Wednesday, 14 January 2015

தை பிறக்கட்டும்; வெள்ளப்பாறைபட்டிக்கு வழி பிறக்கட்டும்!!!

          பசுமைநடையும் வெள்ளப்பாறைபட்டி சிற்றூர் மக்களும் இணைந்து 11-01-2015 அன்று பொங்கல் விழா கொண்டாட திட்டமிட்டோம்.


          திட்டமிட்ட ஒரு வார காலமாக பசுமைநடை நண்பர்கள் பலர், வெள்ளப்பாறைபட்டிக்கு வந்து முன்னேற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டனர். எனக்கு 10-01-2015 அன்று முதல்தான் அலுவல் விடுமுறை கிடைத்தது. அன்று காலை வெள்ளப்பாறைபட்டிக்கு முன்னேற்பாட்டு பணிகளில் கலந்து கொள்ள கிளம்பினேன். மதுரையின் தெற்கு நுழைவாயிலான திருநகர் திருப்பரங்குன்றத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டருக்குள்ளாகவே அமைந்துள்ளது வெள்ளப்பாறைபட்டி சிற்றூர். எட்டு கிலோ மீட்டருக்குள் மனிதர்களின் வாழ்க்கை முறை எவ்வளவோ வித்தியாசப்படுகிறது.



          நான்கு வழிச் சாலையை கடந்து தென்பழஞ்சி சாலையில் பயணிக்கத் துவங்கினேன். சாலை இங்கு அதன் அளவினை முதன் முதலாக சுறுக்கிக் கொள்கிறது. வேடர் புளியங்குளத்தின் தென்னந்தோப்பினை கடந்ததும் பயணிக்க வேண்டிய வலது பக்க சாலை அதனை விட சற்றே குறுகலாகிறது ஆங்காங்கே சருக்கலாகிறது.
சின்னதாய் ஒரு சந்தேகம். எதிரில் வாகனம் வந்தால் எப்படி ஒதுங்கிக்கொள்வது என்று. எனது இரு சக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு அருகில் இருந்த முதியவரிடம் விசாரித்தேன்.

“அட போ.. ராசா., இந்த பக்கமாவது பஸ்ஸாவது.. காலையில ஒன்னு, சாயந்திரமா ஒன்னுதான்.. அப்பறம் ஒன்னும் கிடையாது.. உம்பாட்டுக்க போப்பே..”
என சொல்லிவிட்டு நடையை கட்டினார்.


          சென்று கொண்டிருக்கும் போதே ஒரு இடத்தில் பாதை முடிந்தது போல காட்சியளித்தது. சற்று நின்று கூர்ந்து பார்த்தால் மண் சாலையாகிப் போன தார் சாலை தென்பட்டது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேல் அந்த சாலை எனச் சொல்லப்படும் பாதையில் பயணிக்கலானேன். கல்லும் முள்ளும் சக்கரத்திற்கு செலவை இழுத்து வைத்திடுமோ எனும் பயம் வேறு எனக்கு.

          விவாத மேடைகளாக திண்ணை தேநீர் கடைகள், மழை தின்று மீதம் விட்டு தொடுக்கி நிற்கும் மண் வீடுகள், தாயிடம் முட்டி முட்டி பால் குடிக்கும் ஆட்டுக் குட்டிகள், நகரக் குழந்தைகள் மறந்த சொல்லை நியாபகப்படுத்தி கத்தும் மாடுகள், தன் பிள்ளைக் குஞ்சுகளோடு சுற்றித் களிக்கும் கோழிகள், தந்தட்டி தொங்கிய செவிகளை தடயமாக கொண்ட பாட்டிகள், பள்ளிச் சீருடை தவிர வேறு சட்டை இல்லாமலோ என்னவோ அதனோடே ஒட்டி உறவாடியபடி திரியும் குழந்தைகள், என மதுரையில் இருந்து எட்டே கிலோமீட்டரில் வேற்று கிரகம் சென்ற உணர்வை கொடுக்கிறது வெள்ளப்பாறைபட்டி.


          ஊரின் மத்தியில் ஒரு பெரிய பாறை இயற்கையாக அமைந்துள்ளது. ஒரு முறை இந்த சிற்றூர் மழை வெள்ளத்தில் சிக்குண்டு தவித்த போது இங்கு வாழ்ந்த மக்கள் இந்த பாறையின் மீது ஏறி உயிர் பிழைத்துக் கொண்டதாகவும், இதனாலேயே இந்த ஊர் வெள்ளப் பாறைபட்டி என அழைக்கப்படுவதாகவும் வரலாற்றுத் தகவல் சொல்லப்படுகிறது.


