Friday 25 January 2013

பசுமைநடை - மாடக்குளம்

 இந்த முறை பசுமைநடையில் மலை இல்லை கண்மாய்க்குத்தான் செல்லப்போகின்றோம் என்ற தகவல் கிடைத்தது. “என்னப்பா இப்டி பண்ணிட்டாங்க.. அப்போ இந்த முறை மலை ஏற வாய்ப்பில்லையா” என்று புலம்பிக்கொண்டுதான் சென்றேன். பசுமைநடை நண்பர்கள் மதுரை மாற்று (பைபாஸ்) சாலை துவக்கத்தில் எங்களுக்காக காத்திருந்தனர். மாற்று சாலை பாலத்தில் ஏறி இறங்கி இடது கைப்பக்கம் திரும்பி இருசக்கர வாகனங்களில் பயணிக்க துவங்கினோம். கண்மாயை ஆக்கிரமித்து இருந்த குடியிருப்பு பகுதிகளை கடந்து சென்றோம். இடது வலது என மாறி மாறி சென்றதில் சென்ற பாதை மறந்துதான் போனது. ஒரு வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு வந்து நின்றோம்.



கண்மாய்க்குள் தூரத்தில் ஒரே ஒரு கல் மட்டும் செங்குத்தாக ஊன்றி நின்று கொண்டு இருந்தது. ஏதேதோ சின்னங்களும் அதன் கீழே தனக்கான தகவலையும் தாங்கி நின்று கொண்டிருந்தது அந்தக் கல். கண்மாயில் நீர் நிறைந்திருக்கும் போது மூழ்கி விடுவதால் பூஞ்சான் படிந்திருந்த அந்த கல்லினை படிப்பதற்கு ஏற்ப சுத்தம் செய்துகொண்டோம். பசுமைநடை நிறுவனர்.எழுத்தாளர்.அ.முத்துகிருஷ்ணன் அந்த இடத்தினை பற்றி அறிமுக பேச்சினை தொடர்ந்தார். 

அவருக்கு அடுத்தபடியாக தொல்லியல் அறிஞர்.சாந்தலிங்கம் அவர்கள் பேசலானார்.
“மாடக்குளத்தின் கீழ் மதுரை” என பழந்தமிழ் இலக்கியங்கள் சொல்லும் அளவுக்கு மாடக்குளம் பெயர் பெற்றுள்ளது. மதுரையின் நீர் ஆதாரத்தில் பெரும் பங்கு இந்த கண்மாய்க்குதான். யாகங்கள் நடத்த இந்த கண்மாய் மற்றும் விவசாய பகுதிகளை ஆக்கிரமிக்க பிராமணர்கள் முயற்சிக்கின்றனர். அப்போதைய ஆளும் வர்க்கமும் இவர்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த பகுதியில் விவசாய மற்றும் வணிக இனக் குழுக்களாக வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், இந்த பிரமணியத்தினையும் ஆளும் வர்க்கத்தினையும் கூட்டாக சேர்ந்து போரிட்டு எதிர்க்கின்றனர். அந்த போர் படைக்கு தலைமை ஏற்று போரிட்ட ஒரு வீரனுக்கு நடப்பட்ட கல்தான் இந்த வரலாற்றுக் கல். ஏர் கலப்பை முதலான விவசாய கருவிகளை தங்களின் சின்னங்களாக கொண்டிருந்தனர் அந்த ஐந்து பிரிவான விவசாய , வணிக இன குழு மக்கள். அந்த சின்னங்களையே அந்த கல்வெட்டில் செதுக்கியள்ளனர். அதன் கீழ் அந்த போர் தளபதியினுடைய பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் பிரம்மிப்பாக உள்ளது. இது நடந்ததெல்லாம் 12-ஆம் நூற்றாண்டு என்பது இந்த கல்வெட்டின் தொன்மையை ஆராய்ந்து சொல்லப்படுகின்றது. பிராமணியம் தன் செய்கைகளை அப்போது முதல் இப்போது வரை ஒரே மாதிரியே கொண்டிருக்கின்றது என்பதுதான் நான் கற்றுக்கொண்டது. ஆளும் வர்க்கத்தோடு ஒட்டிக் கொள்வதாகட்டும், உழைத்து வாழ்பவர்களை விரட்டுவதாகட்டும் அன்று முதல் இன்று வரை அதே கொள்கையில்தான் இருக்கின்றது. அந்த இன குழு மக்கள் உண்மையில் நன்றிக்குறியவர்கள். அவர்கள் எதிர்த்து போரிடவில்லை என்றால் இன்று மாடக்குளம் கண்மாயை ஆக்கிரமித்து ஒரு பெரிய கோவில் எழும்பி இருக்கும். நீரின்றி மதுரை ஒரு பாலைவனமாகவே ஆகியிருக்கும்.

இன்று இன்னொரு சிறப்பு, கடல் ஆராய்சியாளர் மற்றும் குமரி (லெமூரிய) கண்டத்தினை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள அய்யா.மதிவாணன் அவர்களும் பங்கேற்று சிறப்புறையாற்றினார்.

பசுமைநடையையும் மலைகளையும் ஒரு காலத்திலும் பிரிக்கவே முடியாது. மாடக்குளம் கண்மாய் கரையில் எங்களை வரவேற்று ஒரு மலை இருக்கவே, சும்மா விடுவோமா!!! மலை ஏற துவங்கிவிட்டோம். சுமார் 400 படிகளாவது இருக்கும். மதுரையின் அழகை ஒரு சேர காண வேண்டுமானால் இங்குதான் வர வேண்டும். எங்களிடம் இருக்கும் புகைப்பட கருவியால் நாங்கள் கண்ட மதுரையின் அனைத்து திசைகளையும் ஒரே புகைப்படமாக எடுக்க முடியவில்லை என்பதுதான் வருத்தம்.

வழக்கம்போல வயிற்றிற்கும் சிறுது ஈதுவிட்டு கிளம்ப ஆயத்தமானோம். அடுத்த பயணம் பெரிய பயணம் என்ற எதிர்பார்ப்பினை மட்டும் கொடுத்துவிட்டு எழுத்தாளர்.அ.முத்துகிருஷ்ணன் முடித்துக்கொண்டார். அடுத்த முறைக்கான கூடுதல் எதிர்பார்ப்போடே இந்த பயணம் நிறைவுற்றது.

கொசுரு:-
பண்டைய இனக்குழு மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வங்கத்து எழுத்தாளர்.தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அவர்களால் எழுதப்பட்டு சிங்கராயர் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள “உலகாயதம் – பண்டைய இந்தியப் பொருள் முதல்வாதம் – ஓர் ஆய்வு” என்ற நூலை படியுங்கள்.

உண்மையான வரலாற்றினை தேடி அறிவோம்.
சு.ரகுநாத்.
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. நல்லயிருக்குப்பா...

    ReplyDelete
  2. நல்ல பதிவு நானும் அதில் கலந்து இருக்கிறேன். தாங்கள் குறிப்பிட்ட புத்தகம் மதுரையில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா
      நான் நண்பர் ஒருவரிடம் இரவல் வாங்கி வைத்து படித்து வருகிறேன். அந்த புத்தகத்தினை சொந்தமாக வாங்க நானும் தேடி அழைகிறேன். கிடைத்ததும் தகவல் தருகிறேன்..

      Delete