Saturday 11 October 2014

தூய்மையான இந்தியா - கதைக்கலாம் கொஞ்சம்

எங்கோ நின்று கொண்டிருக்கிறேன். நான் ரசிக்கும் கமலஹாசன் என்னை கொஞ்சம் விலகி நிற்கச் சொல்லிவிட்டு, எனது காலுக்கிடையில் கிடந்த இலைதழைகளை தன் கையில் இருக்கும் துடைப்பம் கொண்டு தள்ளிக்கொண்டே எங்கோ போகிறார். சட்டென விழித்துக் கொள்கிறேன். படுக்கையில் இருந்து என்னை எழுப்பிவிடுகிறது சூரிய ஒளிக்கதிர்.

கண்கள் கூச செய்தித்தாளுக்காக வீதிக்கு வருகிறேன். எந்த பக்கம் போகலாமென சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
“தம்பி கொஞ்சம் விலகிக்கிங்க...” எனச் சொல் கேட்டு விலகிக்கொண்டு யாரென பார்க்கிறேன். வழக்கம் போல வீதிகளை துப்புரவு செய்யும் காளியண்ணன். என் கால்களுக்கு இடையில் கிடந்த நெகிழி காகித குப்பைகளை துடைப்பான் கொண்டு இழுத்து இழுத்து சேகரித்து அவர் கொணர்ந்திருந்த மூன்று சக்கர மிதிவண்டியில் இடுகிறார். அதில் ஒரு நெகிழி காகிதத்தில் “குர் குரே” என்று ஏதோ எழுதியிருந்தது. அதையொத்த மற்ற நெகிழி காகிதங்களிலும் அதே போன்று வாய்க்குள் நுழையாத பெயர்களாக இரைந்திருந்தன. எங்கள் தெருக் குழந்தைகள்தான் அதனுள் கிடந்த குப்பைகளை தின்றுவிட்டு இந்த குப்பைகளை இங்கே போட்டிருக்க கூடும். காளியண்ணன் கையுறை ஏதுமற்று, காக்கி அரைக்கால் சட்டையும் காக்கி மேல் சட்டையுடனும் காலில் தொள தொள செருப்போடும் அடுத்த பகுதியை துப்புரவாக்க துவங்குகினார்.


எதிரில் இருந்த நகராட்சி பொதுக் கழிவறையில் இருந்து ராமாயி அக்கா தென்னை மாறுடனும், இரும்பு வாளியுடனும் வெளியில் வந்து கொண்டிருந்தார். வழக்கமான பணியாக இருப்பதாலோ என்னவோ இந்தக் கன்றாவியை வெத்துக் கை கொண்டே சுத்தம் செய்கிறார்.

அன்றைய பெரும்பாண்மையான செய்தித் தாள்களில் நாட்டின் பிரதமர் பிரமாதமாய் துடைப்பத்துடன் முதல் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பஜனை மடத்தில் இருந்து ஜால்ராக்களின் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
நாடெங்கும் அணு உலை என்கிற மிக ஆபத்தான குப்பை கிடங்குகளை வைத்துக் கொண்டு எந்த குப்பையை எங்கு தூத்துத்தள்ளுவது என்கிற குழப்பத்தினாலேயே இதனை எழுதுகிறேன்.

நான் கூட முதலில் “தூய்மையான இந்தியா” என்கிற வாசகத்திற்கு லஞ்ச லாவன்யமற்ற, ஊழல் உதவாக்கரைகளற்ற இந்தியாவை உருவாக்கும் திட்டமோ என எண்ணி அதிசயித்துப் போனேன். அதன் பிறகுதான் தெரிந்தது இந்த அரசு இன்னும் அந்த நிலைக்கே செல்லவில்லை. இப்போதுதான் தெருவில் கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்யவே மூச்சு திணரி சிந்திக்கிறது என்று.
 கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் தமிழ் நாட்டில் கொண்டு வந்து தொடர்ந்து கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கேரளாவினை இப்படித்தான் தூய்மையானதாக காட்டிக் கொள்கிறார்கள். அதே போல பன்னாட்டு நிறுவனங்களும் விற்பனை எனும் பெயரில் தங்களின் உற்பத்தி கழிவுகளை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டி தத்தம் நாடுகளை தூய்மையானதாக காட்டிக் கொள்கிறார்கள்..

இதே போல இந்தியா முழுதும் சுத்தம் செய்து அள்ளிச் செல்லும் குப்பை வெளிநாடுகளில் எதும் சென்று கொட்டப்படுகிறதா என்று... ஏனென்றால் இந்தியாவில் ஒரு பகுதியில் சுத்தம் செய்து வெறொரு பகுதியில் கொண்டு கொட்டுவதையோ, தீயிட்டு எரித்து இந்திய காற்றினை அசுத்தபடுத்துவதையோ “தூய்மையான இந்தியா”வாக எப்படி எடுத்துக்கொள்வது!!!



குப்பைகளை அள்ளுவதும் ஒரு பகுதியை சுத்தம் செய்வதும் மட்டும் எப்படி “தூய்மை” என்பதாக இருக்க முடியும்!!! அதற்கு பதிலாக அந்த குப்பைகள் உண்டாவதை, உண்டாக்குவதை தடுப்பதற்கு ஏதேனும் திட்டம் இருக்க வேண்டும். அப்போது தானே முழுத் தூய்மையை எட்ட முடியும்.

