Monday 11 June 2012

நவீன ஆண்



சிறைச்சாலை போல எங்கு திரும்பினாலும் பழுப்பு நிறத்தில் அழுக்கேறிப்போய் கிடக்கும் சுவர். அங்கும் இங்கும் எங்கு திரும்பினாலும் ஏழைகளே இருக்கிறார்கள் உண்டியல் வருமானத்தில் பிழைத்துவரும் கோவில்களில் இருப்பதை போல. மண் தரையோ சிமென்ட் தரையோ துண்டை விரித்து படுத்து கிடக்கும் சொந்த பந்தங்கள். மாத்திரைகளை தவிர அந்த பகுதி முழுவதும் மருந்து நாற்றம். உள்ளே வந்தாலே போதும் குணமாக்கிவிடும் அந்த மருந்து நாற்றம் நம் அரசு மருத்துவ மனைகளை தவிர வேறெங்கு சென்றாலும் கிடைக்காத  அரிய  பொக்கிஷம்.

சொந்தங்களை பார்த்து கண்ணீர் விட்டு ஆருதல் சொல்ல வந்தவர்கள், யாரென்றே தெரியாத அடுத்த படுக்கையில் படுத்து கொண்டு தன் சொந்தத்தினை விட அதிக ரண வேதனை அனுபவிப்பவர்களை பார்த்து வருந்தும் குணம், உண்மையில் நம் மக்களுக்குத்தான் உண்டு.

கொஞ்சம் நஞ்சமாய் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கும் உடல்களை காண கத்தியபடி ஒப்பாரியுடன் ஓடும் கூட்டத்தின் சப்தத்தின் மையத்தில் ரம்மியமான அமைதியுடன் இருக்கும் அறுவை சிகிச்சை கூடத்திற்குள் அறுவை சிகிச்சைக்காக உருளும் படுக்கையில் மயக்க நிலையில் கிடக்கும் முப்பத்து ஐந்து வயது மதிக்கதக்க ஒரு ஆண், மருத்துவமனை ஊழியர்களால் தள்ளிக்கொண்டு செல்லப்படுகிறான். 

அந்த ஆணுக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள். முதல் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள். இரண்டாம் குழந்தை பிறந்து மூன்றே நாட்கள். 

இரண்டாம் பிரசவமும் வழக்கமான ரண வேதனையுடன் பிள்ளை பெற்று கொண்டாலும் அதை சுக பிரசவம் என்றே சொல்லும் தாய்மையுடன் அந்த ஆணின் மனைவி. ஏதோ அவள் தவறு செய்தது போல குற்ற உணர்வுடன் மூன்று நாளே ஆனா குழந்தையுடன் அறுவை சிகிச்சை கூடத்துக்கு வெளியில் கலக்கத்துடன் காத்து இருக்கிறாள். உண்மையில் இவள்தான் காரணமா??

அந்த ஆணின் மூத்த சகோதரன் " இதெல்லாம் இவனுக்கு தேவையா?? என்னமோ புரட்ச்சி பண்றேன் மண்ணாங்கட்டி பண்றேன்னு இப்படி ஆய்ட்டான் "

அந்த ஆணின் முதல் குழந்தை மட்டும் யாரென்றே தெரியாத அவள் வயது குழந்தையுடன் மருத்துவமனை மணலில் விளையாடிக்கொண்டு இருக்கிறாள்.

ஒவ்வொரு மருத்துவ செவிலியர்களை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இறுதியாய் வெளியே வந்து அவர் அறையை நோக்கி சர்வ சாதாரணமாக நடந்து சென்றுவிட்டார். ஒரு செவிலியர் மட்டும் நின்று " உள்ள போய் அவர பாக்குறவங்க பாருங்க, கொஞ்ச நேரத்துல பெரிய டாக்ட்டர் ரூம்ல வந்து கையெழுத்து போட்டு ஐநூறு ரூபாயும் அரிசியும் ஹர்லிக்க்ஸ் பாட்டிலையும் வாங்கிக்குங்க" என்று சொல்லி நகர்ந்தார். அந்த ஆணின் அண்ணன் கேவலம் என்று சொல்ல்வது போல தலயில் அடித்துக்கொண்டு உள்ளே சென்று அந்த ஆணிடம் கத்த துவங்கினார்.

கண்கள் கலங்கி மனம் தெளிந்து அந்த ஆண் சொன்ன பதில் " குழந்தைய பெற  அவ ரெண்டு தடவ ரொம்ப கஷ்ட்டபட்டுட்டா அண்ணே .. இந்த ஒரு கஷ்ட்டத்த ஷேர் பண்ணிக்குரதுல என்ன அசிங்கம் இருக்கு??

பெண் சுதந்திரம் பற்றி பேச துணிந்த ஆண்கள் அதிகம்
ஆனால் குடும்ப கட்டுப்பாட்டுக்கு துணிந்த ஆண்கள் குறைவு
காரணம் பயம் 
வலிக்குமோ, பின்விளைவுகள் வருமோ என்ற பயம் அல்ல
இந்த சமூகம் கேலி பேசுமோ என்ற பயம்.


படைப்பு:

சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

2 comments:

  1. ilamai thudippu theriuthu periya puratchiyalana varuvinga thodaratum ungal eluthu valthugal

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா.. தொடர்வோம் நம் நட்பினையும் நம் எழுத்தினையும்..

      Delete