கவிதை என் வாழ்க்கைக்கு அர்த்தம்
கொடுத்த காதலி. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னும் ஒரு பெண் இருப்பார்களாம். என் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு பெண், அவள் என் கவிதை. ஏமாற்றங்களால் நிறைந்த என் வாழ்க்கையில் ஒரு
மாற்றத்தினை கொண்டுவந்தவள் அவளே. எனது அக்காவே அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால் அவள் என் அக்காவின் நெருங்கிய தோழி. பள்ளிக் காலங்களில் காதலியாக
அவளை மடக்கிவிட ஆவல். எனது அக்காவின் தோழி என்பதால் அக்காவிடம் மட்டுமே எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள்.
அக்காவின் திருமணத்திற்கு பிறகு
அவளை அக்காவுடன் காண்பதும் அரிதாகிப் போனது. திருமணமான எந்த பெண்ணும் சுய சிந்தனையோடு
வாழ கூடாது என்பதுதானே நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம்.
இப்படியாக தொலைந்து போனவள் என்
வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் ஏமாற்றங்களுக்கு பின் ஒரு தனிமையான பயணத்தில் என் பார்வையில்
விழுந்தாள். விழுந்தவள் எனக்குள் புகுந்து கொண்டு படாதபாடுபடுத்தி ஒவ்வொரு காட்சியையும்
ரசிக்கவிட்டு அவளாக வெளிவந்தாள். என் கவிதை எனும் காதலியை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவே
உண்டானது “பயணங்கள் விதைத்தது...”.
விடயத்திற்கு வருவோம்.
“பயணங்கள் விதைத்தது...” எனது முதல் கவிதை தொகுப்பு. முதல் என்கிற சொல் எதார்த்தமானதாக சொல்லப்பட்டாலும்
அது எனக்கு இரண்டாம் மூன்றாம் என தொடர்ந்து தொகுப்பை வெளிக் கொண்டுவரும் நம்பிக்கையை
கொடுக்கிறது. நூலுக்கு அணிந்துரை அருளிய கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் எழுத்தாளர்
ஜே.ஷாஜஹான் ஆகியோருக்கும் வாழ்த்துரை வழங்கிய கவிஞர் சல்மா அவர்களுக்கும் நன்றிகள்
கோடி. சுயவிமர்சன கட்டுரைக்குள்ளும் பல பெயர்களை சேர்த்து திருமண பத்திரிகை போல தாய்
மாமன் பஞ்சாயத்து வர வேண்டாம் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
நூல் தலைப்பிற்கான காரணம் சொல்லியாக
வேண்டியது எனது கடமை. இந்நூலுக்கான கவிதைகள் எதுவும் தொகுப்பாக வரும் என்ற கனவு எனக்கு இருந்ததில்லை. ஒவ்வொரு பயணத்திலும் உண்டான எனது எண்ண ஓட்டமே கவிதைகளாக மலர்ந்தன.
கைகளில் வைத்திருக்கும் அலைபேசியில் உடனே அதனை தட்டி முகநூலுக்குள் இட்டுவிடுவேன்.
இப்படியாக உண்டான கவிதைகளே ஏராளம். அவையனைத்தும் தொகுப்பாக வரும் போது அந்த பயணங்களை
நினைவுபடுத்திட வேண்டும் என்ற அவாவில் இந்நூலுக்கு “பயணங்கள் விதைத்தது...” என தலைப்பிட்டேன். அதற்கு முன்பு செந்தமிழருவி என்ற பெயரைத்தான தேர்ந்தெடுத்திருந்தேன்.
இந்த தொகுப்பினில் தவிர்க்க முடியாத படி கிரிக்கெட், ரியல் எஸ்டேட் போன்ற ஆங்கில வார்த்தைகளும்
ஹரே கிருஷ்ணா என்பது போன்ற வடமொழிச் சொற்களும் வர வேண்டியதிருந்ததால் அந்த பெயரை மாற்ற
வேண்டியதாகிவிட்டது.
முழுக்க பிற மொழி கலப்பற்று தமிழில்
கவிதைகள் வெளிக் கொண்டு வரவே ஆவல். அதுதான் நிகழவில்லை பெரையாவது மாற்றலாம் என்பதால்
ரகுநாத் என்கிற வட மொழி பெயரை காலி செய்யும் வகையில் புது தமிழ்ப் பெயர் ஒன்றை தேடினேன்.
தோ.பரமசிவம் ஐயா அவர்களின் “பண்பாட்டு அசைவுகள் எனும் நூலில் இருந்து வழக்கொழிந்த பழைய
தமிழ்ச் சொல் ஒன்றை தேர்ந்தெடுத்தேன். “பாடுவாசி” என்பதே அது. பெயரை
மாற்றும் முன்பே கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் தனது அணிந்துரையில் எனது
பெயரை ஆறு முறை ரகுநாத் என்று பயன்படுத்தியிருந்த காரணத்தினால் கவிதை தொகுப்பில் அந்த
ரகுநாத்தையும் இணைத்து “பாடுவாசி ரகுநாத்” என வெளிக் கொணர்ந்தோம்.