          இந்த மக்களையும் அவர்களது சந்ததிகளின் உயிரையும் பாதுகாத்த இந்த பாறையை இன்றும் இம்மக்கள் தெய்வமாக வணங்குகின்றனர். நேற்று உதவி செய்தவர்களையே இன்று மறந்துவிடும் இந்த நவநாகரீக அவசர காலத்தில் இந்த மக்கள் முற்றிலும் வித்தியாசப்படுகின்றனர். அந்த பாறையின் மேல் ஒரு நினைவுத் தூண் ஒன்றை அமைத்துள்ளனர். அதற்கு ஆண்டுக்கு ஒருமுறை விழா எடுக்கின்றனர். அந்த பாறையின் மீது யாரும் செருப்பு அணிந்து செல்வதில்லை. வெளி ஆட்களையும் செருப்பணிந்து பாறை மீது ஏற அவர்கள் அனுமதிப்பதுமில்லை.


          இம் மக்களின் குழந்தைகளுக்கு இந்த பாறை ஒரு விளையாட்டு சாமானாக வேடம் தரிக்கிறது. பாறையின் ஒரு பக்கம் வளு வளு என இருக்க,

“டேய் தம்பி ஏன்டா இந்த இடம் மட்டும் இப்படி வளு வளுனு இருக்கு??!!
என ஒரு சிறுவனைக் கேட்டேன்..

“அண்ணே.. இங்க பாருணே..
என சொல்லிவிட்டு மள மளவென ஒவ்வொருவராக பாறை மீது ஏறி சருக்கி ஆனந்தப்பட துவங்கினர்.

          இன்னும் சில குழந்தைகள் அந்த பாறையின் மீது மூன்று குட்டி கற்களை அடுப்பு போல அமைத்து, விளக்கமாத்துக் குச்சிகளை விறகாக பாவித்து, வேப்பிலையை சமைத்துக் கொண்டிருந்தனர். விளையாட்டு மட்டுமல்ல அங்கேயே உட்கார்ந்து எல்லா வீட்டு குழந்தைகளும் கூடி கதை படித்துக் கொண்டிருக்கின்றனர். நகரங்களில் மூடிய கதவுகளுக்குள் உட்கார்ந்து “சோட்டா பீம், வருத்தப்படாத கரடி சங்கம், ஜெட்டிக்ஸ் என உயிரற்ற பொம்மைகளோடு நமது குழந்தைகள் கதைபடிக்க கூட இயலாமல் ஒரு வழித் தொடர்பில் சுயம் இழந்து தவிக்கின்றனர்.

          
          இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டு காலங்களில் இந்த சிற்றூரில் இருந்து ஒரு அரசாங்க ஊழியர் கூட உருவாகவில்லை. கல்விக் கூடமே வெகு தாமதமாகத்தான் இந்த சிற்றூருக்கு அறிமுகமாகியுள்ளது. இதுவே இதற்கு பெரும் காரணமாக உள்ளது. நான்காம் வகுப்பு வரையான பள்ளிக்கூடம் இந்த வெள்ளப்பாறையை ஒட்டி முதன் முதலாக துவங்கப்பட்டிருக்கிறது. சமீபமாகத்தான் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்ப வரைக்குமான அடுத்த பள்ளிக்கூடத்தினை இந்த ஊர் பெற்றுள்ளது. இந்த குழந்தைகளாவது அரசாங்கப் பணியில் சேர்வதற்கு இந்த கல்விக் கூடங்கள் இன்னும் கூட தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.


           நகரங்களில் படிப்பதற்கு ஏதுவான சூழலில் படித்து முடித்து, அரசாங்க அதிகாரியாக வரக்கூடிய ஒரு மாணவனை விட இது போன்ற ஒதுக்கப்பட்ட சிற்றூர்களில் இருந்து உருவாக்கப்படும் அரசாங்க அதிகாரிகளுக்கே மக்களின் உணர்வுகளும் வலியும் புரியும் என நம்புகிறேன்.

          நாளை பொங்கல் விழாவிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பணியில் அந்த சிற்றூரை சேர்ந்த இரண்டு அண்ணன்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அரசாங்கம் அமைத்துக் கொடுத்து காணமல் போன அந்த சாலையின் இரு புறமும் முளைத்திருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்றிக் கொண்டிருந்தனர். ஊரின் உள் நுழைந்ததில் இருந்து நீளமான தடுப்புச் சுவர் எனது கண்களில் உருத்திக் கொண்டே இருந்தது. ஊரின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் அந்த தடுப்புச் சுவர் கண்ணில் படவே முள் செடிகளை அகற்றிக் கொண்டிருந்த அந்த அண்ணன்களிடம்

“அது என்னணே... நீளமா தடுப்பு சுவர் போய்ட்டு இருக்கு.. அந்த பக்கம் என்ன இருக்கு??”
எனக் கெட்டேன்.

