Thursday 22 October 2015

நஞ்சுண்ட தெந்தன் கனவு

சூன்-2015ல் கூழாங்கற்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலக்கிய கூட்டத்தின் மூலம் தான் “நஞ்சுண்ட காடு” மற்றும் “விடமேறிய கனவு” இவ்விரு நூல்களும் எனக்கு அறிமுகம். இந்நூற்கள் குறித்து பேச்சாளர்கள் பேசிய போது மனதுள் ஏற்பட்ட தாக்கம் இவற்றை வாங்கிட உடல் கூசியது. பெரும் மன உலைச்சலோடு வீடு திரும்பிய தினம் அது. 2008-2009 தினங்களில் அனுபவித்த உணர்வினை ஒத்திருந்தது அந்த உணர்வு. ஏதோ துணிவு வர ஆகஸ்ட்-2015 மதுரை புத்தகத் திருவிழாவில் இவ்விரு நூற்களையும் தேடி வாங்கி, அதனை இப்போது வாசிக்கும் மனப் பக்குவம் வாய்த்தது.


2009-ல் ஈழ மண்ணில் நிகழ்ந்த போரின் தாக்கத்தினை இரண்டு நூலாக பதிவு செய்துள்ளார் அண்ணன் குணா கவியழகன். போருக்கு முந்தைய சூழலில் போராளிகளது வாழ்வியல், போருக்கு பிந்தைய சூழலில் அவர்களது அவமானகரமான வலிகள் என நகர்கிறது.



“நஞ்சுண்ட காடு” முழுவதும் போராளிகளின் பயிற்சி முகாம் நிகழ்வுகளாகவும் அவர்களது பேச்சிக்களும் அரட்டைகளுமாக கடக்கிறது. நாம் வாசித்துக் கொண்டிருக்கும் போராளி ஒருவர், கரும்புலி என 2009 செய்தித் தாள்களில் படித்திருக்கோமே என்கிற உணர்வு இறுதியில் தெரியவருகிறது. அவரது உருவத்தினை செய்தித் தாள்களில் கண்டிருப்பேனா, என மூளையை கசக்கி உருவத்தை முன் கொண்டு வர துடித்தேன். கலகலப்பாகவே துவங்குகிறது “நஞ்சுண்ட காடு”, ஆனால் இறுதியில் பக்கங்களை இயல்பாக புரட்டிப் போக மனம் கனக்கிறது. பயிற்சிக்கு தானாக முன்வந்த போராளிகள் தங்களது குடும்ப பின்னணி குறித்து கதைக்கையில் நெஞ்சி பதைக்கிறது.


“பிறகு இயக்கத்துக்கு வந்திட்டன். இப்ப நான் வயிறார சாப்பிடறன். அதுகளுக்கு என்னால கிடைச்ச கஞ்சியும் இப்ப கிடைக்காது. நான் மட்டும் திண்டால் சரியே..”


கலங்கச் செய்துவிட்டு இயல்பு காட்டி இறுதியில் பெரும் திகிலுக்குள் அழைத்துச் சென்று மீட்கிறது “விடமேறிய கனவு”.


“விடமேறிய கனவு” உலக அரசியல் பேசிச் செல்கிறது. போருக்கு பின், ராணுவ எல்லைக்குள் புகுந்த மக்களை பாதுகாத்திட ஐக்கிய நாடுகள் அமைப்போ, சர்வதேச செஞ்சிலுவை சங்கமோ இல்லை என்கிற உண்மையை உடைத்து சொல்லிப் பொகிறது. இன்றும் சில முக்கியப் புள்ளிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை நம்பிக் கதைத்துக் கொண்டிருப்பது வேதனையான வேடிக்கை. போரின் போது பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மக்களை அதிகாரப்பூர்வமாக அழைத்து கொத்தாக கொன்றது துவங்கி, சிங்கள அதிகாரிகளின் காம களியாட்டங்கள் வரை பதிவாகியுள்ளது இந்நூலில்.


