சிவரக்கோட்டை
ஊரில் 45-வது பசுமைநடை என தகவல் கிடைத்த நாளில் இருந்து மனதில் இனம் புரியா மகிழ்ச்சி.
எனது ஊரான திருமங்கலம்அருகில் ஏழு கல் தொலைவிற்குள் அமைந்துள்ள சிவரக்கோட்டைக்கு பசுமைநடை
நண்பர்கள் வர இருப்பது ஒரு காரணம். எனது ஊரின் அருகில் அமைந்திருக்கும் வரலாற்று எச்சமானது,
எனது மண்ணை பற்றிய வரலாற்று தேடலுக்கு வழி அமைக்கும் என்கிற ஆவல் மற்றுமொரு காரணம்.
ஏற்கனவே
சில தாத்தா பாட்டிகளிடம் எனது ஊர் பற்றிய வரலாறு குறித்து பேசுகையில் “பாண்டிய மன்னர்கள்
மதுரையில் இருந்து வந்து வன விலங்குகளை வேட்டையாடிச் செல்லும் அடர்ந்த வனமாக இப் பகுதி
இருந்தது” என்று கூறியுள்ளனர்.
இவ்வாறாக
என்றைக்கோ தாத்தா பாட்டிக்கள் கூறிய தகவல் மூளையின் ஒரு மூலையில் நிழலாடிக் கொண்டே
இருந்தது. திருமங்கலத்தின் அருகில் உள்ள சிவரக்கோட்டை வனப்பகுதி, அவர்களது கூற்றுக்கு
உயிர் இருப்பதாக உணர்த்தியது. இந்த வகையில் 01-02-2015 அன்று சிவரக்கோட்டையில் நிகழ்ந்த
பசுமைநடை எனது வாழ்நாளின் முக்கிய தருணங்களில் ஒன்றாகிப் போனது.
சிவரக்கோட்டை
பசுமைநடைக்கு முன்னமே அதன் ஏற்பாட்டு பணிகளுக்கு செல்லும் போது அய்யா ராமலிங்கம் அவர்களின்
அறிமுகமும் கிடைத்தது, புத்துணர்வாக அமைந்தது. 2014-க்கான சிறந்த மனிதர்களில் அய்யாவையும்
தேர்ந்தெடுத்து கௌரவித்திருந்தது விகடன். அன்று முதல் அவரை கண்டு பேசி பழக விரும்பிக்
கொண்டடிருந்தேன். அது ஒரே மாதத்தில் நிகழ்ந்தது எதிர்பார்க்காதது.
பசுமைநடை
வருகிறது என்றதும் ராமலிங்கம் அய்யா அவர்கள் தானும் தனது ஊர் மக்களது ஆதரவோடும் இந்த
ஊருக்காக; ஊரைக் காக்க செய்த பணிகளை ஆவணப்படுத்தி கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.
அவரது உழைப்பு மகத்தானது என்பது இரவும் பகலும் இளைஞர்களோடு அதனை காட்சிப்படுத்தியதில்
தெரிந்தது. அந்த கண்காட்சி ஏற்பாடு செய்திருந்த மண்பத்திற்கான வாடகையையும் கூட ஊர்
மக்கள் வரியாக சேகரித்து செலுத்தியிருந்தனர். பல சமுதாய பெயர்களில் இருந்தாலும், இம்மக்கள்
ஒற்றுமையோடு பல காரியங்களை முன்னெடுக்கின்றனர்.
பசுமைநடை
நண்பர்கள் சிவரக்கோட்டையில் குவிந்த மறுகணம் அன்போடு அள்ளிக் கொள்ள இரண்டு உழவுர்திகள்
(Tractors) தயாராகின. எவ்வளவு முடியுமோ அவ்வளவு எங்களை தனது இடுப்பில்
தாயைப் போல சுமந்து கொண்டு மேற்கு திசையில் ஒற்றையடிப் பாதைக்குள் பயணிக்கத் துவங்கியது
உழவூர்தி. அடர்ந்த வனாந்திரம் எங்களது கண்களுள் குவிந்து காட்சியாக விரிந்தது. உள்ளே
செல்லச் செல்ல கட்டிட கண்றாவிகள் ஏதுமற்று காடும் கறையும் கானகத்திற்குள் இட்டுச் சென்று
கொண்டிருந்தது.
