Tuesday 11 November 2014

மரண வீட்டின் வாசம்

          மரணம் ஏற்படாத வீடுகள் இங்கு எதுவும் இல்லை. எனது வீடும் அதற்கு விதிவிலக்கு இல்லை. எனது பிறப்பிற்கு பின் எனது தாய் வழியில் இரு தலைமுறைகளின் மரணத்தினை கண்டிருக்கிறேன். எனது அம்மாவினுடைய அம்மா மற்றும் அவருடைய அம்மா. எனது தந்தை வழியிலும் இரு தலைமுறை மரணங்களை கண்டிருக்கிறேன். எனது அப்பாவினுடைய அப்பா மற்றும் எனது அப்பா. எனக்கு விவரம் அறிந்து நான் கண்ட முதல் மரணம் எனது அப்பாவின் அப்பாவினுடையது.


          ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்கள் அது. எனது அய்யப்பாவை (அப்பாவினுடைய அப்பாவை) ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள்.
நாடியில் வெள்ளைத் துணியைக் கட்டி, பூ மாலை எல்லாம் போட்டு அவரது கால்மாட்டில் எனது அம்மாவும் அத்தையும் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டு கிழவிகளெல்லாம் வந்து அம்மாவையும் அத்தையையும் மாறி மாறி கட்டி அழுது கொண்டிருந்தனர். அடுத்த நாள் எனக்கும் அப்பாவுக்கும் மாலை போட்டு, பூணூல் அணுவித்தனர். இன்றும் நியாபகம் இருக்கிறது அன்று நான் நினைத்தது. “இப்ப நாமளும் கோவில் ஐயருங்க மாதிரி பூஜை பண்ணலாமோ!!!” என நினைத்த சிரித்துக் கொண்டிருந்தேன். அப்பா அய்யப்பாவின் சிதைக்கு தீயிட்டதை ரொம்ப நாட்கள் அம்மாவிடம் சொல்லி சொல்லி அழுது கொண்டிருப்பேன். எனக்கென்னவோ அப்பா வைத்த தீயால்தான் அய்யப்பா இறந்து போனார் என வெகு நாட்கள் எண்ணிக் கொண்டிருந்தேன்.


          மரணத்தினால் உண்டாகும் வலியை விட அந்த மரணம் ஏற்படுத்தும் பிரிவுதான் வந்து வந்து வலியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. எனது அப்பா இதே தினத்தில் (நவம்பர்-12) மரணிக்கும் போதும் அதே உணர்வுதான். நான் 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கணம் நிகழ்ந்த அவரது மரணம் அன்றோடு தனது வலியை கொடுத்து சென்றுவிட்டாலும். அந்த மரணம் கொடுத்த பிரிவு எனும் வலி இன்றும் கண்களில் நீரை கொடுத்துவிடுகிறது.


          இப்போதும் ஏதெனும் மரண வீடுகளுக்கு செல்கையில், நீர்மாலை எடுக்க நிற்கும் சிறுவர்களை காணும் போது, எனது அய்யப்பாவின் மரணத்தில் நான் மாலையும் கழுத்துமாய் நின்று சிரித்துக் கொண்டிருந்ததுதான் நியாபகம் வருகிறது.
அன்றைய தினங்களில் எல்லாம் மரண வீடுகளில் இரவெல்லாம் ஆட்கள் தூங்காமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஊது பத்தி கரைய கரைய அடுத்த அடுத்த ஊது பத்திகளை ஏற்றி வைத்துக் கொண்டிருப்பார்கள். ரோஜா மலர் மாலையின் வாசனையும் அந்த ஊது பத்தியின் வாசனையும் கலந்துகட்டி அடிக்கும் அந்த வாசனைக்காகவே யாராவது சாகமாட்டார்களா என எண்ணத் தோன்றும். மாரடித்து அழும் கிழவிகளும், இரவெல்லாம் சங்கு ஊதி மரண வீட்டிற்கு பின்னணி இசைகொடுக்கும் கலைஞனும், சுடுகாடோ இடுகாடோ சாரை சாரையாக இறந்தவருக்காக அவரை பின்தொடரும் ஆண்களின் கூட்டமுமாக அந்த மரண வீடுகள் உணர்ச்சிவயப்பட்டே இருந்திருக்கின்றன. எனது வாழ்க்கையிலேயே மரண வீடுகள் தனது அடையாளத்தினை இழந்து நிற்பதை கண்கூடாக கண்டுவருகிறேன். அப்படியானால் இதற்கு முன்பான மரண வீடுகள் எப்படி இருந்திருக்கும்!!??


