தாயின் நீர்க்குடத்துக்குள் குழந்தை மிதப்பதைப்
போல வள்ளுவர் நகர் சமுதாயக்கூடத்திற்குள் கிடந்தோம். சுற்றிலும் பனி. இருண்ட மலைகளுக்கு
இடையில் பூச்சிகளும் தவளைகளும் சோழி குழுக்கிக் கொள்ளும் சப்தம் சுற்றிலும் இருளுக்கு
இசையமைத்துக் கொண்டிருந்தது. சற்று விடிய பறவைகள் தங்களது தாய் மொழியில் பாடிக் கொண்டும்
பேசிக் கொண்டும் திரியத் துவங்கின. இந்த பனியில் கம்களிகளைச் சுற்றாமல் இவைகளால் எப்படி
சுற்றித்திரிய இயல்கிறதோ!!
படவியை கையில் எடுத்துக் கொண்டு சூரிய உதயத்தை
எடுக்க முயற்சித்து இளஞ்சிவப்பு மேகங்களை மட்டுமே படமாக்க இயன்றது. செடி கொடிகள் மீதும்
பனி சிந்திய ஈரம். வாகனக் கண்ணாடிகளில் படிந்திருந்த பனிப்படிமங்களை கண்டதும் பால்ய
வயது நினைவு வர, எனது பெயரை எழுதிப் பார்த்தேன். யாரும் பார்க்கிறார்களா என சுற்றும்
முற்றும் பார்த்துவிட்டு அழித்தேன். அது கண்ணீராக வடிந்தது.