புதியதலைமுறை தொலைக்காட்சி கிளப்பிவிட்ட
தாலி விவாதம், இன்று இளைய சமுதாயம் துவங்கி நரை சமுதாயம் வரையும், முகநூல் துவங்கி
வீடுகளுக்குள்ளும், சாமானியன் துவங்கி அரசியல்வாதிகள் வரை சூடு பறக்கிறது. இது வரை
அடக்கி வாசித்துக் கொண்டிருந்த திராவிடர் கழகம் கூட அம்பேத்கார் பிறந்த நாளில் தாலி
அகற்றும் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க துவங்கிவிட்டது. இந்த விவாதங்களும் கருத்து
மோதல்களும் இந்த காலகட்டத்திற்கு மிக அவசியமானதே. “கலகம்னு ஒன்னு பிறந்தா தானே நியாயம்னு ஒன்னு பிறக்கும்”
என ஒரு சொலவடை கூட உண்டு. அந்த நியாயம் பெண்களுக்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமக்கான
நோக்கம்.
தாலி என்ற உடன் பெரும்பாலானோரால்
முன்வைக்கப்படும் முதல் வாதம்,
“திருமணம் ஆன பெண்ணுக்கு அதுதானே
அடையாளம்”
“சரி, பெண்ணுக்கு எதற்கு திருமணமானதற்கான அடையாளம்?”
“அப்போதானே கல்யாணமான பொண்ணுனு
தெரியும்”
இதுதான் பதில் என்றால்,
“கல்யாணமான ஆணுக்கு மட்டும் ஏன்
அடையாளம் இல்லை? பெண் மட்டும் திருமணமான அடையாளத்துடனும் ஆண் மாத்திரம் எந்த ஒரு அடையாளமும்
இல்லாமல் எத்தனை பெண்களையும் மணந்து கொள்ளலாம் என்கிற சலுகையா?”
ஆண்களுக்கும் திருமணம் ஆனதற்கான
அடையாளமாக கால் விரல்களில் மெட்டி போடப்பட்டது. ஆனால் ஆண்கள் அந்த மெட்டியை கழற்றி
எரிந்த போது வாய் மூடிக் கிடந்தது இந்த சமூகம். இன்று பெண் என்றதும் ஏன் போர்க் கொடி
தூக்குகிறது என்பதுதான் விளங்கவில்லை.
இந்த தாலிக்கு முகநூல் அறிவுஜீவிகள்
சிலர் கொடுக்கும் அறிவியல் விளக்கங்களை எந்த ஒரு அறிவியல் அறிஞரும் கூட இது வரை சிந்தித்திருக்கமாட்டார்கள்.
அந்த தாலி மார்பு கூட்டுப்பகுதியில் தொங்குவதால்தான் நாளமில்லா சுரப்பிகள் வினை புரிந்து
தலைமை பண்பு, அன்பு, பொறுமை, தாய்மை தைரியம் என எல்லாம் பெண்களுக்கு கிடைக்கிறதாம்.
ஒரு சிறிய கேள்வி.
கணவனை இழந்தவர்களை விதவைகள் எனச்
சொல்லி தாலியை அருத்துக் கொள்கிறீர்களே. அதன் பிறகு அந்த பெண்களுக்கு இந்த அன்பு பண்பு
பொறுமை தைரியம் தாய்மை இதெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்காகவா?
கணவனை இழந்த பின்பே (தாலி அருக்கப்பட்ட)
பெண்கள் மேற் சொன்ன அனைத்து குணங்களையும் சூழ்நிலை காரணமாக ஒரு சேர பெருகிறார்கள்.
கணவனை இழந்த (தாலி அருபட்ட) பெண் கணவன் விட்டுச் சென்ற தொழிலையும் குடும்பத்தையும்
திறம்பட நிர்வகிக்கிறார்கள். குழந்தைகளை கூடுதல் தாய்மையோடு பராமரிக்கிறார்கள். இன்று
நிறைய மூட பழக்கங்களை சமூக வலைதளங்களில் அறிவியலாக்கிட இதே போல பலர் திண்டாடுகிறார்கள்.
அதனை ஆராய்ந்து ஏற்பதே சிறப்பு.
கணவன் இருக்கும் வரை தாலி அவசியம்
அவன் இறந்த பிறகு தாலி தேவையில்லை என்பதுதான் இங்கு நோக்கமே தவிர, பெண்களுக்கான பாதுகாப்பு,
திருமணமான அடையாளம் என்பதெல்லாம் கிடையாது. இதுதான் உண்மை. இதை தவிர்த்துவிட்டு கண்டதெல்லாம்
பேசிக் கொண்டிருக்கிறார்கள். தாலி தான் கணவனை உயிரோடு வைத்திருக்கிறது என்கிற ஒரு கருத்தியலை
(Sentiment) பெண்கள் மத்தியில் பரப்பிவிட்டுள்ளனர். தாலி கணவனுக்காக
என்பதுதான் இங்கு எதார்த்தம். அது பெண்களுக்காக அல்ல. இதனை நாம் முதலில் புரிந்து கொள்ள
வேண்டும்.
தாலி என்பதனை மிகப் புனிதமான நம்பிக்கையாக
கருதப்பட்ட காலத்திலேயே பெரியார் அவர்கள் தாலி மறுப்பு திருமணங்களை நிகழ்த்தி வெற்றி
கண்டவர். இன்று தாலி குறித்தான விவாதத்தின் விதையை முதன் முதலாக விதைத்ததும் அவர்தான்.
“கலியாண காலத்தில் பெண்ணுக்கு
மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து
கேவலமாக கடிந்து வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக்
கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும் பெண்களுக்கு கழுத்தில் தாலி கட்டுவதின்
கருத்து”
-குடி அரசு, 11-05-1930.
இறந்த பின்பும் பெண்ணுரிமைக்காக
இன்று வரை பல எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டிருக்கும் மனிதர் இவராகத்தான் இருக்கக்
கூடும்.
வரலாற்று நோக்கில் தாலியை கொஞ்சம்
தேடிப் பார்ப்போம். அதற்கு முதலில் நாம், இந்து மத பழக்கம் மற்றும் தமிழர்களின் பண்பாடு
இவ்விரண்டிற்குமான வித்தியாசம் அறிந்திடல் அவசியம்.
பூர்வீகமாக இந்த மண்ணில் பிறந்து
வாழ்ந்து வருவோருடைய பண்பாடு வந்தேறிய ஆரிய குடிகளால் நிர்மூலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாட்டுப்புற தெய்வங்களும் நடுகற்களும் குடழுகுக்குக்கு ஆளாகி ஆரிய கைப்பிடிக்குச் சென்றுவிட்டது.
குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் கூட நம் சட்டையை கழற்றிவிட்டு பூணூல் பார்த்துதான் வரம்
தருகிறார். முகமதிய படையெடுப்பு பேசப்படும் அளவுக்கு ஆரிய படையெடுப்பு குறித்து யாரும்
அறிந்து கூட வைத்திருக்கவில்லை. அது தவிர்த்து ஆரிய படையெடுப்பில் யுத்த நெறிமுறைகளை
மீறி படுகொலை செய்யப்பட்ட இம்மண்ணின் மன்னர்கள் அரக்கர்களாக கொடூர பற்களுடன் உருவகப்படுத்தப்படுகின்றனர்.
அதன் பிறகு ஆரியத்தினை ஏற்றுக் கொண்ட மன்னர்கள் ஆண்ட பரம்பரைகளாக இன்று வரை சட்டைக்
காலரை தூக்கிவிட்டு கொள்கின்றனர். ஆரியருடன் போரிட்டு மாண்ட மன்னர்கள் துஷ்ட அரக்கராகினர்.
ஆரியத்திடம் மண்டியிட்ட மன்னர்கள் ஆண்ட பரம்பரை என இன்றும் பீற்றிக் கொள்கின்றனர்.
இப்படியாக இவர்களால் அழிந்து போன பண்பாடுகளில் ஒன்று தான் தமிழனின் திருமண முறையும்.
தாலியை இன்று புனிதம் என்றும்
தாலி பெண்களின் பாதுகாப்பு என்றும் கருத்து பேசும் மேல் சமுதாயம் என சொல்லித் திரிவோர்,
இதற்கு முந்தைய காலத்திலும் அப்படியான கருத்தோடு இருந்தார்களா? என வரலாறுகளில் தேடிப்
பார்த்தோம்.
இல்லை என்பதே பதில். அதற்கு சிறு
உதாரணம் இது.
தற்போதைய கேரள மாநிலத்தின் ஒரு
பகுதியும் திருநெல்வேலி, குமரி மாவட்டமும் இணைந்து 1800-களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த காலத்தில் 18 சாதிகளை சேர்ந்த பெண்கள் மார்பு மறைத்து
சேலை அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதே சாதிகளை சேர்ந்த செல்வந்த குடும்பத்தின் பெண்களுக்கு
இதில் இருந்து விதிவிலக்கு. நம்பூதிரிகள் எனச் செல்லப்படும் உயர் தர பார்ப்பணர்களின்
வழிகாட்டுதலில் அங்கு நிகழ்ந்த அநியாயங்கள் கணக்கிலடங்காதவை. அதனால்தான் அந்த பகுதியின்
பெரும்பாலான மக்கள் கிருத்துவ மதத்திற்கு மாறினார்கள் என்பது தனி வரலாறு. மார்ச்சீலை
அணிய இயலாத பெரும்பாலான பெண்கள் தாலி அணிந்திருக்கவில்லை என்பது அந்த காலத்தில் எடுக்கப்பட்ட
புகைப்படங்களே ஆவணம். தோள் சீலைக்காக போராட்டம் செய்த பெண்களின் தாலிகள் ஆதிக்க வர்கத்தினால்
அருக்கப்பட்டும் உள்ளது. குமரிப்பகுதியில் அந்த இடம் இன்றும் ‘தாலியருத்தான் சந்தை’
என அழைக்கப்படுகிறது. தாலி அருத்தவர்கள் தான் இன்று தாலி வேண்டி கூவுகிறார்கள். பெண்களின்
மார்புச் சீலையை அகற்றி ரசித்தவர்கள்தான் இன்று தாலி பெண்களுக்கு பாதுகாப்பானது எனச்
சீறுகிறார்கள்.
உயர்வர்க்க பழக்கங்களை கௌரவமாக
எண்ணி சம்பந்தம் இல்லாமல் நாம் இன்றும் பின்பற்றுவதில் ஒன்றுதான் இந்த தாலியும். உதாரணத்திற்கு
பெரும்பாலான திருமண வீடுகளில் சாம்பார் சாதம் என்ற முறை மாறி காய்கறி சோறு (சைவ பிரியாணி)
போடத் துவங்கியிருக்கின்றனர். செல்வந்தர் வீட்டு திருமணம் போல நிகழ்ந்தால்தான் கௌரவம்
என்று எண்ணி மாறிப்போன இந்த நிகழ்வு போலதான் தாலியும். அப்படி என்றால் இந்த தாலி எந்த
காலத்தில்தான் வந்திருக்கும்?
தொல் இலக்கிய சான்றுகளான சங்க
இலக்கியங்களிலோ, சிலப்பதிகாரத்திலோ பெண்களின் கழுத்தில் தாலி அணுவித்து திருமணம் நிகழந்தது
போன்ற ஆதாரங்கள் இல்லை. மேலும் தாலி கட்டுதல் என்பதே 10-ஆம் நூற்றாண்டுக்கு பிறகே துவங்கியிருக்கலாம்
எனவும் தழிழ்பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறுகிறார்.
(-நூல்: பண்பாட்டு அசைவுகள் நூல்,
தாலியும் மஞ்சளும்)
அவ்வாறெனின் திருமணங்கள் எப்படித்தான்
நிகழ்ந்திருக்கும்? என்ற கேள்வி நம்மில் எழும். மீனாட்சி திருக்கல்யாணம் இப்போதைக்கு
நமது கையில் இருக்கும் சான்றுகளில் ஒன்று. மீனாட்சி திருக்கல்யாணம் என்றதும் மீனாட்சி
சிலைக்கு பார்ப்பனர்கள் தாலி கட்டும் திருமண முறை என எண்ண வேண்டாம். அது இடையில் புகுத்தப்பட்டதே.
மீனாட்சி திருக்கல்யாணம் என்றதும்
நமக்கு நினைவுக்கு வருவது மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கு நிகழும் அந்த திருமண நிகழ்வின்
சிற்பம்தான். அந்த தொல் சிற்பத்தில் கூட சொக்கநாதர்,
மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுவது போல அமையவில்லை. மீனாட்சியின் அண்ணனாக இருந்து
பெருமாள் அவ்விருவரின் கரங்களை இணைத்து நீர் ஊற்றி திருமணம் செய்து வைக்கும் காட்சியே
திருக்கல்யாண நிகழ்வாக உள்ளது.
தண்ணீர் தமிழ் சமுதாயத்தில் மிக
முக்கிய பங்கு வகிப்பதனை தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள் நூலில் தண்ணீர் தலைப்பில்
குறிப்பிட்டுள்ளார்.
“இயற்கையின் பேராற்றலில் ஆரியர்
நெருப்பினை முதன்மைபடுத்தியது போலத் திராவிடர் நீரினை முதன்மைபடுத்தினர். தெய்வ வழிபாட்டுச்
சடங்குகளைப் போலவே தமிழர்களின் வீட்டுச் சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெறுகிறது.”
நெருப்பின் (அக்னி) முன் நிகழும்
ஆரிய முறை திருமணங்களுக்கும் தண்ணீரை சாட்சியாக வைத்து நிகழ்ந்த தமிழ் முறை திருமணங்களுக்கும்
உள்ள வேறுபாடுகளை ஆராய்வோம். மீனாட்சி மதுரையை ஆட்சி செய்ததை இலக்கியங்கள் கூறுகின்றன.
அஃது ஒரு கற்பனை கதையாக இருந்தாலும் அந்த கதாபாத்திரங்கள் வேண்டுமானால் கற்பனையாக வடிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் அந்த காலத்தில் நிகழ்ந்த திருமண (இன்ன
பிற) நிகழ்வுகளின் பதிவாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தாலி அகற்றும் போராட்டம் இந்துக்களின்
மனத்தினை காயப்படுத்துவதாக சொல்கின்றனர். எம் மதுரையை ஆண்ட அங்கயற்கன்னி அரசிக்கு ஒரு
பார்ப்பான் தாலி கட்டுவது மதுரைக்காரனாக என் மனத்தை காயப்படுத்துகிறது. எங்களுடைய பாரம்பரியமான
திருமண நிகழ்வை மாற்றி எங்குல பெண்கள் கழுத்தில் தாலி அணிவிக்கச் செய்வது தமிழனாக என்
உணர்வுகளையும் கூட காயப்படுத்துகிறது
அன்பும் நன்றியும்
பாடுவாசி ரகுநாத்.
paaduvaasi@gmail.com
thamizhmani2012@gmail.com
good article
ReplyDeleteGood article anna
ReplyDeleteவணக்கம் சிறந்த கட்டுரை வாய்பிருந்தால் 9443300717 எனது எண்ணிற்கு அழைக்கவும்
ReplyDelete