          இனக்குழுவாக தனது வாழ்க்கையை தகவமைத்துக் கொண்ட நமது தமிழ் சமூகம் திருமணம் போன்ற மகிழ்வான விழாக்களை விட மரணமடைந்த நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாக கையாண்டு வந்துள்ளதை வரலாற்று எச்சங்களில் பார்க்க முடிகிறது. ஒரே குல தெய்வம் கும்பிடும் பங்காளிகளின் செயல்பாடுகளை இன்றும் நாம் காண்கிறோம். மரண வீடுகளில் அவர்களின் பங்குதான் முதன்மையானதாக இருக்கிறது. மரணித்த உடலை தொட்டு தூக்குவதில் இருந்து, முதல் மாலை அணிவிப்பது, நீர்மாலை சடங்குகள் என இன்றும் அந்த இனக்குழுவின் எச்சங்கள் தொடர்ந்து வருகிறது. உயர்ந்த சாதிக்காரர்கள் என சொல்லிக் கொள்பவர்களால் இங்கு எந்த சடங்கும் செய்யப்படுவதில்லை. தன்னோடு சமமான ஒரு மனிதனால் செய்யப்படும் சடங்குகள் இங்கு நிகழ்வதாலேயே இன்றும் மரண நிகழ்வுச்சடங்குகள் தனது இயல்பை ஓரளவேனும் இழக்காமல் இருக்கின்றன. அப்படி இருந்தும் புதைக்கும் பழக்கம் பெரும்பாலும் நம்மிடம் இருந்து அழிந்து போனதாகவே தோன்றுகிறது. புர்வீகக் குடிகளின் வரலாற்றை அழிக்க எத்தணிக்கும் ஒரு கூட்டம் அவர்களது எழும்பும் கூட பின்னால் வரும் சந்ததிகளுக்கு கிடைத்துவிடக் கூடாது என எண்ணி உடலை தீயிட்டு பொசுக்கிட மூளைக்குள் புகுத்திவிட்டது.


          சிற்றூர்களில் இன்றும் மரண வீடுகளில் இருபது பெண்களுக்கு குறையமாலும் பத்து ஆண்களுக்கு குறையாமலும் இரவுகளில் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இரவெல்லாம் சங்கு ஒலிக்கிறது. ஊதுபத்தி மணக்கிறது. மாரடித்து அழும் பெண்கள் இருக்கிறார்கள். இறுதி ஊர்வலத்தில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். ஆனால் பேரூர்களிலும் பெருநகரங்களிலும் இதன் நிலை தலைகீழ். மரண வீட்டுக்காரர்களே ஆளுக்கொரு அறையில் தூங்கி விழுகிறார்கள். இரவில் 12 மணிக்கு தட்டு தட்டும் சப்தம் கேட்டாலே மேல் மாடிக்காரனும் எதிர் பிளாட்காரனும் கத்த துவங்குகிறார்கள். ரூம் ஸ்ப்ரே குடலை பிடுங்குகிறது. கண்கலங்காமல் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இறுதி ஊர்வலத்தில் நான்கைந்து பேரோடு இறந்த உடல் ஆம்புலன்சில் பறக்கிறது.


