிப்புறத்தில் 46 மண் பானைகளை புதைத்து வைத்திருந்துள்ளனர். இதன் மூலம் அந்த இனக்குழுவில்
நாற்பத்து ஆறு தலைக்கட்டுகளின் செய்முறையாக அது இருக்கலாம் என கருதப்படுகிறது.
மற்ற ஈமச்சின்னங்களை விட சற்று
பெரிய அளவிலும் உள்ளிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை வைத்தும் அங்கு இடப்பட்ட முன்னோர்,
அப்பகுதி மக்களால் கொண்டாடப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது புலனாகிறது. ஒரு கற்திட்டைக்கும்
மற்ற கற்திட்டைக்கும் நடுவில் விடப்பட்டிருக்கும் இடைவெளி அடுத்த இனக்குழுவினர்களில்
இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம் என்கிறார் பேராசிரியர் செல்வக்குமார்.
இறந்தவர்களை எரிக்கும் வழக்கமே
நமது பாரம்பரிய வழக்கமாக பேசுகிறோம். கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வரை இறந்தவர்களை புதைத்தே வந்திருக்கிறோம். அப்படியானால் எரிக்கும் வழக்கம் எப்படி
வந்தது யாரிடம் இருந்து வந்தது என்பது நமக்குள் எழும் கேள்வி. ஆரியர்களே நெருப்பினை
முதன்மையென கொள்பவர்கள் என்பதற்கு உலவியல் பூர்வ காரணங்கள் உள்ளன.
ஆரிய பழக்கம் கலப்படமில்லாத இந்த
மலை வாழ் மக்களிடம் இருந்து நாம் நம் அசல் பண்பாடுகளை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
நடுகல் வழக்கத்திற்கும் முன்பானதாக இந்த கற்திட்டை வழக்கம் உள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள்
முன்வைக்கிறார்கள். இப்பகுதி மக்களால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு வரை இந்த கற்திட்டைகள்
வழிபடப்பட்டுள்ளது. இன்றும் நடுகல் வழிபாடு காணப்படுகிறது. ஆனால் அவற்றை இடையில் புகுந்த
பிள்ளையார் கோவிலின் காவல் தெய்வமாக வாசலோடு நிறுத்திவிட்ட அவலமும் அங்கு காணப்படுகிறது.
இப்படி வரலாற்று எச்சங்களை பாதுகாத்து
வந்திருக்கும் இவர்களின் தொழில் என்ன, வாழ்வியல் என்ன அவர்களது பேச்சில் இருந்து அறிந்தவை:-
இப்பகுதியில் வாழ்ந்த முன்னோர்கள்
ஐந்து வகையாக நிலத்தினை பிரித்து வேளாண்மை செய்துள்ளனர். அடர் வனப் பகுதிகளில் ஏலக்காய்
பயிரிட்டுள்ளனர். சருகலான இடங்களில் வாழையும், சமதளமான பகுதிகளில் கேழ்வரகும், நீர்
செழும்பான பகுதிகளில் நெல்லும், வாழ்விடங்களுக்கு அருகில் காய்கறிகளையும் பயிரிட்டுள்ளார்கள்.
அன்றைக்கு வெளியில் போய் வாங்க வேண்டியது என்றால் எண்ணை, உப்பு, புளி போன்றவைதான்.
மற்ற உணவுப் பொருட்கள் அனைத்தும் அவர்களது வீடுகளிலேயே தாராளமாக இருந்துள்ளது.
வெள்ளையர்கள் அடிமையாக வைத்திருந்த
போது வனங்களை அழித்து தேயிலையும் காப்பியும் பயிரிட்டு ஏற்றுமதி செய்யத் துவங்கினார்கள்.
பழம் பெரும் மரங்களை வெட்டி அழித்து யூகலிப்டஸ் விளைவித்தார்கள்.
இயற்கை என்பது அந்தந்த பகுதிக்கு
எது உகந்ததோ அதனை வளர்த்து பராமரிப்பது தான் சரியான முறை. ஆனால் ஆஸ்திரேலியா சதுப்பு
நிலக்காடுகளில் வளரக் கூடிய யூகலிப்டஸ் மற்றும் க்ரௌலியா மரங்களை இந்த பகுதியில் நட்டு
வைப்பது எவ்வளவு அபத்தம். ஒரு யூகலிப்டஸ் மரம் ஒரு நாளைக்கு 120 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
அதுமில்லாது அது வெளியிடும் வாயு காற்றில், மேகத்தில் இருக்கும் நீரையும் பயன்படுத்திக்
கொள்ளும் தன்மை கொண்டது. பண்ணைக்காடு, தாண்டிக்குடி பகுதிகள் அந்த தாக்கத்தில் இருந்து
தப்பித்திருந்தது.
வெள்ளையர்கள் 1883-ல் இயற்றிய
வனச்சட்டம் தான் துவக்கம். அப்போது அனைத்து ஏலத் தோட்ட நிலங்களும் விவசாயிகளிடம் தான்
இருந்துள்ளது. அப்போதைய வனச்சட்டம் மரம் வெட்டக் கூடாது என்பது மட்டும் தான். ஏலம்
பயிர் செய்ய நிழல் தேவை என்பதால்தான் வனப்பகுதியில் பயிர் செய்து வந்துள்ளார்கள் விவசாய
முன்னோர்கள். எனவே அவர்களுக்கும் மரங்கள் தேவைதான். அவர்களது விவசாயம் இயற்கை சார்ந்தும்
இயற்கையை பயன்படுத்தியும்தான். ஆகவே மரங்களை மக்கள் வெட்டியதும் இல்லை, எனவே அந்த சட்டம்
அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பாகவே அமைந்திருந்தது.
அதன் பிறகு இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதி என அறிவித்தது வனச்சட்டம். எனவே இந்த வனப்பகுதி அரசாங்கத்திற்கு மட்டும்
தான் சொந்தம் எனச் சொல்லி அந்த நிலங்களில் பயிரிட்டவர்களுக்கு குத்தகை வரி நிர்ணயம்
செய்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை புதுப்பிக்கும் முறை அமலுக்கு
வந்தது. பிறகு புதுப்பிக்கும் தொகை உயர்த்தப்பட்டது. இப்படியாக தொடர்ந்து அப்பகுதி
பழங்குடி மக்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்குள் படிப்படியாக சிக்கிக் கொள்ளத் துவங்கினர்.
1940-க்கு பிறகு விவசாய நிலங்களை
விற்கவோ வாங்கவோ கூடாது என்று சட்டமியற்றியது அரசு. (1936 முதல் 1940 வரை நிலம் வாங்கியதற்கும்
விற்றதற்கும் ஆதாரங்கள் இம்மக்களிடம் உண்டு.)
சுதந்திரத்திற்கு முன்பு வரை இருந்த
இந்த நிலை சற்றும் மாறாமல் இன்றும் நடைமுறையில் இருப்பது தான் வேதனை. வெள்ளையர்களுக்கு
எதிராக போராடியவர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் எப்படி இன்றும்
நடைமுறையில் உள்ளது கேலிக் கூத்தோ, வெள்ளையர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெக்காலே
கல்வி முறை இன்றும் நம் குழந்தைகளால் மனப்பாடம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே
போலதான் வனச்சட்டத்திற்கு ஊடான இவர்களது வாழ்க்கையும்.
அதுவரை இயற்கை விவசாயம் செய்து
கொண்டிருந்த இப்பகுதி விவசாயிகளையும் இந்த பசுமைப் புரட்சி விட்டுவைக்கவில்லை. எந்த
ஒரு கிராமத்திற்கு சென்று எந்த ஒரு வயோதிக வேளாண் குடியிடம் பேசினாலும் இந்த பசுமைப்
புரட்சியை கிழித்து தொங்கவிடுகிறார்கள். அதே உணர்வு இவர்களிடமும் தெரிவது புதுமையில்லை.
ஆனால் அந்த பசுமை புரட்சி இவர்களது வாழ்வில் வேறு மாதிரியான தாக்கங்களை விளைவித்துள்ளது.
மேய்ச்சல் நிலங்களை வனத்துறை கையகப்படுத்தியது.
ஒவ்வொரு கிராமத்திலும் 200 ஏக்கரில் இருந்து 400 ஏக்கர் வரை வனத்துறை கைகொண்டது. புல்வெளிகள்
(Gross Land) இருக்கும் அந்த பகுதியில் விவசாயிகளது கால்நடைகள் மேய்வதற்கு
ஆண்டுக்கு 5 ரூபாய்க்கு நுழைவுச் சீட்டு வழங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு அந்த மேய்ச்சல்
நிலத்திற்குள்ளும் நுழையக் கூடாது என்கிறது அரசு. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை
மேய்க்க இடமற்று, இயலாமல் விற்ற கொடுமைகளும் அரங்கேறியுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டுக்குள்
விவசாயிகளின் கால்நடைகள் வரக் கூடாது என தடுத்த வனத்துறை தன் கட்டுப்பாட்டு பகுதியில்
இருக்கும் காட்டு மாடுகளை கவனிக்கத் தவறியது. வேளாண் நிலங்களுக்குள் அவை புகுந்து பயிர்களை
மேய்வதை விவசாயிகளால் தடுக்க இயலவில்லை.
இங்குதான் பசுமைப் புரட்சி தன்
வேலையை காட்டியுள்ளது. அது வரை இயற்கையாக விவசாயம் செய்து வந்தவர்களுக்கு வேதியல் உரங்களை
கொடுத்து நிலத்தை மலடாக்க துவங்கியது அரசு. வேதியல் உரங்களிட்ட அவ்விவசாயிகளின் நிலங்களில்
மேய்ந்த காட்டு மாடுகள் தொடர்ந்து இறக்கத் துவங்கின. காட்டு மாடுகள் எந்த விவசாயி உடைய
நிலத்தில் விழுந்து சாகிறதோ அவர்தான் அதற்கு முழுப் பொறுப்பு. அந்த விவாசயி மீது வனத்துறை
நீதிமன்றத்தில் விசம் வைத்து வன விலங்குகளை கொன்றதாக வழக்கு தொடரும். நீதிமன்றம் நிர்ணயிக்கும்
அபராதத்தினை செலுத்த வேண்டும்.
