Friday, 19 December 2014

வையை தழுவும் மேட்டுப்பட்டி

          இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் இரண்டவது பசுமைநடை இது. 14-12-2014 அன்று மேட்டுப்பட்டி நோக்கியது இப்பசுமைநடை. இந்த முறை வீட்டில் இருந்து எனக்கு பிடித்தமான சோழவந்தான் சாலை வழியே பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் ரசிக்க வைக்கும் விடிகாலைப் பொழுதினில் எனது இருசக்கர குதிரையில். நண்பர்களோடு கதை பேசியபடி பயணம் துவங்கியது. நகரங்களற்ற அந்த சாலை பால்யத்தில் இருந்து எனது மனம் கவர் சாலை. பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற போது மிதிவண்டிகளில் “மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம்!!என பதாகைகளை கட்டிக் கொண்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் இயற்கை சார்ந்த விழிப்புணர்வுக்கான பயணங்கள் இந்தப் பாதையிலேயே நிகழ்ந்துள்ளது.
வாகன நெரிசலற்று இருப்பதால் நான் படித்த கல்விக் கூடங்கள் இந்த பகுதியை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். வாகன புகையற்று காற்று தன் சுயரூபத்தில் வீசிக்கொண்டிருப்பதால் இச்சாலை கூடுதல் கவர்ச்சிதான்.



          படித்த காலத்தில் இயற்கைசார் விழிப்புணர்வு பயணங்களுக்கு வழிகாட்டியதும் இதே சாலைதான். இன்று இயற்கையோடு வரலாறும் இயைந்து வாழும் மலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பசுமைநடைக்கு வழிகாட்டிக் கொண்டிக் கொண்டிருப்பதும் இதே சாலை தான்.

          ஊரப்பனூர் கண்மாய்க்கு நடுவில் பயணிப்பதும், கரடிக்கல் மலையை வேடிக்கை பார்த்தபடி கடப்பதும் எழுத இயலாத மகிழுணர்ச்சி. செக்காணுரணி பேருந்து நிலையத்தில் இருந்து தேனி பிரதான சாலை வழியே இரண்டு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வலது கைப் பக்கம் திரும்புகிறது விக்கிரமங்கலம் செல்வதற்கான ஒடிசலான சிற்றூர்ச் சாலை. குருவிகள் இரை தேட சேர்வது போல ஆங்காங்கே பசுமைநடை நண்பர்கள் கை கோர்த்து மலை தேடி இணைந்து பறக்கலானோம். வழி நெடுக சிறு குறு பறவைகளும் மலர்களுமாக பரவிக்கிடந்தது. நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என கிட்டத்தட்ட நூற்று ஐம்பது தன்னார்வளர்கள் அச்சாலையில் கடந்து கொண்டிருந்தோம்.

“ஏப்பே… படம் எதும் எடுக்கப் போறீகளாப்பே!!!என வெள்ளந்திகளாக பாட்டிகளும்


“ஏய்... ஏதோ தலைவர் போறாரு போலப்பா... என உணவு விளையவைக்கும் உண்மையான தலைவர்களும் எங்களை மறித்து விவரம் அறிந்தனர்.


“கல்யாணிபட்டி தாண்டி நம்ம மேட்டுப்பட்டி சித்தர் மலை இருக்குல பாட்டி, அத பாக்கத்தேன் போறோம் என வழி நெடுக பதில் அளித்துக் கொண்டே கடந்தோம்.


அழகழகான ஊர் பெயர் பொரித்த பலகைகளை கடந்து கொண்டிருந்தது எனது கருப்பு இரு சக்கர குதிரை. செவ்வந்தி, கோழிக்கொண்டை என மலர் சாகுபடி செய்து கொண்டிருந்த விவசாயிகள் அந்த மலர்களினும் அழகான பல் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.


சித்தர் மலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வைகை அணைக்கட்டு என ரம்மியமான இட அமைவு. மலை எனும் சொல்லே பிரம்மிப்பை ஏற்ப்படுத்தும். மேட்டுப்ப்டி மலை அதனினும் பிரம்மிப்பாகவே இருக்கிறது. எனது வாழ்நாளில் இரண்டாம் முறையாக இம் மலையில் கால் வைக்கும் கணம் நெருங்கியதை இதயம் லப்டப்பித்து சிறு மூளைக்கு சொல்லிக் கொண்டிருந்தது.