          பல ஆண்டுகாலம் வாழ்ந்து முடிந்த இந்த உயிர் அற்ற உடலின் மதிப்பு இவ்வளவுதானா?? வாழ்ந்து முடிஞ்சவர்தானே என்ற மெத்தனபோக்கு மட்டுமல்ல, இனி இவரால் தொந்தரவு இல்லை என்கிற நிம்மதியும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகிறது. வயது முதிர்ந்த ஒருவரின் மரணம் யாருடைய மனதையும் கணக்கச் செய்வதில்லை. அந்த வயதின் அனுபவத்தை முழுவதும் பெறாமல் பறிகொடுத்தோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லை இங்கு அநேகம் பேரிடம்.


          2009-மே மாதத்தில் இதே மெத்தன போக்குதான் இந்தியா முழுக்க (தமிழ்நாடு தவிர்த்து) நிலவியது. நன்றாக நினைவிருக்கிறது. ஒரு மழை நாளில் பல லட்சம் உயிர் போகுதே என பதை பதைத்து மதுரை தெருக்களில் நண்பர்களோடு திரிந்தோம். மக்கள் தொலைக்காட்சியை ஒளிபரப்பவில்லை. தமிழன் தொலைக்காட்சிக்கு தடை. எந்த தொலைக்காட்சியில் உண்மையை சொல்லுவான். வேதாரண்யத்தில் இருந்து தோழர் அழைத்தாரே அவருக்கு தகவல் தெரியுமா? பழ.நெடுமாறன் அய்யா என்ன சொல்கிறார் என்று யாரிடம் கேட்பது? உண்மையில் சிங்கள தீவிரவாதம் மொத்த இடத்தையும் கைப்பற்றிவிட்டதா? அப்படி என்றால் அங்கிருந்த தமிழ் மக்கள் நிலை என்ன? கொத்துக் குண்டுகளாமே!! மொத்தமாய் செத்தார்களா!! என ஆயிரம் கேள்விகள் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் எழுந்தது?? ஏன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனையோர்களைத் தவிர உங்களுக்கும் எனக்கும் மட்டும் கண்களில் நீர் வடிந்தது?? உணவு இறங்கவில்லையே ஏன்?? தமிழ்நாடு முழுக்க மரண வீட்டின் வாசம் வீசியதே எதனால்??


          அதுதான் நமக்குள்ளிருக்கும் இனக்குழு உணர்வு. அந்த உணர்வுதான் உங்களையும் என்னையும் தூங்கவிடவில்லை. அதனைத்தான் பலர் “உணர்ச்சி வசப்படாதீர்கள்” என கிண்டல் செய்தனர். உணர்ச்சி நமது வசப்படாமல் போக நாம் பிணங்களா என்ன!!!

அன்பும் நன்றியும்
தமிழ்மணி
Thamizhmani2012@gmail.com.

4 comments:

  1. நெகிழ வைக்கும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா...

      Delete
  2. கால மாற்றத்தை கருத்தில்கொண்டு,நம் பழக்கவழக்கங்களை கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டத்திலிருக்கிறோம்.இறந்தவருக்கு நம் அன்பையும் மரியாதையும் காண்பிக்க கூடி அழுது சடங்கு சம்ரயதாயங்களில் உழலுவதைதவிர்த்து,அமைதியாக அவரை தகனம் செய்வதுதான் நல்லது என்று கருதுகிறேன்.என் மரணத்தை ஒரு இயற்கையான நிகழ்வாக கருதி ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கம் செய்ய என் குடும்பத்தாரிடம் வலியுறுத்திக்கூறியுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா..

      என்னதான் காலமாற்றம் மாறினாலும் இன்றும் நாம் கைகளால்தான் சோறு அள்ளி உண்கிறோம். அப்பாவை வாடா என அழைப்பதை விரும்புவதில்லை.. அம்மாவை போடீ என சொல்ல விரும்புவதில்லை. இறப்பு கொடுக்கும் ஒரு பெரு இழப்பினை அழாமல் கடந்துவிடுவதுதான் காலமாற்றம் நமக்கு வழங்கியிருக்கும் நாகரீகமோ!!! :-) இங்கு மரண வீட்டின் ஆர்ப்பாட்டங்களை நியாயப்படுத்தி எந்த சொற்றொடரும் இல்லை என்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..

      நன்றி அய்யா..

      Delete