ஒரு
நேரத்தில் இடுப்பில் அமர்ந்திருந்த எங்களை உழவூர்தி அக்கானகத்துள் இறக்கிவிட்டு
எங்களது நடை அழகை அன்னை போல பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.
சிவரக்கோட்டையின்
நான்கு வழிச் சாலையில் மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறந்த செய்திகள் செய்தித்தாள்களில்
நிறைய படித்திருக்கிறேன். ஆனால் வன விலங்குகள் நடமாடும் இடம் என்ற எச்சரிப்பு பலகை
இந்த நான்கு வழிச் சாலைகளில் எங்கும் இல்லை. சென்ற வாரம் கூட மான் ஒன்று ஏதோ ஒரு மிருகத்தால்
கடிபட்ட நிலையில் உயிர் இழந்த செய்தியை படித்தேன். அதையும் அதிகாரிகள் இந்த மானை நாய்தான்
கடித்திருக்கும் என பதிலளித்திருந்தனர். ஆனால் அந்த ஊர் மக்கள் “மான் இருக்கிற உயரத்துக்கு
நாய் போய் அத கடிக்கிதாக்கும்.. வேற ஏதோ வேட்டையாடுற மிருகம் உள்ள இருக்குங்க என ஊர்ஜிதப்படுத்தினர்.
இரண்டு
மாதங்களுக்கு முன்பு கூட சிறுத்தையின் கால் தடத்தினை ஊர் மக்கள் கண்டு சொல்ல, அதனையும்
இந்த அரசு அதிகாரிகள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
இப்படி
ஏன் இந்த முரண்பாடு அரசுக்கு மக்கள் மேல் என்ற எண்ணற்ற கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டே
இருந்தது.
ஒரே
கானகக் காட்சியாய் இருந்த வயல்களுக்குள் இருந்து சிறுத்தை ஏதும் ஓடி வந்தால் என்ன செய்வது
என நண்பர்களோடு பேசிக் கொண்டே கடந்து கொண்டிருந்தோம்.
பருத்தி
செடியும் துவரை செடியும் விளைந்து நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு செடியும் ஆள் உயர
வளர்ந்து நின்று குகைக்குள் செல்வது போல எதிர்பார்ப்பை கொடுத்து ரசிக்க வைத்துக் கொண்டிருந்தது.
மயில்கள் ஆட்களின் வருகையைக் கண்டதும் வயல்களுக்குள் ஓடி ஒளிந்து “இவனுக எதுக்குடா
இங்க வர்ரானுக” என்பது போல திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது.
“இந்த வயக்காட்டுல 30 வகை பயிர்கள
பயிர் செய்றோங்கய்யா” என்றார் ராமலிங்கம் அய்யாவின் உடன் வந்த ஒரு விவசாயி.
“30 வகையா!!?”
என வாயைப் திறந்தோம்
“ஆமாங்க..”
என தொடர்ந்தார்.
“திணை, துவரை, வரகு, உளுந்து,
கம்பு, பாசிப்பயறு, கேழ்வரகு, தட்டைப்பயறு, குதிரைவாலி, மொச்சை, சோளம், கொள்ளு, மக்காச்சோளம்,
சுண்டல், சாமை, வெண்டி, மல்லி, கொத்தவரை, எள், மொச்சைக்காய், ஆமணக்கு, பீர்க்கை, ஓமம்,
பருத்தி, அவுரி, வேம்பு, நித்யகல்யாணி, புளி இப்பிடினு முப்பது பயிர் பண்றோம். அதுவும்
எந்த வேதியல் உரமும் போடாம வளத்தெடுக்கிறோம்” என்றார்.
“வேதியல் உரம் இல்லாமலா!!!”
என ஆச்சரியப்பட்ட எங்களிடம்.
“ஆமாங்கய்யா இங்க நிறைய பறவைகள்
வருதுக, மயில் இருக்கு. அதுகளாம் சாப்டனும்லங்கய்யா. அதுனாலதான் இயற்கை உரங்கள மட்டும்
பயன்படுத்துறோம்” என்றார் தாய்மையோடு.
ராமலிங்கம் அய்யா தொடர்ந்தார்.
“போன வருசம் மழை இல்லாம காவேரி
டெல்டா விவசாயிக எல்லாம் காஞ்சிபொச்சேனு கதறிக்கிட்டு இருந்தப்பயும் கூட நமக்கு நல்ல
வௌச்சலுங்கய்யா. ஆனா இது தரிசு நிலம். இதுல ஒன்னும் விளையாதுனு அரசாங்க அதிகாரிங்க
தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க.”
ஏன் இந்த முரண்பாடு என்று இரண்டாம் முறை குழம்பிப் போனேன்.
சரியாக
இரண்டு கிலோ மீட்டர் கடந்ததும் சற்று உயரமான மலைக்குன்றின் அருகில் ஒரு நீர் நிறைந்த
ஊரணி இருந்தது. ராமலிங்கம் அய்யா ஆள் காட்டி விரல் நீட்டி “இது தாங்கய்ய மலையூரணி.
மலைகளுக்கு நடுவுல இருக்குறதால இந்த பேரு வந்திருக்கலாம். இந்த பக்கம் யானை நீந்தி
குளிக்கிற அளவுக்கு இன்னும் தண்ணி இருக்கு.. அந்த பக்கம் குதிரைகள குளிப்பாட்டுற பகுதியாவும்
இந்த ஊரணி அந்த காலத்திலயே இருந்திருக்குனு சொல்வாங்க”
என்றார்.
கண்கள்
விரித்து அவர் கதைத்ததை கேட்டுக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்தார். “ஆனா இந்த ஊரணிய
வறட்சி ஊரணினு அரசாங்க அதிகாரிங்க சொல்றாங்க என்றார்.
மூன்றாம் முறையாக முரண்பாடுகள்
என்னைக் குழப்பிக் கொண்டிருந்தன.
தலையை
சொறிந்த படி நடக்கலானேன். சிறிது தூரத்தில் இன்னோரு மலைக்குன்றின் மேல் ஒரு பழைய கோவில் கண்ணில்பட்டது. இந்த மலை மீது
ஏறி சுற்றி பார்த்து கண் வியந்து போனோம். கண்ணுக் கெட்டிய தூரம் வரை சிறு கட்டிடம்
கூட இல்லை. வயல் இம்மக்களின் உயிர் ஆதாரம் என உணர முடிந்தது. புதுப் புது பறவைகள் கூட்டம்
கூட்டமாக இங்கும் அங்குமாக பறந்து கொண்டே இருந்தன. நகர்புறங்களில் தொலைந்து போன சிட்டுக்
குருவிகள் இங்குதான் கும்மாளமடிக்கின்றன. நாரை, அன்றில், கரிக்குருவி இன்னும் இன்னும்
என்னென்னவோ பெயர் தெரியாத பறவைகள் சரணாகதியடையும் சரணாலயமாக பரந்து விரிந்திருந்தது
இந்த வயல் வனம்.
பாண்டிய
மன்னருக்கு வெப்பு நோய் தாக்கயிருந்தது. அப்போது ஒரு மண்டலம் இந்த இடத்தில் தங்கி வைத்தியம்
பார்த்து போனதாகவும் இங்கே பாண்டியர் காலத்தில் மண்ணால் அமைக்கப்பட்ட கோட்டை இருந்ததாகவும்
கூறப்படுகிறது. பாண்டிய மன்னனின் கடைசி கோட்டையாக இது இருந்ததனால் இது சிவரக்கோட்டை
என பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. கோட்டை அமைந்திருந்ததாக சொல்லப்படும் இடத்திற்கு
அருகில் பாண்டியர் காலத்து பிள்ளையார் கோவில் ஒன்றும் உள்ளது. பாண்டிய மன்னரின் நாட்டிய
கலைஞியான செங்கமலநாச்சியாரை குடியமர்த்தி அங்கும் படைகளை பாண்டியன் நிறுவியதால் இங்கிருந்து
சிறிது தொலைவில் உள்ள இடம் செங்கப்படை என பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மலைமேல்
இருந்த கோவில் பழமையை பறை சாட்டிக் கொண்டிருந்தது. அதன் கோபுரங்கள் தற்சமயம் புனரமைக்கப்பட்டுள்ளது
கட்டுமானத்தில் தெரிந்தது. அக்கோவிலின் வாசலில் சற்றும் பாதுகாப்பற்று பாண்டியர் கால
மீன் சிற்பம் நாதியற்றுக் கிடந்தது. இது நிலை உத்திரத்தில் வைக்க செதுக்கப்பட்ட சிற்பமாக
இருக்கலாம். அதன் அருகிலேயே செதுக்கிட தயார் நிலையில் இரு வேறு நீளமான கற்களும் கிடந்தன.