ஒரு பெரும் சனத்திரள் தமது மலையை முற்றுகையிட்டதை ஏற்றுக் கொள்ள மனமற்ற ஒரு வேளாண் கிழார் டிவிஎஸ்-50ல் பறந்து வந்து யாதெனக் கெட்டார். பசுமைநடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அவரை அசுவாசப்படுத்தி “இந்த மலையில இருக்கிற சமணர் படுக்கைகளையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளையும் பார்க்கதான் வந்திருக்கோம். இந்த மலையோட முக்கியத்துவத்தைப் பற்றி மலை மேலே வகுப்பெடுப்போம் என சொன்ன பிறகே அவரது முகத்தில் ஒரு மலர்ச்சி பிறந்தது.



ஞாயிறுகளில் மட்டையையும் பந்தையும் தூக்கிக் கொண்டு தங்கள் வீடு ஆக்கிரமித்தது போக மீதமிருக்கும் கண்மாய் நிலத்தில் கிரிக்கெட் விளையாட கிளம்பும் நகரத்து குழந்தைகள் போல இல்லை இச்சிற்றூர் குழந்தைகள். செல்லமாய் வளர்க்கும் ஆட்டுக்கிடாயுடன் நெற்றியில் பட்டையடித்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு தயாராவது போல பாவணை செய்து கொண்டிருந்தனர். மேலும் சிலர் மலைகளின் ஒவ்வொரு பாறைகளிலும் அமர்ந்து கதை படித்துக்கொண்டிருந்தனர். மலை ஏற மலை ஏற ஒவ்வொரு உயரத்திலும் மலைகளோடு உறவாடிக் கொண்டிருந்தனர் அச்சிற்றூர் சிறுவர்கள். மலையை அரணாக்கி இவர்கள் வாழ்வதாக தோன்றவில்லை. மலையே இவர்கள் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பது புலனாகிறது.

“உங்க ஊருலதான்யா இப்படி மலைலாம் இருக்கு.. பத்திரமா பாத்துக்கிங்க..” என அவர்களோடு கதைத்தவாரே அவர்களையும் அணைத்து மலையேறிக் கொண்டிருந்தோம்.



ஒரு பெரிய மலைப்பாறையின் மேல் இன்னொரு மாபெரும் மலைப் பாறை முட்டுக்கொடுத்து படுத்துக்கிடந்தது. இந்த இரு மலைப்பாறைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளி நீண்ட குகையாகி இருந்தது. மழை பொழ பொழவென கொட்டினாலும் வெயில் சுளீரென அடித்தாலும் இந்த குகை ஒரு சாது போல அதன் நிலை மாறாமல் யாபித்துக்கிடக்கும் அமைப்பு.


தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா அவர்கள் இந்த இடத்தின் தொன்மையை விளக்கினார். மதுரை என பெயர் செதுக்கப்பட்டுள்ள பழங்கால கல்வெட்டுகள் மதுரையில் இரண்டு இடங்களில்தான் உண்டு. அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டி மலையிலும் இந்த மேட்டுப்பட்டி சித்தர் மலையிலும் மட்டுமே “மதிரை” என பெயர் கொண்ட கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இன்றைய கிரானைட் கிருக்கர்கள் இந்த மலைகளையும் தின்றிருந்தால் இந்த வரலாற்று ஆவணம் என்னவாகியிருக்கும் எனும் ஐயப்பாடு உண்டாகின்றது.
 

தொல்காப்பிய இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தின் முதல் எழுத்து ‘ச’ 
இடக் கூடாது என்பதும் இம் மலையில் கற்க வேண்டிய தமிழ் இலக்கணமாக உள்ளது. “அமணன் உதயனச” என்ற சொற்றொடரில் சமணன் என்ற என்கிற சொல்லே அமணன் என குறிக்கப்பட்டுள்ளது.
இந்த குகைத் தளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. பல சமணப் படுக்கைகள் பாறைகளை மட்டப்படுத்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மலையில் சமணர்கள் மட்டும் தங்கியிருந்திருக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வரலாறுகளை சுமந்து நிற்கின்றது இம்மலை. பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்குமான வணிக பெரு வழியாக இப்பகுதி இருந்திருக்கிறது. இதே வழியில் கம்பம் பள்ளத்தாக்கினில் உழவர் ஒருவர் நிலத்தினை உழும் போது அகஸ்டஷ் சீசர் காலத்தினைச் சார்ந்த ரோமானிய வெள்ளிக் காசுகள் கிடைத்துள்ளன. இது போக இவ் வழி நெடுக சமணத் தொல்லியல் சின்னங்களும், வரலாற்று தடயங்களும் அதிகமாக பரவிக் கிடக்கின்றன.

“மதுரையை எரித்து கண்ணகி கோபத்தோடு இதே பாதையில்தான் சென்றதாகவும் சொல்லப்படுவதுண்டு” என சாந்தலிங்கம் அய்யா சொல்லும் போது எனது மனக் கண்களில் கண்ணகி இப்பாதையில் செல்லும் காட்சி காணொளியாகியிருந்தது.



இந்நடையின் சிறப்பு விருந்தினர், “கல்லில்கவிதைகள்” (http://poetryinstone.in/) எனும் வலைதளத்தினை ஏற்படுத்தி பண்டைய கலைச் சிலைகளை பாதுகாத்தும் ஆவணப்படுத்தியும் வெளிநாடுகளில் இருந்து மீட்டும் இயங்கி வரும் அண்ணன் ச.விஜயக்குமார் அவர்கள். பண்டைய கல்வெட்டுகள் செரிந்துள்ள இம் மலைப் பாறைகளில் அதன் அந்த வரலாற்று ஆவணங்களுக்கு அருகிலும் அதன் மேலும் பெயிண்ட் கொண்டு கிருக்கித் தள்ளியுள்ள நிலைகண்டு வருத்தத்தினை பதிவு செய்தார்.


இன்னும் மேலே போகலாம் வாருங்கள் என வழிகாட்டி அழைத்துச் சென்றனர். உண்மையில் பசுமைநடை உயரத்தான் கொண்டு சென்றுவிட்டது. மலையின் உச்சியில் நின்று வைகையின் வளைவு நெழிவுகளை கண்கொட்டாமல் கண்டு கொண்டாடியிருந்தேன். இவ்வளவு பெரிய மலையாய் வளர்ந்ததற்கு இவ் வையைதான் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.


இது தேனி இது கம்பம் பள்ளத்தாக்கு என தன்னார்வளரில் ஒருவர் ஆள்காட்டி விரல் நீட்டி தொடு திரையில் காட்சிகளை நகர்த்துவது போல நகர்த்திக் கொண்டிருந்தார். இவ்வையையின் தழுவலில் மலை முழுதும் சில்லிட்டுக் கொண்டிருந்தது. நிலம் நீர் காற்று ஆகாயம் என அனைத்தும் கைப்பிடிக்குள் வந்த உற்சாகத்தில் மனத்துள் நெருப்பு அடங்கிப் போனது. வைகையின் வழி நெடுக ஆற்று நீரை கொட்டாங்குச்சி குடுவையுள் தென்னை மரங்கள் சேகரித்து சுமந்து கொண்டிருந்தன..



காலையில் எழுவது, குளிர்ப்பது, அரைகுறையாய் உண்டு பேருந்தின் படிகளில் தொற்றிக் கொண்டு பணிக்கு பறப்பது, வழக்கமான மதிய உணவு, மாலை வீடு திரும்பல், அதே பேருந்து, அதே படிக்கட்டு, வீட்டில் இரவு உணவு, அதன் பின் உறக்கம் என இதனை மட்டும் மாறி மாறி பைத்தியக்கார இயந்திரம் போல செய்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வின் இனிய தருணம் இது.

பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களின் “அய்யா சாமி... போதும். வேகமா வாங்க, கீழ போவோம்” என்ற கெஞ்சலுக்கு சற்றே செவி கொடுத்து மனமற்று மலையில் இருந்து ஒன்றாய் இணைந்து இறங்கினோம். ஆரோக்கிய உணவான இட்லி, தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் வழக்கம் போல வழங்கப்பட்டது. அருகில் இருந்த கருப்பசாமி கோவில் மரத்தடி நிழல் உண்டு களிக்க ஏதுவாக அமைந்தது.

மலைக்கு கை காட்டி விட்டு நண்பர்கள் வாங்கிக் கொடுத்த குச்சி ஐஸ்சோடு இந்த பயணம் குறித்தான சுவையான அனுபவங்களையும் சுவைந்து கொண்டே கூடு தேடி பறந்தேன்..








அன்பும் நன்றியும்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

6 comments:

  1. சித்தர்மலைக்கு மீண்டுமொருமுறை பதிவினூடாக அழைத்துச் சென்றமைக்கு நன்றி. படங்களும், எழுத்தும் தாங்கள் கவிஞர் என்பதை பறைசாற்றுகின்றன. நான் வாகனத்தில் செல்வது போன்ற படத்தைப் பார்த்ததும் ரொம்ப உற்சாகமாகயிருந்தது. நன்றி. மேலும், ஒரு சின்ன திருத்தம் விஜயகுமார் அவர்கள் http://poetryinstone.in/ என்ற வலைதளம் நடத்திவருகிறார். அமைப்பு அல்ல. நல்லதொரு பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்.. தங்களைப் போன்றவர்களின் வருகையும் கருத்தும் எனக்கு உற்சாகமளிக்கிறது. தாங்கள் குறித்த திருத்தம் செய்துவிட்டேன்.

      Delete
  2. மணிமணியாய் இருக்கிறது தமிழ்மணியின் எழுத்துக்கள்...

    ReplyDelete