கங்கை ஆற்று நீரும் ராமேசுவரம் கடல் நீரும் அசுத்தமாகிப் போனதற்கு யார் காரணம் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடலை சுத்தம் செய்கிறேன், ஆற்றை தூய்மைபடுத்துகிறேன் என கிளம்பினால் அதனை எப்போது தூய்மை செய்து முடிப்பது?? குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டிக் கொண்டே இருந்தால் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆண்டுக்காண்டு ராணுவத்திற்கு ஒதுக்குவது போல ஒரு பெரும் நிதி ஒதுக்க வேண்டியது தானா!!! குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றுவதை விட அவற்றை அங்காங்கு இரைத்துவிடாமல் இருப்பதே நலம். அதனை செய்ய முன்வருவார்களா ஆள்வோரும் மக்களும்??


தென்னை மட்டையில் தேங்கும் நீரில் கொசுவும் இன்ன பிற கிருமிகளும் முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன. அதனால் நோய்கள் பரவாதிருக்க அந்த தென்னை மட்டையினை அப்புரப்படுத்த எத்தணிக்கிறோம். ஆனால் அதனை விட கொடிய நோயினை மனிதன் உள்ளிட்ட சகல உயிரிகளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த அணு உலைக் கதிர் வீச்சி எனும் குப்பையினை என்ன செய்ய போகிறோம்?? இன்னும் சரியாக திட்டமிடாமல் கிடக்கும் இந்த அணு உலைக் கழிவு எனும் மாபெரும் குப்பையினை எப்படி சுத்தம் செய்யப் போகிறோம்?? குப்பைகளை அள்ளுவது முக்கியமானதுதான் ஆனால் அதனை விட மிக மேலானது அந்த குப்பைகளை உண்டாக்காமல் இருப்பது.

நமக்கு முதலில் எது குப்பை என்பதிலேயே சந்தேகம் அதிகம். குப்பைகள் இல்லாத இந்தியா எனச் சொல்லிக் கொண்டே அடுத்தடுத்த அணு உலைகளுக்கு கையெழுத்திடுகிறோம். சுத்தம் சோறு போடும் என முழங்கிக்கொண்டே வெளி நாட்டு விடங்களை உரம் எனும் பெயரில் நிலத்திற்கு இடுகிறோம். குழந்தைகளையும் விட்டு வைக்காமல் அவர்களின் திண்பண்டமாக குப்பைகளோடு காற்றும் அடைத்த வெளிநாட்டு நெகிழி பொட்டலங்களை வாங்கிக் கொடுக்கிறோம். முதலில் குப்பையினை அடையாளம் காண்போம். அதனை உற்பத்தி செய்வதையும் நுகர்வதையும் தவிர்ப்போம். அவ்வாறு இருந்துவிட்டாலே குப்பையில்லா தூய்மையான இந்தியா உருவாகிவிடும். புகைப்பட கருவிகள் சூழ கையில் விளக்கமாரு ஏந்தி படம் எடுத்துக் கொண்ட நம் பிரதமர் போல நாம் நிற்பதற்கு வாய்ப்பும் கூட இராது.

அன்பும் நன்றியும்
தமிழ்மணி
thamizhmani2012@gmail.com

4 comments:

  1. அருமையான கட்டுரை தம்பி (வழக்கம் போலவே!). துடைப்பம் கொண்டு அகற்றப்பட வேண்டியவர்களே, துடைப்பமும் கையுமாக நிற்பது பேரவலம். விளம்பரப் பிரியர்களிடம் இருந்து வேறென்ன பெரிதாக எதிர்பார்த்து விடமுடியும்? தூய்மையான இந்தியா என்றதும், லஞ்ச லாவண்யங்கள் அற்றதொரு இந்தியாவை நோக்கி களமிறங்கி விட்டார்களோ என்று தம்பி வருத்தப்பட்டிருக்கிறார். முற்போக்கு சிந்தனைகளைக் மூட்டை கட்டி வைத்து விட்டு, சராசரி மனநிலையுடன் இருந்தால் மட்டுமே... இந்தியா, இந்தியர்களுக்கு!
    மற்றபடி,
    எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும். சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிராமல், இன்னும் அதிகப்படியான கட்டுரைகளைத் தாருங்கள்.
    நன்றி.

    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete
    Replies
    1. அன்பு அண்ணனுக்கு வணக்கம்.. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும், மகிழ்ச்சியும் நன்றியும்.. எழுத்துப்பிழைகள் மேல் இனி தனி கவனம் எடுக்கிறேன்.. நிச்சயமாக தொடர்ந்து எழுதுகிறேன்..

      Delete
  2. அற்புதமான கருத்துக்களை வாரி தெளித்துள்ளீர்கள் அணுஉலை என்னும் குப்பையை தடுக்காமல் எந்த குப்பையைசுத்தம் செய்யபோகின்றீர்கள்.உண்மையா தெருவை சுத்தம் செய்பவர்களுக்கு
    கையுரையில்லை நடிப்பவர்கள் கையுரையுடன் ஆஹா
    வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete