இம்முறை (23-11-2014) பசுமைநடை பயணம் மாங்குளம்-மீனாட்சிபுரம்
சிற்றூர் மலைக்கு. பசுமைநடை பயணம் வீட்டிலிருந்தே
துவங்கியது. சற்றே விடிந்து கொண்டிருந்ததை பறவைகளின் கும்மாளம் ஊருக்கே சொல்லிக் கொண்டிருந்தது.
பனி விழும் அதிகாலையிலும் பறவைகள் மட்டும் எப்படித்தான் சோம்பலின்றி பறக்கின்றனவோ!!
கைகளையும் கால்களையும் விருட்டு விருட்டுவென இழுத்து நடக்கும் கணபதிகள் மாநகருக்குள்
நான் நுழைந்ததை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தனர்.
மாட்டுத்தாவணியில் குழுமியிருந்தனர் நண்பர்கள்.
அதிகாலை, விடியற்காலையாகிட எத்தணித்துக் கொண்டிருந்தது.. மேலூர் சாலை நோக்கி பசுமைநடை
நண்பர்களின் இரு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் ஒரே மையத்தில் கிளம்பின.
வானில் பறக்கும் பறவைகளுக்கு மட்டுமே அந்த அழகை ரசிக்கும் வாய்ப்பு எட்டியிருக்கும்.
மேலூர் செல்லும் வழியில் அரசு நியமித்துள்ள வழிப்பறிச் சாவடிக்கு முன்னமே உள்ளது மாங்குளம்-மீனாட்சிபுரம்
சிற்றூருக்கு திரும்பும் சாலை.. இது வெறும் சாலை அல்ல. சோலைக்குச் சேறும் சாலை. கருந்
தார்ப் பாலைவனத்தை பெயர்த்தெரிந்து அழகாய் சிவந்து கிடந்தது அச்சாலை. வண்டிப்பாதையில்
இயந்திர வண்டிகளில் எறும்புச் சாரையாக கடந்து கொண்டிருந்தோம், மலை எனும் சர்க்கரை குவியலை
நோக்கி.
இரு புறமும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை
பச்சைப் பசேல் ஓவியங்கள்.. ஓவியர் யாரோ அள்ளித் தெளித்த பசுமையோவியமாய் காட்சியளித்தது
வயல்காடுகள். வயல் வெளி கடந்து வீசும் பனி செரிந்த தென்றல், முகம் மோதி மேனி குளிர்வித்து
வீசிக் கொண்டிருந்தது. எங்கும் குளிர் தளிர்விட்டுக் கொண்டிருந்தது.
வாயில் வேப்பங்குச்சியை சுவைந்து கொண்டு
வயலுக்குள் இறங்கி அந்நேரத்திலேயே, நமக்கு சோறு போடும் வேலையை நமது தாயைப் போல விவசாயிகள்
செய்ய துவங்கியிருந்தனர். தொப்பைகள் வாய்க்காததால் விருட்டு விருட்டுவென நடை இன்றி
குனிந்து வளைந்து வயல் வேலைகளில் இறங்கியிருந்தனர். அந்த பசும் ஓவியத்தினை தீட்டிக்
கொண்டிருக்கும் ஓவியர்களாகவே அவர்கள் தெரிந்தனர். காற்றின் நிறம் பெற்ற மழை நீரும்,
மஞ்சள் கிழங்கின் வண்ணம் சொரியும் சூரியக் கதிரும், பழுப்பு நிற விதையும் கொண்டு பச்சை
சாயம் தயாரிக்கும் வித்தை இந்த ஓவியர்களுக்கு மட்டுமே வாய்த்திக்கிறது.
“நம்ம ஊரு மலையத்தேன் ப்பே, பாக்க வந்திருக்காக!!” என சொல்லிக்கொண்டே வழி நெடுக வயோதிகர்கள் மலைக்கு வழி காட்டும் கை காட்டிகளாக
காட்சியளித்தனர். எங்கும் குளிர். கம்பளி நூலைப் பின்னி ஆடை செய்து அணியும் நகரவாதிகள்
போலன்று வெற்று உடம்பில் சிறு நூல்த்துண்டை தோளில் போட்டு கதைபடித்துக் கொண்டிருந்தனர்
வேளாண் கடவுள்கள் மரத்தடியில்.
“ச்சும்மா வண்டிய இங்கென நிறுத்துங்கய்யா..”
என அனுமதியை அன்போடு வழங்கியவர்கள் இங்குதான் வாழ்கிறார்கள். அரைக்கால் டவுசர் அணிந்த
இச் சிற்றூர் இளவரசர்கள் எங்களை அம் மலைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களை கண்ட உடன்
ஏனோ காக்கி அரைக்கால் டவுசரோடு ஒன்றாம் வகுப்பு இருமுறை படித்த நியாபகம் தலைக்கேறுகிறது.
