Tuesday 14 August 2012

வாழிய சுதந்திர இந்தியா!!!

          சின்ன வயசில் இந்தியனாக நான் இருந்த போது பள்ளிகளில் கொண்டாடப்படும் சுதந்திர தின மற்றும் குடியரசு தின விழாக்களில் மிக ஆர்வமாக கலந்துகொள்வேன். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து அந்த தேசிய விழாவுக்கென பிரத்தியேகமாக துவைத்து வெளுக்கபட்ட வெள்ளை சட்டையினையும் காப்பி நிற அரைக்கால் டவுசரையும் அணிந்து கொண்டு சாப்பிடாமல் கொள்ளாமல் கொடி  ஏற்றும் விழாவுக்கு ஓடியுள்ளேன். காலையில் சட்டையில் குத்திக்கொள்ளும் இந்திய தேசிய கொடியினை இரவு வரை அகற்றாமல் அப்படியே தூங்கிய காலங்களும் உண்டு. பள்ளியில் நீராருங்கடலுடுத்த பாடலை விட ஜனகன என்ற ஹிந்தி பாடலை விரும்பி பாடிய காலங்கள் அவை. கொடி  ஏற்றி பள்ளியில் கொடுக்கும் ஆரஞ்சு மிட்டாய்களை (எண்ணிக்கையும் ஆறு அஞ்சி தான்) விட்டுக்கு பத்திரமாய் கைகளில் மூடி கொண்டு வந்து என் அக்கா, அப்பா, அம்மாவிற்கு கொடுத்து சுவைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
என் அக்காவின் பள்ளியில் மட்டும் இருபத்து ஐந்து பைசா சாக்லேட் மிட்டாய் கொடுப்பார்கள், அதுவும் நான்கு தான். அதையும் ஆளுக்கொன்றாக சுவைத்து அந்த கால சுதந்திர தின விழாவினை கொண்டாடினோம். பள்ளி கொடி ஏற்றம் முடிந்ததும் தூர்தசனில் டில்லியில் நடை பெரும் சுதந்திர தின விழா அணிவகுப்புகளை ஒலிபரப்புவார்கள் அதை கண வேண்டுமே என்ற ஆர்வத்தில் பள்ளியில் இருந்து ஓடி வந்த காலங்கள் அவை. சுதந்திர தின அணிவகுப்பு முடிந்ததும் ரோஜா, இந்திரா என இதில் ஏதாவது ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகும் அந்த தூர்தசன் தமிழ் அலைவரிசையில்.

          என் வாழ்க்கையில் இப்படியே சென்று கொண்டிருந்த இந்த தேசிய தினங்கள் என் கல்லூரி தினங்களிலும் தொடர்ந்ததுண்டு. ஆனால் கடைசி ஆண்டு கல்லூரி தேசிய விழாக்களின் மேல் ஒரு வெறுப்பு உண்டானது தற்ச்செயலானதே. நான் பள்ளி, கல்லூரி படிப்பினை முடித்து பணி சம்பந்தமாக அப்போது தான் இந்த இந்தியாவுடன் பழக நேர்ந்தது. என் பள்ளி பருவத்தில் நான் மதித்த இந்தியாவா இது, என என்னை கேள்வி கேட்க்க வைத்த சம்பவங்கள் பல நிகழ்ந்தேறின.

          மனிதனை மனிதனாக பார்க்காமல் அவனை ஒரு காட்டுவாசியாக எண்ணி நகையாடி அந்த பகுதி பெண்களை ஏன் பெண் குழந்தைகளை கூட பாலியல் வன் கொடுமை செய்து சீரழிக்கும் மனிதர்கள் நிறைந்த நாடு இந்த கேடுகெட்ட நாடு. யாரோ ஒருவர் செய்த தவறுக்கு இந்தியா என்ற ஒரு நாட்டினையே எப்படி குற்றம் சொல்ல முடியும் என்று யாராலும் கேட்க்க முடியாது. ஏனென்றால் அந்த காட்டு வாசி என சித்தரித்துள்ள பெண்களை இது போல வன்கொடுமை செய்வதில் எழுபத்து ஐந்து விழுக்காடு இந்திய ராணுவத்தினரும், இதே இந்தியா நியமித்துள்ள காவல் துறையும் தான். இந்தியா மேல் உள்ள பாசத்தில், அவர்கள் செய்த தவறுக்கு இந்தியா என்ன செய்யும் பாவம் என கேட்கலாம். அந்த இந்தியா அவர்களை தண்டித்திருக்கலாம். ஆனால் இது வரை அப்படி எத்தனை பேர் தண்டிக்க பட்டுள்ளனர்? எத்தனை வழக்குகள் எத்தனை வருடங்களாக நிலுவையில் இருக்கின்றன? அதற்குள் அந்த சம்பவத்துக்கு காரணமான காவாலிகள் இந்த நாட்டின் உதவியோடு தானே வெளியே உலாவி கொண்டு இருக்கிறார்கள். தன் இனத்தவர்களை காக்க வேண்டுமே என்ற எண்ணம் வந்தால் அவனை தீவிரவாதி என சித்தரித்து அந்த இனத்தினையே அழிக்க துடிக்கும் கேடுகெட்ட செயல் இந்தியாவினுடையது தானே? சட்டங்கள் இருந்தாலும், அதன் ஓட்டைகளை ஆள்பவர்கள் அறிந்திருந்தாலும் அதனை அடைப்பதை  விட அந்த ஓட்டையை தங்கள் வசதிக்கு ஏற்ப பெரிதாக்கவே முற்படுகின்றனர்.

