Sunday 5 April 2015

வசந்த காலத்தினில்.. வசந்த மண்டபந்தனில்...

          05-04-2015 அன்று பசுமைநடை 47 - க்காக அதிகாலையில் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தேன். பங்குனி, வெயில் பகல் பொழுதுகளில் பல் இளித்தாலும், கதிரவன் கதிர்கள் தீண்டிடாத இந்த பொழுதினில் இதமாகவே இருந்தது. எனது இரு சக்கர வாகனம் தனது அன்றைய பயணத்தினை துவங்கியது. வாகனத்தின் முகப்பு விளக்கினை எரியவிட்டபடிதான் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த பகலுக்கு முந்தைய இரவினில்தான் பூமியின் நிழலில் நிலவு இளைப்பாறுதல் பெற்றது, அதனால் என்னவோ அதன் பிரகாசம் சற்று புத்துணர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.


          மசூதிகளில் தொழுகை துவங்கியது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. முந்தாநாள் உயிர் விட்ட மேய்ப்பர் ஒருவர் இன்று உயிர்த்தெழுவதை காண மக்கள் பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்தனர்.



         திருமங்கலம்-மதுரை. எனது வாழ்நாளில் நான் அதிகம் பயணித்துக்கொண்டிருக்கும் சாலை இது. பால்யத்தில் அம்மா வழி உறவு வீடுகளுக்கு செல்வதில் துவங்கி இன்று பசுமைநடைக்கான பயணம் வரை கணக்கிலடக்க இயலாது. மறாங்குளம் என சொல்லப்படும் மறவன்குளம் ஊரும் அதன் கண்மாயும் நீர் நிறைந்து ஓவியமாக இருந்தது மனதில் இலையாடுகிறது. இந்த நான்கு வழிச் சாலைகளின் வருகையால் மறவன்குளம் கண்மாய் இரண்டாய் பிளந்து போனது. மெட்டல் பவுடர் கம்பெனியை கடக்கையில் அங்கு நிகழும் விபத்து குறித்தான தகவல்கள்தான் பயமுறுத்தும். முன்னொருகாலத்தில் இந்த பகுதியில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் வழிப்பறியை கப்பலூர் சுங்கச்சாவடி நியாபகமூட்டியது.


          உயரமான பாலத்தில் இருந்து இறங்குகையில் அங்கிருந்த கோழிப்பண்ணை கோழிகளின் கொக்கரிப்பு இன்றும் காற்றில் உயிர் வாழ்கிறது. விவசாய நிலங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு அங்கு உண்டான தொழிற்பேட்டைகளில் அவ்விவசாயிகள் கூலிகளாகப் போய்க் கொண்டிருந்தனர். கூத்தியார்குண்டு தோப்பூர் என இன்றும் சிற்றூர்கள் மணம் மாறமல் இருப்பது மகிழ்ச்சி. 2012க்கு முன்பு வரை தோப்பூரை கடந்தால் திருநகர் வரை எந்த இடமும் பழக்கம் இல்லை. அதன் பிறகு எழுத்தாளர்.அ.முத்துகிருஷ்ணன் அவர்களது நட்பினால் நல்ல குடும்பத்தின் பழக்கமும் அன்பும் கிடைத்தது. இன்றும் தனக்கன்குளத்தினை கடந்து செல்கையில் அந்த பாதையினை கண்கள் அனிச்சையாக நோக்க துவங்கிவிட்டன. திருநகரை கடந்ததும் திருப்பரங்குன்ற மலையை ரசிப்பதில் வேறு எந்த காட்சியும் கண்ணில் படுவதில்லை. இன்றும் கூட அப்படித்தான்