பசுமைநடை எறும்புகள் நாங்கள் வரலாற்றுத் தேன் தேடி சர்க்கரை குவியலில் ஏற ஆயத்தமாகினோம்.
மலை ஏற.. மலை ஏற.. பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும் கைக்கெட்டும் நட்சத்திரங்களாய்
பறந்திருந்தன. சிறு குறு மலர்களை கோர்த்து பூங்கொத்துக்களாக்கி, மலை யாவரையும் அன்போடு
அணைத்து வரவேற்றுக் கொண்டிருந்தது. மலை திண்ணும் மடையர்கள் இங்கும் தங்களது கைவரிசையை
காட்டியிருந்தனர். நக்கி நக்கி சிறு மலையொன்றை பூமிக்கடியிலேயே தள்ளிவிட்டனர். நீர்
தேங்கி அதன் ஆழம் என்னவென தெரியாமல் பாதுகாப்பற்றுக் கிடந்தது.
சிற்றூர் இளவரசர்கள் தங்களின் அரண்-மனைக்கு
எங்களை இட்டு வந்துவிட்டனர். மலைகளே இவர்கள் வீடு, கோவில், சாமி, தோழன் இன்னும் என்னென்னவோவாகி
எல்லாம் இருக்கிறது. அதனாலே அவர்கள் இம் மலையை பிரித்து வைத்து பார்க்கவில்லை. கட்டிப்பிடித்து
உறங்கும் தலையணை போல அவ்வளவு பிரியம் கொள்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் இவர்களாலேயே
காலம் காலமாக இம் மலையும் இங்கு வழும் பிராமி என சொல்லப்படும் தமிழி கல்வெட்டுகளும்
பாதுகாக்கப்படுகின்றன. தொல்லியல் சின்னங்களையும் இயற்கையையும் பாதுகாக்க நகரவாசிகள்
நாம் இவர்களிடமே பாடம் கற்க வேண்டும்.
“அப்படி
என்னத்த இவுங்க பாதுகாத்திட்டாங்க!!??” எனக் கேட்பவர்களுக்காக
“இது
வரை கண்டறியப்பட்டுள்ள சமணம் சார்ந்த தமிழ் பிரமிக் கல்வெட்டுகளில் மிகவும் தொன்மையானவை
இங்குள்ள கல்வெட்டுகள்தான். கிமு-3 ஆம் நூற்றாண்டினை சார்ந்த இக் கல்வெட்டுகள் கணிநந்தன்
எனும் துறவியின் தலைமையில் ஏராளமான துறவிகள் இம் மலையில் தங்கியிருந்ததை கூறுகிறது. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய
மன்னனின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இம்மலையில் உள்ள ஐந்து குகைத்
தளங்களில் நான்கு குகைத் தளங்களில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பழங்கால செங்கல்
கட்டுமானம் ஒன்றும் அமைந்துள்ளது.” இன்னும் என்னனென்னவோ இன்றும் மறைந்திருக்கும் இம் மலையில்
உங்களது வரலாறுகளும் கூட இருக்கலாம்.
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இம் மலை
களவாணிகளால் களவு போகாது. இந்த ஊர்க்காரர்கள் காவலில் அவ்வளவு கெடுபிடி. பார்த்தீர்களா!!!
வரலாற்றுத் தேன் சுவைத்து இறங்கிய எங்களுக்கு
பசுமைநடையின் உணவோடு மீனாட்சிபுரம் மக்களின் உபசரிப்பும் காத்திருந்தது. “எப்பா இங்கெ
வந்து உங்காந்து சாப்பிடுங்கப்பா” என ஒரு புறம் புத்தனின் காது படைத்த பாட்டி ஒருவர், அவர்
வீட்டு திருணையையும் முற்றத்தினையும் கூட்டி பெருக்கித் தள்ள.. “அய்யே.. இங்கென எப்பிடி
உங்காந்து சாப்புடுவீக.. என அவர்கள் தெய்வமாக வழிபடும் மரத்தின் நிழலை சுத்தம் செய்ய
துவங்கினர் மற்ற இருவர். பிரபலங்கள் விளக்கமாறு பிடிக்கும் முன்பிருந்தே இவர்கள் விளக்கமாறு
பிடிப்பதலோ என்னவோ இவர்களது விளக்கமாற்று பிடிகள் சிறியதாகவே இருந்தது. எனவே இடம் உண்மையிலேயே
தூய்மையாகியது. இட்லி, சட்னி, சாம்பாரோடு நிறைவடையும் எங்களது பசுமைநடை அம்மக்களின்
தேன் நீரோடும் இனியதாய் நிறைவானது..