சமணர்கள்
வசித்த மலையில் பெரும்பாலும் மருந்து அரைப்பதற்கு சிறிய உரல் போன்று மலையிலேயே அமைத்திருப்பர்.
அதனை போன்ற அமைப்பும் இங்குள்ளது.
இது பாண்டியர் காலத்து தொல்லியல்
நகரம் கிடையாது என்று மட்டும் தான் இன்னும் அரசு அதிகாரிகள் சொல்லவில்லை என நினைக்கிறேன்
இன்னும் தொல்லியல் துறை இப்பகுதியை கண்டு கொள்ளாமல் இருப்பதும் கூட அரசியல் விளையாட்டாக
இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
வன விலங்குகளின்
கால் தடங்களையோ அதன் தடயங்களையோ ஆவணப்படுத்தி அதன் எண்ணிக்கையை உறுதி செய்ய ஆட்சியாளர்கள்
முயற்சிக்கவில்லை.
இயற்கை
முறையில் வேளாண் பணி புரியும் இம் மக்களுக்கு உற்சாகமூட்டி மேலும் பயிற்சிகளுக்கு ஆட்சியாளர்கள்
ஏற்பாடுகள் செய்யவில்லை
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கவில்லை
நீர்நிலை
குறித்தான தவறான தகவல்கள் வெளியிடுதல் என ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முரண்பட்டு
செயல்படுகின்றனர். இதனால் எதனை சாதிக்கப் போகிறார்கள் என்பதற்கு “சிப்காட்” (SIPCOT) அதாவது சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதே பதிலாக இருக்கிறது.
மக்களின்
வாழ்வாதாரத்தினை, நீர்நிலைகளை, வேளாண்மையை, பல்லுயிர்களை, தொல்லியல் சின்னங்களை அழித்து
விட்டு யாருக்கு இந்த சிறப்பான பொருளாதார மண்டலம் என்பது தான் நமக்குள் எழும் கேள்வி.
மக்களின்
தொடர் போராட்டங்களால் சற்றே அரசு அடக்கி வாசித்தாலும். இன்னும் உண்மைத் தகவல்களை மறைத்தும்
இட்டுக் கட்டியும் மறைமுகமாக அதிகாரிகள் தாங்கள் வாங்கும் காசுக்கு கூவிக் கொண்டுதான்
உள்ளனர்.
தனது
வேளாண் நிலத்தினை ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் இருந்து காப்பாற்றிட இன்றும்
இம் மக்கள் இயங்கிக் கொண்டே இருக்கின்றனர். இப்படி மக்களின் கவனத்தினை திசை திருப்பி
முன்னாள் முதல்வரின் மதுரை மகனார் தனது “தயா கல்லூரி”யை
விளைநிலத்தில் கட்டி அதன் தடுப்பு சுவற்றை ஆற்றை மறித்தும் கட்டிவிட்டார்.
இது வரை பல்லாயிரம் பக்க தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசாங்கத்திடம்
இருந்து சேகரித்து, நீதிமன்றங்கள் பல ஏறி, போராட்டங்கள் பல செய்து அரசாங்கத்திற்கு
உண்மையானவர்களாக இம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கம் என சொல்லிக் கொள்ளும்
ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இங்கு அரசாங்க நடைமுறைக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.
அன்பும் நன்றியும்
பாடுவாசி.
paaduvaasi@gmail.com
thamizhmani2012@gmail.com
சிவரக்கோட்டை எனும் பல்லுயிர்க்காடு = மக்களின் தொடர் போராட்டங்களால் சற்றே அரசு அடக்கி வாசித்தாலும். இன்னும் உண்மைத் தகவல்களை மறைத்தும் இட்டுக் கட்டியும் மறைமுகமாக அதிகாரிகள் தாங்கள் வாங்கும் காசுக்கு கூவிக் கொண்டுதான் உள்ளனர்.= தமிழ் மணி = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் உண்மைகளைப் படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு தமிழ்மணி.
ReplyDelete// வேதியல் உரம் இல்லாமல் // இச்செய்தியாவது பலரையும் சென்றடைய வேண்டும்...
ReplyDeleteபல தகவல்களை அறிந்தேன்... நன்றி...
நடை அருமை...
ReplyDeleteநடை அருமை...
ReplyDeleteஅவசியமான பதிவு. அருமை
ReplyDelete