          சட்டங்கள் அதிகார வர்கத்திற்கும் பணம் படைத்தவர்களுக்கும் எளிதில் கைக்கு எட்டும் நிலையிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அது ஒரு எட்டா கனியாகவும் இருக்கிறது. டாக்டர்.அம்பேத்கார் அவர்கள் அவர்களின் காலத்தில் இருந்த மக்களை கவனத்தில் கொண்டும் அப்போதைய தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றார்போல சட்டங்களை வகுத்தருளினார். ஆனால் இன்று இருக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற சட்டங்கள் இன்னும் மாற்றி அமைக்கப்படவில்லை. மோட்டார் வாகன சட்டங்கள் கூட இப்போதைக்கு பெருத்து போய் கிடக்கும் வாகன நெருக்கடிக்கு ஏற்றார்போல மாற்றம் பெறாமலே இருப்பது சற்று கேவலமாக இருக்கிறது.

           உதாரணம்: தலைக்கவசம் இல்லாத இரு சக்கர வாகன ஓட்டியிடம் இருந்து நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை அரசு தண்ட தொகை வசூல் செய்கிறது (ஒரு சில நேரங்களில் ரசீது இல்லாமலும் வசூல் நடக்கிறது.) ஆனால் அதே இடத்தில் அங்கீகாரம் பெற்ற தலை கவசங்களை அரசே அவர்களிடம் வசூல் செய்த தொகையில் வழங்கலாமே. தவறுகள் தண்டனைகள் குறைக்கும் என்பது இக்காலத்தில் சாத்தியமாகாத ஒன்று. அவர்களை திருத்துவதே சட்டங்களின் பொறுப்பு. தன் நாட்டின் குடிமகனிடம்  தண்ட தொகை வசூல் செய்ய வேண்டும் என்பது ஒரு அரசின் நோக்கமா,  அவன் திருந்த வேண்டும் என்பது அரசின் நோக்கமா?

          சாராய கடைகளை திறந்து ஊத்திகொடுப்பது அரசின் நோக்கமா? அல்லது நல்ல குடிமகனை குடித்து சீரழிக்காமல் தடுப்பது அரசின் நோக்கமா?

          அணு கழிவுகளை உண்டுபண்ணி நாட்டு மக்களை கொள்வது அரசின் நோக்கமா? அல்லது மாற்று மின் உற்பத்தியை ஊக்குவித்து நாட்டு வளர்ச்சிக்கு உதவுவது அரசின் நோக்கமா?

          வெளி நாட்டு பணக்கார நிறுவன வளர்ச்சிக்கு பாடுபடுவது அரசின் நோக்கமா அல்லது உள் நாட்டு சிறு தொழில்களை வளர்ப்பது ஒரு நாட்டின் நோக்கமா?

          ஆதரவுள்ள மாநிலத்திற்கு மட்டும் ஆதராவாக இருப்பது அரசின் நோக்கமா? அல்லது அனைவருமே நாட்டு மக்களே என்று எண்ணி அவர்களுக்கு ஆற்று நீர் கிடைக்க செய்வது அரசின் நோக்கமா?

          தன் நாட்டு மீனவர்களை பற்றி கவலைகொள்ளாத அலட்ச்சியம் தேசத்தின் இறையாமையின் நோக்கமா? அல்லது தன் நாட்டு மீனவ மக்களை கொல்லும் அடுத்த நாட்டிடம் வீரம் காட்டுவது தேசத்தின் நோக்கமா?

          சொந்த நாட்டு மக்கள் மீதே அக்கறை கொள்ளாத இந்த கேடுகெட்ட இந்தியாவை போயும் போயும் நம்பி பக்கத்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்று கொடுங்கள் என்று கேட்பது எனக்கு என்னவோ  முட்டாள்தனமாகவே தெரிகிறது.

          சுதந்திர தினம் கொண்டாட ஆர்வம் காட்டுவது யாரேன்று தேடிப்பார்த்தேன். மாணவ குழந்தைகள், அரசியல்வாதிகள், பெரும் பண முதலாளிகள். இதில் முதலாமவர்கள் மட்டுமே எந்த குறுக்கு நோக்கமும் இல்லாமல் ஆர்வம் காட்டுகிறார்கள்.

          ஏழைகளும் பாமரர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் இதனை ஒரு பொருட்டாக எண்ணாத தோற்றமே எனக்கு தெரிகிறது. இந்த மூவருமே இந்தியர்கள் என்று தானே இந்த இந்தியா எண்ணுகிறது என்ற சந்தேகத்துடன் விடைபெறுகிறேன்.


நன்றிகளுடன்
சு.ரகுநாத்
 thamizhmani2012@gmail.com

3 comments: