எத்தனையோ காதலிகள் தன்னை வேண்டமென்று ஒதுக்கிய போதும் காதலை விட்டு
ஒதுங்கிட திராணியற்றவன், தன் ஒன்று விட்ட மைத்துனச்சியின் மணவிழாவில் மீண்டும் பெண்
தேட ஆயத்தமாகிறான். விடுமுறைநாளில் நிகழும் திருமணம் இது. எதிர்பார்த்ததையும் விட இளம்
பெண்களின் வரத்து சற்று அதிகமாகவே இருந்தது. இவ்வளவு திரளான கூட்டத்தில் இரட்டைச் சடையில்
எந்த ஒரு இளம் பெண்ணும் கண்ணில்படவில்லை. தாவணியில் ஒரு பெண்ணும் சேலையில் சில பெண்களும்
சுடிதாரிலேயே பெரும்பாலான இளம் பெண்களுமாக மண்டபத்தினை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.
அரக்க பறக்க சுற்றிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் இளம் பெண்களின்
கும்பல் ஒன்று மட்டும் தீவிர அரட்டையில் லயித்திருந்தது. அவர்களுக்குள் சம்பந்தம் இல்லாமல்
பேசிக்கொள்வதும் கக்கபுக்கெ.. கக்கபுக்கெ... என சிரிப்பதுமாகவும் பெரியவர்கள் யாரேனும்
கடக்கும் போது சிரிப்பையும் பேச்சையும் அடக்கிக் கொள்வதுமாகவும் இருந்தார்கள்..
அவர்களை கவர்ந்திட, முதலில் கவனிக்க வைப்பது அவசியம் என உணர்ந்தான்.
பருவ இளைஞர்களை தவிர்த்துவிட்டு சிறுவர்களாக கூட்டு சேர்த்துக் கொண்டு அந்த இளம் பெண்களின்
கும்பலுக்கு அருகில் நின்று கொண்டான் அச்சிறுவர்களிடம் பிளாஷ்டிக் ச்சேர்களை இங்குமங்குமாக...
அங்குமிங்குமாக... மாற்றச் சொல்லி அதட்ட ஆரம்பித்தான். பொறுமை இழந்த ஒரு சிவப்புச்
சட்டை சிறுவன்
“அண்ணே இத இங்க வைக்கவா, இல்ல அங்க வைக்கவா, உருப்படியா ஒன்னு சொல்லுணே”
எனக் கேட்க அந்த இளம் பெண்கள் கும்பலில் இருந்து வெடி போல பெருத்த
சிரிப்பொலி. சரவெடி போல அந்த சிரிப்பு சப்தம் சில நிமிடங்களுக்கு தொடர்ந்து கொண்டே
இருந்தது.. தனியாக மாட்டிக்கொண்டதை உணர்ந்தவன் பதிலேதும் சொல்லாமல் அலைபேசியில் அழைப்பு
வந்தது போல பாவணை செய்து கொண்டு அந்த இடத்தினை விட்டு நகர்ந்து என்னருகில் வந்து அமர்ந்து
கொண்டான்.
அந்த பெண்கள் ஒவ்வொருவராக அவனைப் பார்க்கவும் சிரிக்கவுமாக இருந்தனர்.
அவன் என்னிடம் வந்து
“டேய் மாப்புள அந்த பொன்னுக என்னைய லந்தக் குடுக்குதுகயா” என்றான்.
எனக்கு ஏதும் சொல்ல தோன்றவில்லை. வளவள வளவள என ஏதோ பேசிக்கொண்டே
இருந்தான். அவன் பேசுவது எனது காது வரை வந்தும் மூளையை எட்டவில்லை. அவனது பேச்சு சில
நொடிகளில் காது வரையும் கூட எட்டவில்லை. சுதாரித்துக் கொண்டு அவன் பக்கமாய் திரும்பினேன்.
எனது விழிகளும் மணப் பெண் அருகில் நின்று கொண்டிருந்த தாவணிக்காரி விழிகளும் பேசிக்கொண்டிருந்ததை
பார்த்துவிட்டான் போல. உட்கார்ந்திருந்த பிளாஷ்டிக் ச்சேரை பின்பக்கமாக தள்ளிவிட்டு
எழுந்து பத்து ச்சேர் நகர்ந்து போய் அமர்ந்து கெண்டான்.
திருமண மண்டபத்தில் கூட்டம் அதிகமாக அதிகமாக அவனெங்கு போனான் எனத்
தெரியவில்லை. திருமணம் முடிந்து மணமக்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் அன்பளிப்பு
கொடுத்து கேமரா முன் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் வேகமாக பந்தி நடக்கும் மாடிக்கு, படியில் விரைந்தான். பந்தி
வேலைகளை கவனிக்க ஆவலாக ஓடியவன் சாம்பாரும் ரசமும் கலவையாக மணந்து கொண்டிருந்ததில் மெய்
மறந்து முதல் பந்திக்கு இடம் பிடித்திட அடம்பிடிக்கலானான். எல்லா இலைகளுக்கும் தலைகள்
அமர்ந்துவிட கலையிழந்து நின்றுகொண்டிருந்தான். அவரைக்காய் பொறியல், முட்டைக்கோசு அவியலை
தொடர்ந்து சோறும் கட்டிச்சாம்பாரும் முதல் பந்தியில் ஓடிக் கொண்டிருந்தது. மோர் எனக்
கேட்டு வேகமாக யாராவது எழுந்துவிடமாட்டார்களா என ஒவ்வொருவர் முகமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
மோர் முறையும் வந்தது. பாயாசம் என ஒன்று வேறு அவர்களை எழும்பிவிடாமல் அமரவைத்திருந்தது.
மோர் ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பின்னாலேயே ஒரு
சிலர் இடம் பிடிக்க நின்று கொண்டிருந்தனர். சாப்பிடுபவர்கள் எழுந்ததும் அதே இலையில்
அப்படியே சாப்பிட துவங்கிவிடுபவர்கள் போல ஆவசரமாக காணப்பட்டனர். ஒரு வழியாக முதல் பந்தி
கணவான்கள் எழுந்து வயிற்றை தள்ளிக்கொண்டு கை கழுவ நகர்ந்தனர்.
நல்ல இடமாக பார்த்து அவனும் அமர்ந்தான். பூசனிக்காயில் ஜாம் செய்திருந்தார்கள்
அதனை மட்டும் தவிர்த்துவிட்டான். கட்டிச்சாம்பாரில் சோற்றைப் பிசைந்து வாயில் வைக்க
நிமிரும் போது தான் எதிரில் அந்த கும்பல் பெண்களில் மூன்று பேர் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தது
தெரிந்தது. அதுவரை சோற்றுக்காக அழைந்தவன் ஏதோ ஊறுகாயை தொடுவது போல சோற்றை தொட்டு நாகரீகம்
என நினைத்தபடி நக்கத்துவங்கினான். ஏறத்தாழ அந்த பெண்களின் நடவடிக்கைகளும் அப்படியே
இருந்தது.
தொட்டு தொட்டு சாப்பிட்டபடி இருந்தவனை ஒரு பெரிய உருவம் மறைத்துக்
கொண்டு
“டேய் மாப்புள, இப்பிடி சாப்புட்டு நீ எப்பட எந்திரிக்க.. நல்ல
அள்ளி அடிச்சி தின்னுடா.. பின்ன எப்பிடி உடம்ப தேத்துறது.. அடுத்து உங் கல்யாணந்தான்”
என வயிற்றை தடவிக்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் இந்த வசனம் பேச மட்டும் எங்கிருந்துதான்
வாருவார்கள் என தெரியவில்லை. அடுத்து உங் கல்யாணந்தான் அடுத்து உங் கல்யாணந்தான் என
ச்சும்மா இருப்பவனையும் உசுப்பேந்திவிடுகிறார்கள்
இவனும் பதிலுக்கு
“அடப் போ மாமா”
என நாணி தலை கவிழ.
“டேய்.. மாப்புளைக்கு வெக்கத்த பாருடா”
என சப்தமாக சிரிக்க அந்த கும்பல் இளம் பெண்கள் மத்தியிலும் சிறு
சலசலப்பு.
“உனக்கு இத விட பெருசா பண்ணிடுவோமுடா”
என நம்பிக்கை கொடுத்து மரியாதையாக நகர்ந்தவரை வம்பாக நிறுத்தி அந்த
பெண்களை ஓரக் கண்களில் பார்த்தபடியே அவர்களின் காதுகளில் விழும் படியாக
“மாமா.. என் மேரேஜ்லாம் லவ் மேரேஜ் மாமா.. அதெல்லாம் ரெஜிஸ்டர்
ஆபிஸ்லதான்”
என்றான்.
நகர்ந்த அந்த பெரிய உருவம்
“நீ திருந்தவே மாட்டியாடா”
என தலையில் அடித்துக் கொண்டே இடத்தினை காலி செய்தது. அவன் நிச்சயம்
அந்த கும்பலில் யாரையோ தேர்ந்தெடுத்துவிட்டான் போல இருந்தது.
சாப்பிட்டு கை கழுவும் இடத்திற்கு நகர்ந்தான். கைகயை கழுவி வாயை
சட்டை காலரிலும் கையை பேண்ட் பாக்கெட்டுக்குள்ளும் விட்டு துடைத்துக் கொண்டு திரும்பினான்.
அந்த கும்பல் இளம் பெண்கள்
“ஏய் அடுத்து இவருக்குதான் கல்யாணமான்டீ”
“அதுவும் லவ் மேரேஜ்ஜாம்”
என தங்களுக்குள் நகைத்துக் கொண்டே அவனைப் பார்த்தார்கள்..
அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இருந்தும் எங்கிருந்தோ தைரியம்
வரவழைத்துக் கொண்டு
“ஹலோ.. ஏங்க நான் லவ் மேரேஜ் பண்ணிக்க கூடாதா!!?? இப்பிடி சிரிக்கிரீங்க”
“...”
“உங்கல்ல யாராவது லவ் பண்ணீருக்கீங்களா, பண்ணாம ச்சும்மா ச்சும்மா
சிரிக்காதீங்க” என கடுகடுத்து நகர்ந்தான்.
“ஹலோ மிஸ்டர்.. உங்கள பத்தி நாங்க ஒன்னும் பேசல.. நீங்க போங்க..”
என பெண்களுக்கே உரித்தான பொய்யை இயல்பாக சொல்லி நகர்ந்தனர்.
இப்போது அவன் சிரித்தான்
“பொய் சொல்லி இப்போதான் முதல் நிலைக்கு வந்திருக்கீங்க.. இங்க இருந்து
போறதுக்குள்ள நிச்சயம் உங்கள்ள ஒருத்தர் என்ன லவ் பண்ணீடுவீங்க” என்றான்
கடுப்பான பெண்களில் ஒருத்தி “மரியாதையா பேசுங்க.. நீங்க யாருனே
தெரியாது நாங்க உங்கள போய்..... ச்சீய் ச்சீய்... அதுக்கு வேற ஆள பாருங்க..” என்றார்
“அட இதுல என்னங்க தப்பிருக்கு வேணும்னா ஒருதடவ என்னை காதலிச்சி
பாருங்க.. உங்களுக்கு அடுத்த ஆறு மாசத்துல கல்யாணமே நடந்திடும்.. அவ்வளவு ராசிங்க நானு” என நகைத்த படி நகர்ந்தான்.
திருமண மண்டபத்தின் அருகில் இருந்த பொட்டலில் முருங்கை மரத்திலிருந்த
கொப்பு ஒன்று முறிந்திருந்ததுது. முறிந்த இடத்தில் நிறைய தளிர்விட்டிருந்தது. ஆனால்
அந்த அந்த முருங்கை கொப்பு முறியும் போது அது வடித்த கண்ணீர் கோந்தாக இன்னும் அந்த
மரத்தில் உறைந்திருந்தது. அவனும் கலங்கும் கண்களை சிரிப்பால் மறைத்த படி படிகளின் வழியே
கீழ் இறங்கினான். அவனது ஒன்று விட்ட மைத்துனச்சி மணமகள் கோலத்தில் அவளது கணவனோடு மாடிக்கு
ஏறிக் கொண்டிருந்தாள் அவனை பார்க்கும் தகுதி இழந்ததை உணர்ந்தவளாய் தலை கவிழ்ந்து.
No comments:
Post a Comment