Friday, 15 April 2016

போராட்டக் கல்வி – மூணாறு பயணம்

          போராட்டம் எனும் இந்தச் சொல் மிகப் பழமையான சொல்லாக தோன்றுகிறது. ஆதியில் ஒரு செல் உயிரியாக இருந்து படிப்படியாக பரிணாமம் அடைந்து மனிதனாக உருவாகிட பல்வேறு போராட்டங்களை இந்த இனம் நிகழ்த்தியிருக்கிறது. மனித விலங்காக மாறினாலும் தம் பரிணாமத்தில் இடையில் பிரிந்து வெவ்வேறு உயிராக பரிணாமித்துப் போன பல விலங்குகளிடம் இருந்து தன்னையும் தன் இனத்தையும் காப்பற்றிக் கொள்ள தொடர்ந்தது போராட்டம். அதன் பிறகு மனித இனத்திற்குள்ளாகவே இனத்தை வகுத்து தம்மைத் தாமே போரிட்டு தம்மிடம் இருந்தே தம்மை காத்துக் கொள்ள போராடுகிற காலமும் வந்து சேர்ந்தது. அந்தப் போராட்டம் இன்றும் ஓயவில்லை. தான் வாழ்வதற்கு ஆதாரமாக, தம்மை, தம் இனத்தின் உயிரை பிடித்து வைத்திருக்கும் ஆதாரத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு மனித இனமும் தம் போராட்டத்தை கை கொண்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு பேராபத்து என்கிற போது அதுவரை அமைதியாக இருந்திருக்கிற மனம் போராட்ட குணமாக வெடித்து எழுகிறது.


அப்படியான போராட்டங்கள் எழும் பொழுதெல்லாம் அவற்றை ஒடுக்கித் தடுத்திட வரலாறுகளில் பல யுக்திகள் எதிரிகளால் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன.

Wednesday, 6 April 2016

சோலைமலை அடிவாரம்

          வீடுகளுக்குள் முடங்கி வாழ்வதற்கும் கூட சமுதாயத்திடம் இருந்து பல்வேறு பாடங்களை கற்க வேண்டியுள்ளது. ஆனால் சமுதாயத்திடம் இருந்து பாடம் கற்கத் துவங்கிவிட்டால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது முட்டாள்தனமாக அறியத் துவங்கும். விடுமுறைகளில் தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றியை அளுத்திக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருந்த என்னை வெளியில் இழுத்து வந்து போட்டு பயணங்களையும் புத்தகங்களையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தது பசுமைநடை.

Saturday, 24 October 2015

சிதைவின் வாசலில் வரலாறு - முத்துப்பட்டி

மலைகள் எனது அகராதியில் பிரம்மிப்பு என பொருள்படுகின்றன. பிறந்தது முதல் இவற்றினூடே பயணித்துக் கொண்டிருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். பேருந்தினில் சன்னல் வழியாக என்னுடனே பயணிக்கும் நிலவையும் மேகங்களையும் கவனிக்கத் துவங்கியது போலவே சில தொலைவு உடன் நகரும் இம் மலைகளையும் கண்டு ரசிக்கத் துவங்கினேன். உயர்ந்த மலைகளில் யாரிருப்பர்? என்ன இருக்கும்? மலைகளின் பின்புறம் எப்படி இருக்கும்? மலைகளின் மீது நடப்பது எப்படியான உணர்வைத் தரும்!? என ஆயிரம் கேள்விகள் எதிர்பார்ப்புகள் பால்யம் முதல் துரத்திக் கொண்டு வந்தன. துரத்திவந்த கேள்விகள் என்னை விட்டுச் சென்ற இடம் பசுமைநடை. பால்யத்தின் கேள்விகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பசுமைநடை மூலம் விடை கிடைத்தது. மலைகளுக்கு பின் உள்ள அரசியல் வியபாரம் வரைக்கும் கூட தேடாத கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

Thursday, 22 October 2015

நஞ்சுண்ட தெந்தன் கனவு

சூன்-2015ல் கூழாங்கற்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலக்கிய கூட்டத்தின் மூலம் தான் “நஞ்சுண்ட காடு” மற்றும் “விடமேறிய கனவு” இவ்விரு நூல்களும் எனக்கு அறிமுகம். இந்நூற்கள் குறித்து பேச்சாளர்கள் பேசிய போது மனதுள் ஏற்பட்ட தாக்கம் இவற்றை வாங்கிட உடல் கூசியது. பெரும் மன உலைச்சலோடு வீடு திரும்பிய தினம் அது. 2008-2009 தினங்களில் அனுபவித்த உணர்வினை ஒத்திருந்தது அந்த உணர்வு. ஏதோ துணிவு வர ஆகஸ்ட்-2015 மதுரை புத்தகத் திருவிழாவில் இவ்விரு நூற்களையும் தேடி வாங்கி, அதனை இப்போது வாசிக்கும் மனப் பக்குவம் வாய்த்தது.


2009-ல் ஈழ மண்ணில் நிகழ்ந்த போரின் தாக்கத்தினை இரண்டு நூலாக பதிவு செய்துள்ளார் அண்ணன் குணா கவியழகன். போருக்கு முந்தைய சூழலில் போராளிகளது வாழ்வியல், போருக்கு பிந்தைய சூழலில் அவர்களது அவமானகரமான வலிகள் என நகர்கிறது.

Sunday, 11 October 2015

பழங்குடிகள் பாதுகாக்கும் வரலாறு – கோத்தர் மலை2

          தாயின் நீர்க்குடத்துக்குள் குழந்தை மிதப்பதைப் போல வள்ளுவர் நகர் சமுதாயக்கூடத்திற்குள் கிடந்தோம். சுற்றிலும் பனி. இருண்ட மலைகளுக்கு இடையில் பூச்சிகளும் தவளைகளும் சோழி குழுக்கிக் கொள்ளும் சப்தம் சுற்றிலும் இருளுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தது. சற்று விடிய பறவைகள் தங்களது தாய் மொழியில் பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் திரியத் துவங்கின. இந்த பனியில் கம்களிகளைச் சுற்றாமல் இவைகளால் எப்படி சுற்றித்திரிய இயல்கிறதோ!!



         படவியை கையில் எடுத்துக் கொண்டு சூரிய உதயத்தை எடுக்க முயற்சித்து இளஞ்சிவப்பு மேகங்களை மட்டுமே படமாக்க இயன்றது. செடி கொடிகள் மீதும் பனி சிந்திய ஈரம். வாகனக் கண்ணாடிகளில் படிந்திருந்த பனிப்படிமங்களை கண்டதும் பால்ய வயது நினைவு வர, எனது பெயரை எழுதிப் பார்த்தேன். யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அழித்தேன். அது கண்ணீராக வடிந்தது.

Tuesday, 6 October 2015

மலையகத் தமிழர்களின் பச்சை ரத்தம் - கோத்தர்மலை-1

          புத்தகங்களும் பயணங்களும் வாழ்வதற்கான காரணங்களை அர்த்தப்படுத்துகின்றன. இவை அமையாதவர்கள் இயந்திர யுகத்தில் சிக்கித் திணறுவதாகவே தோன்றுகிறது. அதே போன்ற கால இயந்திர சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருந்த என்னை மீட்டெடுத்தது “பசுமைநடை” என்பதை நான் எங்கும் பதிவு செய்வேன். பசுமைநடை எனும் கைகாட்டி பலகை எனது வாழ்க்கை பயணத்தின் திசையை திருப்பியிராவிட்டால், இன்று அரவிந்தன் என்கிற தோழமையும் அத்தோழமையின் மூலமாக “ஊர்க்குருவிகள்” எனும் தோழர் வட்டத்தோடு இந்த கோத்தகிரி பயணமும் வாய்த்திருக்காது.


          
          திருமங்கலத்தின் எனது வீட்டு வாசலில் இருந்து துவங்கியது பயணம். பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வந்த ஒருவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டிருந்தார் காவலர் ஒருவர். இன்னும் விடியவில்லை. பொழுதும் தான்.

Wednesday, 9 September 2015

மண்ணின் கீழ் அடியில் ஒரு கீழடி

           உலகின் பழைய நகரங்களை எல்லாம் பாருங்கள் அவை ஏதேனுமொரு ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் அல்லது குன்றுகள் சூழ அமைந்திருக்கும். உலகின் பழைய நகரங்களில் ஒன்றான மதுரையும் அப்படித்தான். பரங்குன்றம், பசுமலை, சமணமலை, நாகமலை, அழகர்மலை, ஆனைமலை என குன்றுகள் சூழ வைகை ஆற்றங்கரையில் உருவான கோட்டை நகரந்தான் மதுரை.

காலப்போக்கில் பழைய நகரங்கள் அழிந்து போகப் புதிய நகரங்கள் உருவாகின. கால வெள்ளத்தில் கரைந்து போகாமல் தம்மை இன்றளவும் நிலை நிறுத்திக்கொண்ட நகரங்கள் மிகச் சிலவே. தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களும் குறைந்தது 25 நூற்றாண்டு கால வரலாறு உடையவனவாக இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டிலும் மதுரை தனிச் சிறப்புகள் உடைய நகரமாகும்


Wednesday, 8 July 2015

கிடாரிப்பட்டி - அன்றும் இன்றும்

            வாழ்வின் சிறந்த சம்பாத்தியம் “மனிதர்கள்”. எண்ணங்கள் ஒத்துப் போகும் மனிதர்களை சம்பாதிப்பது அதிலும் அதி சிறந்தது. பள்ளியிலோ கல்லூரியிலோ எனது எண்ணங்களை ஒத்த மனிதர்கள் அமைந்ததில்லை என்பதை இங்கு நான் பதிவு செய்கிறேன். அந்த மனிதர்களூடான வாழ்வு முழுக்க கேலியும் கிண்டலும்  சில நேரங்களில் நல்ல நட்பாகவும் இருந்து கடந்துவிட்டது. இன்றும் பள்ளி கல்லூரி இறுதி நாட்களில் அம் மனிதர்களிடம் பெற்ற ஒவ்வொரு எழுத்துக்களும் சில நேரம் ரசிக்கவும் பல நேரம் அழுகவும் வைத்துவிடுகிறது. இருப்பினும் எண்ணங்களின் ஓட்டம் ஒத்துப் போனதில்லை என்பதே உண்மை.

Friday, 1 May 2015

தாண்டிக்குடி – வாழ்வியலும் வரலாறும்

          25-04-2015 அன்றைய தினம் சில்லென காற்றோடு தன்னை துவங்கிக் கொண்டது. விடியும் முன் நல்ல மழை. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் விட்டபாடில்லை. பசுமைநடைக்கு கிளம்ப வேறு நேரம் கடந்து கொண்டே இருந்தது. நனைதல் மிகப் பிடித்தமானது, எனவே அதனை வழிமொழிந்து நண்பர்களோடு பயணம் தொடர்ந்தது. இன்னும் விடியவில்லை. அனைத்து புறத்தில் இருந்து சங்கமிக்கும் வாகனங்களும் குளித்து தலை துவட்டாமலே சுற்றிக் கொண்டிருந்தன. எங்கும் மழை எதிலும் மழை. இருள் பலரின் துயரங்களை இறக்கி வைக்கும் சந்தர்ப்பம். அழுதாலும் தெரியாது என்பதாலேயே இருளில் கொட்டித் தீர்ப்பவர்களை கண்டிருக்கிறேன். இருட்டில் பொழியும் மழைக்கும் என்ன சோகமோ தெரியவில்லை, எங்களிடம் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது.

Monday, 13 April 2015

தாலிச் சிந்தனை

          புதியதலைமுறை தொலைக்காட்சி கிளப்பிவிட்ட தாலி விவாதம், இன்று இளைய சமுதாயம் துவங்கி நரை சமுதாயம் வரையும், முகநூல் துவங்கி வீடுகளுக்குள்ளும், சாமானியன் துவங்கி அரசியல்வாதிகள் வரை சூடு பறக்கிறது. இது வரை அடக்கி வாசித்துக் கொண்டிருந்த திராவிடர் கழகம் கூட அம்பேத்கார் பிறந்த நாளில் தாலி அகற்றும் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க துவங்கிவிட்டது. இந்த விவாதங்களும் கருத்து மோதல்களும் இந்த காலகட்டத்திற்கு மிக அவசியமானதே. “கலகம்னு ஒன்னு  பிறந்தா தானே நியாயம்னு ஒன்னு பிறக்கும் என ஒரு சொலவடை கூட உண்டு. அந்த நியாயம் பெண்களுக்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமக்கான நோக்கம்.

          தாலி என்ற உடன் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படும் முதல் வாதம்,
“திருமணம் ஆன பெண்ணுக்கு அதுதானே அடையாளம்

Sunday, 5 April 2015

வசந்த காலத்தினில்.. வசந்த மண்டபந்தனில்...

          05-04-2015 அன்று பசுமைநடை 47 - க்காக அதிகாலையில் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தேன். பங்குனி, வெயில் பகல் பொழுதுகளில் பல் இளித்தாலும், கதிரவன் கதிர்கள் தீண்டிடாத இந்த பொழுதினில் இதமாகவே இருந்தது. எனது இரு சக்கர வாகனம் தனது அன்றைய பயணத்தினை துவங்கியது. வாகனத்தின் முகப்பு விளக்கினை எரியவிட்டபடிதான் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த பகலுக்கு முந்தைய இரவினில்தான் பூமியின் நிழலில் நிலவு இளைப்பாறுதல் பெற்றது, அதனால் என்னவோ அதன் பிரகாசம் சற்று புத்துணர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.


          மசூதிகளில் தொழுகை துவங்கியது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. முந்தாநாள் உயிர் விட்ட மேய்ப்பர் ஒருவர் இன்று உயிர்த்தெழுவதை காண மக்கள் பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்தனர்.

Tuesday, 3 February 2015

சிவரக்கோட்டை எனும் பல்லுயிர்க்காடு

          சிவரக்கோட்டை ஊரில் 45-வது பசுமைநடை என தகவல் கிடைத்த நாளில் இருந்து மனதில் இனம் புரியா மகிழ்ச்சி. எனது ஊரான திருமங்கலம்அருகில் ஏழு கல் தொலைவிற்குள் அமைந்துள்ள சிவரக்கோட்டைக்கு பசுமைநடை நண்பர்கள் வர இருப்பது ஒரு காரணம். எனது ஊரின் அருகில் அமைந்திருக்கும் வரலாற்று எச்சமானது, எனது மண்ணை பற்றிய வரலாற்று தேடலுக்கு வழி அமைக்கும் என்கிற ஆவல் மற்றுமொரு காரணம்.

ஏற்கனவே சில தாத்தா பாட்டிகளிடம் எனது ஊர் பற்றிய வரலாறு குறித்து பேசுகையில் “பாண்டிய மன்னர்கள் மதுரையில் இருந்து வந்து வன விலங்குகளை வேட்டையாடிச் செல்லும் அடர்ந்த வனமாக இப் பகுதி இருந்தது என்று கூறியுள்ளனர்.

Wednesday, 14 January 2015

தை பிறக்கட்டும்; வெள்ளப்பாறைபட்டிக்கு வழி பிறக்கட்டும்!!!

          பசுமைநடையும் வெள்ளப்பாறைபட்டி சிற்றூர் மக்களும் இணைந்து 11-01-2015 அன்று பொங்கல் விழா கொண்டாட திட்டமிட்டோம்.


          திட்டமிட்ட ஒரு வார காலமாக பசுமைநடை நண்பர்கள் பலர், வெள்ளப்பாறைபட்டிக்கு வந்து முன்னேற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டனர். எனக்கு 10-01-2015 அன்று முதல்தான் அலுவல் விடுமுறை கிடைத்தது. அன்று காலை வெள்ளப்பாறைபட்டிக்கு முன்னேற்பாட்டு பணிகளில் கலந்து கொள்ள கிளம்பினேன். மதுரையின் தெற்கு நுழைவாயிலான திருநகர் திருப்பரங்குன்றத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டருக்குள்ளாகவே அமைந்துள்ளது வெள்ளப்பாறைபட்டி சிற்றூர். எட்டு கிலோ மீட்டருக்குள் மனிதர்களின் வாழ்க்கை முறை எவ்வளவோ வித்தியாசப்படுகிறது.

Friday, 19 December 2014

வையை தழுவும் மேட்டுப்பட்டி

          இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் இரண்டவது பசுமைநடை இது. 14-12-2014 அன்று மேட்டுப்பட்டி நோக்கியது இப்பசுமைநடை. இந்த முறை வீட்டில் இருந்து எனக்கு பிடித்தமான சோழவந்தான் சாலை வழியே பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் ரசிக்க வைக்கும் விடிகாலைப் பொழுதினில் எனது இருசக்கர குதிரையில். நண்பர்களோடு கதை பேசியபடி பயணம் துவங்கியது. நகரங்களற்ற அந்த சாலை பால்யத்தில் இருந்து எனது மனம் கவர் சாலை. பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிற போது மிதிவண்டிகளில் “மரம் வளர்ப்போம்!! மழை பெறுவோம்!!என பதாகைகளை கட்டிக் கொண்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் இயற்கை சார்ந்த விழிப்புணர்வுக்கான பயணங்கள் இந்தப் பாதையிலேயே நிகழ்ந்துள்ளது.

Sunday, 30 November 2014

காதல் முருங்கை

 எத்தனையோ காதலிகள் தன்னை வேண்டமென்று ஒதுக்கிய போதும் காதலை விட்டு ஒதுங்கிட திராணியற்றவன், தன் ஒன்று விட்ட மைத்துனச்சியின் மணவிழாவில் மீண்டும் பெண் தேட ஆயத்தமாகிறான். விடுமுறைநாளில் நிகழும் திருமணம் இது. எதிர்பார்த்ததையும் விட இளம் பெண்களின் வரத்து சற்று அதிகமாகவே இருந்தது. இவ்வளவு திரளான கூட்டத்தில் இரட்டைச் சடையில் எந்த ஒரு இளம் பெண்ணும் கண்ணில்படவில்லை. தாவணியில் ஒரு பெண்ணும் சேலையில் சில பெண்களும் சுடிதாரிலேயே பெரும்பாலான இளம் பெண்களுமாக மண்டபத்தினை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.


அரக்க பறக்க சுற்றிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் இளம் பெண்களின் கும்பல் ஒன்று மட்டும் தீவிர அரட்டையில் லயித்திருந்தது. அவர்களுக்குள் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொள்வதும் கக்கபுக்கெ.. கக்கபுக்கெ... என சிரிப்பதுமாகவும் பெரியவர்கள் யாரேனும் கடக்கும் போது சிரிப்பையும் பேச்சையும் அடக்கிக் கொள்வதுமாகவும் இருந்தார்கள்..

Tuesday, 25 November 2014

மண் மணக்கும் மாங்குளம்

         
 ஞாயிறு அதிகாலைப்பொழுதுகள் பசுமைநடையால் வாய்க்கின்றன. அலுவல் கிழமைகளை விட பசுமைநடை ஞாயிறுகளே சுறுசுறுப்பாக்குகின்றன. கார்த்திகை, மார்கழி மற்றும் தை என பனி விழும் இம் மும்மாத பசுமைநடையும் கூடுதல் அழகானதாகவே அமைந்துவிடுகிறது. விடியாத வேளையில் அலைபேசி சினுங்க, உடனே போர்வை விலக்கி எழுந்துவிட வேண்டும். சற்றே அசந்தால், இக்காலைப்பொழுது ரசித்திட இயலாது கைமீறிப் போய்விடும்.




           இம்முறை (23-11-2014) பசுமைநடை பயணம் மாங்குளம்-மீனாட்சிபுரம் சிற்றூர் மலைக்கு.  பசுமைநடை பயணம் வீட்டிலிருந்தே துவங்கியது. சற்றே விடிந்து கொண்டிருந்ததை பறவைகளின் கும்மாளம் ஊருக்கே சொல்லிக் கொண்டிருந்தது.

Monday, 17 November 2014

வேளாண் பயணம் – மாங்குளம் சிற்றூர்

          மதுரையில் உள்ள மலைகளுக்கு பயணித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எனச் சொல்லப்படும் தமிழி கல்வெட்டுகளை,   சமண சிற்பங்களை, படுக்கைகளை, பாறை ஓவியங்களை குழுவாக கண்டும் ஆவணப்படுத்தியும் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பசுமைநடையின் அடுத்தகட்ட நகர்வு வேளாண் சிற்றூர் பயணம்.



          23-11-2014 அன்று 42-வது பசுமைநடை நிகழவிருக்கும் மாங்குளம் சிற்றூரில் 16-11-2014 அன்று வேளாண் பயணம்.


          மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு செல்லும் சாலையில் கள்ளந்திரி சிற்றூரில் இருந்து வலதுகைப் பக்கம் திரும்பிதும் 7 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைந்திருக்கிறது மாங்குளம் சிற்றூர். வழக்கமான பசுமைநடை நேரத்தில்(காலை 6:00 மணி) மதுரையில் இருந்து நான், அண்ணன் முத்துச்செல்வக்குமார் மற்றும் நண்பர் ஜெயவேல் ஆகிய மூவரும் பயணிக்கத் துவங்கினோம். கள்ளந்திரியில் இருந்து

Tuesday, 11 November 2014

மரண வீட்டின் வாசம்

          மரணம் ஏற்படாத வீடுகள் இங்கு எதுவும் இல்லை. எனது வீடும் அதற்கு விதிவிலக்கு இல்லை. எனது பிறப்பிற்கு பின் எனது தாய் வழியில் இரு தலைமுறைகளின் மரணத்தினை கண்டிருக்கிறேன். எனது அம்மாவினுடைய அம்மா மற்றும் அவருடைய அம்மா. எனது தந்தை வழியிலும் இரு தலைமுறை மரணங்களை கண்டிருக்கிறேன். எனது அப்பாவினுடைய அப்பா மற்றும் எனது அப்பா. எனக்கு விவரம் அறிந்து நான் கண்ட முதல் மரணம் எனது அப்பாவின் அப்பாவினுடையது.


          ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்கள் அது. எனது அய்யப்பாவை (அப்பாவினுடைய அப்பாவை) ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள்.

Monday, 13 October 2014

மழையோடு ஒரு மலை விழா

மீன் கொடி நாட்டிலோர் மீளாய்வு...
பசுமைநடை எனும் பெயரில் ஒரு வரலாற்றுப் புரட்சி...
ஆதித் தமிழன் வாழ்வு தமிழி எழுத்துருவிலும் ஓவியத்திலும்,
கடவுள் மறுத்து ஆரியம் எதிர்த்திட்ட சமண தமிழ்த் தொண்டு
வட்டெழுத்திலும் சிற்பக் கலையுருவிலும்
தாங்குதெங்கள் மதுரை மலைகள்...


கல் திண்ணும் களவாணிகளுக்கு சாபச் சங்காய் ஒலித்த
எங்கள் மலை கீழ் வாழ் மாமக்கள் எம் மாமதுரையின் புதையல்கள்...
அச்சங்கின் எதிரொலியாய் ஒலிக்குதெங்கள் பசுமைநடை...


நாற்பதாவது நிகழ்வு
******************************
பசுமைநடையின் நாற்பதாவது நடை;

Saturday, 11 October 2014

தூய்மையான இந்தியா - கதைக்கலாம் கொஞ்சம்

எங்கோ நின்று கொண்டிருக்கிறேன். நான் ரசிக்கும் கமலஹாசன் என்னை கொஞ்சம் விலகி நிற்கச் சொல்லிவிட்டு, எனது காலுக்கிடையில் கிடந்த இலைதழைகளை தன் கையில் இருக்கும் துடைப்பம் கொண்டு தள்ளிக்கொண்டே எங்கோ போகிறார். சட்டென விழித்துக் கொள்கிறேன். படுக்கையில் இருந்து என்னை எழுப்பிவிடுகிறது சூரிய ஒளிக்கதிர்.

கண்கள் கூச செய்தித்தாளுக்காக வீதிக்கு வருகிறேன். எந்த பக்கம் போகலாமென சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.