தாம் ஆமிக்காரன் கையில் பிடிபட்டு என்ன ஆகப் பொகிறோம் என்கிற மன படபடப்பு இருந்தாலும் தாம் எந்த உண்மையையும் சொல்லிவிடக் கூடாது என்பதில் எடுக்கும் சிரத்தை மெய்சிலிர்க்கச் செய்கிறது. கடந்து செல்லும் ஒவ்வொரு கொட்டடியிலும் நிகழும் விசாரணைகளின் பதிவுகளும் அதற்கு தாம் முதல் சொன்ன பொய்யை மறக்காமல் அச்சு பிசகாமல் அதனை தொடர்புபடுத்தி போராளிகள் பதில் சொல்லி தப்பிக்கும் விதம் அனைத்தும் வாசிக்கும் யாவருக்கும் வயிற்றில் புளி கரைக்கும். அங்கு வசித்தவர்களின் உணர்வை இங்கு வாசித்தலில் உணர முடிந்தது. விசாரணை முடிந்து அறைக்கு திரும்புவோரை உடனிருப்போர் சந்தேகிக்கும் எண்ணமும் இயக்கத்தின் இந்த நிலைக்கும் போராளிகள் விமர்சிக்கும் வார்த்தைகளும் மனதை நெருடுகிறது. அவர்களது இயக்கம் குறித்து விமர்சிக்க அதற்காக அடிபட்டு அவமானப்பட்டு வாழும் அவர்களுக்கு மட்டுமே தகுதி இருப்பதாக உணர்கிறேன். அவர்களே களத்தில் நின்றவர்கள், அவர்களுக்கே உண்மையென்னவென்றும் தெரியும். ஆனால் இங்கு சிலர் அவ்வமைப்பு குறித்து விவாதிக்கையில் கேலிப் பொருளாகவே கண்முன் தெரிகிறார்கள்.


இவ்விரு நூல்களையும் வேறு மாதிரி எனது மனம் ஒப்பிடுகிறது. இயக்கத்தின் மீது பற்றுதலும், தனது மண் மீதான அக்கறையும் இருக்கிற போதும் பயிற்சிக்கு விளையாட்டுப் பிள்ளையாக வரக் கூடிய இளைஞர்களை முதலாவது நூல் பதிவு செய்கிறது. போர்க்களத்திலும் அதன் பிறகான வதை முகாம்களிலும் முன்னவர்கள் போல இயக்கத்திற்கு வந்தவர்கள், மிகத் தெளிவான திட்டமிடும் யுக்தி பெற்றவர்களாக மாறுகிறார்கள் என்பதை இரண்டாம் நூல் பதிக்கிறது. ஒப்பிடுகையில் இந்த விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் பயிற்சிகளும் திட்டமிடல்களும் வியக்க வைக்கிறது.


“ஏனண்ணை சாவு சாவு எண்டு சாவடிக்கிறியள். மகிந்த எல்லாரையும் விடுதலை செய்யப்போறான். ஐக்கியநாடுகள் சபை வருகுதாம்” தரணி சொல்லவும் பேசாமல் இருந்த மாஸ்டர் பாய்ந்தார், “கொண்டவங்களே அவங்கள்தான். மகிந்தாவால் புலியின்ர மயிரையாச்சும் பிடுங்க ஏலுமோ? இப்ப பிணமெண்ண வருவாங்களாக்கும் ஐ.நா சபை?”


இது ஐக்கிய நாடுகள் சபை குறித்தான பதிவாக இருந்தாலும் ஒரு உண்மை இங்கு ஆணித்தரமாக பதியப்பட்டுள்ளது. ‘சிங்களவனால் புலியின்ர மயிரையாச்சும் பிடுங்க ஏலுமோ!?’ அதேதான் இங்கு முடிவும். அந்த வதை முகாம்களில் இருந்து சிங்கள ராணுவத்தை முட்டாளாக்கிவிட்டு இருவரும் அதன்பின் நால்வருமாக தப்பிக்கின்றனர். அவர்கள் திட்டமிடும் ஒவ்வொரு வாசிப்பும் மீள் வாசிப்பாகவே அமைந்தது. “போயும் போயும் இந்த முட்டாள்களிடம் தோற்றோமே!!” என போராளிகள் பெரிதும் வருந்துகின்றனர் சில நகர்வுகளில். இவ்வளவு திறன் பெற்றவர்கள் இம் முட்டாள்களிடம் தோற்றது வேதனைதான். இம் முட்டாள்களை உலக நாடுகள் இயக்கியது மறுக்க முடியாத உண்மையாகிய போதும்.

அன்பும் நன்றியும்
பாடுவாசி

22-10-2015
paaduvaasi@gmail.com
thamizhmani2012@gmail.com

No comments:

Post a Comment