“தேனியில இப்போ நியூட்ரினோ ஆய்வு மையம் ஆரம்பிச்சிருக்காங்கள்ல, அதுக்கான குவாட்ரஸ்னு சொல்றாங்கணே!! அந்த காம்பவுண்ட் செவருக்கு அந்த பக்கம் அதுதானே இருக்கு
என்றார்.


எனக்கு புரியவில்லை.


“தேனியில இருக்கிற ஆய்வு மையத்துக்கு இங்க எதுக்குணே குவாட்ரஸ் கட்டுறாங்க!!
என கேட்டேன்.

“தெரியலணெ.. அப்பிடித்தான் சொன்னாங்க
என முடித்துக் கொண்டார்.


          எனக்கு அது என்னவென தெரியாமல் தலை வெடித்திடும் போல இருந்தது.

          நாளை பொங்கல் விழாவில் கொண்டாடப்பட உள்ள அந்த வெள்ளப்பாறையை சிறுவர் சிறுமிகளைக் கொண்டு தூய்மை செய்துவிட்டு மதிய வேளையில் அவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். விளையாட்டின் நடுவே இரு சிறுவர்கள் ஓடிவந்து
“அண்ணே வாரீங்களா, ஓணாம்பாறைக்கு போவோம் என்றனர்
என்ன சொல்கிறார்கள் என புரியாமல்

“என்னப்பா சொல்றீங்க, புரியல என்றேன்.

“ஓணாம் பாறை ணே

“ஓ... ஓணான் பாறையா!!?
  
“ஆமா ணே என்றவர்கள் அந்த தடுப்புச்சுவர் இருக்கும் திசையில் கை காண்பித்தனர்.


        அந்த இடத்தினை பார்த்திட முடிவு செய்து அந்த இருவரோடு நானும் அவர்கள் சொன்ன ஓணான் பாறைக்கு சென்றோம். யாரும் அற்ற அத்துவான வெளி. நெருங்க நெருங்க அந்த தடுப்பு சுவர் விகாரமாக இருந்தது. காலை வேளையில் முற்களை வெட்டி உதவிய அந்த அண்ணன் சொன்னது போல குடியிருப்பு பகுதிகளுக்கான இடமாக அது தெரியவில்லை. ஒரு மலை தனது ஒரு பகுதி முழுக்க வெட்டுப்பட்டு நொண்டிக் கொண்டிருந்தது. அந்த மலையின் தொடர்ச்சியாக பல பாறைகள் இயற்கையாக அமைந்திருந்தன. அந்த மலை உட்பட பாறைகள் அனைத்தையும் அந்த தடுப்பு சுவர் சுற்றி வளைத்திருந்தது. மக்கள் வசிக்கும் இந்த சிற்றூருக்கான சாலை அலங்கோலமாக காட்சியளிக்க, இந்த சுற்றுச் சுவருக்கு வரும் தனிப்பட்ட சாலை மட்டும் விமான ஓடுதளம் போல நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு மலைக்கு வேலியிடுவது அரசாங்கம் துணையில்லாமல் முடியாது. எதற்காக இவ்வளவு விரையம் மக்கள் பணத்தில், அதுவும் இயற்கையை அபகரித்து என்ற குழப்பம் மேலோங்கிக் கொண்டே இருந்தது.

“அண்ணே செருப்பு காலோட அந்த பாறையில நிக்காதீங்க ணே.. என சற்று கோபமாக என்னோடு வந்த சிறுவர்கள் சொல்ல, எனது பார்வையை சட்டென கீழே நோக்கினேன்.

“அண்ணே இது தான் ணே ஓணாம்பாறை.. இது சாமி ணே என்றனர்.

“மன்னிச்சிக்கிங்கப்பா.. எனச் சொல்லியபடி செருப்பை கழற்றிவிட்டு மீண்டும் அந்த பாறை மீது ஏறினேன். அந்த பாறையும் ஒரு பகுதியை இழந்திருந்தது.
“என்னப்பா இங்க பள்ளமா இருக்கு!? எனக் கேட்டேன்

“இந்த சுவர கட்டும் போதுதானே எங்க பாறையையும் சேத்து ஒடைச்சிட்டாங்க., நாங்க கார்த்திகைக்கு இங்க தான் சாமி கும்பிடுவோம். இதுவும் எங்க சாமிதான் ணே என்றனர்.


