Saturday 24 October 2015

சிதைவின் வாசலில் வரலாறு - முத்துப்பட்டி

மலைகள் எனது அகராதியில் பிரம்மிப்பு என பொருள்படுகின்றன. பிறந்தது முதல் இவற்றினூடே பயணித்துக் கொண்டிருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். பேருந்தினில் சன்னல் வழியாக என்னுடனே பயணிக்கும் நிலவையும் மேகங்களையும் கவனிக்கத் துவங்கியது போலவே சில தொலைவு உடன் நகரும் இம் மலைகளையும் கண்டு ரசிக்கத் துவங்கினேன். உயர்ந்த மலைகளில் யாரிருப்பர்? என்ன இருக்கும்? மலைகளின் பின்புறம் எப்படி இருக்கும்? மலைகளின் மீது நடப்பது எப்படியான உணர்வைத் தரும்!? என ஆயிரம் கேள்விகள் எதிர்பார்ப்புகள் பால்யம் முதல் துரத்திக் கொண்டு வந்தன. துரத்திவந்த கேள்விகள் என்னை விட்டுச் சென்ற இடம் பசுமைநடை. பால்யத்தின் கேள்விகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பசுமைநடை மூலம் விடை கிடைத்தது. மலைகளுக்கு பின் உள்ள அரசியல் வியபாரம் வரைக்கும் கூட தேடாத கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

அவ்வாறு அரசியலுக்கும் வியபாரத்திற்கும் பலியாகி சிதிலமடைந்த மலைகளுல் ஒன்று முத்துப்பட்டி என அரசாணைகளில் குறிக்கப்பட்டுள்ள பெருமாள் மலை. இம்மலைக்கு கரடிப்பட்டி என்கிற பெயருமுண்டு. 18-10-2015 அன்று பசுமைநடை மூலமாக இரண்டாவது முறையாக (ஏற்கனவே முதல் முறை 27-11-2011 அன்று.) சென்றோம். இந்த மலையில் எனக்கு இதுவே முதல் பயணம். இருந்த போதும் நடைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தத்திற்கும், உணவு பரிமாறுவதற்கான இடம் தேர்வுக்கும் சென்று இந்த நடை பயணத்தை இரண்டாம் முறையாக்கி சரிசெய்து கொண்டேன்.

மதுரையில் இருந்து தேனி பிரதான சாலையில் காமராசர் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடது புறத்தில் திரும்பும் சிறு  பாதை இம் மலைக்கு நம்மை அழைத்து செல்கிறது. சிறு தொலைவிலேயே நாம் சென்றுகொண்டிருக்கும் மலை, மதுரையின் பிரபல திருட்டுக் கும்பலால் வன்புணர்வுக்குட்பட்டு தம் மேனியின் தோல்கள் யாவும் கிழிந்து சதைப் பிண்டங்களாக காட்சி தருகின்றன. அந்த பாதையில் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் கூரை வேயப்பட்ட வீடுகள், ஓட்டு வீடுகள், மண் வீடுகள் என சிற்றூர் ஒன்று நம்மை வரவேற்கிறது. முகச் சுருக்கங்களுடன் தண்டட்டி பாட்டிகள், அரை டவுசரோடு டயர் உருட்டி விளையாடும் சிறுவர்கள், பாவாடை சட்டையில் இளம் பெண்கள் என மதுரையின் மறுபக்கக் காட்சிகள் துவங்குகின்றன.

வாகனங்களொடு சென்றால் நம்மாள் சில சில வேதனையான காட்சிகளை காண இயலாது. இம்மக்களிடம் பேசி இங்கேயே வாகனங்களை விட்டு செல்வோம். அவர்கள் ஏதோ கேட்கிறார்கள்..
“ஏம்பா.. என்ன இம்புட்டு பேரு வந்திருக்கீங்க.. என்னாவாம்!?”
“பசுமைநடை மூலமா பழைய கல்வெட்டு, சிற்பம் இதெல்லாம் இருக்கிற இடங்களுக்கு போறோம் அம்மா.. இந்த மாதம் உங்க மலைக்கு வந்திருக்கோம்.”
“ஆமா.. அந்த பெருமாள் மலையில ஏதோ பழைய எழுத்தும், முனிவருங்க செலையும் இருக்கு அதத்தேங் பாக்க போறீயளா!!
“ஆமங்கம்மா”
“சூதானமா போங்கப்பா.. முள்ளுச் செடிங்களா இருக்கும், கொழந்தைகளையும் பொம்பளப் பிள்ளைகளையும் கூட்டிட்டு போறீங்க..”
“ஏய் ஆமப்பே.. இவனுக மலைய அம்புட்டையும் ஒடச்சி போட்டு வச்சிருக்கானுக.. அங்கங்க பள்ளத்துல தண்ணி கெடக்கும் சிறுசுக எதும் உள்ள எறங்கீடாம பாத்து கூட்டு போய்ட்டு வாங்க”

அவர்களின் கரிசன வார்த்தைகளில் நாம் மெய் மறந்து நின்று கொண்டிருந்தால் சற்று நேரத்தில் வெயில் ஏறிவிடும். அதனால் அவர்களிடம் விடைபெற்று நம் பயணத்தை துவங்குவோம்.

உண்மைதான் . அவர்கள் கூறியது போல வழி எங்கும் கருவேலமரங்களும் அவை காய்ந்து சிதறியபடி உள்ள முட்கம்புகளும் பாதை முழுக்க பரவிக் கிடக்கின்றன. உள்ளே நுழைய நுழைய அதிர்ச்சிகள் அரங்கேறுகின்றன. இரண்டு பக்கங்களிலும் மலையின் பாறைகள் பூமிக்குள் ஊன்றி நின்று கொண்டிருக்க இரண்டுக்கும் நடுவில் இருக்க வேண்டிய மலைகளின் பெரும் பாறைகளை காணவில்லை. அவற்றிற்கு பதிலாக ஊரணி போன்று பள்ளமாக அந்த இடத்தில் நீர் கிடக்கிறது. என்ன வேதனை. மலைகள் யாவும் இயற்கை வளங்கள், பூகோளம் நமக்கருளிய வரங்கள். அவற்றை தனிப்பட்ட ஒரு சில மனிதர்களின் சுயலாபத்திற்கு எப்படி ஆக்கிரமித்து அழிக்க இயலும்!. மழையும், ஆறும், கடலும், காற்றும், மண்ணும், மலையும் எப்படி விற்பனை பண்டங்களாக மாறிப் போகின என ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 300 மீட்டருக்குள் மலைப்பாறைகளை சிதைக்கக் கூடாது என உள்ள சட்டங்கள் அத்து மீறப்பட்டுள்ளன. தொல்லியல் துறையோ, கனிமவளத் துறையோ இவற்றிற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என தெரியவில்லை. ஒரு இனத்தின் வரலாற்றை அந்த இனமே அழிக்கும் கேலிக் கூத்து இங்கு மட்டுமே காணக் கிடைக்கும்.

பணப் பைத்தியங்கள் சில இப்படி என்றால் இன்னும் சில பைத்தியங்கள் இங்கு உலாவியிருக்கின்றன. தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே மது அருந்தி களித்து கிடந்திருக்கிறார்கள். ஆங்காங்கே மது புட்டிகளின் மூடிகள், தண்ணீர் பொத்தலங்கள், சிந்திய மதுவின் உலர்ந்த வடுக்கள் என இந்த இடத்தின் தன்மையை அசிங்கம் செய்து வைத்துள்ளனர்.

இருபதுக்கும் மேற்பட்ட சமண படுக்கைகள் இங்கு அமையப்பட்டுள்ளன. இதன் மேல் பகுதிகளில் அதனை செய்வித்தவர்களின் பெயர்களும் தமிழி எழுத்துக்களில் அமைக்கப்பட்டுள்ளது. பாறையின் முகப்பிலும் தமிழி எழுத்துத் தகவல்கள் காண கிடைக்கின்றன. இக்கல்வெட்டு தகவல்களாவன,

“செய்அளன் விந்தையூர் கவிய்”
பாறையின் முகப்பில் அமைந்துள்ள இக்கல்வெட்டு கூறுவதாவது, விந்தையூரை சேர்ந்த செயளன் என்பவர் இந்த குகைத் தளத்தை அமைத்து கொடுத்துள்ளார் என்பதாம்