          குன்றத்து கண்மாயில் இருந்து குளிர்ந்த காற்று முகத்தில் மோதிக் கொண்டிருந்தது. அதன் பிறகு சாலை குண்டும் குழியுமாக தொடர சிந்தனைக்கு இடைவேளை விட்டு நிகழ்காலத்திற்கு வந்திறங்கினேன். பசுமலையில் சிற்பிகளும் சிற்பங்களும் இந்நேரத்திலேயே உரையாடி உறவாட துவங்கிவிட்டனர். தோரண வாயில் வழி மதுரையினுள் நுழைந்துகொண்டிருந்த போது வானம் எங்கிருந்தோ சூரிய கதிரின் பிம்பத்தினை வெளிப்படுத்தத் துவங்கியது. வாகனத்தின் முகப்பு விளக்கை அணைத்துவிட்டு பழங்காநத்தம் கடந்து மதுரைக் கல்லூரியின் பாலம் ஏறியது எனது வாகனம். உறங்கா நகரம் எந்த ஒரு சோம்பலும் இன்றி இயங்கியபடியே இருந்தது. காலைப்பொழுதாக இருந்ததால் வாகன நெரிசலற்று எந்த ஒரு இடத்திலும் தனது வேகம் குறையாமல் பெரியார் நிலயத்தினை கடந்து நேதாஜி சாலை வழியை பிடித்தது.
நகைகடைகளின் வாசலில் படுத்திருத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கண் விழித்து என் வாகனத்தினை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். மீனாட்சி கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள நந்தி சிலையை கடந்து சென்ற எனது வாகனம் கட்டிட நிழல் விழும் என்று நான் கணித்த இடத்தினில் நின்றது.


          டாடா டொகோமோவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையாளராக பணிபுரிந்த போது இதுதான் எனக்கு ஒதுக்கப்பட்ட பகுதி. “கடவுள் நம்பிக்கை இல்லாத உன்னைய டெய்லி சாமி கோவில சுத்தவச்சிடுச்சி பாத்தியா!!!” என அம்மா அப்போதெல்லாம் கிண்டல் செய்வார்கள். பசுமைநடை நண்பர்களோடு மறுபடியும் அதனையே செய்யத்துவங்கியதும் அம்மா நியாபகம் வந்தது. அம்மாவை கூட்டி வந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். கிழக்கு கோபுரத்தில் இருந்து வலம்வர துவங்கினோம். இடது புறம் இருந்து வலப்பக்கமாக வருவதால்தான் இதற்கு வலம்வருதல் என பெயர் உண்டாகியிருக்கும் என நினைக்கிறேன். சித்திரை வீதிகளில் நண்பர் சித்திரவீதிக்காரனோடு சுற்றியது கூடுதல் சிறப்பு. காலையில் பக்தர்களின் கூட்டத்தினை விட நோயாளிகளின் கூட்டமே அதிகமாக இருந்தது. அவசரகதியாக ஆண்களும் பெண்களும் உடலின் இனிமையை குறைத்திட நடை பயின்று கொண்டிருந்தனர். வலம் வந்த நான்கு திசைகளில் தெற்கு கோபுரத்திலேயே அதிகமான சிற்பங்கள் இருந்தன. வடக்கு கோபுரத்தில் சிற்பங்கள் அவ்வளவாக இல்லை.
          

          கிழக்கில் துவங்கி கிழக்கிலேயே நிறைவு செய்தோம். கிழக்கு கோபுரத்தின் முன் உள்ளது புது மண்டபம் என்று சொல்லப்படும் வசந்த மண்டபம். இன்றைய பசுமைநடை நிகழ்வுக்கான கரு இதுதான்.
பள்ளியில் படித்த காலங்களில் கோனார் தமிழ் உரை வாங்கிட நண்பர்களோடு வந்திருக்கிறேன். அதன் பிறகு அக்காவின் திருமணத்திற்கு குத்துவிளக்கு வாங்க வந்துள்ளேன். அதற்கடுத்து பனியாரச்சட்டி, வடச்சட்டி என ஒவ்வொன்றுக்கும் இங்குதான் வந்துள்ளேன். அப்போதெல்லாம் கடிவாளம் கட்டப்பட்ட குதிரையாக இருந்ததால் இந்த மண்டபத்தின் முகப்பில் உள்ள குதிரை சிற்பங்கள் கூட கண்களில் பட்டதில்லை.


           வசந்த மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் கடைகளும் தடைகளுமாக இருந்து கொண்டிருக்கிறது. நடுவில் உள்ள மண்டபத்தினுள் நாயக்கர்கால சிற்பங்கள் கண்களையும் மனதையும் ஒரு சேர களவாடியது.


          சாந்தலிங்கம் அய்யா அவர்களது உரை அந்த வசந்த மண்டபத்தின் வசந்த காலத்திற்கு இட்டுச் சென்றது.


          திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த மண்டபம் நாயக்கர் கால சிற்பக்கலைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. “மலுவால் நெடியோன் கோவில்” என்றும் “கணிச்சிப்படை தரித்த கோவில்” என்றும் சங்க இலக்கியமும், மதுரைக் காஞ்சியும் இந்த மீனாட்சி அம்மன் கோவிலை பாடியுள்ளது. திருஞான சம்பந்தர் பாடுகையில் “கோபுரம் சூழ் கோயில்” என பாடியுள்ளார். எனவே ஏழாம் நூற்றாண்டிலேயே மதிலோடு கூடிய கோயிலாக இது உருவம் பெற்றிருக்கலாம்.


           சங்க இலக்கியங்களில் ஆலவாய் அண்ணல் கோவில், ஆலவாய் சொக்கர் என்று தான் பாடப்பட்டுள்ளது. எனவே மதுரையின் இந்த பகுதி சங்க காலங்களில் ஆலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது புலனாகிறது. “அங்கயற்கன்னியுடன் உறையும் ஆலவாய் அண்ணலே” என்று மீனாட்சிக்கு அழகான தமிழ் பெயரை பயன்படுத்தி சங்க இலக்கிய பாடல்கள் பாடப்பட்டுள்ளது.


          12- ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக கிழக்கே உள்ள கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது சுந்தபாண்டியன் கோபுரம் என சொல்லப்படுகிறது. மேற்கே உள்ள கோபுரம் பராக்கிரம பாண்டியன் காலத்தில் 1336ல் கட்டப்பட்டுள்ளது. தெற்கே உள்ள கோபுரம் செவ்வந்தி முதலியார் அவர்களால் கட்டப்பட்டது. 1583-ல் வடக்கே உள்ள கோபுரம் வீரப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதுமண்டபம் வசந்தகாலத்தில் வெயிலில் இருந்து இளைப்பாற அமைக்கப்பட்ட மண்டபம். இந்த மண்பத்தினை சுற்றி தண்ணீர் ஓடிக் கொண்டு குளிர்ந்த தன்மைக்காக அமைக்கப்பட்டுள்ளது.
தடாதகைப்பிராட்டி எனச் சொல்லப்படும் மும்முளை அம்மன் சிற்பம் இந்த மண்டபத்தில்தான் அமைந்துள்ளது. இந்த அம்மன்தான் மீனாட்சியம்மன். மலையதூச பாண்டியனுக்கும் காஞ்சரமாலா என்கிற அரசிக்கும் பிறந்த இந்த தடாதகைப்பிராட்டி மூன்று மார்புகளுடன் பிறந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

     
          பின்னாட்களில் வெள்ளையர் காலத்தில் இந்த மண்டபம் முதல் நூலகமாகவும், அருங்காட்சியகமாகவும் செயல்பட்டுள்ளது.
என இந்த வசந்த மண்டபம் குறித்த பல தகவல்களை விவரித்தார்.
யாருமே அனுமதிக்கப்படாத இந்த மண்டபத்தினுள் பசுமைநடை தன்னார்வளர்களுக்கு அனுமதியளித்த கோவில் நிர்வாக துணை ஆணையர் அவர்களும் இந்த இடத்தினை எங்களுக்காக தூய்மை செய்து கொடுத்த பணியாளர்களும் நன்றிக்குறியவர்கள்.









புது மண்டபத்தில் உள்ள அழகான சிற்பங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. ஏகபாதமூர்த்தி
2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி
3. குதிரை வீரர்கள்
4. கஜயுகர்
5. தடாதகைப் பிராட்டியார்
6. சூரியன்
7. புலிக்குப் பால்கொடுத்தது
8. பன்றிக்குட்டிகளுக்குப் பால்கொடுத்தது
9. சந்திரன்
10. சுந்தரேஸ்வரர்
11. துவாரபாலகர்கள்
12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)
13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை
14. கருங்குருவிக்கு உபதேசம்
15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்
16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது
17. பதஞ்சலி
18. வியாக்ரபாதர்
19. பத்ரகாளி
20. ஊர்த்துவ தாண்டவர்
21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி
22. பிரம்மா
23. தேவேந்திரன்
24. அர்த்த நாரீஸ்வரர்
25. சங்கர நாராயணர்
26. அதிகார நந்தி
27. கைலாச பர்வதம்
28. திரிபுரஸம்ஹாரம்


          ஒவ்வொரு சிற்பமும் அதன் நுண் கலை வேலைப்பாடுகளும் மெய் சிலிர்க்கச் செய்தது. குறிப்பாக அந்த சிற்பங்களில் செதுக்கப்பட்டிருந்த ஆடைகளின் பூ வேலைப்பாடுகளும், கொண்டை முடியும், முகத்தில் காட்டப்பட்டுள்ள பாவங்களும் அவ்வளவு அருமை. கண்கொட்டாமல் அவற்றையே கண்டு களிக்கவே மனம் சொல்லிற்று. ஆனால் நேரம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.