பல நாள் உழைப்பும் நேரமும் பணமும்
கொண்டு வளர்த்தெடுத்த அவர்களது வெள்ளாமையை ஒரே நாளில் வனவிலங்கு அழித்து நாசம் செய்துவிடும்.
ஆனால் அதற்கு அவர்கள் எங்கும் முறையிட முடியாது, இழப்பீடு கிடையாது. வன விலங்குகளை
பாதுகாக்க தவறிய வனத்துறை விவசாயிகளிடம் தங்கள் வீராப்பினை காட்டுகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த பகுதியை
வன விலங்கு சரணாலயமாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது அரசு. பாதுகாக்கப்பட்ட வனத்துறை
என்பது இப்போது எட்டாவது நிலையில் இப்பகுதியை வைத்துள்ளது. வனவிலங்கு சரணாலயம் என்பது
இரண்டாவது நிலைக்கு இப்பகுதியை கொண்டு சேர்த்திடும். எனவே இருக்கும் சட்டங்கள் இனி
கடுமையாக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக பல்லாயிரம்
ஆண்டுகளாக இப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இனம் முற்றாக வெளியேற்றப்படும்
அவல நிலை உள்ளது. ஏற்கனவே ஆதிவாசி (பலியர்கள்) மக்களில் ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றி
மொட்டை பாறைகளில் குடியமர்த்தியுள்ளது. இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை பிடுங்கிவிட்டு
அரசு துரோகம் செய்திருக்கிறது. அவர்களுக்கான வாழ்வாதாரங்களை அழித்துவிட்ட அரசசாங்கம்
அவர்களை நக்சல்கள் என சொல்லவும் அஞ்சாது
நாங்கள் தங்கியிருந்த அந்த பங்களாவின்
விராண்டாவில் இப்பெரிய கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த இரவில்
ஒரு சிறிய குச்சி விளக்கின் மங்கிய ஒளியில் அப்பியிருக்கும் இருளில் இம்மக்கள் இறக்கிய
துயரங்கள் ரணமாய் இருக்கிறது. இன்று காலை இருளில் மழை இறக்கிய அந்த சோகத்தை ஒத்திருந்தது
அவர்களது குமுறல்.
மறுநாள் - 26-04-2015 மலைகளுக்கு
நடுவே விடிந்தது. இப்பகுதி மக்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தும் பசுமைநடையின் முக்கிய
நிகழ்வு துவங்கியது. 3500 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதற்கு
தடயங்களான ஈமச்சின்னங்களின் புகைப்பட கண்காட்சியை மாவட்ட வன அதிகாரி திரு.டி.வெங்கடேஷ்
அவர்கள் திறந்து வைத்தார். இவ்வரலாற்று நிகழ்விற்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன்
அவர்கள் தலையைவகித்தார். புகைப்பட கண்காட்சியின் நோக்கம் குறித்து தஞ்சை பல்கலைக் கழக
பேராசிரியர் டாக்டர்.செல்வக்குமார் அவர்கள் பேசினார். பசுமைநடையினைப் பற்றி அதன் முயற்சியாளர்
எழுத்தாளர்.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் பேசினார். வட்டாச்சியர் திரு.சுரேஷ் வாழ்த்துரை
வழங்கினார். இந்நிகழ்வில் பசுமைநடை தன்னார்வளர்களும், தாண்டிக்குடியை தாய் கிராமமாக
கொண்ட 52 கிராமத்தினுடைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இப்பகுதியில்3500 ஆண்டுகளுக்கும்
மேலாக மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கான சான்றுகளை அரசு அதிகாரிகள் திறந்துவைத்தும்,
வாழ்த்தி பேசியும் பெருமை செய்திருக்கிறார்கள். இந்த மண் இப்பகுதி மக்களின் பூர்வீக
மண் என்பதனை அவர்களது மனதிலும் உழுது விதைத்திட இது முதல் படியாக அமைந்துள்ளது. இனி
வரும் காலங்களில் இம் மக்கள் தங்களது வாழ் நிலங்களை தற்காத்துக் கொள்ள நங்கூரத்தின்
நாணாக இந்த புகைப்பட ஆவணங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இது இந்த சிறு பகுதியின் வரலாறுதான்.
இன்னும் இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பல்வேறு மலை வாழ் மக்களின் சோக வரலாறுகளையும்
சுமந்து கொண்டுதான் இம்மலை தம்மனதை கல்லாக்கிக் கொண்டுள்ளதோ தெரியவில்லை.
அன்பும் நன்றியும்
பாடுவாசி ரகுநாத்
thamizhmani2012@gmail.com
paaduvaasi@gmail.com
ஐந்து அடி கத்தி உட்பட பல தகவல்களுக்கு நன்றி ஐயா...
ReplyDeletehi this story cover vasanth t.v man-nu-pesum-sari-thirem daily 9.00 p.m
ReplyDelete