            “திடிக்காத்தான் {ம}...னம் எய்…”
                        சிதைந்த நிலையில் உள்ள கற்படுக்கையின் மேல் உள்ள இக் கல்வெட்டு கூறுவதாவது, திட்டியை காத்தான் என்பவன் செய்து கொடுத்த கற்படுக்கை என்பதாம்

“நாகபெரூரதைய் முசிறிகோடன் எளமகன்”
நாகபேரூர் என்பது நாகமலைப்புதுக்கோட்டை எனவும், முசிறியை சேர்ந்த இளமகனும் நாகபேரூரின் தலைவரும் செய்து கொடுத்தது என பொருள் கொள்ளலாம்.


இந்த படுக்கையும் தமிழி கல்வெட்டுகளும் கிபி-முதலாம் நூற்றாண்டு என உறுதி செய்துள்ளனர். அந்த படுக்கைகள் முழுதும் நம் கால மனிதர்கள் தங்களது பெயர்களை செதுக்கி வைத்திருக்கிறார்கள். வரலாற்றினை பாதுகாக்க மக்கள் வழிப்படைய வேண்டும் என பேசிக்கொண்டிருக்கையில்,
“இவை அனைத்தும் தமிழ் பெயர்களாக இருக்கிறது. அதனால் இவை கடந்த இரு தலைமுறைக்கு முன் வாழந்தவர்களது வேலையாக இருக்கலாம்” என சித்திரவீதிக்காரன் கூறிச் சென்றார்.

நம் காலத்தவர்கள் இப்படி செய்திருக்கமாட்டார்கள் என அவர் கூறியது மனநிம்மதியை கொடுத்தது, நம்மவர்கள் கொஞ்சம் விழிப்படைந்திருக்கிறார்கள் என்று. ஆனால் அவர் கூறியதன் மறு பக்கம் வருத்தம் கொள்ளச் செய்கிறது. தற்சமயத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் பெயர்கள் இல்லை என குறிப்பால் சொல்லி கடந்துவிட்டார்.

மலைப் பாறைகளின் முகப்பில் இரு மகவீரர் சிற்பங்களும் மற்றும் தனியாக மிக அழகான கலை வேலைப்பாடு கொண்ட மகாவீரர் திரு மேனியும் இங்கு உள்ளது. மலைப்பாறைகளில் வட்டெழுத்து கல்வெட்டும் காணப்படுகிறது. இந்த சமண சிற்பங்களும், வட்டெழுத்து கல்வெட்டுகளும், சமணபடுக்கைகளும் கிபி-9 ஆம் நூற்றாண்டுக்குறியது என நிரூபிக்கப்பட்டுள்ளன.

இத்தகவல்கள் அனைத்தும் வரலாற்று அறிஞர்.முனைவர்.சாந்தலிங்கம் அவர்களின் வாய்மொழி அறிந்து கொண்டோம். இனி பசுமைநடையின் காலை சிற்றுண்டி உண்டுவிட்டு கிளம்பிவிட வேண்டியதுதன். ஆனால் நிறைய பேருக்கு இந்த மலையை விட்டு விலக மனம் இல்லை. இன்னும் சமணபடுக்கைகளையும் மகாவீரர் திருமேனியையும் தொட்டுணர்ந்து கொண்டிருந்தார்கள். பெருங் கோவில்களின் சிலைகளை அருகில் நின்று கூட காண இயலாதவர்களுக்கு இது போன்ற உணர்வுகள் மேல் எழதான் செய்யும். உலகம் எவராலும் படைக்கப்பட்டதில்லை என்ற நாத்திக கருத்தியலை முதன்முதலில் உரக்க சொல்லிய ஒரு கருத்தியல் என்றும் மக்களுக்கானதாகவே இருக்கும் என்பது இயல்பான உண்மை என்பதை அறிந்து கொண்டு தமிழி எழுத்துகளின் வடுக்களை தடவி விடைபெற்று நாமும் கிளம்புவோம்










அன்பும் நன்றியும்
பாடுவாசி
24-10-2015



No comments:

Post a Comment