அட்டை முதல் அட்டை வரை வடிவமைப்பும்
யாமே, யான் எடுத்த ஒளிப்படங்களை பென்சில் ஓவியங்களாக மாற்றம் செய்து கவிதைகளோடு வெளிக்
கொண்டு வந்தது மட்டற்ற மகிழ்ச்சி.
பெரும்பாலானோரால் மிக ரசிக்கப்பட்ட
ஐந்து கவிதை வரிகளை வரிசைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
v
ஆண்டவன் எனும் தலைப்பில்
“தமிழ் இலக்கணத்தின் படி இது இறந்தகால வினைச்சொல்”
v
ஹரே கிருஷ்ணா எனும்
தலைப்பில் “அடுத்த பெண் என்றால் ஆடை களவாடலாம், தன் தங்கை என்றால் கையிலேயே சேலை அருளலாம்”
v
மோர்க்கிழவி எனும்
தலைப்பில் சோலைமலையனுக்கு வைகையில் ஆழ்துளைக் கிணறு, வெயிலில் குளிக்கும் மக்கள் மந்தை”
v
ஆணாதிக்கம் எனும்
தலைப்பில் “ வழி மாறும் பெண்ணை ஆண் அடக்க வேண்டுமாம்; தடம் மாறும் ஆணை பெண் திருத்த
வேண்டுமாம்”
v
கேள்வி எனும் தலைப்பில்
“ரியலான எஸ்ட்டேட்களை அழித்துவிட்டு ரியல் எஸ்ட்டேட் என பெயர் வைத்தது யாரோ!!!”
நான் ரசிக்கும் வரிகள்
v
தீக்குச்சி எனும்
தலைப்பில் “ தன் வீட்டு சுவற்றிலேயே தலை மோதி, உரசி; நமக்காக தீக்குளித்து மாண்டு போகின்றது”
v
நடைபாதை பூக்காரம்மா
எனும் தலைப்பில் “ கடமை தவறாத காவல்துறையால் தரையிலும் வைக்க முடியவில்லை; கணவனை தவறவிட்டு
சமுதாயத்தால் தலையிலும் வைக்க முடிவதில்லை.
கூடங்குளம், கடைசி மனிதன் மற்றும்
எரியாத விளக்கு போன்ற மூன்று தலைப்புகளில் அணு உலைகளைப் பற்றி எழுதியது மன நிறைவாக
இருந்தது.
ஈழமண், இசைப்பிரியா மற்றும் வலி
என்கிற மூன்று தலைப்புகளில் ஈழத்தினை பற்றியும் அம்மக்களைப்பற்றியும் எழுதியிருந்தாலும்
இன்னும் அழுத்தமான பதிவாக அவை அமையாமல் போய்விட்ட குற்ற உணர்ச்சி என்னை தின்கிறது.
மூன்றாம் பாலினம் குறித்து “யார்
குற்றம்???” என்ற தலைப்பிட்ட கவிதை ஏனோ தானோவாகவே தெரிகிறது. திருநங்கைகள்
குறித்த தெளிவான புரிதல் எனக்கு இல்லாது போனதாகவே உணர்கிறேன். எழுத்துப்பிழை குறித்த
கவிதையில் “வண்மையாக கண்டிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்”
என கண்டித்துவிட்டு கவிதை தொகுப்பில் உள்ள சில எழுத்துப்பிழைகளை கண்டு கொள்ளாமல் போனது
கண்டிக்கப்பட வெண்டியதே. ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் மையம் கொள்கின்றன. கவிதைக்கான
மொழி அறிவு பற்றாக்குறையிருப்பது பெருங்கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடுகையில் தெரிகிறது.
இருப்பினும் இந்நூல் எனக்கு பல
படைப்பாளிகளையும் சமூக ஆர்வலர்களையும் நண்பர்களாக அடையாளம்காட்டியுள்ளது. அந்த வகையில்
இந்நூல் அதன் பிறவிப் பலனை அடைந்துவிட்டதாக மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பும் நன்றியும்
பாடுவாசி ரகுநாத்
ஒரு மனிதன் தன்னை தானே சுய விமர்சனம் செய்து கொள்வது... எதிர்காலத்தில் மிகச் சரியான பாதையை அவனுக்கு அது வழி வகுக்கும். நிச்சயம் இனி வரும் காலங்களில் அதிக அளவில் இயற்கை மற்றும் சுற்றுபுறச்சூழல் பாதுகாப்பு, சமூகத்தை நல்வழிபடுத்தும் நற்சிந்தனைகள் தாங்கிய பல படைப்புகளை படைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழரே.. :-)
Deleteஅட்டை முதல் அட்டை வரை வடிவமைப்பும் யாமே,என்பது உங்களுக்கு வேண்டுமானால் மகிழச்சியாக இருக்கலாம்.ஆனால் என்க்கு அட்டை பட தேர்வு திருப்த்தியில்லை... பூக்காரம்மா கவிதை மனதை தொடுகிறது..
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி அண்ணா :-) நன்றி..
Delete