Friday 4 April 2014

குக்கூ… எனும் ஓவியம்

பார்வையற்றவர்கள் என்ற வார்த்தையை பொய்யாக்கியிருக்கிறது குக்கூ. இந்த திரைப்படத்தினை கண்ட எனக்கு அந்த வார்த்தையை உச்சரிக்க வாய் கூசுகிறது, எழுத கை கூசுகிறது. உண்மையில் நாம் தான் அவர்களின் உலகத்தை காண முடியாத, அவர்கள் ரசிக்கும் வண்ணங்களை ரசிக்க இயலாத  பார்வையற்றவர்களாக சுற்றித் திரிகிறோம். அவர்களை மாற்றுப்பார்வையுள்ளவர்கள் என எழுதுவதும் பேசுவதும் மட்டுமே சரியாக இருக்கும். இந்த உண்மையை உரக்க சொன்னதற்காக குக்கூவுக்கும் அந்த ஓவியத்தினை திறம்பட தீட்டிய அறிமுக இயக்குனர் ராஜூமுருகனுக்கும்

வாழ்த்துக்களும் நன்றிகளும்.


ராஜூமுருகனுக்கு திரைப்பட இயக்குனராக அறிமுகம் என்றாலும், எழுத்துலகில் அவருக்கென ஏற்கனவே தனி இடம் இருக்கின்றது. ஆனந்தவிகடனில் வார வாரம் வெளிவந்த “வட்டியும் முதலும்” மூலம் ராஜூமுருகனின் எழுத்துகள் எனக்கு பரிட்சயம். ஒவ்வொரு வாரமும் வட்டியும் முதலும் வாசிப்பதற்காகவே தவறவிடாமல் விகடன் வாங்கிய காலங்கள் அலாதியானவை. அவரது எழுத்துகளில் வரக்கூடிய மனிதர்களை நாம் நம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது ஒரு சாலை சந்திப்பில் நிச்சயம் சந்தித்திருப்போம். அவர்கள் பேசிய வார்த்தைகள் என்றைக்கேனும் நமது செவிகளில் நிச்சயம் விழுந்திருக்கும்.  இப்படியாக எதார்த்த வாழ்வியலை, சாமானியனின் வாழ்க்கை பதிவை அவரது எழுத்துகளில் தொடர்ந்து வாசித்து மெய் சிலிர்த்து போனவர்களுள் நானும் ஒருவன்.

அதே வாழ்வியல் பதிவுகளை எதிர் நோக்கிதான் குக்கூ சென்றேன். மாற்றுப்பார்வையுள்ளவர்களின் உலகத்தில் பயணித்த அனுபவம் அந்த வாழ்க்கையை வாழ தூண்டுகிறது. குக்கூ எனும் ஓவியத்தை தினேஷ், மாளவிகா மற்றும் பல தேர்ந்தெடுத்த தூரிகைகளை கொண்டு தீட்டிய விதம் பாராட்டுக்குறியது.

அட்டைகத்தியில் பதின்பருவ காதலனின் உடல் மொழியையும் முகபாவங்களையும் செம்மையாக கெயாண்ட தினேஷ் கவனிக்கப்பட வேண்டிய கலைஞர்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பத்மினியில் ஏறி பயணம் செய்ய பால்யம் முதல் ஏங்கி தவித்த ஒரு இளைஞனுக்கு திடீரென கிடைக்கும் வாய்ப்பின் அக மகிழ்வை முகத்தில் கொண்டுவந்த விதம் பாராட்ட கூடியது. பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் தனது உடல் மொழியால் வசியப்படுத்திய தினேஷ் குக்கூ முழுவதும் மாற்றுப்பார்வையுள்ள இளைஞனாக அட்டகாசமாக வலம் வருகிறார். கருவிழிகளை நிலைகுத்தி, மாற்றுப்பார்வையாளர்களின் உடல் மொழியை அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். மாளவிகாவும் தினேஷிம் ஒருவொருக்கொருவர் தங்களுக்கான இடத்தினை தக்கவைத்துவிட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட கதை என சொல்லிவிட்டு முழுக்க முழுக்க அவர்களை பற்றிய பரிதாப எண்ணங்களை மட்டுமே பதிவு செய்துள்ள திரைப்படங்களின் மத்தியில் அவர்களின் மகிழ்ச்சியைம், கேலி கிண்டல்களையும் வெளிப்படுத்தியுள்ளதற்காக குக்கூவுக்கு மேலும் மேலும் வாழ்த்துகளை சொல்ல வேண்டும்.  தினேஷுடன் வரும் மாற்றுப்பர்வையுள்ள நண்பர் இளங்கோவின் நகைச்சுவை நையாண்டிகள் ஒவ்வொன்றும் வொண்டர்… வொண்டர்…

திரைக்காட்சிகளில் வந்து போகும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வசனங்களும் சாமானியர்களை கண்முன் நிறுத்திய வட்டியும் முதலுமை நினைவுபடுத்தி நகர்கின்றன.

அஜித்தும் விஜயும் துணை நடிகர்களாக வந்து செல்கின்றனர். அவர்கள் வரும் காட்சிகளில் உண்மையான அஜித் விஜய்க்கான கைதட்டல்களை கைப்பற்றிவிடுகின்றனர்.

குட்டிசந்திரபாபு பேசும் ஒவ்வொரு வசனங்களும் குடும்ப வாழ்க்கைக்கான நகைச்சுவை சரவெடிகள். 1980களின் இளையராஜாவின் பாடல்கள் தன் பங்கிற்கு மனத்தை இலவம் பஞ்சாக்கி பறக்கவிடுகின்றன.

ரயிலடிகளில் கதை நகர்வு, இளையராஜா பாடல்கள், அரசியல் நையாண்டியகள், காதல், நட்பு என இறுதிக்காட்சியின் சோகங்கள் தவிர வேறு எங்குமே சோகம் அப்பாத காட்சியமைப்புகள் மாற்றுப்பார்வையாளர்களின் அழகான வாழ்வியல் மேல் பொறாமைகொள்ளச் செய்கிறது.

அன்பும் நன்றியும்
தமிழ்மணி

Thamizhmani2012@gmail.com

5 comments:

  1. Good film and good film article. Keep writing about
    Good films. Valthukkal...

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    ஆண்களின் பார்வையில் பெண் சுதந்திரம்/பெண்ணியம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா உங்களால் தான் வலைச்சரத்தில் எனது பதிவு தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் அறிந்தேன். மிக்க நன்றி :-) தங்கள் வருகைக்கும் மகிழ்ச்சி,,

      Delete
  3. ஒவ்வொரு வசனங்களும் -- தவறு
    ஒவ்வொரு வசனமும் -- சரி

    ஒரு என்ற ஒருமைச்சொல்லுக்கு வசனங்கள் என்ற பன்மை பொருந்தாது.

    ReplyDelete