           மண்டபத்தை சுற்றிலும் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. ஒரு சில இடங்களில் நாட்காட்டி தொங்க விட அந்த மண்டப தூண் இடுக்குகளில் ஆணி அடிக்கப்பட்டு இருந்தது. இரும்பு கடைகள் அந்த மண்டபத்தின் அழகிய தோற்றத்தினை நிச்சயம் பதம்பார்த்திருக்கும். இந்த கடைகளை அருகாமையில் வேறு இடத்திற்கு மாற்றி விட அதிகாரிகள் முயற்சித்து வருகிறார்கள் என்பது மன நிறைவாக இருந்தது. இது தொல்லியல் சின்னம் என்கிற கருத்தினை விட அழகான சிற்பக் களஞ்சியம் என்கிற எண்ணத்தினையாவது இப்பகுதி வியாபாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமக்கான எதிர்பார்ப்பு. அதிகாரிகளும் தங்களது இந்த நல்ல முடிவினை வேகமாக முடித்திட வேண்டும் என்பதும் நமது ஆசை.


          10 ஆண்டுகளுக்கு முன்புதான் புது மண்டபத்தின் முன் இந்த நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் அது மீனாட்சி கோவிலுக்குள் உள்ள பொற்றமறைக் குளத்திற்கு வைகையில் இருந்து நீர் கொண்டு வரும் ஓடுகால் பாதையாகவும் அதன் இணைப்பாகவும் செயல்பட்டுள்ளது. இப்படியான பழமையை சிதைத்து முன்னோர்களின் கட்டிட மற்றும் நீர் மேலாண்மையை அடுத்து சந்ததிகள் கற்றுக் கொள்ள இயலாமல் தடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.


          திருமலைநாயக்கரால் துவங்கப்பட்டு பிறகு முழுமையடையாமல் விடப்பட்ட ராய கோபுரமும் அதன் சிற்பங்களும் வீதிகளில் வீசி எரியப்பட்டதைப் போன்று கிடக்கிறது. அரசாங்கங்களின் சமூக பொறுப்புணர்ச்சி காரணமாக உயர்த்தப்பட்ட தார் சாலைகள் பல சிற்பங்களை தின்று விழுங்கிவிட்டது.


          தொல் எச்சங்களை பாதுகாப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதில்லை. வெறும் பக்தியாக மட்டுமே சிற்பங்கள் மதிக்கப்படுகின்றன. அதனால்தான் கருவரையில் உள்ள சிற்பங்கள் வணங்கப்பட்டும் இது போன்ற சிற்பங்கள் பொருட்டாக மதிக்கப்படுவதும் கூட இல்லை.

அன்பும் நன்றியும்

பாடுவாசி ரகுநாத்.
paaduvaasi@gmail.com
thamizhmani2012@gmail.com


2 comments:

  1. சங்க இலக்கியங்களில் ஆழவாய் அண்ணல் கோவில், ஆழவாய் சொக்கர் என்று தான் பாடப்பட்டுள்ளது. எனவே மதுரையின் இந்த பகுதி சங்க காலங்களில் ஆழவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது புலனாகிறது. “அங்கயற்கன்னியுடன் உறையும் ஆழவாய் அண்ணலே//

    ஆழவாய் அல்ல நண்பா! ஆலவாய். ஆலவாய் என்றால் நீர்நிலைகள் சூழ்ந்த பகுதி என மயிலை.சீனி.வேங்கடசாமி கூறுகிறார். வாடிப்பட்டி செல்லும் வழியில் திருவாலவாயநல்லூர் என்னும் ஊர் உள்ளது. இன்று அது நான்கு வழிச்சாலையில் நசுங்கி டி.வி.நல்லூர் என பதாகை வைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் குறிப்பிட்ட தவறுகளை சரி செய்துவிட்டேன் நண்பரே. மிக்க நன்றி :-)

      Delete