மலையை பாதுகாக்கும் இம் மக்கள் பாதுகாக்கப்பட
வேண்டியவர்கள். ஆனால் இவர்களையும் இவர்களது தொழிலையும் பாதுகாத்திடத்தான் யாருமே இல்லை.
“142 அடியை முல்லை பெரியாறு எட்டிவிட்டது என வாழ்த்துக்களோடு முன்னாள் முதல்வரின் படங்கள் சுமக்க நகரப்பகுதிகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் ஏனோ சிற்றூர் பகுதிகளில் ஒட்டப்படுவதில்லை.
ஓரிரு நாட்கள் கூட முழுவதுமாய் தொட்டிருக்கவில்லை பெரியாற்று நீர் அந்த 142 என்கிற
எண்ணை. சென்ற வாரம் இச்சிற்றூரை கடந்து ஓடிய பெரியாறு இந்த வாரம் காணவில்லை. இனி இந்த
மக்களின் ஒரே நீர்த் தீர்வு வஞ்சகமில்லாத வானத்து நீர்தான். அது பெய்தால் மகிழ்வர்..
அதுவும் பொய்த்தால்!!??
இருக்கவே இருக்கிறது பயிர்க்காப்பீடு என்கின்றனர்
அதனைப் பற்றி அறியாத நகரவாதிகள். அரசின் பயிர்க் காப்பீட்டு திட்டங்களின் திகிடுத்தத்தங்கள்
அதற்கு மேல். உயிர்க் காப்பீட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு நேராகவே சென்று அவரின்
இறப்பு குறித்த சந்தேகங்களை நிவர்த்தயாகும் போது அந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதுதான் முறை. பக்கத்து வீட்டுக்காரர்கள் உயிரோடு இருப்பதாகச் சொல்லி இழப்பீடு ரத்து செய்யப்படுவதில்லை. அதே போன்றுதான் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு வரைமுறைகளும் இருந்தாக வேண்டும். ஆனால் இது குறித்து இம்மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு இப்படியாக இருக்கிறது.
“ஒரு பகுதியில பத்து பேரு நிலம் இருந்தா அதுல வெறும் ரெண்டு பேரு நிலத்துல இருந்து
மட்டும் விளைச்சல மாதிரி எடுத்துட்டு போயி பயிர்க் காப்பீட்டுத் துறைக்கராங்க முடிவு பண்ணிடுறாங்க. ஆத்தோரத்துல, ஓடைய ஒட்டி இருக்கிற நிலத்துல கொஞ்சம் வௌஞ்சிருக்கும். ஆனா
அதவிட தூரம் தொலைவுல இருக்கிற நிலத்துல காஞ்சி போய் கெடக்குமே!!! அவங்க எடுத்துட்டு
பேற மாதிரியால எப்பிடி ஒரு பகுதிய ஒட்டு மொத்தமா வறட்சினு சொல்லி இழப்பீடு கொடுக்கவும், மத்த பகுதிய வெள்ளாமை கொழிக்குதுனு தீர்மானம் பண்ணி இழப்பீட ரத்து பண்ணவும் முடியும்?? என் வயலுக்கு
நான் காப்பீட்டு பிரிமியம் கட்டுறேன். ஆனா அடுத்த நிலத்துல வௌஞ்சத வச்சி எப்பிடி என்
காஞ்சி போன நிலத்துக்கு இழப்பீட்ட ரத்து பண்ண முடியும்???”
நியாமான
இம் மக்களின் கேள்விகள் அரசுக்கும் காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையங்களின் காதுகளுக்கும்
சென்றாக வேண்டும். அதற்கு தீர்வும் வந்தாக வேண்டும். அப்போது தான் நாடெங்கும் உள்ள
கோடிக்கணக்கான இது போன்ற மாங்குளங்களின் மண் மணக்கும்.
அன்பும் நன்றியும்
தமிழ்மணி
thamizhmani2012@gmail.com
மாங்குளம் சிற்றூரில் பசுமைநடையில் இருந்து சென்ற வேளாண் பயணத்தின் பதிவுகளை படிக்க
மாங்குளம் சிற்றூரில் பசுமைநடையில் இருந்து சென்ற வேளாண் பயணத்தின் பதிவுகளை படிக்க
வர்ணனைகளை ரசித்தேன்...
ReplyDeleteதொடரட்டும் பசுமை நடை... வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா.. :-)
Deleteஉங்கள் எழுத்து நடையில் மீனாட்சிபுரம் பசுமைநடை அழகு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தோழரே :-)
ReplyDeleteவெகு சிறப்பு
ReplyDelete