          நான் செருப்பு காலோடு ஏறியதையே பொறுத்துக் கொள்ள இயலாத இவர்களால் எப்படித்தான் இந்த பாறையில் ஒரு பகுதியை இழந்து போனதை ஏற்றுக் கொள்ள இயன்றதோ தெரியவில்லை. ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் இவர்களை ஒடுக்கிவைத்துள்ளமை புலனாகிறது.

பத்திரிகை நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன்.

“அது நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கான குவாட்ரஸ்லாம் கிடையாதுங்க. அங்க நியூட்ரினோ குறித்த ஆய்வு நடக்கிறதா தகவல் இருக்கு. அதுக்குதான் அங்க இருக்கிற மலைய வெட்டி அத கொடஞ்சி வச்சிருக்காங்க.. இன்னும் சொல்லப் போனா கூடங்குளம் அணு உலைக் கழிவுகள இந்த மலைய கொடஞ்சி உள்ள வைக்கப் போறதாகவும் தகவல் இருக்கு என ஒரு பெரிய குண்டு ஒன்றை தூக்கி போட்டார்.

“அய்யோ என்ன சொல்றீங்க..! இத பத்தி ஏன் பத்திரிகையில அதிகமா வரல!! என்றேன்

தன் இயலாத்தனத்தினை நினைத்தவர்.. சிரிப்பை பதிலாக்கிவிட்டு.. “பத்திரிகையா!!! அப்படினா!?எனக் கேட்டுவிட்டு அலைபேசியின் இணைப்பை துண்டித்துவிட்டார்.


          தான் வாழக்சுடிய பகுதியில் இப்படி ஒரு நியூட்ரினோ ஆய்வகமோ, கூடங்குளத்தின் அணு உலைக் கழிவோ வரப்போவதற்கான எந்த ஒரு தகவலும் தெரியாமல் அதனைப் பற்றி அறியாமல் இன்னும் இந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாடும், சாலை சீரமைப்பும் மட்டுமே அவர்களது பெரிய பிரச்சனையாக எங்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
செருப்பணிந்த காலை பாறை மீது வைத்ததும் அந்த சிறுவர்களுக்கு ஏற்பட்ட கோபம்தான், கூடங்குளம் மக்களுக்கு இன்று கட்டுக்கடங்காமல் வெளியில் வந்திருப்பதை உணர்கிறேன்.

  
            அரசாங்கமும் அதிகாரிகளும் அது ஒரு குடியிருப்புக்கான பகுதி என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த பகுதியில் வாழும் மக்களின் கருத்துக்களை முறையாக கேட்காமல் இப்பேர்பட்ட காரியம் செய்து கொண்டிருப்பது நியாயமா எனப் புரியவில்லை.
கிரானைட்டுக்காக மலைகளை கொள்ளையிடும் கொள்ளையர்களை விலாசும் பத்திரிகைகள், நியூட்ரினோ ஆய்வகத்திற்காக மலைகளை வெட்டி எடுப்பதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கின்றன..
இயற்கை குறித்தான புரிதல் இல்லாத விஞ்ஞானிகளால் மட்டுமே நாடும் நாட்டு மக்களும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

           மறுநாள் காலையில் பொங்கல் விழா வெள்ளப்பாறைபட்டியில் கலை கட்டியது. ஊர் மக்களோடு பசுமைநடையின் அங்கத்தினர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். விளையாட்டுப் போட்டிகள், காலை சிற்றுண்டி, பசுமைநடை நிகழ்வாக ஊர் வலம் வருதல், சொற்பொழிவு என அனைத்திலும் பொது மக்களும், பசுமைநடை ஆர்வளர்களும் எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



          பொங்கல் பொங்கிடவும், எழுந்த அச்சிற்றூர் பெண்களின் குளவை சப்தத்தில் அந்த தடுப்பு சுவர் சற்றே விரிசல் அடைந்தது.

அன்பும் நன்றியும்
பாடுவாசி.

3 comments:

  1. அற்புதமான பதிவு கிராமத்து வாழ்வியல் ஊடே சமுதாய பிரச்சனைகளையும் அழகாக கவலையுடன் எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
  2. இந்த ஆண்டு மேலும் சிறக்கட்டும்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு. கட்டுரையை ஜஸ்டிஃபை செய்தால் வாசிக்க இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete