Sunday 11 October 2015

பழங்குடிகள் பாதுகாக்கும் வரலாறு – கோத்தர் மலை2

          தாயின் நீர்க்குடத்துக்குள் குழந்தை மிதப்பதைப் போல வள்ளுவர் நகர் சமுதாயக்கூடத்திற்குள் கிடந்தோம். சுற்றிலும் பனி. இருண்ட மலைகளுக்கு இடையில் பூச்சிகளும் தவளைகளும் சோழி குழுக்கிக் கொள்ளும் சப்தம் சுற்றிலும் இருளுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தது. சற்று விடிய பறவைகள் தங்களது தாய் மொழியில் பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் திரியத் துவங்கின. இந்த பனியில் கம்களிகளைச் சுற்றாமல் இவைகளால் எப்படி சுற்றித்திரிய இயல்கிறதோ!!



         படவியை கையில் எடுத்துக் கொண்டு சூரிய உதயத்தை எடுக்க முயற்சித்து இளஞ்சிவப்பு மேகங்களை மட்டுமே படமாக்க இயன்றது. செடி கொடிகள் மீதும் பனி சிந்திய ஈரம். வாகனக் கண்ணாடிகளில் படிந்திருந்த பனிப்படிமங்களை கண்டதும் பால்ய வயது நினைவு வர, எனது பெயரை எழுதிப் பார்த்தேன். யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அழித்தேன். அது கண்ணீராக வடிந்தது.


          முந்தைய தின இரவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் இந்த சமுதாயக் கூட வளாகத்திற்குள் இருந்த மாரியம்மன் கோயிலில் முருகன் கருவறைக்கு முன் சமஸ்கிருத மந்திரங்கள் பாடி வணங்கிக் கொண்டிருந்தனர். அந்த வளாகத்திற்குள்ளேயே இருந்த நடுகல்லுக்கு இலை போட்டவர்கள் படையலை படைக்க மறந்துவிட்டார்கள் போல. வெத்து இலையோடு அனாதியாக விடப்பட்டிருந்தது நடுகல்லுக்குப் பின்பான வரலாறு.


“நான் 4 மணிக்கே எந்திரிச்சி அருவில போயி குளிச்சிட்டு வந்துட்டேன்”

“நான் அப்போவே கோத்தகிரி வரை போயி டீ சாப்பிட்டு வந்துட்டேன்”

“நான் தூங்கவே இல்ல.. வெளியிலதான் சுத்திகிட்டு திரிஞ்சேன்”


என நண்பர்கள் கதையளந்து கொண்டிருந்தனர். இது பொய்யாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். உண்மையாக இருந்தால் இவற்றை தவறவிட்ட உருத்தல் என்னை பீடித்துக் கொள்ளும்.



          பறவைகளின் குரல்கள் இந்த பனிக்காலைப் பொழுதை மிக அழகாக்கிக் கொண்டிருந்தது. தோழர் தவமுதல்வனும் அவரது துணைவியாரும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். முந்தைய தினத்தில் தாமதமாக வந்ததும், வந்த உடன் அருவிக்கு சென்றதுமாக இருந்துவிட்டோம். நேரம் வந்தால் உணவும் இவர்களிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. இதனால் இவர்கள் எங்களுக்காக செய்து கொண்டிருந்த பணிகள் கண்களுக்கு படவில்லை. இன்று தான் அவர்களின் பரபரப்பு புரிந்தது. விருந்தோம்பலுக்கு தமிழன் தமிழன்தான்.



            நகரங்களில் இந்த விருந்தோம்பல் இவ்வளவு ஆரோக்கியமாக இல்லை. உணவு பரிமாறுவது மட்டும் விருந்தோம்பல் இல்லை. தேவையான ஒவ்வொரு விசயங்களையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர். பெண்கள் குழந்தைகளுக்கான கழிப்பிட, குளியல் வசதிக்கு சுற்றியிருந்த நான்கு வீடுகளை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்ததில் அவர்களது பணிவிடை துவங்கியது. கிட்டத்தட்ட முப்பது பேர் குளிர்ப்பதற்கு சுடு தண்ணீர் வைத்து கொடுத்ததை நான் எங்கும் அனுபவித்ததில்லை. நான்கு வீட்டு குளியலரைகளிலும் சொந்த வீட்டுக்குள் நின்று குளிர்ப்பது போல தயக்கம் இன்றி நீராடினோம். குளிர்ப்பதற்கு ஏற்பாட்டு பணிகள் செய்து கொண்டிருந்தவர்கள் எப்போது காலை உணவு தயார் செய்தார்கள் என தெரியவில்லை, குளியலைத் தொடர்ந்து உணவும் கைவந்தது.



        பழங்குடிமக்களை சந்திக்க வானகம் நோக்கி வாகனம் ஏறினோம். அந்த பயணம் பாட்டும் ஆட்டமுமாக துவங்கியது. பயணக்களைப்பு ஏதும் அறியாமல் வாகனம் வளைவுகளையும், உயரங்களையும் சரிவுகளையும் கடந்து சென்று கொண்டிருந்தது.
தேயிலைத் தோட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கண்களில் இருந்து மறையத்துவங்கின. எங்கும் காட்டு மரங்கள், சுற்றிலும் எந்த மலைகளையும் காண முடியவில்லை. அடர்ந்த காடுக்குள் சாலை நுழைந்து கொண்டிருந்தது. எதிர்பட்ட பெரும் பனிப் புகைக்குள் வாகனம் செல்லச் செல்ல செவிகள் அடைக்கத் துவங்கின. மனித உடலின் அறிவியல் வியக்கத்தக்கது. நம்மை பாதுகாக்க தன்னிச்சையாக செயல்படும் உடலை ஒத்த அறிவியல் தான் இந்த காட்டு மரங்களை சுற்றி பற்றித் திரியும் பனி மேகங்களும். தேயிலைத் தோட்டங்களை மட்டுமே இயற்கை என நம்பி ஏமாற்றத்தோடே இன்பச் சுற்றுலாக்களை கடந்து செல்கிறோம். ஊர்க்குருவிகளூடான இந்த பணயம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மலைக்காடுகளின் மிச்ச சொச்சம் இன்னும் இருப்பது வியப்பானதாக மட்டுமல்ல விழிப்படைய வைப்பதுமாக இருந்தது.




          கரிக்கையூர் எனும் பகுதியில் வாகனம் நின்றது. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. இறந்தவர்களின் நினைவாக அவர்களது உருவங்களை நடுகற்களாக இன்றும் வைத்து வணங்குகின்றனர். முதலில் வனத்திற்குள் சென்று பொறிவரை எனும் பகுதியில் உள்ள பாறை ஓவியங்களை பார்த்துவிட்டு வருவதாக திட்டமிடப்பட்டது. திரும்பி வந்து பிறகு இருளர் மக்களோடு உரையாடலாம் என்கிற முடிவோடு இருளர் இன இளைஞர்களது உதவியுடன் காட்டிற்குள் பிரவேசிக்கத் துவங்கினோம்.



          வாகன இரைச்சல்கள் இல்லை. அலைபேசிகளின் கதிர்வீச்சு அபாயங்கள் தாண்டி நடந்து கொண்டிருந்தோம். எதிரில் பாதைகள் எதுவும் தெரியவில்லை. முன்னே சென்று கொண்டிருந்த பழங்குடித் தோழமைகளின் முதுகை தொடர்ந்தோம். காடுகளுக்குள்ளான இந்த பயணம் ரம்மியமாக அழகாக இருந்தது. இவ்வளவு அமைதி, இயற்கை, விதவிதமான பறவைகளின் புதுப் புது கீச்சிக் குரல்கள் என அனைத்தையும் தவிர்த்து மன நோயாளியால் மட்டுமே நகரங்களில் வாழ முடியும். என்னை நான் பைத்தியக்காரனாகவே உணர்கிறேன்.



“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி யானைகள் இங்க சுத்திக்கிட்டு இருந்திச்சிங்க!!
என பீதி கிளப்பினர்.

“ஆனா இப்போ வேற பகுதிக்கு போயிருக்குங்க, பயமில்ல வாங்க
என தைரியமும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

“இது யானை சானி தானே!!!
உடன் வந்த நண்பர் கிலி கிளப்ப,

“இல்லங்கள இது காட்டெருமையோட சாணம்என விளக்கினர்

“காட்டெருமையும் இங்க பெருசா தாங்க இருக்குது. நேத்து அருவில குளிக்கிறப்போ துரத்துல பாத்தோம்!!




          கொஞ்சம் பயமும் தொற்றிக் கொள்ளதான் செய்தது. இருந்தும் இந்த அமைதியும் தூய காற்றும் குளிரும் நிழலும் கொடுக்கும் மன அமைதி அந்த பய உணர்வையும் மீறிக் கொண்டிருந்தது. பாதி தூரத்தில் மிகச் சருகலான பாதை நோக்கி அழைத்து சென்றார்கள். பெண்கள் குழந்தைகள் என எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் மிகத் தைரியமாக வந்து கொண்டிருந்தார்கள். இது போன்ற பயணங்களில் ஆர்வம் இல்லாதவர்கள் நிச்சயம் முகம் சுழிப்பார்கள். ஆனால் வந்திருந்த ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு தேடலுக்கான ஆர்வமும் சுவாரசியமும் ஒட்டிக் கொண்டது. அடுத்து என்ன என்கிற என்கிற எண்ணமே வாழ்க்கையை சுவரசியத்தோடு நகர்த்துகிறது. சுவாரசியத்தை ரசிக்கத் தெரியாதவர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள்.




          இந்த அடர்ந்த வனத்தில் மலைகள் பெரும் பாறைகளாக தனித்து காட்சி தந்தன. பசுமைநடை மூலமாக மதுரை மலைகளில் கல்வெட்டுகள் பாறை ஓவியங்களை கண்ட இடங்களை ஒத்து இருந்தன இந்த பாறைகள். இதைப் போன்ற இடங்களை ஆதிக்குடிகள் தேர்ந்தெடுத்து வாழ்ந்ததற்கு அவர்கள் இயற்கையின்பால் கொண்ட காதலே காரணமாக இருந்திருக்கும்.



          கிட்டத்தட்ட 300 பாறை ஓவியங்கள் அந்த பாறைகளின் முழுதும் பரவிக்கிடக்கிறது. போர்க்காட்சிகள், பன்றி வளர்க்கும் ஆதிக்குடிகள், வில் அம்பு கையேந்திய தொல்குடி வீரர்கள், பசுக் கூட்டங்கள், பசு மடியின் கீழ் நிற்கும் கன்று, கை கோர்த்து ஒற்றுமையை குறிக்கும் தொல்குடி ஓவியங்கள் என வரலாற்றின் கதைகளை ஒவ்வொன்றும் விளக்கிக் கொண்டிருந்தன. இங்கு சிவன் பெருமாள் என எந்த பொருளையும் இவர்கள் ஓவியமாக வரையவில்லை என்பதில் இருந்து அந்த காலத்தில் இவை அறிமுகமாகவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.



          தமிழகத்தில் உள்ள தொல்லியல் ஆர்வளர்களை ஒருங்கணைத்து வரும் ராஜசேகர் பாண்டுரங்கன் அவர்களுக்கு, அடுத்த நாள் இவற்றின் படங்களை அனுப்பினேன். அவர் இவை 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதனை உறுதி செய்தார்.



           போர்க் காட்சி ஓவியங்களில் இடது கைப்பக்கமாக குதிரையில் இருந்து வந்தேறிகள் வருவது போன்றும், அதனை இங்கிருக்கும் ஆதிக் குடிகள் வலது கைப்பக்கத்தில் இருந்து வாழ் கேடயம் கொண்டு தடுத்து நிறுத்தி போர் புரிவது போலவும் வரையப்பட்டுள்ளது. வேறொரு போர் ஓவியத்தில் காளை மீதேறி வலதுகைப்பக்கம் இருந்து வீரர்கள் தடுத்து நிறுத்தி போர் புரியும் காட்சிகளும் வரலாறுகளை கண்முன் நிறுத்துகின்றன. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல அந்நிய ஆக்கிரமிப்புகளை நம் மக்கள் தம் வீரத்தால் துரத்திவிரட்டியிருக்கிறார்கள். வில் அம்பு கொண்ட வீரர்களின் ஓவியம் இங்கு இவர்கள் வேட்டை சமுதாயமாக இருந்திருப்பதையும் குறிக்கிறது. பசுக்களின் ஓவியங்கள், இவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்திருந்ததை காட்டுகிறது. இப்படியாக ஓவியங்கள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்து கவனித்தால் ஐயாயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழ் தொல்குடிகளின் வாழ்வியல் நமக்கு விளங்கும்.




          இங்கு தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை இல்லை. தோல்லியல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் இப்பகுதி இன்னும் வரவில்லை. முகநூலில் இப்படங்களை பதிவேற்றிய போது எழுத்தாளர்.அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் கிருஷ்ணகிரியிலும் கூட இதே வயதை ஒத்த மற்றும் இதே தோற்றம் (Style) கொண்ட ஓவியங்கள் அதிகமாக உள்ளதாகவும், அங்கும் தொல்லியல் துறை பலகைகள் இல்லை என்றும் கருத்திட்டார்.



வரலாற்று ஆய்வாளர் ஒருவரிடம் பேசிய போது
“தமிழர்களோட பத்தாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பான வரலாறு குமரிக்கண்டத்தில் கடலுக்கடியில் கிடக்கு. அதைப் பற்றிய ஆய்வுகளை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் ஆதிச்சநல்லூர் போன்ற 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பெட்டகத்தக் கூட இந்திய அரசு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. கீழடி என்ன ஆகும் என்பதும் ஐயப்பாடாகத்தான் உள்ளது. மொத்தத்தில் தமிழனுடைய வரலாற்று தொன்மை எந்த விதத்திலும் வெளிவரக் கூடாது என்பதில் மிகத்தீவிரமா இருக்காங்க ஆட்சியாளர்கள். இனி நாம என்ன பண்ணனும்னா, நமக்கான வரலாறுகள, நாமளேதான் கண்டுபிடிக்கனும், படங்கள் எடுக்கனும், எழுதனும் ஆவணப்படுத்தனும் அடுத்த சந்ததி கைல கொடுக்கனும். இனி யாரையும் நம்பி பயன் இல்ல.

என வெகு விரக்தியாக பேசினார்.

அதே போலத்தான் இங்கும் ஓவியங்கள் இப்பகுதியின் பழங்குடி மக்களாலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது செம்மையான செயல். இது குறித்த முக்கியத்துவத்தினை இம் மக்களுக்கும், இப்பகுதி இளைஞர்களுக்கும் உணர்த்துவதின் மூலம் இவை சிதைவுறாமல் எதிர்காலத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்.



           இறக்கத்தில் வந்தவர்கள், ஏறத் துவங்கினோம். நாக்கு தள்ள தள்ள ஏறி வந்தோம். வந்த பாதையை மீண்டும் கடக்கையில் பரிட்சயமாகிப் போன உணர்வு. காட்டினை கடந்து வீடுகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தோம். ஒரு வீட்டின் முன், பழைய நெகிழி (Plastic) தண்ணீர் புட்டிகளை வேலியாக தொங்க விட்டிருந்தனர். ஒவ்வொரு புட்டிக்குள்ளும் நான்கு ஐந்து கற்களும் கிடந்தன. ஏன் இந்த ஏற்பாடு என கேட்டதற்கு,


“இங்க யானைக நடமாட்டம் அதிகம்ப்பா, இந்த பக்கமா யானைக வந்தா இந்த பிளாஸ்டிக் பாட்டில்ல உடம்பு பட்டதும் இந்த வேலியில இருக்குற எல்லா பாட்டிலும் ஆடத் தொடங்கீடும். அந்த சத்தத்துல அந்த யானை திரும்பி ஓடிடும்



           பணத்திற்காக காட்டுயிர்களை வேட்டையாடும் நடிகர்களும், மின் வேலி அமைத்து வனவிலங்குகளை அழிக்கும் தோட்ட முதலாளிகளும் நினைவுக்கு வருகின்றனர். இந்த பழங்குடி மக்கள் தங்களது தற்காப்புக்கு கூட வன உயிர்களை அழிக்க எண்ணாமல் அவற்றை விரட்டுவதற்கு எளிய முறையை கையாள்கின்றனர். 



          நிறைய வீடுகளில் பேசுகிற போது இரவில் இயற்கை உபாதைக்கு எழுகையில் யானைகள் திடீரென வந்து நிற்பதாக ஐயம் கொள்கின்றனர். கோத்தர் மலை சுற்றி காடுகளை அழித்து தேயிலை தோட்டங்களை அமைத்துவிட்டதன் எதிர்வினையாக, வன விலங்குகள் காடுகள் மிஞ்சிய இடங்களில் சுருங்கி வாழ்கின்றன. இறுதியாக பழங்குடிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக நிற்கிறது. தேயிலை தோட்டங்களும், கேளிக்கை விடுதிகளும் காடுகளை அழிப்பதற்கு வனத்துறை சட்டங்களில் இடமிருக்கிறது போலும். முதலாளியமும், ஆளும்வர்க்கமும், உலகமயமும் பழங்குடிகளின் வாழ்வை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றன.




          ஊர்க்குருவி நண்பர்களூடான அனுபவப் பகிர்வுடன் வள்ளுவர்நகர் நோக்கி திரும்புதல் பயணம் அமைந்தது. நண்பர்களோடு விடை பெற்று அரவிந்தன் வாகனத்தில் பல நினைவு அசைவுகளோடு வீடு நோக்கிய பயணம் துவங்கியது.




          எங்களுடன் வனத்திற்குள் வராத தோழர்.மீ.த.பாண்டியன் அவர்களும் அவரது துணைவியாரும் இருளர் இன மக்களுடன் நிகழ்ந்த உரையாடல்களை எங்களோடு பகிர்ந்து கொண்டனர். திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தனர். எங்களது வாகனம் நகர சாலைகளில் பல நாகரீக கோமாளிகளை கடந்து சென்று கொண்டிருந்தது.

அன்பும் நன்றியும்
பாடுவாசி
thamizhmani2012@gmail.com
paaduvaasi@gmail.com





No comments:

Post a Comment